― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்அகலிகைக்கு நேர்ந்தது அநியாயமா?

அகலிகைக்கு நேர்ந்தது அநியாயமா?

- Advertisement -

கௌதம முனிவர் பிரம்மாவின் மானச புத்திரர்களில் ஒருவர். சப்த ரிஷிகளில் முக்கியமானவர். மகா தபஸ்வி, அவர் மனைவி அகலிகை. மகா பதிவிரதை. அழகில் உன்னதமானவள். அவர்கள் இருவரும் சிறப்பாக வாழ்ந்து வந்தனர்.

அவ்வாறு இருக்கையில் இந்திரன், அகலிகை மீது தனக்கிருந்த மோகத்தால் ஒரு நாள், கௌதம முனிவர் போல் வேடம் தரித்து முனிவரின் ஆசிரமத்தில் பிரவேசித்தான். விடிகாலை நேரத்தில் கௌதம முனிவர் ஸ்னானம் செய்வதற்காக நதிக்குச் சென்றிருந்தார். அது அவருடைய தினசரி நியமங்களுள் ஒன்று.

அந்த சமயம் பார்த்து வரக் கூடாத ஆசை வந்தது தேவேந்திரனுக்கு. கௌதமரைப் போல் மாறி ஆசிரமத்தின் வாயில் கதவைத் தட்டினான். அகலிகை கதவு திறந்தாள். எதிரில் நின்றவன் எதையும் மறைக்காமல் பேசினான்.

“தேவி அஹல்யா! எப்போதிலிருந்தோ உன் மீது என் மனம் ஆசை கொண்டுள்ளது. உன்னிடத்தில் சங்கம சுகத்தைக் கோருகிறேன். கௌதம ரிஷி திரும்ப வருவதற்குள் எனக்கு உன்னோடு கூடும் சுகத்தை அருள்வாயாக!” என்றான்.

வந்தவன் தன் கணவரல்ல என்பதும், இந்திரன்தான் அவர் வேடத்தில் வந்துள்ளான் என்பதும் அகலிகைக்குத் தெரிந்தது. தெரிந்த போதிலும் தேவேந்திரனைப் போன்ற ஒரு உயர்ந்தவன் தன் மீது ஆசை கொண்டுள்ளான் என்று பெருமை கொண்டு அவனுக்கு உடன்பட்டாள். இவ்விஷயம் ஸ்ரீராமாயணத்தில் ஸ்பஷ்டமாக உள்ளது.

அகலிகையே ஒரு வார்த்தை கூறுகிறாள் இந்திரனைப் பார்த்து, “நான் மிக மகிழ்ந்தேன். நீ தேவேந்திரன். அப்படிப்பட்ட உன்னோடு சங்கம சுகத்தை அடைந்தேன். கௌதமர் வருவதற்குள் விரைவாகச் சென்று விடு. அவரிடமிருந்து உன்னையும் என்னையும் காத்துக் கொள்ள வேண்டும்”.

இந்திரன், “உன்னால் இன்று நான் பரம ஆனந்தத்தை அனுபவித்தேன். எப்படி வந்தேனோ அப்படியே சென்று விடுகிறேன்” என்று கூறி வெளியேறினான்.

கௌதமரைப் போன்ற வேடத்தில் அவன் வெளியே வந்த அதே நேரம் கௌதம முனிவர் உள்ளே நழைந்தார். அவர் நிமிர்ந்து நிற்கும் அக்னியைப் போல் பிரகாசித்தார். குளித்துவிட்டு வந்த அவரின் ஜடையிலிருந்து நீர் சொட்டியது. தர்மமே வடிவம் கொண்ட மூர்த்தியாக நின்றார்.

கோபத்திற்கு அடிமையாகக் கூடியவர் அல்ல அவர். கோபத்தை அடக்கியாளும் திறன் மிக்கவர். நிகழ்ந்தவற்றை ஒரு பார்வையால் அறிந்தார். தவறு யாருடையது? தண்டனை எந்த அளவுக்கு அளித்தால் தவறு செய்தவர் மனம் திருந்துவார் என்று பார்ப்பாரே தவிர, கோபத்திற்கு இரையாகி வார்த்தையை வீணாக்குபவர் அல்ல கௌதம முனி. அது அவருடைய சிறப்பான குணம்.

“என் வேடம் தரித்து வந்து செய்யக் கூடாத தவறைச் செய்து விட்டாய். நான் ஆண் என்ற அகம்பாவம் உன்னில் இருப்பதால் இத்தகைய செயலுக்குத் துணிந்தாய். அந்த திமிருக்கு ஆதாரமான உன் அண்டகோசம் கழன்று கீழே விழட்டும். உனக்கு இனி ஆண்மை இருக்காது” என்று கௌதமர் உரைத்த அடுத்த கணம் தேவேந்திரனின் விதைப்பைகள் கழன்று பூமியில் விழுந்தன.
“இனிமேல் இது போன்று தப்பு செய்ய மாட்டாய். தப்பு செய்வதற்கு எது காரணமாக இருந்ததோ அதனை விலக்கி விட்டேன்” என்றார் அமைதியாக.

(அதன் பின்னர் தேவேந்திரன் செய்த தவறுக்கு பச்சாதாபத்துடன் பித்ரு தேவதைகளை பிரார்த்தனை செய்தான். அவர்கள் ஆட்டின் அண்ட கோசங்களை அவனுக்குப் பொருத்தினார்கள். அதனால்தான் இன்றும் கூட ஆட்டின் அண்ட கோசங்களைத் தொடக்கூடாது என்பது நியமம், அவை இந்திரனைச் சேர்ந்தவை என்பதால்.)

இந்திரனுக்கு காரணத்தை எடுத்துக் கூறி, இனி தர்மம் தவறாமல் இருப்பதற்காக அது போன்ற ஒரு சாபத்தை அளித்தார் கௌதமர். சாபமளிக்கையில் முனிவரின் தபோ பலம் குறைகிறது. ஆயினும் தர்ம ரட்சணைக்காக இந்திரனை சபிக்க நேர்ந்தது.

மனைவியை? இங்கு நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். என் மனைவி தவறிழைத்ததால் அவளை விலக்கி விடுகிறேன் என்று கௌதம முனிவர் ஒரு போதும் கூறவில்லை.

ஏன் அப்படிக் கூறவில்லை? காரணம், நம் பாரத நாட்டு கலாசாரத்திலும் சம்பிரதாயத்திலும் விவாகரத்து என்று ஒரு சொல் கிடையாது. கணவனும் மனைவியும் பிரிந்திருப்பது என்பதே இல்லை. வாழ்வோ சாவோ ஒரு முறை திருமணம் புரிந்து விட்டால் அதற்கு முறிவு கிடையாது.

மனைவி கணவன் பேச்சைக் கேட்பதில்லையா? அவன் அதிர்ஷ்டக்காரன். வைராக்கியம் வந்து விடும். மனைவி கணவன் பேச்சைக் கேட்டு நடப்பவளா? அவன் அதிர்ஷ்டக்காரன். அவளோடு சேர்ந்து பல தர்மச் செயல்களைச் செய்யலாம். அவ்வளவு தானே தவிர, அவளை நான் விட்டு விலகுகிறேன் என்றோ அவளை தியாகம் செய்து விடுகிறேன் என்றோ கூறுவதை பாரதீய கலாசாரத்தில் காண இயலாது.

“நீ செய்யக் கூடாத செயலைச் செய்தாய். இந்திரன் என்று அறிந்தும்கூட அவனோடு சங்கமத்திற்கு உடன்பட்டாய். எனவே இந்த ஆசிரம வளாகத்திற்கு வரும் எந்த உயிருக்கும் நீ இங்கிருப்பது தெரியாத வகையில் இதே ஆசிரமத்தில் யார் கண்ணிலும் படாமல் இருப்பாயாக! நீ இதுவரை உணவு உண்டாய். அந்த உணவிலிருந்து ரஜோ குணம் பிறந்தது. அதன் காரணமாக தர்மத்திற்கு விரோதமான கோரிக்கை எழுந்தது. அதனைத் தீர்த்துக் கொண்டாய். எனவே இனிமேல் உணவு உண்ணாதே!” என்றார் மனைவியைப் பார்த்து.

இது சாபமா? எத்தனை சிறந்த தயை! மனைவியை சுத்தப்படுத்திக் கொள்கிறார் முனிவர். அத்தனை பெரிய தவறு செய்து விட்ட மனைவியை பண்படுத்தி சரி செய்கிறாரே தவிர, நீக்கி விடவில்லை.

எனவேதான், “வாயுவாகிய காற்றைப் புசி!” என்றார். அத்தகைய சக்தி உண்டு அவளுக்கும்.

“ஆகாரம் ஏற்காதே! தவம் புரி. புழுதியில் உறை!”

அவளை கல்லாகும்படி அவர் சபிக்கவில்லை. கல்லாகிப் போனால் இனி சைதன்யம் எவ்வாறு இருக்கும்? சைதன்யம் இல்லாவிடில் தவம் எவ்வாறு சாத்தியமாகும்?

“சாம்பலால் மூடப்பட்டிருப்பாய். உன் தவம் பலிக்கும் நாள் வரும். அதன் அடையாளம் யாதெனில் ராமரும் லட்சுமணரும் இங்கு வருவார்கள். அவர்களை தரிசித்தபின் நீ செய்த பாவம் உன் தவத்தால் தீர்ந்ததென்று அறிவாயாக! அப்போது அவர்களை வரவேற்று உபசரி. நான் மீண்டும் வந்து உன்னை ஏற்றுக் கொள்வேன்” என்று அருளினார் கௌதம முனிவர் மனைவியைப் பார்த்து.

இப்போது சொல்லுங்கள்! அகலிகைக்கு அநியாயம் நேர்ந்ததா? அல்லது அவளுக்கு நன்மை செய்து நல்வழிப்படுத்தினாரா?

கௌதம முனிவர் கோபத்திற்கு வசமாகி ஆத்திரமடைந்திருந்தால் இவ்விதம் பேசியிருக்க முடியுமா? இத்தனை தூரம் கவனமாக வார்த்தைகளை அளந்து பேசி மனைவியை பண்படுத்தி செய்த தவறைக் களைய வழி கூறியிருக்க முடியுமா? கடுமையான வாக்குகளை அவர் உச்சரிக்கவில்லை. இது தான் தன்னடக்கம் என்பது.

மனைவியே தப்பு செய்திருந்தும் தர்மத்தின் கண்ணோட்டத்தோடு தீர்ப்பு கூறுகிறார். எனவேதான், கோபத்தையும் ஆத்திரத்தையும் அடக்கியாள அறிந்தவர்கள் மகா புருஷர்களாக வரலாற்றில் நிலைத்து நிற்கிறார்கள். வழுக்கி விழுந்தவர்களை கைதூக்கி விடக்கூடிய தகுதியுடையவர்கள் யார் என்றால், கோபத்திற்கு இடம் கொடுக்காத குணம் கொண்டவர்களே!

அவ்விதம் ஆத்திரத்தை அடக்கியாளும் குணம் கௌதம முனிவருக்கு இல்லாதிருந்தால் என்ன நேர்ந்திருக்கும்? மொத்த தவமும் தீர்ந்து போகும்படி அவர் கோபத்தில் ஏதேதோ பேசியிருக்கலாம். அப்படிச் செய்யவில்லை. மனைவியின் பாவம் தீரும் மார்க்கம் உபதேசித்து அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் பால காண்டத்தில் விஸ்வாமித்திர மகரிஷியை ராமன் கேட்கிறான், ‘இந்த ஆசிரமப் பிரதேசம் ஏன் ஜன சந்தடியற்று உள்ளது?’ என்று.
விஸ்வாமித்திரர் மிகவும் வருத்ததோடு பதிலளித்தார், “ஒரு காலத்தில் எத்தனையோ அதிதிகளும், முனிவர்களும் நிறைந்த அற்புதமான ஆசிரமமாக இது விளங்கியது. ராமா! இந்த கௌதம முனிவரின் ஆசிரமத்தில் ஒரு நாள் இவ்விதம் நிகழ்ந்தது” என்று விவரித்தார்.

அவள் தவத்தில் மூழ்கியிருந்தாள். ராமரின் வருகையால் அகலிகையின் உடலில் ஆதார தத்துவங்களான பஞ்ச தன்மாத்திரைகளும் விழித்தெழத் தொடங்கின. அந்த அன்னை வெளி உணர்வு பெறத் தொடங்கினாள்.

ராமசந்திர மூர்த்தி நடந்து வருகையில் அவர் மீது பட்ட காற்று அகலிகை மீது பட்ட உடனே தொடு உணரச்சி வரத் தொடங்கியது. சைதன்யம் வெளிப்படத் தொடங்கிற்று.

தோல் வேலை செய்ய ஆரம்பித்தது. ராமரின் காலடிச் சத்தம் கேட்டு செவிப் புலனும் கேட்க ஆரம்பித்தது. சாப விமோசனம் நிகழ்ந்தது.

ராமரிடமிருந்து வெளிப்பட்ட சுகந்தம் அவள் நாசிகளைச் சென்றடைந்தது. அவருடைய நீல மேக ஸ்யாமள உடலின் ஒளியால் கண்ணிமைகள் திறந்து கொண்டு கட்புலன் வேலை செய்யத் தொடங்கியது.

நாக்கு? அவரை வரவேற்று உணவளித்து உபசரித்த உடனே நாக்கு என்னும் சுவை உணர்வு மீண்டும் உயிர்த்தது. இனி சீதா கல்யாணம் நிகழ்ந்து ராமன், ஸ்ரீ ராமனாகப் போகிறான் என்பதை அறிந்து கொண்டாள்.

ராமன், தன்னால் அகலிகைக்கு சாப விமோசனம் நிகழ்ந்தது என்று கூறவில்லை. அகலிகை அவ்விதம் மேலே எழுந்தவுடனே ராமரும் லட்சுமணரும் அவள் பாதங்களைப் பணிந்து வணங்கினர்.

நான் நமஸ்கரிக்கக் கூடிய லோக மாதாவாக விளங்குகிறாள் மாதா அகலிகை என்று எண்ணினார். தவத்தினால் தன் பாவத்தைப் போக்கிக் கொண்டுள்ளாள். அவள் பெயரை உச்சரித்தவரின் பாவம் கூட விலகி போகும். இனி அவளுக்கு கடந்த காலத்தோடு தொடர்பு கிடையாது. ராமர் தன் தர்மத்தை கடைபிடித்து மகா முனிவரின் மனையாளான மகா தபஸ்வியை வணங்கினார்.

அகலிகை? கணவரான கௌதவ முனிவரை பக்தி சிரத்தையோடு நினைத்துக் கொண்டாள். அவர் கூறியவை நினைவுக்கு வந்தன. ‘ராம லட்சுமணர்கள் வருவார்கள். அவர்களை வரவேற்று உபசரி!’ என்ற அவர் கூற்று செவிகளில் மோதியது. உடனே அவர்களை வரவேற்று அமரச் செய்து உபசரித்தாள்.

அகலிகை உலகமனைத்தும் கௌரவித்து வணங்கத்தக்க மகா பதிவிரதை. ரிஷி பத்தினியாக உயர்ந்தவள். அப்படிப்பட்ட அகல்யா மாதாவின் விஷயத்திலும் சரி இந்திரனின் விஷயத்திலும் சரி, கௌதம மகரிஷி சாபத்தை அளிக்கையில் வார்த்தைகளை உபயோகிக்கும் போது அவர்களுக்கு நன்மை பயக்கும் விதமாக கோபத்தை ஒரு சாதனமாக அவர்களை உய்விக்கும் விதமாக அவர்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற உத்தேசத்தில் உபயோகித்தாரே தவிர, தப்பு செய்து விட்டார்கள் என்ற ஆத்திரத்தில் தன் தவத்தைப் பயன்படுத்தவில்லை.

இது தான் நியாயம். தோஷம் நிகழக் காரணம் என்ன? அதே தவறு மீண்டும் நடக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும்? என்று ஆராய்ந்து அதனையே தண்டனையாக அளித்தார்.

இது மகாமுனிவர்களின் வாழ்க்கை முறை. அத்தகைய ராமாயணத்தின் வாரிசுகள் நாம். ஏதோ சின்னச் சின்ன தவறுகள் பரிந்ததாலோ சரியான புரிதல் இல்லாமல் போவதாலோ கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் விட்டு விலகிப் போகலாமா? உண்மையில் கணவனுக்கோ மனைவிக்கோ பெரிய தண்டனை எதுவென்றல் ஒருவர் மனதில் இருக்கும் உயர்ந்த ஸ்தானத்திலிருந்து வீழ்வது தான். அதை விட பெரிய தண்டனை இருக்க முடியாது.

தன் இதயத்தில் உயர்ந்த இடத்தை கணவன் மனைவிக்கோ மனைவி கணவனுக்கோ அளித்திருக்கையில் அதைக் காப்பாற்றிக் கொள்ள முயல வேண்டும். அதிலிருந்து கீழே நழுவி விழுவது தான் பெரிய தோஷம்.

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாகண்டி கோட்டேஸ்வர ராவ்
தமிழில்: ராஜி ரகுநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version