― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ஆதிசங்கர பகவத் பாதர்; வாழ்வும் வாக்கும்!

ஆதிசங்கர பகவத் பாதர்; வாழ்வும் வாக்கும்!

- Advertisement -
sankarar 3

விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே
மதிதோபனிஷத் கதிதார்த நிதே
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம்

வைசாக சுத்த பஞ்சமி ஆதிசங்கர பகவத்பாதர் அவதரித்த தினம்.

ஆருத்ரா நட்சத்திரம் சிவனோடு தொடர்புடையது. அந்த நட்சத்திரத்திலேயே ஆதிசங்கர் தோன்றினார்.

ஆதிசங்கரர் தன் மேதமையாலும் பிரகாசத்தாலும் தர்மத்திற்கும் ஞானத்திற்கும் செய்துள்ள மிகுந்த உபகாரத்தால் அவதார புருஷராக போற்றப்படுகிறார்.

சாமானிய மனிதருக்கும் மகா மேதாவிகளுக்கும் அதீதமான செயல்களைச் செய்பவர்களே அவதார புருஷர களாக கணிக்கப்படுவது வழக்கம்.

சாட்சாத் சிவபெருமானின் அவதாரமாக கருதப்படுகிறார் ஆதி சங்கரர். ‘சங்கர: சங்கர சாக்ஷாத்’என்று கூறுவது போல் சாட்சாத் சிவனே சங்கர பகவத்பாதராக வந்துள்ளார்.

சிவன் ஞானத்தை முதன்மையாகக் கொண்ட கடவுள். ‘ஈசான சர்வ வித்யானாம் ஈஸ்வர ஸர்வ பூதானாம்…’ என்று கூறுகிறாற்போல் ஞானத்தை பிரதானமாகக் கொண்ட சிவனின் தட்சிணாமூர்த்தி ஸ்வரூபமே ஜகத்குரு ஆதிசங்கரராக அவதரித்து, சனாதனமான பிரம்ம வித்யையை மீண்டும் பிரதிஷ்டை செய்து வைதீக தர்மத்திற்கு மகா உபகாரம் செய்து, பாரத தேசத்திற்கு ஒருமைப்பட்ட நலனை ஏற்படுத்தினார்.

ஆதிசங்கரர், சங்கரர் என்ற நாமத்திற்கு மிகப்பொருத்தமாக நடந்து கொண்டார். சம் என்றால் சுகம், சுபம், சாந்தி. இம்மூன்றையும் ஏற்படுத்துபவர் சங்கரர். தன் ஞானம், தவம், மகிமை இவற்றால் உலகிற்கு சுபம், சாந்தி, சுகம், ஞானம் அளித்தவர் ஜகத்குரு ஆதி சங்கர பகவத்பாதர்.

sankarar 1 1

இவரைப் பற்றி கூறுகையில் சிருங்கேரி பன்னிரண்டாவது பீடாதிபதியான வித்யாரண்ய ஸ்வாமிகள் உயர்ந்த ஸ்லோகம் ஒன்றைக் கூறுகிறார்.

அஞ்ஞானானந்த கஹன பதிதான் ஆத்ம வித்யோபதேசை:
த்ராத்தும் லோகான் பவதவசிகா தாப பாபஸ்ச மானான்
முக்த்வா மௌனம் வடவிடபினஹ மூலதோ நிஷ்பதந்தி
சம்போர் மூர்த்திச் சரதி புவனே சங்கராசார்ய ரூபா !!

என்று போற்றி கீர்த்தனை செய்கிறார். சம்போர் மூர்த்தி: சிவனின் உருவம் புவனத்தில் சங்கராச்சாரியர் வடிவத்தில் வெளிப்பட்டுள்ளது. ஏனென்றால் உலகில் அஞ்ஞானம் என்ற இருண்ட காட்டில் வழி தெரியாமல் தடுமாறுபவர்களுக்கு ஆத்ம வித்தையை உபதேசித்து காத்தருளுவதற்காக அவதரித்த தக்ஷிணாமூர்த்தி சொரூபம் ஆதிசங்கரர். வட விருட்சத்தை விட்டு வந்து, மௌனத்தை விலக்கி, பாஷ்யம் கூறி உபதேசிப்பதற்காக வந்த ரூபமே சங்கரர் என்று ‘அபர தட்சிணாமூர்த்தியாக’ ஆதிசங்கரரை வர்ணிக்கிறார்.

ஆதிசங்கரர் ‘அத்வைத சித்தாந்த ப்ரவக்தா’ என்ற பிரபலமான கூற்று உள்ளது. ஆனால் அவ்வகையில் மட்டுமே ஆதிசங்கரரை பார்க்கக்கூடாது. ஏதோ ஒரு சித்தாந்தத்திற்கு மட்டுமே ஆதிசங்கரரை உரிமை ஆக்குவது சரியல்ல. மொத்தம் சனாதன தர்மத்தை ஆதிசங்கரர் புனர் பிரதிஷ்டை செய்துள்ளார் என்று கூறவேண்டும்.

ஆதிசங்கரரின் அருளால்தான் துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் முதலான அனைத்து சித்தாந்தங்களையும் இணைந்த வேத தர்மம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஆதிசங்கரர் அவதரிக்கும் முன்பு இருந்த சூழ்நிலை எப்படி இருந்தது என்றால்… மகரிஷி வியாசர் பிரம்ம வித்யையையும், புராண, இதிகாசங்களையும் படைத்த போதிலும் கலி ப்ரபாவத்தால் பலவித துஷ்ட சித்தாந்தங்கள் கிளம்பின. வேத சித்தாந்தங்களில், வேத தரிசனங்களிலேயே பரஸ்பர வேறுபாடுகள் ஏற்பட்டன. அதோடுகூட வேதத்திற்குப் புறம்பான பல வித சித்தாந்தங்கள் தோன்றின. அதன் காரணமாக ஒருவித குழப்பமான சூழ்நிலை நிலவியது. அதாவது தார்மீக உலகில் ஒரு தடுமாற்றம் ஏற்படத் தொடங்கியது. அந்த நேரத்தில் ஏற்பட்ட வேற்றுமைகளை துடைத்தெறிவதற்காக சாக்ஷாத் பரமசிவன் அவதரித்து, அன்றைய நாட்களில் இருந்த 72 துர்மதங்களைக் கண்டித்து சனாதன வேத, வேதாந்த மதமே சிறந்தது என்று ஸ்தாபித்தார்.

sankarar kanakadara

ஆதிசங்கரர்,’வேத வேதாந்த பிரதிஷ்டா’ என்று கூறப்படுகிறார். ஆதிசங்கரர் செய்த பெரிய உதவி வேதம் கூறியுள்ள அனைத்து மார்க்கங்களையும் ஒன்றிணைத்தது. துவைதம், விசிஷ்டாத்வைதம் மற்றும் உபாசனை சம்பிரதயங்களோடு தொடர்புடைய சைவம், வைணவம், சௌரம், காணபத்யம், சாக்தம், ஸ்காந்தம் என்ற ஆறு மதங்களையும் அங்கீகரித்து அவை அனைத்துமே அத்வைத சித்தி பெறுவதற்கான படிக்கட்டுகளாக உதவுபவை என்று துவைதத்தையும் விசிஷ்டாத்வைதத்தையும், அதேபோல் ஷண்மதங்களையும்… அனைத்திலும் வேத நெறி முறைகள் இருப்பதால் அவை அனைத்தும் சரியானவையே என்று கூறி, அவை அனைத்தும் சாதனைக்கான வழிகள் என்று எடுத்துரைத்து உயர்ந்த வேதாந்த தர்மத்தை எடுத்து விளக்கினார்.

அத்வைதம் ஒரு மதமல்ல. அது ஒரு தத்துவம். பிரபஞ்சத்தில் யாரானாலும் சரி இந்த தத்துவத்தை உணர்ந்து வாழ இயலும். அதனை ஒரு மதமாக ஏற்று அனுஷ்டானமாகச் செய்ய வேண்டிய பூஜை போன்ற செயல்கள் அல்ல அது. அத்வைதம் ஒரு தத்துவ உண்மை. அதனை புத்தியால் புரிந்து கொள்ள முடிந்தால், விஸ்வமெங்கும் இறைவன் மயம் என்ற தத்துவம் அறிய வரும்.

அத்வைதம் என்றால் என்ன? ‘ஒன்றே’ என்று பொருள். இரண்டல்ல என்று கூறுகிறது. இரண்டல்ல என்றால் ‘ஒன்று’ என்று தானே பொருள்? அப்படியானால் ‘ஏகம்’ என்று கூறியிருக்கலாமே! அத்வைதம் என்று ஏன் கூற வேண்டும்? இரண்டல்ல என்று கூற வேண்டிய தேவை என்ன? இருப்பதெல்லாம் ஒரே பிரம்மம். ஆனாலும் அஞ்ஞானப் பார்வைக்கு இரண்டாக தென்படுவதால் அஞ்ஞானிக்கு போதிக்கும் போது இரண்டாக தென்பட்டாலும் இரண்டல்ல… அது ஒன்றே என்று எடுத்துக் கூறுவதற்காக அத்வைதம் என்ற சொல் வந்தது.

adhisankara

அத்வைதம் என்ற சொல்லை ஆதிசங்கரர் உருவாக்கவில்லை. அது உபநிஷத்தில் உள்ளது. ‘பிரபஞ்சோப சமம் சாந்தம் அத்வைதம்’ என்று கூறப்பட்டுள்ளது. அதனால் ஆதிசங்கரர் புது சித்தாந்தத்தை ஏற்படுத்தவில்லை. ஏற்கனவே இருக்கும் வேதாந்த உண்மையை எடுத்து விளக்கினார்.

வேதாந்தம் கூறும் அத்வைத சித்தாந்தம் என்ற மரத்தில் வேத மார்க்கங்கள் என்ற பசுக்களைக் கட்டினார் ஆதிசங்கரர். வேதாந்த தத்துவத்தால் சகல வேத மார்க்கங்களையும் சமன்வயம் செய்தார்.

அதே போல், அப்போது வரை இருந்த பல விதமான தரிசனங்களை எல்லாம் அவர் எடுத்தெறிந்து விடவில்லை. அவை கூட சிறந்த ஆலோசனை வழிகளே என்று அங்கீகரித்து, யுக்தியால், ப்ரசாந்தமான சித்தத்தால், ஸ்பஷ்டமாக அதுவரை இருந்த கொள்கைகளை ஆராய்ந்து அதற்கும் மேற்பட்ட சித்தாந்தத்தை எடுத்துரைத்தார்.

அதனால்தான் ஆதி சங்கரரின் பாஷ்ய படைப்புகள் நேராக, எளிமையாக, தெளிவாக விளங்குகின்றன. ஏனென்றால் உண்மை எப்போதும் சரளமாகவும் தெளிவாகவும் விளங்கும் இயல்பு கொண்டது.

32 வயதிற்குள் சாதிக்க வேண்டியதை எல்லாம் சாதித்து விட்டார். இத்தனை ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அவை நின்றிருக்கின்றன.

ஆதிசங்கரர், சுவாமி விவேகாநந்தர் போன்றோர் தம் இளம் வயதிலேயே பல ஆயிரம் ஆண்டு காலத்திற்கு தேவையான ஞானத்தை சாதித்தார்கள். அதனால்தான் அவர்களை அவதார புருஷர்கள் என்று போற்றுகிறோம்.

16 வயதிலேயே ஆதிசங்கரர் முழுமையான நூல்களைப் படைத்து அளித்தார். அந்த ஞான விஞ்ஞானம் அனைத்தும் நூல் வடிவில் நமக்கு கிடைக்கின்றன. வியாச பகவானுக்குப் பிறகு அத்தனை விரிவாக நூல்களை எழுதியவர் ஆதிசங்கரர் ஒருவரே!

athisankarai

அதனால்தான் ஆதிசங்கரரை நினைத்துத் துதிக்கும் போது குரு பரம்பரையை எங்கிருந்து தொடங்குகிறோம் என்றால், முதலில் கடவுளையே ஆதி குருவாக ஏற்கும் பாரததேச கலாசாரத்தில், நாராயண சமாரம்பாம்… அல்லது சதாசிவ சமாரம்பாம் என்று பரமாத்மாவையே பிரதம குருவாகக் கூறுகிறோம். அதன்பின் பிரம்மதேவர். பின்பு ருஷி பரம்பரை அனைத்துக்கும் ஆதியான பிம்ம மானச புத்திரரான வசிஷ்டரைக் குறிப்பிடுகிறோம். பின் அவர் புதல்வர் சக்தி, சக்தி மகரிஷியின் புதல்வரும் சீடருமான பராசர மகரிஷி, பராசரரின் புதல்வரும் சீடருமான வியாச பகவான், வியாச பகவானின் புதல்வரும் சீடருமான சுக யோகீந்திரர், சுக யோகீந்திரரின் சீடரான கௌட பகவத்பாதர், அவருடைய சீடர் கோவிந்த பகவத்பாதர், அவருடைய சீடர் ஆதிசங்கரர். இது சங்கர குரு பரம்பரை. பரமேஸ்வரனில் ஆரம்பமாகி, சங்கரர் வரை தொடர்ந்து வந்த வேத, வேதாந்த ஞான பரம்பரை எதுவோ அதுவே சனாதன தர்மம். வேதம் எந்த பரமாத்மாவிடமிருந்து வெளிப்பட்டதோ அந்த பரமாத்மாவே பிரதம குருவாக விளங்குகையில்… பரமாத்மா எடுத்துரைத்த வேதத்தில் இருப்பதைக் கூறுபவரே குரு பரம்பரையாக விளங்குவார்கள். அத்தகைய குரு பரம்பரை யைச் சேர்ந்த ஆதிசங்கரர் அற்புதமான ஞானத்தை பிரபஞ்சத்திற்கு அருளியுள்ளார்.

முக்கியமாக ஆதிசங்கரரின் வாழ்வின் மூன்று பகுதிகளை நாம் ஆராய வேண்டும்.

ஒன்று… அவர் இயற்றிய நூல்கள். இரண்டாவது அந்நாட்களில் நாடு முழுவதும் மூன்றுமுறை சுற்றிவந்து, பாரத தேசத்தை ஐக்கியப்படுத்தி, பாரதிய தர்மம் அனைத்திலும் உள்ள உண்மையான பொருளை உணர்த்தி, ஒரே நெறிமுறையில் சனாதன தர்மத்தை நிலைநாட்டி நாத்திக மதங்களையும் வேதத்திற்கு புறம்பான அவைதிக சித்தாந்தங்களையும் களைந்தெடுத்த மகத்தான செயல் வடிவம். இது அவர் வாழ்வின் இரண்டாம் பகுதி.

மூன்றாவது பகுதி… அவர் ஏற்படுத்திய அமைப்புகள்.
இந்த மூன்றின் வழியாகவும் தர்மத்தை நிலைநாட்டினார்.

முதல் பகுதியாக ஆதிசங்கரர் இயற்றிய நூல்களைப் பற்றிப் பார்ப்போம்.

இவற்றை மீண்டும் மூன்று பகுதிகளாகக் காணமுடியும். ஒன்று பாஷ்ய கிரந்தங்கள். இரண்டு பிரகரணங்கள். மூன்று ஸ்தோத்திரங்கள்.

பாஷ்ய கிரந்தங்கள் என்றால், பகவத்கீதை, உபநிஷதம், பிரம்ம சூத்திரம் எனப்படும் பிரஸ்தான த்ரயத்திற்கு அவர் இயற்றிய விளக்க நூல்கள்.

நேரடியாக, தெளிவாக, எளிமையாக, இனிமையாக, யுக்தியோடு கூடியதாய் சாஸ்திரம் கூறும் தர்க்கம், ஹேது இவைகளோடு விளங்குகின்றன இந்த விளக்க நூல்கள். ஆயின் பண்டிதர்களுக்கும் அறிஞர்களுக்கும் மட்டுமே இவை புரியக் கூடியவை.

அந்த பாஷ்ய நூல்களில் கூறப்பட்டுள்ள பரமார்த்தமான பரம்பொருள் வெறும் பண்டிதர்களுக்கு மட்டும் புரிந்தால் போதாது. ஒவ்வொரு மனிதனுக்கும் அது தேவை. உய்வடைய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மனிதர்களுக்காக, அந்த பாஷ்ய நூல்களில் விளக்கிய அம்சங்களை பிரகரண கிரந்தங்களில் எடுத்துக் கூறியுள்ளார். விவேக சூடாமணி, அபரோக்ஷ அனுபூதி, ஆத்மபோதம்… இவ்வாறான சாகித்திய படைப்புகளைஆதிசங்கரர் விஸ்தாரமாக இயற்றியுள்ளார். சின்னஞ்சிறிய புத்தகங்கள் முதல் பிரம்மாண்டமான நூல்கள் வரை பிரகரண நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார்.

விவேக சூடாமணி ஒன்றே போதும். எந்த மதத்தோடும் தொடர்பில்லாமல் அற்புதமான ஜீவித சத்தியத்தையும் விஸ்வ ரகசியத்தையும் எடுத்துக்கூறும் நூல் விவேக சூடாமணி. அதேபோல் கேள்வி பதில்… அதாவது தற்போது உள்ள க்விஸ் போன்று ‘பிரஸ்னோத்தர மாலிகா’ என்ற பெயரில் வேத வேதாந்த தர்மத்தையும் தனிமனித கடமைகளையும் சாமானிய மானுடனை கவனத்தில் கொண்டு இயற்றியுள்ளார். அதேபோல் பஜகோவிந்தம் போன்ற சுலோகங்கள் மூலம் ஆதிசங்கரர் வேதாந்தத்தையே போதிக்கிறார். இவற்றில் ஏக ஸ்லோகி முதல் சஹஸ்ர ஸ்லோகி வரை எழுதியுள்ளார். உபதேச சாஹஸ்ரி போன்றவற்றைப் படைத்துள்ளார். கம்பீரமான பாவனைகள், அழகான செய்யுட்கள், ஸ்லோகங்களோடும் வாக்கியங்களோடும் ஆதிசங்கரர் இரண்டாம் பகுதியான பிரகரண நூல்களைப் படைத்துள்ளார்.

மூன்றாவது தோத்திர சாகித்தியங்கள். ஆதிசங்கரர் என்றாலே ஸ்தோத்திர சாகித்தியம் நினைவுக்கு வரும். எந்த தெய்வத்தின் ஸ்தோத்திரம் தேவை என்றாலும் , ஆதி சங்கரர் எழுதியவற்றிலிருந்து பக்தன் பெறமுடியும். கணபதி ஸ்தோத்திரங்கள், சுப்பிரமணிய புஜங்கம், சிவானந்த லஹரீ, சௌந்தர்ய லஹரீ, பஜகோவிந்தம், விஷ்ணு ஷட்பதி ஸ்தோத்திரம்… இவ்வாறு தோத்திர நூல்களை அபாரமாக படைத்துள்ளார்.

Adisankara

அதோடு பாரத தேசத்தின் பல்வேறு க்ஷேத்திரங்களில் சஞ்சரித்த போது அந்தந்த கோவிலின் தெய்வங்களின் மீது பாடிய தோத்திரங்கள் அற்புதமாக உள்ளன. அஷ்டகம் போன்ற எண்ணிக்கையில் காணப்பட்டாலும் கவிதை நயத்தோடு பார்க்கையில் நாத்திகனுக்குக் கூட அவற்றின் மீது நாட்டம் ஏற்படுத்தும் விதமாக அவை விளங்குகின்றன. அவற்றுள் சிவானந்தலஹரி, சௌந்தரிய லஹரி, கனகதாரா ஸ்தோத்திரம் போன்றவற்றில் ஒவ்வொரு ஸ்லோகமும் ஒரு ரசமய அற்புதம் எனலாம். மிக அற்புதமான ஸ்தோத்திர நூல்கள் இவை. லக்ஷ்மி நரசிம்ம மம தேஹி கராவலம்பம் என்று பாடும் கராவலம்ப ஸ்தோத்திரங்கள்,

தேவராஜ சேவ்யமான பாவனாங்கி பங்கஜம்
வ்யாள யஞ்ய சூத்ரமிந்து சேகரம் க்ருபாகரம்
நாரதாதி யோகி ப்ருந்த வந்திதம் திகம்பரம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே

என்று இயம்பும் காலபைரவாஷ்டகம்,

தேவி சுரேஸ்வரி பகவதி கங்கே
த்ரிபுவன தாரிணி தரள தரங்கே
சங்கர மௌளி விஹாரிணி விமலே
மம மதி ராஸ்தாம் தவபத கமலே

என்று இயற்றிய கங்கா ஸ்தோத்ரம்…. ஒன்றா… இரண்டா…? பலப் பல தோத்திரங்கள். இன்றளவும் சாதாரண இந்தியனின் வாயாலும் கூட பாடப்படுகின்றன. பஜகோவிந்தத்தை யாரால் மறக்க முடியும்? ஆன்மிகத்தில் சிறிதளவு பரிச்சயம் இருக்கும் யாராக இருந்தாலும்

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே!

என்று பாடத் தான் வேண்டும். அதேபோல் அன்னபூர்ணாஷ்டகம், காசி விஸ்வநாதாஷ்டகம் போன்ற எத்தனையோ ஸ்லோகங்களை எழுதியுள்ளார்.
சாதாரணமாக நாம் தினமும் படிக்கும் தெய்வ ஸ்தோத்திரங்கள் முதல் மிக ஆழமாக யோசிக்க வைக்கும் வேதாந்தம் வரை அனைத்தையும் தனி ஒருவராக எழுதி அளித்தருளிய மகான் ஆதிசங்கரர்.

அவரவர் மன ஓட்டத்தை பொருத்து… பக்தியோடு வாழ்பவர், ஞான வழியில் செல்பவர், தர்ம மார்க்கத்தில் செல்பவர் போன்ற மூவருக்கும் தேவையான அனைத்தையும் போதித்துள்ளார். மேலும் இவை ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை என்றும் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார்.

அதனால்தான் அவர், நடைமுறை உண்மைகள் என்ற கண்ணோட்டத்தோடு துவைதம், விசிஷ்டாத்வைதம் இரண்டையும் ஏற்றுக் கொண்டார். எதுவரை ‘உடலே நான்’ என்ற பிரமை நமக்கு இருக்குமோ அது வரை ஜீவ பாவனையும் இருக்கும். ஜீவ பாவனை இருக்கும் வரை பகவானுக்கு தாசனாக இருந்து பகவத் ப்ரீதிக்காக தர்மத்தைக் கடைப்பிடித்து, அதன் மூலம் சித்தத்தை தூய்மைப்படுத்தி, பின்னர் அத்வைத ஞானமும் ஜீவ-ஈஸ்வர அபேத பாவனையும் ஏற்படும் என்ற வழிமுறையைக் கொடுத்துள்ளார்.

இதனையே சுவாமி விவேகானந்தர், துவைதம் விசிஷ்டாத்வைதம் அத்வைதம் மூன்றும் வேறு வேறான பகுதிகள் அல்ல… ஆன்மீக மார்க்கத்தில் மூன்று தங்குமிடங்கள் இவை என்று போதித்தார்.

இப்படியான அற்புதமான சமன்வயத்தை வேதாந்தம் வழியே அளித்தவர் ஆதிசங்கரர்.

ஆதிசங்கரரின் வரவுக்குப் பின் வேத தர்மம் தழைத்தோங்கியது.

இவர் செய்த மூன்றாவது செயல் ஒரு அமைப்பை ஏற்படுத்தியது. ஒருபுறம் நூல்களை இயற்றினார். மறுபுறம் நாடெங்கும் பயணித்து அன்றைய மேதாவிகளை அமரவைத்து சர்ச்சை செய்தார். அவற்றில் யுக்தியோடு வாதாடி ‘இது உண்மை… யோசித்துப் பாருங்கள்!’ என்று தான் கூறிய வேதாந்த சித்தாந்தத்தை அவர்களும் ஏற்கும்படி செய்து நாடெங்கும் பரவச் செய்தார். அந்தக் காலத்தில் எந்த செய்தி ஊடகங்களும் இல்லாத நாட்களில் எந்தவித போக்குவரத்து வசதிகளும் இல்லாத போது தன் யோக சக்தியால் 32 வயதுக்குள் மூன்று முறை இமயம் முதல் குமரி வரை பயணித்து, சென்ற ஒவ்வொரு இடத்திலும் தன் முத்திரையையும் தன் நினைவையும் பதித்து இன்றுவரை நிரூபித்து வரும் மகா புருஷர் ஆதிசங்கரர்.

காலடியில் பிறந்து கேதாரத்தில் ஈஸ்வர ஐக்கியம் பெற்ற இந்த மகான் தனக்கே உரித்தான தன் குரலை நாடெங்கும் கேட்கும்படிச் செய்தார். அதனால்தான் மத்திய பிரதேசத்தில் உஜ்ஜயினிக்கு சென்றாலும் அங்கு ஆதிசங்கரருக்கு ஒரு கோவில் இருக்கும். உத்தரப் பிரதேசத்தில் ஒரு ஆதி சங்கர மண்டபம் இருக்கும். காசியில் ஆதிசங்கரர் நிவாசம், அங்கு அவர் செய்த அற்புத செயல்களின் அடையாளங்கள், இமயமலையில் ஆதிசங்கரர் நிறுவிய பீடங்கள்… என்று எங்கு பார்த்தாலும் அனைவராலும் இன்றும் அவற்றை காண முடியும்.

இவ்வாறு நாடெங்கும் சஞ்சரித்து வாதிக்கும் திறமையால் சாஸ்திர ஞானத்தை நிறுவியதோடல்லாமல் பாத யாத்திரையால் பல க்ஷேத்திரங்களையும் பவித்திரமாக்கியுள்ளார்.

பல க்ஷேத்திரங்களில் ஸ்ரீசக்கரங்களையும் விக்கிரகங்களையும் லிங்கங்களையும் பிரதிஷ்டை செய்துள்ளார். பதரீ நாராயணமூர்த்தியை யோக திருஷ்டியால் அலகாநந்த கங்காவில் இருப்பதாக அறிந்து அதனைத் தன் தவச் சக்தியால் வெளியே எடுத்து பிரதிஷ்டை செய்த மகாபுருஷர் ஆதிசங்கரர்.

இவ்வாறு பார்த்துக் கொண்டே வந்தால்… ஆதிசங்கரர் நாடெங்கும் தன் பாதையாத்திரையால், ஞான போதனையால் செய்ததுபோல் மூன்றாவதாக அமைப்புகளையும் ஏற்படுத்தி உள்ளார். பீடங்களை ஸ்தாபித்து உள்ளார்.

பிரதானமாக நான்கு திசைகளில் நான்கு பீடங்களை நிறுவியுள்ளார். முதலாவதும் முக்கியமானதும் சிருங்கேரி. கர்நாடகாவில் தென்னிந்தியாவில் உள்ளது. அடுத்து வருவன பதரீ பீடம், துவாரகா பீடம், பூரி பீடம். இவ்வாறு நான்கு திக்குகளிலும் பாரத தேசத்திற்கு சதுர் வேதங்களைப் போல் தர்மம் என்ற மகா மண்டபத்தின் நான்கு தூண்களாக 4 பீடங்களை நிறுவினார்.

அதேபோல் சங்கராச்சாரியார் பல இடங்களில் வித்யையையும் ஞானத்தையும் அளித்துள்ளதால் அவர் பெயரில் மேலும் சில பீடங்கள் ஏற்பட்டன. அவ்வாறு காஞ்சீ பீடம் சங்கர பீடமாக ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் ஆதிசங்கரரின் ஞான பரம்பரை அங்கு இடையறாது காஞ்சி காமகோடி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு பார்க்கையில் சங்கரரின் ‘பீட ஸ்தாபனம்’ என்ற அமைப்பைப் போற்றாமல் இருக்க இயலாது.

இதனையே இன்று ஆர்கனைசேஷனல் ஸ்கில் என்கிறோம். ஆதி சங்கரரிடம் இருந்து தற்கால இளைஞர்கள் பெறவேண்டிய ஸ்பூர்த்தி நிறைய உள்ளது. தன் வாழ்நாளில் ஒரு கணம் கூட வீணாக்காமல் முழுமையான ஞானத்தை அளித்து இன்றுவரை அந்த ஞானம் விஸ்வம் எங்கும் நிரூபிக்கப்பட்டு வரும்படி அன்றே இத்தகைய அமைப்பை நிறுவினார்.

ஏனென்றால் தர்மத்தை போதித்தால் மட்டும் போதாது. அதனை நிலைநிறுத்தி பரப்பும் அமைப்பும் தேவை. அவ்வாறு நிறுவிய பீடங்களில் தெய்வசக்தியை பிரதிஷ்டித்தார். ஏனென்றால் எத்தனை எடுத்துரைத்தாலும் தெய்வபலம் இல்லாவிட்டால் தர்மத்தை நிலை நிறுத்த இயலாமல் போகும். உலகத்தில் எல்லோருக்கும் அமைதியை ஏற்படுத்தவும் நலன் விளைவிக்கவும் வேண்டும். அதனால்தான் ஒவ்வொரு பீடத்திலும் கடவுளுக்கான இருக்கையை நிறுவி அங்கு ஆச்சாரியர்கள் அவற்றை பூஜித்து தெய்வ சக்தியை குவிக்கும்படி செய்தார். ஒவ்வொரு ஆச்சாரியரும் கூட மீண்டும் ஆதிசங்கரரை போன்றவர்களாகவே அவதரித்தது மற்றுமொரு விசேஷம்.

ஆதிசங்கரரே அப்போது கூறியுள்ளார்… “பீடங்களில் அமரும் ஆச்சாரியர்களை என் சொரூபமாகவே கருத வேண்டும்” என்று கூறியுள்ளார். அவர் கூறியபடியே அனைத்து இடங்களிலும் சங்கரருக்கு பிறகு வந்த ஆசார்ய பரம்பரையும் சங்கரரை போன்றவர்களாகவே இருப்பது ஆச்சரியகரமான அற்புதம்.

இவ்வாறு ஆதிசங்கரர் பீடங்களை ஏற்படுத்தி தர்ம பிரதிஷ்டை செய்தார்.

அத்யயனம் செய்து படித்து பயிற்சி பெறுவதற்கு ஏதுவான நூல்களை நமக்கு அளித்துள்ளார் ஆதிசங்கரர். நூல்கள் சாரதையின் சொரூபம். சரஸ்வதி ஒரு தெய்வ வடிவம் மட்டுமல்ல. ஞானநூல்கள், அட்சரங்கள்… அனைத்தும் சரஸ்வதி ஸ்வரூபங்களே.

adhi sankarar

ஆதிசங்கரர் தெய்வீகமான காஷ்மீர் தேச சரஸ்வதி பீடத்தில் அன்று சர்வஞ்ய பீடத்தில் அமர்ந்தார் தென் இந்தியாவிலிருந்து சென்ற ஒரே ஒரு மகா பண்டிதர் இவரே. இத்தனையும் பார்க்கும்போது இவர் சிவபெருமானே என்று வணங்கத்தான் வேண்டும்.

பின்னர் வந்த மகான்களில் வித்யாரண்யர், சந்திர சேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகள், பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் போன்ற மகான்கள் அனைவரும் ஆதிசங்கரர் கூறிய உண்மை உலகளாவியது என்பதை உலகிற்கு உணர்த்தி வருகிறார்கள். ஆசாரிய பரம்பரை ஏற்றுக்கொண்டதும், உலகெங்கும் அறிந்து கொண்டதுமான பாரதிய வேதாந்தத்திற்கு உலக மேதாவிகள் தலை வணங்குகிறார்கள் என்றால் அது மிகையில்லை.

<strong>பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா<strong>

நவீன விஞ்ஞானத்தோடு சமன்வயம் செய்து பார்க்கக்கூடிய வேதாந்தத் தத்துவம் ஆதிசங்கரரின் அத்வைத தத்துவம் என்று தற்போது நிரூபிக்கப்பட்டு வருகிறது.

இந்த விஞ்ஞான, தர்க்க யுகத்தில் கூட எடுத்துக் கூறப்பட்டும் ஏற்கப்பட்டும் வரும் உண்மை அத்வைத வேதாந்தம்.

“ஆதிசங்கரர் இயற்றிய அபாரமான நூல்களில் தினமும் ஒன்றாவது படிப்போம்! அதன் மூலம் அறிவை மலரச் செய்வோம்!” என்று நாம் ஒவ்வொருவரும் சங்கல்பம் செய்து கொண்டு அவரவரால் இயன்றவரை ஸ்தோத்திர நூல்களில் தொடங்கி வேதாந்த நூல்கள் வரை வளர்ந்து சனாதன ஹிந்து தர்மத்தை காப்பாற்றிக் கொள்வோம். ஜெகத் குருவை சரணடைவோம்! வந்தே ஶ்ரீ ஜகத்குரும்!!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version