புது தில்லி: இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சந்திர கிரகணம் வரும் ஜூலை 27ஆம் தேதி தோன்றுகிறது. இதனை புவியறிவியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வே சந்திர கிரகணம். முழு நிலவு தோன்றும் பௌர்ணமி நாளில் சூரியனின் கதிர்கள் பூமியால் மறைக்கப் பட்டு சந்திரனில் பூமியின் நிழல் படும். இதுவே சந்திர கிரகணம் எனப்படுகிறது. இந்த நூற்றாண்டின் அபூர்வ சந்திரகிரகண நிகழ்வு 27ஆம் தேதி நடக்கிறது.
புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வரும் 27ஆம் தேதி தெரியும் சந்திர கிரகணம் இரவு 11.54க்கு தொடங்கி மறுநாள் அதாவது ஜூலை 28ஆம் தேதி அதிகாலை 1 மணி முதல் 2. 43 வரை, அதாவது 1 மணி நேரம் 43 நிமிடங்கள் முழுமையாக நீடித்து முழு சந்திர கிரகணமாகத் தெரியும். இதுவே இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சந்திரகிரகணம் என்று குறிப்பிட்டுள்ளது.



