Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் ரத சப்தமி: அதென்ன ‘ஏழு குதிரைகள்’? ஏன் அப்படிச் சொன்னார்கள்?

ரத சப்தமி: அதென்ன ‘ஏழு குதிரைகள்’? ஏன் அப்படிச் சொன்னார்கள்?

suryadev-1
suryadev 1

பிப்ரவரி 19 ரத சப்தமி!
சூரிய ரதத்தின் சிறப்பு!
சூரிய ரதத்தில் இருப்பவை உண்மையான குதிரைகளா?

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

மாக மாதம் முழுவதும் சூரிய வழிபாட்டிற்கு உகந்ததாக உள்ளது. இந்த மாதத்திற்கு அத்தனை சக்தி உள்ளது. சப்தமி திதிக்கும் சூரியனுக்கும் தொடர்பு உள்ளது.

ஏழு என்ற எண்ணை விரும்புபவனாக சூரியன் விளங்குகிறான். ‘சப்தாஸ்வம்’ எனப்படும் ஏழு குதிரைகளை கொண்ட ரதம் சூரியனுடையது.

“ஏகோ அஸ்வோ வஹதி சப்த நாமா” என்று வர்ணிக்கிறது வேதம். ‘சப்த’ எனப்படும் ‘ஏழு’ என்ற எண்ணைப் பற்றி உயர்வாக பல இடங்களில் கூறுகிறது வேதம். எத்தனை ஆராய்ச்சிபூர்வமாக பேசுகிறது பாருங்கள்!

சூரியனுக்கு உள்ளது ஒரே ஒரு அஸ்வம்/குதிரை. அதன் பெயர் சப்த/ஏழு என்பது இதன் பொருள். இதில் உள்ள ரகசியம் என்ன? மிகவும் மர்மமாக உள்ளது அல்லவா?

‘அஸ்வம்’ என்றால் என்ன? அஸ்வம் (குதிரை), ப்லவங்கம் (குரங்கு), ஹரிணம் (மான்). இந்தப் பெயர்களெல்லாம் சூரிய ஒளிக் கதிர்களின் பெயர்கள். அவற்றின் பெயரே விலங்குகளுக்கு வந்துள்ளது. விலங்குகளின் பெயர் சூரிய ஒளிக் கிரணங்களுக்கு வைக்கவில்லை. இதை அறிய வேண்டும். சூரிய ஒளிக் கிரணங்களின் இயல்பைப் பொறுத்து இந்த பெயர்களை வைத்துள்ளார்கள்.

அஸ்வம் என்ற சொல்லின் பொருள் என்ன? சூரியனைப் பற்றி விவரிக்க வேண்டுமென்றால்… இது ஒரு சயின்ஸ் வகுப்பு போல தான் இருக்கும். ஆனால் பக்தி, சிரத்தையோடு கவனமாக இது குறித்து அறிய முயற்சிக்க வேண்டும்.

ALSO READ: ஏழு பாவங்கள் தொலைய.. இன்று இதைச் செய்யுங்கள்!

“அசுவ்யாப்தௌ” என்கிறது வேதம். ‘அசு’ என்ற சொல்லுக்கு ‘வியாப்தி’/பரவுதல் என்று பொருள். ஆசு கவித்துவம் என்று கேள்விப்படுகிறோம் அல்லவா?உடனுக்குடன் விரைவாக கவிதை இயற்றுவதால் அதனை ஆசுகவி என்கிறோம். வேகமாக வியாபிப்பது என்ற குணம் இருப்பதால் சூரிய கிரணத்திற்கு அஸ்வம் என்று பெயர். மிக வேகமாகப் பாய்ந்து செல்வதால் குதிரைக்கு அஸ்வம் என்று பெயர் சூட்டினாார்கள். அது சூரிய ஒளிக் கதிருக்குரிய பெயர். இங்கு அஸ்வம் என்றால் ஒளிக் கதிர்.

suryadeva1 1

“ஒரே கிரணம். அதன் பெயர் ஏழு” என்கிறது வேதம். இதனை ஆராய வேண்டும். ஏழு குதிரை உடையவன் உடையவன் சூரியன் என்கிறோம். இதனை விளக்குவோம். “சப்தாஸ்வ ரதமாரூடம்” என்று ஏன் கூறினார்கள்?

சூரியனால் இயக்கப்படும் ஏழுகள் என்னென்ன? அனைத்தையும் இப்போது பார்ப்போம். இங்கு ஒரு விஷயம் கூற வேண்டும். நம்மையும் சூரிய மண்டலத்தையும் விஸ்வத்தையும் நடத்துபவனான ஒரே பகவானை நாம் சூரியனாக வழிபடுகிறோம். இந்த மூன்றின் வழியாகவும் சூரியனைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சிப்போம்.

சூரியனின் ஒளி என்பது ஒன்றுதான். அது அஸ்வம். அது பிரிதல் அடைகிறது. அது ஏழாகிறது. ஏழு வண்ணங்கள் கொண்ட வானவில்லில் கூட இதுவே வர்ணிக்கப்படுகிறது. ஒரே ஒளியில் இருந்து ஏழு வண்ணங்கள் தோன்றின. அவை தனித்தனியானவை அல்ல. . இதுவே, “ஒரே அஸ்வம். அதன் பெயர் ஏழு” என்ற வேத வாக்கியத்தின் விளக்கம்.

ஏழு நிறங்களை வெளிப்படுத்துபவன் சூரிய பகவான். இதற்கு ஒரு ஃபார்முலா கூட உள்ளது வேதத்தில். “அக்னி சோமாத்மகம் ஜகத்” எனும் வாக்கியமே அந்த ஃபார்முலா. படைப்பில் வெப்பம், குளுமை இரண்டே உள்ளன. நம்மிலும் பிரபஞ்சத்திலும் இருப்பதும் இந்த இரண்டே. இதனை அக்னி தத்துவம், சோம தத்துவம் என்று குறிப்பிடுகிறது வேதம்.

அக்னி ஈஸ்வரன். அம்பாள் குளுமை. இவ்விரண்டும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டதல்ல. ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. ‘ஆர்த்ரா’, ஈரம், தண்ணீர் இவைையனைத்தும் சோம தத்துவத்திலிருந்து வருகிறது. வெளிச்சம், வெப்பம், நிறம் ஆகியவை அக்னி தத்துவத்தில் இருந்து வெளிப்படுகிறது. இரண்டும் சேர்ந்து சூரியனில் விளங்குகிறது. ‘நமஸ் சோமாய ச ருத்ராய ச’ என்ற சொற்களின் பொருள் இதுவே.

சூரியனிடம் இருந்து வரும் ஒளியை ஆராய்ந்தால் அதிலிருந்து பிரியும் ஏழு நிறங்களில் அக்னி நிறங்கள் சிலவும் குளுமை நிறங்கள் சிலவும் இருப்பதைக் காணலாம். மஞ்சள், சிவப்பு, ஊதா ஆகியவை அக்னி நிறங்கள். பச்சை, நீலம் போன்றவை குளுமை நிறங்கள். நடுவில் உள்ள நிறங்கள் இரண்டையும் இணைக்கிறது. அதனால்தான் நமக்கு நீலம், பச்சை நிறங்களை பார்க்கும்போது குளுமைத் தன்மை தோன்றுகிறது. ஒரே சூரிய பகவான் இத்தனை வண்ணங்களாக வெளிப்படுகிறான். அதனால் இந்த ஏழு நிறங்களையும் ஏழு குதிரைகளாக குறிக்கின்றனர்.

சூரியன் உதிப்பதிலிருந்து காலம் ஏற்படுகிறது. பகலும் இரவும் சூரியனால் உருவாகிறது. அதனால் அவன் கால சொரூபனாக போற்றப்படுகிறான். நாம் அதிர்ஷ்டவசமாக சூரியன் உதிப்பதையும் மறைவதையும் அனுபவிக்கக்கூடிய உலகில் வாழ்கிறோம். பூமியில் வசிப்பது மிகவும் அரிய வாய்ப்பாக அறியவேண்டும்.

சூரியனை அனுசரித்து காலத்தை பகுக்கும்போது ஏழு நாட்களாக கணக்கிடுகிறோம். இந்த ஏழு என்ற கணக்கு எங்கிருந்து வந்தது? வேதத்திலிருந்து வந்தது. ஏழு நாட்களின் பெயர்கள் எவ்வாறு வந்தன? ‘ஹோரா’ என்பதே ‘Hour’ என்றாயிற்று. இவற்றின் பின்னால் வேதத்தின் சிறப்பான விஞ்ஞானம் உள்ளது. ‘அஹோராத்ரம்’ என்ற சொல்லிலிருந்து ‘ஹோரா’ என்ற சொல் வந்தது. ‘அஹ:’ என்றால் பகல். ‘ராத்ரம்’ என்றால் இரவு. இவ்விரண்டின் இடையிலுள்ள சொல் ‘ஹோரா’. பகலுக்கும் இரவுக்கும் தொடர்பான நேரப் பகுப்பை இது குறிக்கிறது. இது சுமார் ஒருமணிநேரம் இருக்கும். ஒரு நாளைக்கு எத்தனை ஹோராக்கள் இருக்கும்? அவை எப்போது இருக்கும் என்பது பற்றி கூட வேதத்தில் கணக்கு உள்ளது.

வேதத்தில் இருந்து தோன்றியதே ஜோதிடக் கலை. ஜோதிட சாஸ்திரம் வேதத்தின் ஒரு அங்கம். அவற்றில் இந்த கணக்கு விவரிக்கப்படுகிறது. எந்த ஹோரையில் சூரியன் உதயம் ஆகிறதோ அந்த ஹோரையோடு தொடர்புடைய தேவதையின் பெயர் அன்றைய நாளுக்கு வைக்கப்படுகிறது. சூரியன் உதயமாகும் போது சூரிய ஹோரை இருக்கையில் அந்த நாள் ஞாயிற்றுக்கிழமையானது. அதனையே Sunday என்கிறோம்.

சந்திர ஹோரையில் சூரியோதயம் நிகழ்ந்த நாளை திங்கட்கிழமை என்கிறோம். அதேபோல்தான் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி என்பதாக குஜன் புதன் குரு சுக்கிரன் சனி ஹோரைகளைக் கொண்டு கிழமைகளின் பெயர்கள் ஏற்பட்டன. ராகுவும் கேதுவும் ‘சாயா’ கிரகங்கள். எக்லிப்ஸ் என்பது நிழல் தானே! அதுதான் சாயை. அவற்றுக்கு முக்கியத்துவம் இல்லை. பிரதானமானவை ஏழு. எத்தனை அற்புதமான அறிவியலை நம் முன்னோர் கண்டுள்ளனரோ, கவனியுங்கள்!

இந்த ஏழும் சூரியனின் உதயத்தின் மீது ஆதாரப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து பட்சம், மாதம், வருடம்… இவை உருவாவதை சாஸ்திரம் விளக்குகிறது. முகூர்த்தம், கடிகை என்றெல்லாம் பாரதிய சாஸ்திரங்கள் நிர்ணயித்துள்ளன.

ALSO READ: லட்சுமி கடாட்சம் நிச்சயம்: ரத சப்தமியின் மகிமை!

காலத்தின் பணி நகர்வது. ஏழு நாட்களும் நகர்ந்து கொண்டே உள்ளன அல்லவா? இதனையே கால சொரூபனான சூரியனின் ஏழு குதிரைகளாக வர்ணிக்கிறது வேதம். ‘சப்தாஸ்வம்’ என்றால் ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை உள்ள ஏழு நாட்களே!

சூரியனில் காணப்படும் ஏழு விதக் கிரணங்கள் என்பதாக பார்த்தோம். இது ஆச்சரியகரமான விஞ்ஞானம். நவீன அறிவியல் இதனை புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. ஆனால் வேதிக் சயின்ஸ் என்றோ விளக்கிவிட்டது.

இந்த ஏழு சூரிய ஒளிக்கிரணங்களில் ஒவ்வொரு கிரணத்திலும் ஒவ்வொரு கிரகத்தின் சக்தி உள்ளது. அதாவது அந்தந்த கிரகங்களில் சூரியனின் அந்த ஒளிக்கதிரின் சக்தி அதிகமாக இருக்கும். சந்திரனில் ஒரு ஒளிக்கதிரின் சக்தி அதிகமாக பரவும். செவ்வாய் கிரகத்தில் ஒரு கிரண சக்தி அதிகமாக இருக்கும். பூமியில் ஏழு கிரண சக்திகளும் சேர்ந்து இருக்கும். அதனால் பூமி சிறந்த கிரகமாக உள்ளது.

அதே போல் நம் உடலிலும் ஏழு கிரணங்களின் தாக்கம் ஏற்படுகிறது. நம் உடலில் எந்ததெந்த பாகத்தில் எந்தெந்த கிரக தேவதை இருக்கிறது என்பதையும் விவரித்துள்ளார்கள். எந்த கிரகமாவது நமக்கு பிரதிகூலமாக இருந்தால் உடலின் அந்தப் பகுதியில் நோய் ஏற்படுகிறது.

அதனால்தான் ஜோதிட சாஸ்திரத்தின் உதவி கொண்டு சிகிச்சை செய்தால் நோயை எளிதாக கண்டறிந்து சிகிச்சை செய்ய முடியும். ஒன்றுக்கொன்று இணைப்பு கொண்டவை நம் சாஸ்திரங்கள். ஆனால் கலிகாலத்தில் துண்டு துண்டாக பிரிப்பதே இயல்பாக உள்ளது. முன்கூட்டியே அந்த கிரக தோஷ நிவாரணம் செய்து கொண்டால் அந்த நோயிலிருந்து காத்துக் கொள்ள முடியும். எத்தனை சிறப்பு பாருங்கள்!

suryabhagvan 1

எதுவும் உண்மையில்லை என்று தூக்கி எறிவதற்கு அஞ்ஞானம் ஒன்றே போதும். எத்தனை சிறப்பு உள்ளது என்று ஆய்ந்து அறிவதற்கு ஞானம் தேவை. இதுவே பாரதக் கலாச்சாரத்தின் மேன்மை!

எந்த கிரகத்தில் எந்த நிற கிரணம் இருக்கும்? அவற்றின் பெயர் என்ன? சந்திரனில் பரவும் சூரிய ஒளிக்கதிரின் நிறத்திற்கு ‘சுஷும்னா’ என்று பெயரிட்டனர். சுஷும்னா மன நோய்களைத் தீர்க்கிறது. செவ்வாய் கிரகத்தில் பரவும் கிரணம் ‘உதன்வசு’ அல்லது ‘சம்பத்வசு’. இது நம் உடலில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் நோயைத் தீர்க்கிறது. ‘விஸ்வகர்மா’ என்ற கிரணம் புதன் கிரகத்தில் பரவுகிறது. சுபம், அமைதி, மனநிம்மதி போன்றவற்றை இந்த ஒளிக்கதிர் அளிக்கிறது.

வியாழன் கிரகத்தில் பரவும் சூரியக்கதிர் ‘உதாவசு’. அர்வாக்வசு, அஸ்வபூதா என்ற பெயர்களாலும் இந்த கிரணம் அழைக்கப்படுகிறது. இது பிருகஸ்பதி கிரகத்தில் விளங்கும் ஒளிக் கிரணம். இதனை உபாசனை செய்பவர்களுக்கு போகத்தையும் மோட்சத்தையும் அளிக்கக் கூடியது. இந்த கிரணங்கள் அனைத்திற்கும் வேதத்தில் மந்திரங்கள் உள்ளன. ‘விஸ்வவ்யஸ்ஸு’ என்ற ஒளிக் கிரணம் சுக்கிரன் கிரகத்தில் பாய்கிறது. ‘சுராட்’ என்ற ஒளிக்கதிர் சனிக்கிரகத்தில் பரவுகிறது. ஆறு ஆயிற்று. ஞாயிறு?

ALSO READ: இன்று ரதசப்தமி; என்ன செய்ய வேண்டும்?

சூரியனில் இருக்கும் ஒளியின் பெயர் என்ன? சூரியன் என்பது ஒரு பெரிய நட்சத்திரம். இது போன்ற நட்சத்திரங்கள் எத்தனையோ உள்ளன. அவற்றின் பிரகாசத்திற்கு ‘ஹரிகேசா’ என்ற பெயர். ஹரிதம் என்றால் திக்கு. கேசம் என்றால் ரஸ்மி. திசைகளில் வியாபிக்கும் கிரணங்கள் என்று இது பொருள்படுகிறது.

வேதச் சொற்களின் பொருளை கவனமாக பார்க்கவேண்டும். சாதாரணமாக சமஸ்கிருத மொழி தெரிந்தவர்கள் ஹரிகேசா என்றால் பச்சை நிற முடி என்று பொருள் கொண்டால் ஆபத்து. வேதத்திற்கான டிக்ஷனரி வேறு. அதற்கு நிருக்தம் என்று பெயர். வேத மந்திரங்களில் உள்ள சொற்களுக்கு அர்த்தம் கொள்வது மிகவும் கடினம். அது விளையாட்டு அல்ல. ஹரிகேசா என்பது சூரிய மண்டலத்தில் உள்ள பிரதான காந்தி.

இந்த ஏழு வித ஒளிக்கதிர்களைக் கொண்டு கிரகங்களையும் பிரபஞ்சத்தையும் இயக்குவதால் ‘சப்தாஸ்வ ரதமாரூடம்’ என்று புகழப்படுகிறான் சூரியன். இதுவரை கிரணங்கள், கிழமைகள், கிரகங்கள் பற்றி பார்த்தோம்.

வேத மந்திரங்களுக்கு ஒரு மீட்டர் உண்டு. ஒரு அளவு உண்டு. அதாவது ஒரு அட்சரத்தை உச்சரிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவு. அந்த டைமிங்கில் ரிதம் இருக்கும். அதனை அனுசரித்து ஒவ்வொரு மீட்டருக்கும் ஒவ்வொரு பெயரிட்டார்கள். அப்படிப்பட்டவை மொத்தம் ஏழு உள்ளன. இதனையே சமஸ்கிருத்தில் சந்தஸ் என்பர்.

வேத சந்தஸ் மொத்தம் ஏழு. காயத்ரி, திர்ஷ்டுப், அனுஷ்டுப், உஷ்னிக், ப்ருஹதி, விராட், ஜகதி என்பவையே அவை. இந்த ஏழு சந்தஸ்ஸுகளில் வேதம் நகர்கிறது. வேதத்தின் அசைவு இந்த ஏழு சந்தஸ்களால் ஆனது என்பர். இவற்றையே ஏழு குதிரைகளாகவும், இவற்றை வேத வடிவான சூரியபகவான் இயக்குவதாகவும் வர்ணிப்பர்.

“சப்தஸ்ஸந்தஸ் துரங்கா…” என்று அப்பய்ய தீக்ஷிதர் வர்ணிக்கிறார். “நான் அந்த ஏழு அஸ்வங்களையும் தியானிக்கிறேன்” என்று பாடுகிறார்.

ஏழு குதிரைகள் என்றவுடன் இவையனைத்தும் நமக்கு நினைவுக்கு வர வேண்டும். இவை அனைத்துமே நமக்குத் தேவை! இது ஒலிச் சக்தி.

samavedam shanmuga sharma

இந்த ஏழும் ஒளி மட்டுமல்ல. ஒலியும் கூட. சவுண்ட் எனர்ஜி குறித்து மிக அதிக ஆராய்ச்சி செய்தது பாரதிய விஞ்ஞானம். அதிலிருந்து தயாரித்த மெடிசனே மந்திரங்கள். மந்திர உச்சரிப்பு என்ற சப்தத்தைக் கொண்டு சிகிச்சை செய்யும் முறையை பாரதிய ருஷிகள் கண்டறிந்தார்கள். அதனால் அதற்கு ஒரு லயம், ஒரு ரிதம், ஒரு அட்சரம், ஒரு பீஜாக்ஷரம் அனைத்தும் உள்ளன. இவ்வனைத்திற்கும் பிரதானமான மீட்டர்கள் ஏழு. மீதி அனைத்தும் அதிலிருந்து வெளிப்பட்டவையே. அடிப்படையாக உள்ளவை ஏழு.

சப்த சந்தஸ்ஸுகளே ஏழு குதிரைகளாகக் கொண்டு உலகை இயக்குபவன் சூரிய பகவான். இதனையே, “சப்தாஸ்வ ரதமாரூடம்” என்ற பதம் மூலம் வேதம் விளக்குகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version