வாட்ஸ்அப்பில் டேட்டிங் மெசேஜ் வந்தால் சும்மா இருக்காதீங்க… நடிகை ஜெயலட்சுமி அட்வைஸ்!

jayalakshmi actress horz

சென்னை: சீரியல் நடிகை ஜெயலட்சுமியிடம் தொடர்ந்து செல்போன்களில் செய்தி அனுப்பி, பாலியல் ரீதியில் அழைத்த இருவர் கைது செய்யப் பட்டனர். இது தொடர்பாக நடிகை ஜெயலட்சுமி கூறியபோது, என் செல்போனுக்கு அடுத்தடுத்து 2 எண்களில் இருந்து வாட்ஸ்அப்பில் சில தகவல்கள் வந்தன. அதில் வெளியில் டேட்டிங் செல்லலாம் என்றும், அதற்காக எங்களிடம் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நான் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. தொடர்ந்து நண்பர்களின் ஆலோசனையின் பேரில் போலீசில் புகார் அளித்தேன். போலீசாரும் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

இதுபோன்ற நேரங்களில் எந்தப் பெண்ணாக இருந்தாலும் சரி, சும்மா பயந்து கொண்டு இருந்துவிடாமல், தைரியத்துடன் அதனை எதிர் கொள்ள வேண்டும். நடிகை என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று முடிவு செய்வது சரியில்லை. எங்களுக்கும் குடும்பம் உள்ளது. மற்ற பெண்களைப் போலத்தான் நாங்களும். எனவே நடிகைகளும் இதுபோன்ற பிரச்னைகளை துணிச்சலுடன் எதிர் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த நடிகை ஜெயலட்சுமி, நேபாளி படத்தில் அறிமுகமானவர். பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். டிவி சீரியல்களில் நடித்து வரும் இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்ட செல்போன் எண்களில் இருந்து வாட்ஸ்அப் மூலம் பல தொடர் தகவல்கள் வந்தன.

நீங்கள் டேட்டிங்கை விரும்புகிறீர்களா? உங்களுடன் வர வி.ஐ.பி.க்கள் காத்திருக்கிறார்கள். ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரையிலும் தருவதற்கு தயாராக இருக்கிறார்கள் என செய்தி அனுப்பி பாலியல் தொழிலுக்கு வலைவிரித்துள்ளனர். இதை அடுத்து அவர் காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரின் பேரில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.