― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்மகா பெரியவர் மகிமைஸ்ரீ மஹாஸ்வாமி - ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி!

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி!

kanchi mahaperiyava

அறிமுகம்: The Mountain Path என்ற ஸ்ரீரமணாஸ்ரம இதழில், 2019-20 வருடங்களில் ஆங்கிலத்தில் பிரசுரமான தொடரை நன்றியுடன் இங்கே, ”ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி” என்ற தலைப்பில் தமிழாக்கித் தருகிறோம்.

Dr. Serge Demetrian. 1923ல் ரொமானியாவில் பிறந்து பாரீஸ் சென்று பிரஞ்ச் குடியுரிமை பெற்றவர் எழுதிய டைரிக் குறிப்புகள். இவர் மஹா பெரியவாளுடன் 1968லிருந்து அவர் மஹாசமாதி அடைந்த 1994வரை உடனிருந்தவர். பெரியவாளுடன் பாதயாத்திரைகள் மேற்கொண்டவர்.

ராமாயண, மஹாபாரத இதிகாசங்களை பிரஞ்ச்சில் மொழிபெயர்த்தவர். தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். 12,000 பக்கங்களுக்கு மேல் மஹாபெரியவாளுடனான அனுபவங்களை எழுதியிருக்கிறார் என்று The Mountain Path இதழில் உள்ள தகவல் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. 2018ம் வருஷம் அக்டோபர் 4ம் தேதி தனது 95வது வயதில் அவர் அருணாசலத்துடன் கலந்திருக்கிறார்.

மஹா பெரியவாளைப் பற்றிப் புதிதாக எழுதவேண்டுமென்பது எனது நீண்ட நாள் ஆசை. அது இப்போது நிறைவேறுவது என் பாக்கியம். ஜய ஜய சங்கர!  ஹர ஹர சங்கர!!

அன்பன்,
ஆர்.வி.எஸ். (Venkatasubramanian Ramamurthy)


மொழிபெயர்ப்பாளர் குறித்து…

rvs

மன்னார்குடியை பூர்வீகமாகக் கொண்டவர். புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து, எழுத்துலகில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டவர். எழுத்தாளர் சுஜாதாவின் தீவிர வாசகர். லா.ச.ரா., தி.ஜா, கி.ரா. ஜா, சு.ரா போன்ற விசேஷ இனிஷியல் எழுத்தாளர்களின் படைப்புகளை படித்து வியந்து மூன்று எழுத்தில் கொண்ட ஆசையால், ஆர்.வேங்கட சுப்பிரமணியன் என்ற தனது பெயரை சுருக்கி ஆர்.வி.எஸ்., என்று வைத்துக் கொண்டு, எண்ணற்ற கட்டுரைகள், இலக்கிய ஆன்மிக கட்டுரைகள் எழுதியுள்ளார். இணையத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் இவர், படித்தது எம்.சி.ஏ., பின்னாளில் சென்னைக்குக் குடியேறி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் நிறுவனத்தில் தொழில்நுட்பப் பிரிவில் பொதுமேலாளராகப் பணி புரிந்தவர்.

மென்பொருள் துறையில் பணிபுரிந்தாலும், தமிழில் எழுதுவதில் தணியாத தாகம் கொண்டிருந்ததால், கதை, கவிதை மற்றும் கட்டுரை உள்ளிட்ட இவரது படைப்புகள் தினமணி கதிர், சூரியகதிர், இவள் புதியவள் உள்ளிட்ட இதழ்களில் வெளியாகி யிருக்கின்றன. சங்கீதா ஆர்.வி.எஸ், சங்கீதா, வினயா, மானஸா ஆகிய புனை பெயர்களில் இவை வெளியாகியுள்ளன.

அமேசான் கிண்டிலில், இவரது நூல்கள் வெளியாகியுள்ளன. பகவத்கீதை, திருத்தல உலா பயணக்கட்டுரைகள், பொய்க்காட்சி, கால்தடம் பதித்தகாட்சிகள், ஊழிக்கால மழை, சுப்பு Vs மீனு, சொப்பன வாழ்வில் மகிழ்ந்து… கோபாலன் வைபவம் என்ற நூல்கள் உள்ளன.


kanchi mahaperiyava1

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி-1)

  • Serge Demetrian (The Mountain Path)
    தமிழில் – ஆர்.வி.எஸ்.

செகந்திராபாத் – திங்கள்கிழமை
– 16 ஆகஸ்ட் 1968

ஆகஸ்ட் 16ம் தேதி ரயில் நிலையத்தில் இறங்கியவுடன் முதலில் இருவர் என்னை வரவேற்றார்கள். இருவரும் அண்ணன் – தம்பிகள். இருவருமே ஹைதராபாத்தில் கல்லூரிப் பேராசிரியர்களாக இருக்கிறார்கள். அவர்களுடன் தான் நான் தங்கப்போகிறேன். மேலும் மெட்ராஸிலிருந்து எனக்கு முன்பே வந்திருந்த இரண்டு நண்பர்களும் அங்கே என்னை வரவேற்க வந்திருந்தார்கள். அவர்கள் எல்லோரும் இந்தியர்கள். மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மஹாஸ்வாமியின் தரிசனம் அன்று மாலை 4 மணிக்கு ஹைதராபாத்தின் இரட்டை நகரமான செகந்திராபாத்தில் ஏற்பாடாகியிருந்தது.

அதிசயமாக அடுத்ததாக பீடாதிபதியாகப்போகும் இளைய ஸ்வாமிகளுடன் செகந்திரந்தாபாத்தின் பத்மாராவ் நகரில் ஸ்ரீ மஹாஸ்வாமி முகாமிட்டிருந்தார். சந்நியாசிகளுக்கே உரியதான நடைப்பயணமும் ஒவ்வொரு ஊராக சென்று தர்மங்களைப் பரப்புவதும் நெறியாக இருப்பினும் ஒவ்வொரு வருஷமும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அவர்கள் ஓரிடத்தில் தங்கி வேதவேதாந்தங்கள் மற்றும் தத்துவவிசாரங்களில் தங்களது நேரத்தைச் செலவிடுவது வழக்கம். இது சதுர்மாஸ்ய விரதம் என்றழைக்கப்படுகிறது. இந்த விரதத்தை ஞானமூர்த்தியான ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரமாகப் பார்க்கப்படும் வியாசாச்சாரியாளுக்கு பூர்வாங்க பூஜைகள் செய்யப்பட்டு ஆரம்பிக்கப்படுகிறது.

என்னை ரயிலடியில் வரவேற்ற பேராசிரிய சகோதரர்கள் இருவர் தங்கள் மனைவிகளுடனும் மற்றும் மெட்ராஸிலிருந்து வந்திருந்தவர்களும் நானும் என்று ஏழு பேர் குழுவாக மதிய உணவை முடித்துக்கொண்டு மஹா ஸ்வாமிகள் தரிசனத்திற்குப் புறப்பட்டோம். ஆண்கள் அனைவரும் வேஷ்டியை உடுத்தி அங்கவஸ்திரத்தை மேலுக்குப் போட்டிருந்தோம். பெண்கள் பாரம்பரிய உடையான மடிசாரில் இருந்தார்கள். கோவிலுக்கோ மஹாஸ்வாமியையோ தரிசனம் செய்யும் போது ஆண்கள் அந்த அங்கவஸ்திரத்தை இடுப்பிலோ அல்லது மார்வரையிலோ மரியாதை நிமித்தமாகச் சுற்றிக் கட்டிக்கொள்ள வேண்டும்.

mahaswami

ஒரு தொழிற்சாலை போன்ற இடத்தில் வண்டி நின்றது. பெரும் பெயர்ப்பலகையில் ஸ்வராஜ்யா பிரஸ் என்று கொட்டையாக எழுதியிருந்தது. செய்தித்தாள் அச்சடிக்கும் நிறுவனம். அதற்குள் நுழைந்து சில அலுவலகக் கட்டங்களைக் கடந்து ஒரு சிறிய முற்றம் போலிருந்த இடத்துக்கு வந்தோம். பெரிய நீலக் கம்பளம் விரித்திருந்த இடத்தில் எங்களை அமரச் சொன்னார்கள். நாங்கள் சம்மணமிட்டு உட்கார்ந்தோம். அந்தக் கம்பளம் முடியும் இடத்தில் குறுகிய ஐந்து படிக்கட்டுக்கள் இருந்தன. அது மேலே ஏறி நிறைவடையும் இடத்தில் ஒரு சிறு மேடை இருந்தது. இதெல்லாம் தரையிலிருந்து ஒரு மீட்டர் உயரத்திற்குள்தான் இருந்தது. அந்த மேல் சிறு மேடைக்குப் பக்கத்தில் கதவு திறந்திருந்தது. அங்கேதான் மஹாஸ்வாமி தோன்றப் போகிறார். அந்தக் கதவைத் தாண்டி கண்கள் மேய்ந்தால் அது உள்ளே ஒரு பெரிய அறையின் துவக்கம் போலத் தெரிந்தது. சூரியன் பளிச்சிட்ட திசையை வைத்துக் கணக்கிட்டால் நாங்கள் வடக்கு பார்த்து அமர்ந்திருந்தோம். ஒரு மாமுனியை சந்திக்கும் போது அப்படி நிற்பதோ அமருவதோதான் பாரம்பரியம். தன்னால் இதுபோல சாஸ்திரபிரகாரம் நடந்துவிட்டதோ?

நான் மேலே திறந்திருந்த அந்தக் கதவுக்குப் பின்னால் இருக்கும் அந்த அறையைப் பார்த்தேன். காலக்கணக்கில்லாத முடிவில்லாத இருள் சூழ்ந்தது போலிருந்தது. சட்டென்று தூரத்தில் தெளிவில்லாமல் மங்கலாக ஏதோ அசைவது கண்ணில் பட்டது.  அந்த அசைவின் மையத்தில் இப்போது வண்ணமயமான அலைகள் எழுகிறது. நிழலாக ஆரம்பித்தது அப்படியே படிப்படியாக காவி நிறமாகியது. அந்த வண்ணம் திடமாகி சட்டென்று கதவின் முன்னால் ஸ்ரீ மஹாஸ்வாமி பளிச்சென்று பிரசன்னமானார்.

நிறைய நேரம் அப்படியே எங்கள் முன்னால் நின்றார். அது ஒரு அசாதாரணத் தோற்றம். பொலிவான முகத்தில் நல்லிணக்கம் தெரிகிறது. விவேகம் ததும்பும் சக்தியும் தெளிவான புரிதலும் கொண்டவர் என்ற கலவையான எண்ணங்கள் அந்த முதன்முதல் முத்திரைத் தோற்றத்தில் எனக்கு தோன்றியது. அவரது தோற்றமா அல்லது பாவமா எது என் உணர்வினைத் தாக்கியது என்று சரியாகத் தெரியவில்லை. அவரிடமிருந்து ஊற்று போல ஆன்மசக்தியானது சுயமாகத் தோன்றி அங்கே சுடர்விட்டுக்கொண்டிருந்தது. அவரது மனதின் கூர்மை தெள்ளத்தெளிவாக வெளிப்படையாகத் தெரிந்தது.

தோற்றத்தில் நடுத்தர உயரமாக அல்லது அதற்கும் சற்றுக் குறைவாக 1 மீ 50 செமீ உயரத்தில் இருந்தார். ஆனால் அவரைச் சுற்றி சுடர்விடும் ஞான ஒளியினால் பௌதீக அளவைவிட உயரமாகத் தெரிந்தார். ஒல்லியாக இருந்தார். எழுபது வயது நிரம்பியர் என்ற தேக அசௌகரியங்கள் இல்லாமல் திடமானவர். முகம் நீள்வட்டமாக அழகாக இருந்தது. அதற்கு மகுடம் சூட்டினாற்போல இருந்த கண்கள் நெற்றியை மீறி ஆட்சி செய்துகொண்டிருந்தது. வடிவமான நாசி. முள்ளு முள்ளாய் சின்னதாய் வெள்ளி போல தாடி. அவரது பெரிய காதுகள் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது.

கைத்தறியினால் ஆன காவி வஸ்திரம் உடுத்தி எளிமையாக இருக்கிறார். தங்கம் போன்ற ஒல்லியான மழுமழுக் கால்களை மறைக்காமல் அதற்கு மேலே இடுப்பைச் சுற்றி அந்த காவியைக் கட்டியிருக்கிறார். மேலே தோளிலிருந்து தலைக்கு முட்டாக்கு போல அந்த வஸ்திரம் பாய்கிறது. வலது கரத்தில் கமண்டலம். இடது முழங்கையினால் நெஞ்சோடு சேர்த்து அணைத்தபடி தண்டம் இருக்கிறது. தண்டத்தின் உச்சியில் பிரம்ம சூத்திரத் துணி

சுற்றியிருக்கிறது. புனிதமான அது சந்நியாசியின் சக்தியைக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது. அவரது இடதுகை விரல்கள் கழுத்தில் தொங்கிய ருத்ராட்ச மாலையின் மணிகளைத் தொட்டுக்கொண்டிருக்கிறது.

இப்படி எளிமையான சந்நியாசி இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னால் துவக்கப்பட்ட ஆன்மிக பாரம்பரியத்தின் தொடர்ச்சியை அங்கே பறைசாற்றிக்கொண்டிருக்கிறார். ஆன்மிக மூன்னோர்கள் வடிவமைத்த துறவிகளுக்கே உரித்தான சிற்பத்திலிருந்து நேரடியாக வந்திறங்கியது போல ஸ்ரீ மஹாஸ்வாமி தெரிந்தார்.

லட்சக்கணக்கான ஹிந்துக்களின் ஆன்மிக குரு, வழிகாட்டி, தலைவர் அதற்காக சிறப்பு இலட்சினை எதுவும் அணியவில்லை. அவரது சுடர்விடும் தேஜஸ்தான் அவரையும் தென்னிந்தியாவில் செருப்பில்லாமல் காவியுடுத்தித் திரியும் சாதாரணத் துறவிகளையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.

கூனிக்கொண்டு கைகளை கூப்பிக்கொண்டு நாங்கள் நின்றுகொண்டிருக்கிறோம். சிலர் இன்னும் குனிந்து பவ்யமாக மரத்தட்டுகளில் மலர்களையும் மாலைகளையும் பழங்களையும் அவருக்கு முன்னால் சமர்ப்பித்தார்கள். சின்ன முற்றமாக இருந்ததால் எல்லோரும் நமஸ்காரம் செய்வதற்கு சுற்றிச் சுற்றி இடம் தேடி விழுந்தார்கள். நான் அரைகுறையாகத் தரையில் விழுந்து நமஸ்கரித்தேன்.

நாங்கள் எல்லோரும் எங்கள் வந்தனங்களை நிறைவுசெய்வதற்காக பொறுமையாகக் காத்திருந்தார். பின்னர் பெரிதாக விரிக்கப்பட்டிருந்த ஜமக்காளத்தில் அமரும்படி சைகைக் காட்டினார்.  சின்னப் பலகையில் தர்ப்பைப் பாய் விரிக்கப்பட அதன் மேல் சௌகரியமாக அமர்ந்தார். வந்திருந்த எங்கள் அனைவருக்கும் பார்ப்பதற்கு இடையூறின்றி ஐந்து படிக்கட்டுகளுக்கு மேலே தெற்குத் திசை நோக்கி ஸ்ரீ மஹாஸ்வாமி அமர்ந்திருக்கிறார். அவரது இடப்புறமிருந்த சுவரின் மீது தனது தண்டத்தை ஜாக்கிரதையாக சாய்த்தார். வலதுபுறம் தரையில் அவரது கமண்டலம் இருந்தது.

எங்கள் குழுவின் தலைவராக மெட்ராஸிலிருந்து வந்த என் நண்பர்களில் மூத்தவர் இருந்தார். அந்த சிறு மேடையின் இடதுபுறம் சென்று அவர் பவ்யமாக மூக்கையும் வாயையும் பொத்திக்கொண்டு நின்றார். கட்டளைகள் ஆரம்பிக்கிறது. முதலில் நான்தான் அறிமுகப்படுத்தப்பட்டேன்.

“மிஸ்டர் டிமிட்ரியன். தத்துவத்தில் ஆராய்ச்சி செய்யறவர். ரொமானியேவிலிருந்து வந்திருக்கார்” என்று அவர் ஆங்கிலத்தில் சொல்ல நான் எழுந்து ஸ்ரீ மஹாஸ்வாமிகள் முன்னால் நிற்கிறேன்.

தொடரும்….

#ஸ்ரீ_மஹாஸ்வாமி_ஒளிவீசும்_கண்கள்_கொண்ட_மாமுனி
#மஹாஸ்வாமி_ஆர்விஎஸ்_பகுதி1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version