― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்தவறவிடாதீர்கள்.. வெற்றிகளை அள்ளித் தரும் ஏகாதசி!

தவறவிடாதீர்கள்.. வெற்றிகளை அள்ளித் தரும் ஏகாதசி!

- Advertisement -

விஜயம் என்றால் வெற்றி. கடினமான சூழலில் போராட்டமான வாழ்க்கையில் இருப்பவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஏகாதசி விஜயா ஏகாதசி. இந்த ஏகாதசி விரதத்தை ராமபிரானே கடைப்பிடித்ததாக ஐதிகம்.

ராமச்சந்திர மூர்த்தி மனிதர்களுக்கு உதாரண புருஷராக வாழ்ந்துகாட்டியவர். மனிதர்கள் தங்கள் பாவங்கள் தீர வாழ்வில் வெற்றிபெற மேற்கொள்ள வேண்டிய வழிபாடுகளைத் தன் வாழ்வில் செய்துகாட்டியவர். அப்படி அவர் மேற்கொண்ட விரதங்களில் ஒன்று விஜயா ஏகாதசி.

ராவணனுடன் போரிட இலங்கை செல்லும் முன்பு அந்தப் போரில் வெல்ல என்ன செய்ய வேண்டும் என்று வக்தால்ப்ய ரிஷியிடம் கேட்டார் ராமர். அதற்கு அந்த ரிஷியும் விஜயா ஏகாதசி விரத மகிமைகளை எடுத்துச்சொல்லி அதை மேற்கொள்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதை விளக்கினார். ராம பிரானும் தவறாமல் அந்த விரதத்தைக் கடைப்பிடித்து அதன் பலனை அடைந்தார் என்கிறது புராணம்.

விஜயா ஏகாதசி நாளில் உபவாசம் இருந்து வழிபடுவது சிறந்தது. உப – வாசம் என்றால் அருகில் வசிப்பது என்று பொருள். இரையைத் தவிர்த்து இறைச் சிந்தனையில் மூழ்கியிருந்தால் அந்த இறைவன் நம் அருகில் வாசம் செய்வான் என்பது பொருள்.

எனவே முடிந்தவர்கள் முழு பட்டினி கிடந்து விரதம் மேற்கொள்வது பயன்தரும். துளசி தீர்த்தம் மட்டும் அருந்தலாம். இயலாதவர்கள் முழு அரிசிச் சோற்றைத் தவிர்ப்பது நல்லது
அதுவும் முடியாதவர்கள் தவறாமல் இறைவனின் நாமத்தை உச்சரித்துக்கொண்டிருப்பது நல்லது.

விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை உரைக்கும் சகஸ்ர நாமத்தை இந்த நாளில் கேட்பது பயன்தரும். குறைந்தபட்சம் இன்று கட்டாயம் ஆலயம் சென்று பெருமாளை வழிபட்டு அங்கு அமர்ந்து விஷ்ணு சகஸ்ர நாமப் பாராயணம் செய்து வழிபடுவதன் மூலம் விஜயா ஏகாதசி விரதத்தின் பலனை முழுமையாகப் பெறலாம்.

இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி ஸ்கந்த புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை யுதிஸ்டிர மன்னர். ஸ்ரீகிருஷ்ணரிடம் கேட்டார். ஓ! பகவான் கிருஷ்ணா, தயவுசெய்து, தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியைப் பற்றி எனக்கு விவரியுங்கள். பகவான் கிருஷ்ண பதிலளித்தார். ஓ, யுதிஸ்டிர மன்னா, விஜயா ஏகாதசி எனப்படும்.

இந்த ஏகாதசியைப் பற்றி மகிழ்ச்சியாக விவரிக்கிறேன். கேள். இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவரின் அனைத்து பாவ விளைவுகளும் அழிக்கப்படும். ஒரு முறை பெருமுனிவரான நாரதர் பகவான் பிரம்மாவிடம் கேட்டார். ஓ! தேவர்களில் சிறந்தவரே, தேய்பிறையில் தோன்றக்கூடிய, விஜயா ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவர் அடையும் பலனைப் பற்றி விளக்குங்கள்.

பிரம்மா பதிலளித்தார், ஓ! எனதருமை புத்திரனே, இந்த பழமையான விரதம், தூய்மையானதும், எல்லா பாவச் செயல்களை அழிக்கக் கூடியதும் ஆகும். இந்த ஏகாதசி, தன் பெயரிற்கேற்ப மிக அரிய பலனை கொடுக்கக் கூடியது.

இந்த விஜயா ஏகாதசி சந்தேகமின்றி ஒருவருக்கு வெற்றியை கொடுக்கிறது. ஸ்ரீராமச்சந்திரர், தன் தந்தையின் கட்டளையை நிறைவேற்றும் வகையில் தன் மனைவி சீதாதேவி மற்றும் தன் சகோதரன் லஷ்மணனுடன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்றபோது, அவர்கள் கோதாவரி நதிக்கரையில் பஞ்சவதி என்ற அழகான காட்டில் சில காலம் வாழ்ந்தனர்.

அவர்கள் இக்காட்டில் தங்கியிருக்கையில் ஒருநாள், அசுரர்களின் மன்னனான இராவணன் தவசியான சீதாதேவியைக் கடத்திச் சென்றான். இதனால் இராமச்சந்திரர் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்தார்.

சீதாதேவியை தேடி காடு முழுவதும் அலைந்து கொண்டிருக்கையில், இராமச்சந்திரர், பறவைகளின் மன்னனான ஜடாயுவை சந்தித்தார். மரணவாயில் இருந்த ஜடாயு, இராமச்சந்திரரிடம், சீதாதேவியை பற்றிய முழுவிவரத்தையும் கூறிவிட்டு, இவ்வுலகில் இருந்து விலகி வைகுண்டத்திற்குத் திரும்பியது.

அதன்பிறகு இராமச்சந்திரர், சுக்ரீவனுடன் நட்பு கொண்டார். இராமச்சந்திரருக்கு உதவ, பெரிய வானர சேனை தயாரானது. இதற்கிடையில் குரங்குகளின் மன்னனான அனுமான் இலங்கையில் உள்ள அசோக வனத்திற்குச் சென்று சீதாதேவியை சந்தித்து, இராமச்சந்திரரின் மோதிரத்தைக் கொடுத்து அவளை சமாதானப்படுத்தும் மிகப்பெரும் பணியை நிறைவேற்றினார்.

பிறகு அனுமான் இராமச்சந்திரரிடம் திரும்பி வந்து எல்லா நிகழ்ச்சிகளையும் விவரித்தார். அனுமானின் வார்த்தைகளைக் கேட்ட இராமச்சந்திரர் தன் நண்பன் சுக்ரீவனை சந்தித்து இலங்கையை தாக்குவதென தீர்மானித்தார். இராமச்சந்திரர் மிகப்பெரிய வானர சேனையுடன் கடற்கரையை அணுகினார்.

பிறகு லக்ஷ்மணனிடம் கூறினார். ஓ! சவுமித்ரா, முதலைகளும், திமிங்கலங்களும் நிரம்பிய இப்பெருங்கடலை எவ்வாறு கடக்கப்போகிறோம். லக்ஷ்மணன் பதிலளித்தார்.

ஓ! முழு முதற்கடவுளே, பகதால்ப்யா என்ற ஒரு பெருமுனிவர் இத்தீவில் வசிக்கிறார். அவருடைய ஆசிரமம் இங்கிருந்து நான்கு மைல் தொலைவில் உள்ளது. ஓ, ரகுவம்சத்தின் புதல்வனே, இந்த முனிவர் பிரம்மாவை நேரில் தரிசித்தவர். இக்கடலை கடக்கும் விதத்தை அவரிடம் கேட்போம்.

லக்ஷ்மணனின் அறிவுரையைக் கேட்ட இராமச்சந்திரர் பக்தால்ப்யா முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்று தன் மரியாதை கலந்த வணக்கங்களை முனிவரிடம் சமர்ப்பித்தார்.

வந்திருப்பவர் முழுமுதற் கடவுளான இராமச்சந்திரரே என்றும், அசுரனான இராவணனைக் கொல்வது போன்ற குறிப்பிட்ட காரணத்திற்காக இம்மண்ணுலகில் தோன்றியுள்ளவர். என்பதையும் எல்லாம் அறிந்த முனிவர் உடனே புரிந்து கொண்டார். முனிவர் கேட்டார்,

ஓ, இராமச்சந்திரா தாங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள்?

இராமச்சந்திரர் பதிலளித்தார்,

அந்தணரே, உம்முடைய கருணையால் அசுரர்களை வென்று இலங்கையை கைப்பற்றுவதற்காக நான் என்னுடைய சேனையுடன் இக்கடற்கரைக்கு வந்துள்ளேன். ஓ, முனிவர்களில் சிறந்தோரே, இந்த அளவிட முடியாத பொருங்கடலைக் கடப்பதற்கான ஒரு சுலபமான உபாயத்தை எனக்கு கூறுங்கள். இதற்காகத்தான் நான் உமது தாமரை பாதங்களிடம் வந்துள்ளேன்.

பெருமுனிவர் கூறினார், ஓ! இராமச்சந்திரா, ஒரு உயர்ந்த விரதத்தைப் பற்றி உனக்குக் கூறுகிறேன். அதை அனுஷ்டிப்பதால் நீங்கள் நிச்சயமாக போரில் வென்று இவ்வுலகில் அசாதாரணமான புகழும், செல்வமும் பெறுவீர்.

இந்த ஏகாதசியை நிலை மாறாத கவனத்துடன் அனுஷ்டிக்க வேண்டும். ஓ, ராமா, தேய்பிறையில் விஜயா ஏகாதசி என்ற ஒரு ஏகாதசி தோன்றுகிறது.

இந்த ஏகாதசியை அனுஷ்டித்தால் நீங்கள் நிச்சயமாக உமது வானர சேனையுடன் இந்த கடலைக் கடக்க முடியும். ஓ, இராமச்சந்திர பகவானே, இந்த ஏகாதசியை அனுஷ்டிக்கும் வழி முறையை இப்பொழுது கேளுங்கள்.

ஏகாதசிக்கு முன்தினம் தங்கம், வெள்ளி, பித்தளை அல்லது மண் கலசத்தில் நீர் நிரப்பி, மா இலைகளால் அதனை அலங்கரிக்க வேண்டும்.

பிறகு புனிதப்படுத்தப்பட்டு ஏழு வகையான தானியங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு உயர்வான தலத்தில் இட வேண்டும். இதன் மீது பகவான் நாராயணரின் தங்க மூர்த்தியை இட வேண்டும்.

ஏகாதசியன்று அதிகாலையில் குளித்து இந்த நாராயண மூர்த்தியை பக்தியுடன் துளசி, சந்தனம் பசை, மலர்கள், மாலை, ஊதுபத்தி, நெய்தீபம் போன்றவற்றைக் கொண்டு வழிபட வேண்டும். அன்று இரவு முழுவதும் விழித்திருக்கவேண்டும்.

ஏகாதசிக்கு மறுநாள் சூர்யோதயத்திற்கு பிறகு இந்த நீர் நிரப்பிய கலசத்தை ஒரு ஆற்றங்கரையிலோ அல்லது குளக்கரையிலோ இட்டு முறையாக வழிபட வேண்டும். அதன் பிறகு அந்த நீர் நிரப்பிய கலசம் மற்றும் நாராயண விக்ரகத்தை, பிரம்மச்சர்யத்தை உறுதியுடன் அனுஷ்டிக்கும் அந்தணருக்கு தானமளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நீங்கள் நிச்சயமாக உம்முடைய எதிரியை வெற்றி கொள்வீர்.

பெருமுனிவரின் அறிவுரைப்படி பகவான் இராமச்சந்திரர் தன்னை ஒரு உதாரணமாக வெளிப்படுத்திக் கொண்டு இந்த ஏகாதசியை சரியான முறையில் அனுஷ்டித்து, வெற்றி பெற்றார்.

இந்த ஏகாதசியை சரியான முறையில் அனுஷ்டிப்பவர், இவ்வாழ்க்கையிலும் அதற்குப் பின்னரும் வெற்றி பெறுவார். பகவான் பிரம்மா, நாரதரிடம் தொடர்ந்து கூறினார். ஆகையால், ஓ, எனதருமை புத்திரனே, அனைவரும் இந்த விஜயா ஏகாதசியை அனுஷ்டிக்க வேண்டும்.

இந்த ஏகாதசியை ஒருவரின் அனைத்து பாவ விளைவுகளையும் அழித்து விடும். இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி படித்தாலோ (அ) கேட்டாலோ, ஒருவர் வாஜ்பேய யாகத்தின் பலனை அடைவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version