― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ருஷி வாக்கியம் (98) – அகில உலகிற்கும் ஒரு தேசீய கீதம்!

ருஷி வாக்கியம் (98) – அகில உலகிற்கும் ஒரு தேசீய கீதம்!

- Advertisement -

மகரிஷிகள் அளித்துள்ள விஞ்ஞானத்தில் மானுட உறவுகள் நட்போடு கூடியதாய் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். அதனைக் கொண்டு யோக சாஸ்திரத்தை இயற்றிய பதஞ்சலி முனிவர் “மைத்ரீ” குணம் மனிதர்களிடையே வளர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். உலகில் அனைவரும் சிநேகத்தோடு வாழ வேண்டும்.

சிருஷ்டியில் எவரையாவது வெல்ல வேண்டுமென்றால் பராக்கிரமத்தாலோ, பகையாலோ, வெறுப்பாலோ வெல்ல முடியாது. வெல்வது என்றால் என்ன? எதிராளியை நமக்கு சாதகமானவர்களாக செய்து கொள்வதே வெற்றி! அவர்களை நமக்கு அனுகூலமாக மாற்றிக் கொள்வதற்கு வெறுப்போ, கோபமோ, வீரமோ, பலமோ, அழுத்தமோ காட்டுவது தேவையல்ல.

எதன் மூலம் எதிராளியை ஜெயிக்க முடியும் என்பது பற்றி மகரிஷிகளுக்கெல்லாம் மகரிஷி என்ற போற்றுதலுக்குரிய மகான், சாட்சாத் தட்சிணாமூர்த்தியின் அவதாரம், அபர ஆதிசங்கரர் என்று போற்றப்படும் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹா ஸ்வாமிகள் உயர்ந்த கருத்தை அளித்துள்ளார்கள்.

“மைத்ரீம் பஜத அகில ஹ்ருத் ஜைத்ரீம்

ஆத்மவதேவ பராந்நபி பஸ்யத
யுத்தம் த்யஜத ஸ்பர்தாம் த்யஜத
த்யஜத பரேஷு அக்ரம மாக்ரமணம்

மைத்ரீம் பஜத அகில ஹ்ருத் ஜைத்ரீம்

ஜனனீ ப்ருத்வீ காமதுஹாஸ்தே
ஜனகோ தேவ: சகல தயாளு:
தாம்யத தத்த தயத்வம் ஜனதா:

ஸ்ரேயோ பூயாத் சகல ஜனானாம் !”

புகழ் பெற்ற இந்த கீர்த்தனையை அகில உலக கீர்த்தனையாக வர்ணிக்கலாம். தேசிய கீதங்கள் பல உள்ளன. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தேசிய கீதம் இயற்றப்பட்டு பாடப்படுகிறது.

பிரபஞ்சம் அனைத்திற்குமான ஒரு அகில உலக கீதம் இருந்தால் எப்படி இருக்கும் என்றால்…. அத்தகைய கீதத்தை இயற்றிய மகான் சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகா சுவாமிகள். அவ்வாறு படைக்கக்கூடிய சக்தி கூட மகரிஷி ஸ்வரூபமான அவருக்கே உள்ளது.
அது மட்டுமல்ல. அவர் இயற்றிய அந்த கீர்த்தனையை அகில உலக மேடையில் கானம் செய்தவர் ஸ்வர லட்சுமியான சங்கீத சுப்புலட்சுமி. எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்கள் இந்த பாடலை மிக அற்புதமாகப் பாடியுள்ளார்.

அப்படிப்பட்ட தெய்வீகமான இந்தப் பாடலில் ஒவ்வொரு சொல்லும் ஒரு ருஷி வாக்கியமே! மகரிஷி ஸ்வரூபமான மகாசுவாமிகள் உபநிஷத்தில் கூறப்பட்ட வாக்கியங்களையெல்லாம் ஒன்று திரட்டி இந்த கீதத்தில் அளித்துள்ளார்.

சர்வ காலத்திற்கும், சகல மக்களுக்குமான செய்தி இந்த கீர்த்தனையில் பொதிந்துள்ளது. உபநிஷத் கூறியுள்ள சொற்களை மிக அற்புதமாக இதில் எடுத்துக் காட்டுகிறார். இத்தகைய உயர்ந்த சிந்தனைகளை எட்டு வாக்கியங்களை கொண்ட இந்த கீர்த்தனையில் நாம் அனைவரும் நிரந்தரம் மனனம் செய்ய வேண்டிய அம்சங்களோடு எடுத்துக் காட்டியுள்ளார்.

“மைத்ரீம் பஜத அகில ஹ்ருத் ஜைத்ரீம்” என்ற பின் சரணங்களை எல்லாம் சேர்த்துப் பார்த்தால் மொத்தம் ஏழு வரிகள் உள்ளன. பல்லவியோடு சேர்த்தால் எட்டு வாக்கியங்கள் உள்ளன.

இந்த கீதத்தில், “சகல மக்களின் இதயங்களையும் வெற்றி கொள்ளக்கூடிய மைத்ரியை, நட்பை அனைவரும் ஏற்று நடப்போமாக! சினேக பாவனையோடு வாழ்வோமாக!” என்கிறார்.

அதற்கு ஏற்ப இருக்க வேண்டிய குணங்கள் என்ன? “ஆத்மவதேவ பராந்நபி பஸ்யத” – “நீங்கள் எவ்வாறோ, அவ்வாறே பிறரையும் பாருங்கள்!” என்கிறார். இதே கருத்தை வேத நூல்கள் பல யுகங்களுக்கு முன்பே கூறி உள்ளன. நீ எப்படியோ பிறரும் அப்படியே! பிறரை எவ்வாறு பார்க்க வேண்டுமென்றால் உன்னை போலவே பார்! இது மிக உயர்ந்த கூற்று.

அப்படியின்றி, “சகோதரனைப் போல் நினை! நண்பனைப் போல் நினை!” என்பதெல்லாம் பயனற்றவை. சகோதரர்களிடையேயும் வேற்றுமை வருவதைக் காண்கிறோம். சகோதரர்களுக்கு சகோதரர்களே பகையாவதை பல சம்பவங்கள் காட்டுகின்றன.

ஆனால், எனக்கு நான் எப்போதுமே பகைவனாக மாட்டேன் என்பதால் என்னை நான் எவ்வாறு பார்த்துக் கொள்வேனோ பிறரையும் அவ்வாறே காண வேண்டும் என்கிறார். “ஆத்மவத் ஸர்வபூதாநி !” என்ற வேதாந்த வாக்கியமே இங்கு மகாஸ்வாமிகளின் வாயிலாக வெளிப்படுகிறது.

“ஆத்மவதேவ பராந்நபி பஸ்யத
யுத்தம் த்யஜத ஸ்பர்தாம் த்யஜத !”

இது அகில உலக மேடையில் பாடப்பட்ட கானம். ஆதலால் பிரபஞ்சத்தின் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தக்கூடியது. “யுத்தம் த்யஜத ஸ்பர்தாம் த்யஜத !” – “யுத்தத்தை விட்டுவிடுங்கள்! போட்டியை விட்டு விடுங்கள்!”

‘ஸ்பர்த’ என்றால் ஒருவரிடம் மற்றவருக்கு ஏற்படும் போட்டி. அவரை விட மிஞ்சிப் போகவேண்டும் என்று இவரும் இவரை விட மிஞ்சி போகவேண்டுமென்ற அவரும்… இதுபோன்ற போட்டிகளால்தான் யுத்தம் ஏற்படுகிறது.

இது மொத்தம் அனைத்து நாடுகளுக்கும் மட்டுமின்றி தனிமனிதருக்கும் அமைப்புகளுக்கும் கூடப் பொருந்தும்! இவற்றை உலக நலனுக்காக தெரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது. அதனால், யுத்தத்தையும் போட்டி மனப்பான்மையையும் விட்டுவிடு! என்கிறார். போட்டி என்று வந்தால் ஒவ்வொன்றும் கெடுதலாகவே தென்படும். ஒரு மனிதரைப் பிடிக்கவில்லை என்றால் அவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் கெட்டவையாகவே விமர்சிப்பது வழக்கமாகிவிடும். அப்படியில்லாமல் நட்புணர்வு ஏற்பட்டால் அனைத்தையும் அனுகூலமாக, கருத்தொற்றுமையோடு காணமுடியும்.

“யுத்தத்தை விட்டுவிடு! போட்டியை விட்டு விடு!” என்று கூறியருளிய மஹாஸ்வாமிகளின் வாக்கியத்திற்கு மூலம் பிரகதாரண்யகோபநிஷத்தில் உள்ள ஒரு மந்திரம். “த்யஜத்ஸ்பர்தாம் யுத்தம் மா குருத !” – இது வேத மாதா கூறியுள்ள கருத்து. “போட்டியை விட்டு விடு! யுத்தம் செய்யாதே!” இதனைக் கொண்டு உலக அமைதியை விரும்பும் கலாச்சாரம் வேதக் கலாச்சாரம் என்பதை அறியலாம்.

அந்தக் காரணத்தால்தான் ஆக்கிரமிப்புகள் செய்வது, தம் தர்மத்தை இன்னொருவர் மீது திணிப்பது, தங்கள் தர்மமே உயர்ந்தது, பிறருடையது தாழ்ந்தது என்பது போன்ற பிரச்சாரங்கள் செய்வது, அவற்றை காரணம் காட்டி போட்டி மனப்பான்மையைத் தூண்டுவது, வேற்றுமைகளை வளர்ப்பது…. இதுபோன்ற செயல்கள் ஹிந்து மதத்தில் இல்லை. ஹிந்து மதம் அனைத்து மதங்களையும் கௌரவிக்கிறது. எங்களை எங்கள் வழியில் வாழ விடுங்கள்! என்று கோருகிறது. அதனால் ஹிந்து மதத்தவரை வேறு யாரோ வந்து மதம் மாற்றினார்கள் என்றால் அது உலக நன்மைக்கு தீங்கு விளைவிப்பதே!

“த்யஜத்ஸ்பர்தாம் யுத்தம் மா குருத !” – இந்த உபநிஷத் வாக்கியத்தை மஹாஸ்வாமிகள் “யுத்தம் த்யஜத ஸ்பர்தாம் த்யஜத !” என்று கூறி அருளியுள்ளார்கள்.

“த்யஜத பரேஷு அக்ரம மாக்ரமணம் !” – “பிறரை அக்கிரமமாக ஆக்கிரமிப்பதை விட்டுவிடு”. இந்த வாக்கியத்தில் உள்ள சிறப்பு என்னவென்றால் பிறர் நம்மீது தாக்குதலுக்கு வருகிறார்கள் என்றால் அதனை எதிர்கொள்வதற்கு பராக்கிரமம் காட்டுவதும் வீரம் காட்டுவதும் தவறல்ல. அது யுத்த தர்மம். ஆத்ம ரட்சணை தர்மம். அப்படி ஆக்கிரமிப்பதில் தவறு இல்லை.

ஆனால் அக்கிரமமாக ஆக்கிரமிப்பது மிகத் தவறு. ராஜ்ஜியத்தை விரிவாக்க வேண்டும் என்றோ, பிற அரசுகளின் செல்வத்தைக் கொள்ளை அடிக்க வேண்டும் என்றோ, பிறரை விடத் தானே உயர்ந்தவர் என்று காட்டிக் கொள்ள வேண்டுமென்றோ, உலகில் தன் ஆதிக்கமே உயர்ந்தது என்று பெயரெடுக்க வேண்டும் என்றோ… பிறர் நாட்டை ஆக்கிரமிப்பதும், அவர்களைத் தாக்குவதும் தவறு!

இந்த மூன்று வாக்கியங்களில் சரணம் மிகவும் திவ்யமாக கூறி அதற்குத் தொடர்பான பல்லவியான “மைத்ரீம் பஜத அகில ஹ்ருத் ஜைத்ரீம் !” என்பதை மீண்டும் கூறுகிறார். இதன் கருத்தை நாம் புரிந்துகொண்டு ஒவ்வொன்றோடும் பல்லவியாக “மைத்ரீம் பஜத அகில ஹ்ருத் ஜைத்ரீம்!” என்று வருவதை கவனிக்கும் போது மைத்ரீ பாவனை, சினேக எண்ணம் என்ன என்பதை சரணங்களில் விஸ்தரிப்பதைப் பார்க்க முடிகிறது.

மைத்ரீ பாவனை அதாவது நட்புணர்வு என்பது… “நம்மைப் போலவே பிறரையும் பார்ப்பது, யுத்தமும் போட்டியும் இல்லாமல் இருப்பது, பிறரை அக்கிரமமாக ஆக்கிரமிக்காமல் இருப்பது”.

இந்த வாக்கியங்களை ஒவ்வொருவரும் கவனமாக அறிந்து கருத்தில் கொள்ள வேண்டும். தற்போதைய உலகில் நாம் காண்பது என்னவென்றால்…. ஒருவருக்கு ஒரு கொள்கை பிடித்திருக்கும். அதனை அவர் கடைபிடிப்பார். அனைவரும் அதே கொள்கையையே கடைபிடிக்க வேண்டும். அந்த சித்தாந்தம் இல்லாவிட்டால் வீணாகி விடுவார்கள் என்ற எண்ணத்தை ஒவ்வொருவரும் கொண்டுள்ளார்கள். அங்கு தான் பிரச்சனை எழுகிறது.

ஒரு நாத்திகன் வந்து அனைவரும் நாத்திகர்களாக மாறினால் நன்றாக இருக்கும் என்பான். அதற்கேற்ப தகராறில் ஈடுபடுவான். ஆத்திகன் ஒருவன் வந்து அனைவரும் ஆத்திகர்களாக வேண்டும் என்று அறிவுரை கூறி பிரச்சாரம் செய்வான். இவற்றைப் பார்க்கையில் தங்களின் சித்தாந்தமே உலகம் முழுவதும் வியாபிக்க வேண்டும் என்ற சிந்தனை கொண்டிருப்பது அடிப்படையிலேயே தவறு என்பதை அறியமுடிகிறது. ஏனென்றால் உலகில் அனேகவித கொள்கைகள் இருக்கும். அநேக வித மதங்கள் இருக்கும். ஒன்று உயர்ந்தது… இன்னொன்று தாழ்ந்தது என்று கூறுவதற்கில்லை. அவரவர் கொள்கையை அவரவர் கடைபிடித்து இன்னொருவரை அவருடைய கொள்கையை கடைபிடிக்க விட்டாலே போதுமானது! அதை விட்டுவிட்டு பிறருடைய சித்தாந்தங்களை மறுத்து விமர்சிக்கக்கூடாது.

இது நாட்டிற்கும் மதத்திற்கும் உலகில் அனைவருக்கும் பொருந்தும் சிந்தனை! அதனால் வேறுபாடுகள் இயல்பாக இருக்குமே தவிர மைத்ரீ பாவனையோடும் சினேக எண்ணத்தோடும் ஒற்றுமையையும் சமரசத்தையும் சாதிக்க வேண்டும் என்று கூறுகிறார்!.

அப்படிப்பட்ட மைத்ரீ பாவனையை கூறியருளிய மஹாஸ்வாமிகளின் பாதகமலங்களுக்கு வந்தனம்! மீதியுள்ள சரணத்தின் சிறப்புகளை நாளை ருஷி வாக்கியத்தில் தரிசிப்போம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version