திருப்பதி பெருமாளுக்கு காணிக்கை! ஆந்திரத்தைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர்கள் அளித்தது ரூ.13.5 கோடி!

aagktv2o tirupati
திருப்பதி: அமெரிக்காவில் தொழிலதிபர்களாக உள்ள ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர், சனிக்கிழமை இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.13.5 கோடி காணிக்கையாக அளித்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களான ஈகா ரவி மற்றும் குதிகொண்டா ஸ்ரீனிவாஸ் இருவரும் திருப்பதி கோயில் உண்டியல் மற்றும் தேவஸ்தானத்தால் நடத்தப்படும் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக மொத்தம் ரூ.13.5 கோடி அளித்துள்ளனர்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மருந்து கம்பெனியான ஆர்எக்ஸ் அட்வான்ஸ் சிஇஓ., ஈகா ரவி ரூ.10 கோடியை வெங்கடேஷ்வரா ஆன்லைன் உண்டியல் மூலமாக காணிக்கையாக அளித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடாவைச் சேர்ந்த ஜேசிஜி டெக்னாலஜீஸ் என்ற மென்பொருள் நிறுவனத்தின் சிஇஓ., குதிகொண்டா ஸ்ரீனிவாஸ் தேவஸ்தான அறக்கட்டளைகளுக்கு காணிக்கையாக ரூ.3.5 கோடிக்கான காசோலையை நேரில் அளித்துள்ளார். அப்போது ஆந்திராவின் தொழில் துறை அமைச்சர் அமர்நாத் ரெட்டி உடன் இருந்துள்ளார். இதனை திருப்பதி தேவஸ்தான மக்கள் தொடர்பு அதிகாரி டி.ரவி தெரிவித்தார்.

திருப்பதியில் இயங்கிவரும் மக்கள் நல அறக் கட்டளைகள், மருத்துவமனைகள், அனாதை ஆசிரமங்களுக்கு தாம் அளித்த காணிக்கை தொகையை செலவிட வேண்டும் என ஸ்ரீனிவாஸ் தேவஸ்தான அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளின் மேற்கோள் படி, 2018-19 ஆண்டில் 2,894 கோடி ரூபாய் வருவாயும், உண்டியலில் இருந்து ரூ.1,156 கோடியும் எதிர்பார்க்கப்படுகிறது.