ஆன்மிக கேள்வி-பதில்: ராம நவமி நாளில் சீதா கல்யாணம் நடத்துகிறோமே! அது சரிதானா?

கேள்வி:- ஸ்ரீ ராமனின் பிறந்த திதியை ஸ்ரீராம நவமி என்கிறோம். பின் அதே நாளில் சீதா கல்யாணம் நடத்துகிறோமே? தெய்வங்களின் திருமணங்களை நாம் மீண்டும் மீண்டும் ஏன் செய்விக்கிறோம்? சித்திரை மாதம் சுக்ல பட்ச நவமியன்றுதான் ஸ்ரீ ராமனுக்குத் திருமணம் நடந்ததா? ஸ்ரீ ராமன் பிறந்த வருடத்தின் பெயர் என்ன?

பதில்:- இதன் மீது ஆராய்ச்சி செய்து புராணங்களின் ஆதாரத்தோடு அறிஞர்கள் கண்டறிந்த திதி பற்றிய முடிவுகள் உள்ளன.

ஸ்ரீ ராமன் விளம்பி நாம ஆண்டில் சித்திரை மாதம் சுக்லபட்ச நவமியன்று புதன் கிழமையில் புனர்வசு நட்சத்திரத்தில் கடக லக்னத்தில் ஜனனம் எடுத்தார். இது ‘அபிஜித் லக்னம்’ என்று போற்றப்படுகிறது. சௌம்யமான வருடம் பங்குனி மாதம் பௌர்ணமியன்று உத்திரை நட்சத்திரத்தில் சீதாராமர் விவாகம் நடந்தேறியது.

பவித்திரமான ராம ஜன்ம திதியன்று கல்யாணமும் நடத்தி அதன் மூலம் சீதா ராமரின் அருளுக்குப் பாத்திரமாக வேண்டும் என்பது நம் முன்னோர் ஏற்படுத்திய நல்ல ஆசாரம். இவ்விரண்டிற்கும் பத்ராசல ஸ்ரீராம நவமி உற்சவத்தோடு தொடர்புள்ளது. ராம பக்தர்கள் நிறைந்துள்ள நம் நாட்டின் அனைத்து இடங்களிலும் ஸ்ரீ ராம நவமியன்று பந்தல் போட்டு உற்சவமாக உற்சாகத்தோடு சீதா கல்யாணம் நடக்கிறது.

தெய்வீகம், மனிதத் தன்மை என்ற இரண்டு ஆதர்ச தத்துவங்களின் ஒன்றிணைந்த தம்பதிகளாக சீதாவும் ஸ்ரீராமனும் போற்றப்படுகிறார்கள். குடும்ப அமைப்புக்கு மூலாதாரமான தாம்பத்திய அமைப்பின் பத்திரத்திற்காக புண்ணிய தம்பதிகளான சீதாவும் ராமனும் வணங்கி வழிபடப்படுகிறார்கள். அது மட்டுமின்றி, லட்சுமீ நாராயண சொரூபங்களான சீதா ராமரின் இந்த ஆராதனை விரும்பிய கோரிக்கைகளை ஈடேற்றி கஷ்டங்களை விலக்கக் கூடியது.

இந்த கல்யாணத்தின் வடிவாக அந்த சாஸ்வதமான தம்பதிகளை பூஜித்து பிறவிப் பயனை அடைவதே இதன் பரமார்த்தம். சித்திரை மாத சுக்ல பட்ச சப்தமியன்று ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் நடந்ததேறியது.

ஆன்மீக மற்றும் தார்மீகசந்தேகங்கள் சிலவற்றுக்கு பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் மிகச் சிறப்பாக, சாஸ்திர ஆதாரத்தோடு அளித்துள்ள பதில்களில் இருந்து…

தெலுங்கில் இருந்து தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்
(ஆதாரம்:- சமாதானம் பாகம் -2 என்ற நூலிலிருந்து..)