― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்பாவை: தொடரின் நிறைவுரை!

திருப்பாவை: தொடரின் நிறைவுரை!

- Advertisement -
andal srivilliputhur

ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை பாசுர விளக்கம்… தொடர் நிறைவுரை!

விளக்கவுரை : வேதா டி.ஸ்ரீதரன்

நிறைவுரை: மனத்தில் ஏதோ ஓர் ஆசை தோன்றியது. அதைத் தொடர்ந்து திருப்பாவைக்கு விளக்கம் எழுதும் முயற்சியில் இறங்கினேன். மார்கழி முப்பது நாளும் உரை எழுதும் பணி தொய்வில்லாமல் நடைபெற்றது. முப்பதாவது நாளாகிய இன்று நிறைவையும் எட்டுகிறது.

பாசுரங்களைப் புரிந்து கொள்வதற்காகச் சில உரைகளை – குறிப்பாக, மகான்களால் எழுதப்பட்ட வியாக்கியானங்களை – படிக்க முயற்சி செய்தேன். தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. வாசிப்பதே மிகக் கடினமாக இருந்தது என்பதுதான் உண்மை. வாசிக்க முடியவில்லை. எனவே, வாசிக்கவே இல்லை.

அதேநேரத்தில் திருப்பாவையின் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததும் உண்மை. இருந்தது என்பது தற்போது இல்லை என்பதையும் சேர்த்தே குறிக்கிறது.

காரணம், இந்த உரைகள்தான். இதை மட்டும் விளக்கிச் சொல்ல வேண்டியது இங்கே அவசியமாகிறது.

நூல் உருவாக்கம் எனது தொழில். இரண்டு மாமாங்கங்களுக்கு மேல் இதுதான் வயிற்றுப்பாடு. கூலிக்காக மட்டுமே உழைப்பு என்றாலும், கடமை உணர்ச்சி இருக்கத்தான் செய்கிறது. ‘நூல் என்பதன் இலக்கணம் படிப்பவருக்குப் புரிவதுதான்’ என்ற வரையறையை எனக்கு நானே வகுத்துக் கொண்டு பணிகளைச் செய்து வருகிறேன்.

இந்நிலையில், திருப்பாவைப் பாசுரங்களுக்கான பொருளை எழுதித் தரும் பணி வாய்த்தது. சில எளிமையான உரைகளை வாங்கிப் படித்து, மேம்போக்கான ஒரு விளக்கத்தை உருவாக்கிப் பணியை நிறைவு செய்தேன்.

andal krishnar artist veda article

நூல் உருவாக்கும் பணி நிறைவடைந்தது. ஆனால், திருப்பாவையை முழுவதுமாகப் பொருளுணர்ந்து படிக்க மாட்டோமா என்று ஓர் ஏக்கம் பிறந்தது. அதற்குக் காரணம், நான் பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகே இருப்பதால் ஆண்டாள் மீது இயல்பாகவே ஏற்பட முடிகிற அபிமானம், வைணவ ஜாதியில் பிறந்ததால் திவ்யப் பிரபந்தம் மீது ஏற்படுகிற மரியாதை முதலியவை மட்டுமல்ல. மாறாக, திருப்பாவை என்னை மிகவும் கவர்ந்தது என்பதே இதற்கான காரணம்.

நான் படித்த உரைகள் திருப்பாவைக்கான முழு விளக்கத்தையும் தரவில்லை என்பது தெளிவாகவே புரிந்தது. இதனால், திருப்பாவைக்கான வியாக்கியான நூல்களையும், திருப்பாவை குறித்த ஆராய்ச்சி நூல்களையும் வாங்கிப் படித்து, அதன் உட்பொருளை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை பிறந்தது.

இந்த ஆண்டுதான் அதற்கான வாய்ப்புக் கிடைத்தது. சுமார் பத்து நூல்களைப் படித்துப் பார்த்து ஒவ்வொரு பாசுரத்தின் உட்பொருளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் படிக்கத் தொடங்கினேன். கூடவே, நான் அனுபவித்த மாதிரியே பிறரும் திருப்பாவையை அனுபவித்துப் படிக்க வேண்டும் என்ற ஆவலும் தோன்றியதால் இந்த உரையை எழுத ஆரம்பித்தேன்.

இந்தப் பணியில் எனக்குப் பெரும் சவாலாக இருந்தது வைணவப் பெரியோர்கள் பயன்படுத்தியுள்ள மணிப்பிரவாள நடைதான். எனக்கு எப்போதுமே இந்த மொழிநடையின் மீது எரிச்சல் உண்டு. காரணம், இது புரிந்து கொள்வதற்கு மிகமிகக் கடினமான மொழிநடை. மணிப் பிரவாளம் என்றால் ‘மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத’ என்று நான் அடிக்கடி நினைத்ததுண்டு.

எழுத்து என்பது படிப்பவருக்குப் புரிகிற மாதிரி இருக்க வேண்டும் என்பது எனது தீர்மானமான கருத்து. பிறருக்குப் புரியவில்லை என்றால் ஒருவர் எதற்காக எழுத வேண்டும்? அதை மற்றவர்கள் ஏன் வாசிக்க வேண்டும்? இரண்டுமே வீண் வேலை அல்லவா?

மனதில் பக்தி என்ற ஒன்று இல்லாவிட்டாலும், பெரியவர்கள் மீது ஓரளவு மரியாதை இருக்கத்தான் செய்கிறது. எனவே, பெரியோர் எழுதிய உரைகள் கடினமாக இருப்பதற்கு ஏதோ காரணம் உண்டு என்று என் மனம் நம்பியது.

இறுதிப் பாசுரத்துக்கான விளக்கத்தை எழுதி முடிக்கும்போதுதான் அந்தக் காரணம் முழுசாகப் புரிந்தது.

இந்த உரைகள் அனைத்தும் சாமானியர்களுக்குப் புரியாத பாஷையில் எழுதி வைக்கப்பட்டவை அல்ல. மாறாக, தகுதி உள்ளவர்கள் மட்டுமே படித்துப் புரிந்து கொள்ள முடிகிற விதத்தில் எழுதி வைக்கப்பட்ட குறிப்புதவி நூல்கள் என்பது புரிகிறது.

வேதத்தைத் தமிழில் ‘மறை’ என்று சொல்கிறோம். உண்மைப் பொருளை அது மறைத்தே வைத்திருக்கிறதாம். அதேநேரத்தில் அந்தப் பேருண்மையைப் புரிந்து கொள்வதற்கான வழிமுறைகளும் இருக்கின்றன. இது பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து வருவது. இதுவே ஆசார்ய பரம்பரை. இதுவே நமது கல்விப் பாரம்பரியம். இந்தப் பள்ளிகளில் கற்போருக்கான குறிப்புதவி நூல்களே வேத மந்திரங்களுக்கான பாஷ்யங்கள்.

திருப்பாவை உரைகளும் பாஷ்யங்களைப் போன்றவையே. எனவே, இந்த உரைகள் தகுதி உள்ள மாணவர்களுக்கானவை, அப்படிப்பட்ட மாணவர்களுக்கு அவர்களது குருமார்கள் எந்தெந்த விதத்தில் எத்தகைய நுட்பத்துடன் எந்தெந்த மேற்கோள்களுடன் விஷய ஞானத்தைப் போதிக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுபவையே இந்த உரைநூல்கள். இவை என் போன்ற சாமானியர்களுக்கானவை அல்ல என்பது சர்வ நிச்சயம்.

இவை கல்லூரி நூலகங்களில் வைக்கப்பட்டிருக்கும் குறிப்புதவி நூல்களைப் போன்றவை. பாடம் போதிக்கும் ஆசிரியருக்கு நினைவூட்டப்பட வேண்டிய விஷயங்கள் மட்டுமே இவற்றில் காணப்படுகின்றன. பாடம் படிப்பவருக்குப் போதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் என்னென்ன, சொல்லித் தரப்பட வேண்டிய விதம் என்ன, எத்தகைய அணுகுமுறைகள் தேவை முதலிய விஷயங்களைத் தொகுத்து உரைகளாக அமைத்திருக்கிறார்கள்.

இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், அதற்கான கல்விப் பாரம்பரியத்தில் மாணவராக இருக்க வேண்டும். அதற்குப் பணிவும், பக்தியும், சிரத்தையும், அடியார் சேவையும் அத்தியாவசியமான தகுதிகள். அதுமட்டுமல்ல, மிகுந்த மொழியறிவும், தத்துவ ஞானமும் கூட அவசியம். இவை இல்லாதவர்களால் இந்த உரைகளைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாது.

எனவே, திருப்பாவை என்ற மறையின் உட்பொருளைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், இத்தகைய தகுதிகளை வளர்த்துக் கொள்வதுதான் ஒரே வழி.

எனக்கு அத்தகைய தகுதிகள் இதுகாறும் இல்லை. இனிமேல் ஏற்படும் என்கிற நம்பிக்கையும் இல்லை. எனவே, வேதத்துக்கு வித்தாகத் திகழும் கோதை தமிழாம் திருப்பாவை காட்டும் மறைபொருள் எனக்கு எட்டாக்கனி என்பது புரிகிறது.

‘புரிகிறது’ என்றால் ‘புரிய வைக்கப்பட்டது’ என்று பொருள் என்று எனது வழிகாட்டியான ஒரு பெரியவர் அடிக்கடி சொல்வார்.

இவ்வாறு ‘புரியவைக்க’ப்பட்டதால் திருப்பாவையின் பொருளைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் தற்போது இயல்பாகவே மறைந்து விட்டது.

இந்த ஒரு மாதமாக உழைத்த உழைப்பு வெறும் மூளை அரிப்பினால் மட்டுமே நிகழ்ந்தது. எனவே, இதை வெளியிடும் ஆர்வமும் மழுங்கி விட்டது. ஆயினும், என்னைப் போலவே அத்தகைய மூளை அரிப்பினால் தூண்டப்பட்டு, திருப்பாவையின் பொருளைத் தெரிந்து கொள்ள முயலுவோருக்கு இது பயனாகலாம் என்பதால் இதை வெளியிடுகிறேன்.

இதே உண்மை அவர்களுக்கும் புரிந்தால் (அதாவது, புரிய வைக்கப்பட்டால்) மகிழ்ச்சியே.

இத்தகைய அரிப்பு ஏதும் இல்லாமல் – அதாவது, மூளை அரிப்பினால் தூண்டப்பட்டுத் திருப்பாவையின் பொருளைத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடாமல் – மேலோர் சொல்லிக் கொடுத்த வண்ணம் நம்பிக்கையுடன் திருப்பாவையைப் பாராயணம் செய்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

ஏனெனில், அவர்களுக்குப் புரிய வைக்கப்பட வேண்டிய விஷயம் எதுவுமில்லை.

thiruppavai 2

ஸ்ரீ ஆண்டாள் வாழித் திருநாமம்

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர்
சோதி மணிமாடம் தோன்றுமூர் – நீதியால்
நல்ல பத்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதும் ஊர்
வில்லிப்புத்தூர் வேதக் கோனூர்.

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் – கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.

திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே
மருவாருந் திருமல்லி வளநாடு வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version