― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்பாவை -4 ஆழிமழைக் கண்ணா (பாடலும் உரையும்)

திருப்பாவை -4 ஆழிமழைக் கண்ணா (பாடலும் உரையும்)

- Advertisement -
andal vaibhavam

ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை – பாசுரம் 4

விளக்கம்: வேதா டி.ஸ்ரீதரன்

ஆழி மழைக்கண்ணா! ஒன்று(ம்) நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ(டு) ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கருத்துப்
பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்(று) அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய் (4)

பொருள்

கண்ணனின் நிறத்தை ஒத்த கரு மேகமே! உன்னிடம் ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூடத் தேக்கிவைத்துக் கொள்ளாதே. கடல்நீர் முழுவதையும் உறிஞ்சி மேலே எடுத்துக்கொண்டு பிரபஞ்சத்தின் மறைவுக்குக் காரணமான பரமாத்மனின் வண்ணத்தைப்போல அடர்ந்த கருப்பு நிறத்தை எய்துவாயாக! பத்மநாபனின் வலிமையான தோள்களில் உள்ள ஒளிவீசும் சக்கரத்தைப் போல மின்னல் ஒளிவீசட்டும்; அவன் கையில் உள்ள வலம்புரிச் சங்கு ஒலிப்பது போல இடி ஒலியெழுப்பட்டும்; பகவானது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து இடைவிடாமல் பொழியும் அம்பு மழையைப் போல நீ மழை பொழிவாயாக! அந்த மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக!

அருஞ்சொற்பொருள்

ஆழி – கடல்

ஆழி மழைக்கண்ணன் – கடல் போல் விரிந்து பரந்து உலகு முழுதும் பொழியும் மழைக்கு அதிபதியாகிய வருணதேவன்

கை – கொடை

கைகரவேல் – கொடுக்கப்பட வேண்டிய பொருளை (மழை நீரை) ஒளித்து வைக்காதே

புக்கு – நுழைந்து

முகந்து கொடு – முகந்து கொண்டு

ஆர்த்து ஏறி – ஆர்ப்பரித்த வண்ணம் உயரே சென்று

ஊழி முதல்வன் – பிரபஞ்ச முடிவு காலத்துக்கு (பிரளயம், ஊழி) அதிபதியாகிய பரம்பொருள்

பாழி அம் தோள் – விசாலமான அழகிய தோள்கள்

ஆழி போல் மின்னி – சுதர்சன சக்கரத்தைப் போல் சுழன்றும், ஒளிவீசியும்

வலம்புரி – மகாவிஷ்ணு கையில் தரித்திருக்கும் சங்கு

சார்ங்கம் – மகாவிஷ்ணு தரித்திருக்கும் வில்

தாழாதே – தாமதியாமல்

மழைக் கண்ணா என்பதை மழைக்கு அண்ணா என்றும் பதம் பிரிக்கலாம். மழைக்கு அண்ணன், அண்ணாவி, தலைவன் என்ற பொருள் கிடைக்கும்.

வாழ உலகினில் பெய்திடாய் – ஜீவன் உடல் தரித்திருக்கிறான். உடலுக்கு ஆதாரம் உணவு. உணவுக்கு ஆதாரம் நீர். எனவே, பூவுலகில் ஜீவர்கள் வாழ மழை இன்றியமையாதது.

andal rengmannar

மொழி அழகு

தமிழின் உன்னதங்களில் ஒன்று ழகரம். அதை இந்தப் பாசுரத்தில் மிக லாவகமாகக் கையாண்டிருக்கிறாள் ஆண்டாள். மழை நீர் வழுக்கிக் கொண்டு பாய்ந்து போவது போன்ற ஓசை நயத்தை இந்த ழகரம் தருகிறது. ஆர்த்து ஏறி, ஆழிபோல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து, சார்ங்கம் உதைத்த சரமழை ஆகியவை ஒவ்வொன்றும் மழையின்போது ஏற்படும் பொழிவு, மின்னல், இடி முதலிய ஓசைகளுடன் ஒத்துப் போவது நோக்கத்தக்கது.

இந்தப் பாசுரத்தைப் படிக்கும்போது இடி மின்னலுடன் கூடிய பெருமழைக் காட்சி நம் கண் முன்னே விரிகிறது.

aandal 2

***

ஆழி (கடல்) போல் விரிந்து பரந்த உலகு, ஆழிக்குள் (கடலுக்குள்) புகுந்து ஆர்த்து ஏறி, ஆழி (சுதர்சன சக்கரம்) போல் மின்னி – ஆண்டாளும் தமிழென்னும் ஆழிக்குள் புகுந்து, பக்தி அமுதம் முகந்து கொடு ஆர்த்து ஏறித்தான் திருப்பாவையாகப் பொழிந்திருக்கிறாள்.

***

கைகரவேல் என்பது தானத்துக்கு இலக்கணமாக அமைவது. எனினும், இந்தப் பதத்தின் பொருளோ ‘தண்ணீரை ஒளிச்சு வச்சு ஏமாத்தாதே’ என்பதுதான். இதில் ஆய்ப்பாடி அப்பாவிச் சிறுமியின் குழந்தைத்தனமே தூக்கலாகத் தெரிகிறது.

ஆன்மிகம், தத்துவம்

படைப்புக் கடவுள் பிரம்மன், பரந்தாமனின் கொப்பூழில் மலர்ந்த தாமரையில் தோன்றியவன். ஆக, படைப்புக்கு ஆதாரம், மகாவிஷ்ணுவின் கொப்பூழ்த் தாமரை. உலக வாழ்க்கைக்கு ஆதாரம் மழை. எனவே, மழையை வேண்டும் இந்த இடத்தில் ஆண்டாள், இறைவனின் பத்மநாபன் (தாமரை தோன்றிய நாபியை உடையவன்) என்ற திருப்பெயரை நமக்கு நினைவுபடுத்துகிறாள்.

***

ஸார்ங்கம் என்பது பெருமாள் கையில் இருக்கும் வில். எனவே, அவர் ஸார்ங்கபாணி (ஸார்ங்கமாகிய வில்லைத் தரித்தவர்). ஸாங்கம் என்றால் பாம்பு. சிவபெருமான் பாம்பை மாலையாக அணிந்தவர். எனவே, அவர் ஸாரங்கபாணி.

srivilliputhurandalther

***

அவன் சியாமளன், கிருஷ்ணன், கருப்பு நிறத்தான். அவனது கருப்பு, மேகத்தின் நிறத்தை ஒத்தது. சூல் கொண்ட மேகம்தான் கருப்பாக இருக்கும். அதுவே மழையாகப் பொழிவது. மேகத்தின் கருமை கூடக்கூட மழையின் அளவும் அதிகரிக்கும். ஆயர் சிறுமி ஆண்டாளுக்கோ நிறைய மழை பெய்து உலகம் வாழ வேண்டும் என்ற ஆசை. அப்படியானால், மேகத்தின் கருமை அதிகரிக்க வேண்டும்.

எவ்வளவு கருமை வேண்டுமாம்? ஊழி முதல்வனின் வண்ணம் அளவு கருமை வேண்டுமாம். ஊழி என்றால் பிரளயம். சிருஷ்டி ஒடுங்கும் நிலை, மறையும் நிலை. ஸ்ருஷ்டி என்பதே பகவானிடமிருந்து வெளிப்பட்டுத் தோற்றத்துக்கு வருவது. அதாவது, ஒளிர்வது அல்லது காட்சிக்கு வருவது. பிரளயம் என்பது இதற்கு நேர்மாறான நிலை. ஒட்டுமொத்த ஸ்ருஷ்டியும் பகவானிடம் ஒடுங்குவது. அதாவது, காட்சி மறைவது. காணக்கிடைக்கும் எதுவுமே இல்லாமல் போவது. ஒளி, காட்சி எதுவுமே இல்லாத – ஸ்ருஷ்டி என்பதே இல்லாத – அந்த நிலைக்கு முதல்வனாகிய பகவானின் வண்ணம் அளவு கருமை கொண்ட மேகம் தேவை என்பது அவளது ஆசை.

***

நிகாமே நிகாமே ந: பர்ஜன்யு வர்ஷது என்பது வேதவாக்கு. நாம் விரும்பிய போதெல்லாம் (நமக்குத் தேவைப்படும் போதெல்லாம்) மழை பெய்யட்டும் என்பது இதன் பொருள்.

***

”தண்ணீரின் ஆதாரத்தை அறிபவன் தன்னில் நிலைபெற்றவன் ஆகிறான். மேகமே தண்ணீரின் ஆதாரம். மேகத்தின் ஆதாரத்தை அறிபவன் தன்னில் நிலைபெற்றவன் ஆகிறான். தண்ணீரே மேகத்தின் ஆதாரம். தண்ணீரின் ஆதாரத்தை அறிபவன் தன்னில் நிலைபெற்றவன் ஆகிறான்”  என்பது வேதவாக்கு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version