― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeதலையங்கம்அரங்கன் கோயிலில் அரசியல் நாட்டியம்!

அரங்கன் கோயிலில் அரசியல் நாட்டியம்!

- Advertisement -

அரங்கன் கோயிலில் யாரோ ஒருவர் தடுத்தாராம்! ஆலய நிர்வாகமே செய்தது போல் ’மத’ அரசியல் நாட்டியமாடிய ஜாஹிர் உசேன்!

இசுலாமியராக இருந்தபடியே பரத நாட்டிய கலைஞராகவும் இருந்து வரும் ஜாஹிர் உசேன் என்பவர், தாம் வைணவ சமயத்தின் மீது நம்பிக்கை உள்ளவராகவும் கோயிலுக்கு நிறைய செய்துள்ளவராகவும் இருந்த போதும், தாம் ஓர் ஹிந்து இல்லை என்று கூறி, கோயிலில் திருவரங்கன் அருகே செல்வதை விமர்சித்து தம்மை அவமானப் படுத்தி, மன உளைச்சல் கொடுத்து தாம் அங்கிருந்து வெளியேறக் காரணமாக இருந்தார் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர்… என்று புகார் தெரிவித்துள்ளார். 

ஆனால் திருவரங்கம் கோயில் நிர்வாகமே அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது போல் ஜாஹிர் உசேன் இந்த விஷயத்தை கொண்டு சென்றதும், அதை அப்படியே ஊடகங்கள் பெரிதுபடுத்தி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து ஜாஹிர் உசேன் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார் என்று செய்திகளை வெளியிடுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது! இரு சமூகங்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நாசகார செயலை ஊடகங்கள் செய்து வருவது வருந்தத் தக்கது. 

பிரச்னை இரு தனி நபர்களுக்கு இடையிலானது. பிரச்னைக்குள்ளான இரு தனி நபர்களுமே திருக்கோயிலுடன் எந்த விதத்திலும் தொடர்பு கொண்டவர்கள் அல்லர். இருவருமே தங்கள் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆலயத்தில் தரிசனத்திற்காக வரும் இரண்டு பக்தர்களுக்கு இடையே நடக்கும் வார்த்தை தகராறுகள் இந்த அளவுக்கு கவனம் பெற்று மிகப்பெரிய அளவில் செய்தியாக அலசப்படுவது இதுவே முதல் முறை…! 

கோயிலுக்குள் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு இடையே ஏதாவது சிறு சிறு மோதல்கள் வார்த்தை தகராறுகள் ஏற்படத்தான் செய்யும். முந்திச் சென்றார்… வரிசையில் வரவில்லை… காலை மிதித்தார்… மேலே உரசினார்… வேண்டுமென்றே இடித்தார்…  இன்னும் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டினார் என்றெல்லாம் கூட தகராறுகள் வரத்தான் செய்கின்றன… அவையெல்லாம் அந்த இடத்தோடேயே கடந்தும் விடுகின்றன… இவை ஊடகங்களில் பெரிதாக செய்தியாவது இல்லை.

 ஆனால் ஜாகிர் உசேன் என்ற நபர்,  தாம் ஹிந்து அல்ல என்பதால் கோயிலுக்குள் எப்படி வரலாமென்று ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் கேட்டார் என்றும்,  தாம் அதனால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும்  தமது சமூக வலைதள பேஸ்புக் பக்கத்தில் புகாராக தெரிவித்தார். அதை மிகப்பெரும் பிரச்னையாக தமிழக ஊடகங்கள் கையில் எடுத்துக் கொண்டு அலசி ஆராய்ந்து புழுதி வாரித் தூற்றி வருகின்றன.

உண்மையில் அரங்கன் பக்தராக இருந்திருந்தால் ஜாகிர் உசேன் இதனை வெளியில் இப்படிச் சொல்லி இருக்க மாட்டார். இதனை அரசியல் ஆக்கியிருக்கவும் மாட்டார். தமது செயலால் அரங்கன் ஆலயம் மீது அவதூறைப் பரப்புகிறோம் என்ற உள்ளுணர்வும் விழிப்பும் உண்மையான பக்தனுக்கு நிச்சயம் இருக்கும். 

அரங்கனை தரிசிக்க வந்தவர்கள்,  ஏதோ காரணங்களால் தரிசிக்க இயலாமல் போய்,  அதன்பின் வலுவான பக்தியின் மூலம் அரங்கனை தரிசித்து… இப்படி எத்தனையோ பேர் வரலாற்றில் நிலை பெற்று இருக்கிறார்கள்.  இரு நூற்றாண்டுகளுக்கு முந்தைய இசை மேதை சத்குரு தியாகராஜ சுவாமிகள் இதற்கு நல்ல உதாரணம் .

ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் மீது, மத ரீதியான காழ்ப்புணர்வுத் தாக்குதலுடன் ஜாஹிர் உசேன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். 

மேலும் இது குறித்து தினமலர் நாளிதழுக்கு அவரளித்த பேட்டியில், மத்திய அரசின் சமூக நல்லிணக்க விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவன் நான். தற்போதைய முதல்வர் ஸ்டாலின் எனக்கு, ‘நாட்டிய செல்வன்’ என்ற விருது கொடுத்து சிறப்பித்துள்ளார். உலகம் முழுதும் பல நாடுகளில், பரத நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளேன். பல பட்டங்களை பெற்றுள்ளேன்.நான் பிறப்பால் இஸ்லாமியன். ஆனால், வைணவனாகவே வாழ்ந்து வருகிறேன். பல வைணவ திருத்தலங்களில் ஏராளமான திருப்பணிகள் செய்துள்ளேன்.

கடந்த 10ஆம் தேதி, மதியம் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்றேன். அமைதியான முறையில் ஆரியபட்டாள் வாசலைக் கடந்து, கிளி மண்டபத்தில் இருந்து, அங்கு வீற்றிருக்கும் ரங்கநாதரை தரிசிக்க முயன்றேன். அப்போது, அங்கு வந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், மேற்கொண்டு செல்ல விடாமல் என்னை தடுத்தார். கடவுளை தரிசிக்க விடவில்லை. என் மத அடையாளத்தைக் கூறி, பக்தர்கள் மத்தியில் என்னை அவமானப்படுத்தினார்.

கொச்சையாகவும், தகாத வார்த்தைகளாலும் பேசினார். ஆலயத்துக்குள் தொடர்ந்து நுழைந்தால் நடப்பதே வேறு என்று கொலை மிரட்டல் விடுத்தார். அதிர்ச்சியில் உறைந்து நின்ற என்னை நெட்டித் தள்ளினார். ஒரு கட்டத்தில், வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன். இந்த சம்பவம் நடந்த போது, அங்கு பக்தர்களும், கோவில் நிர்வாகிகளும் இருந்தனர். நடந்த சம்பவம் முழுதும், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தொடர்ந்து சென்று வந்துள்ளேன். ரங்கநாதர் மேல் நான் வைத்திருக்கும் பக்தி கோவில் நிர்வாகிகளுக்கும், அர்ச்சகர்களுக்கும் தெரியும். அதனால், ஒரு போதும் அவர்கள் என்னை தடுத்ததில்லை. ஆனால், சம்பவம் நடந்த போது அங்கிருந்த பக்தர்கள் யாரும் ரங்கராஜன் நரசிம்மனின் அடாவடி நடவடிக்கையை தடுக்கவில்லை; எல்லாரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

அவமானத்தால் கூனிக் குறுகி, எம்பெருமான் ரங்கநாதனின் கோவிலில் இருந்து வெளியேறினேன். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனே, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டேன். உயர் ரத்த அழுத்தம், அதன் விளைவாக நெஞ்சு வலி ஏற்பட்டதால், அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.

கோவிலில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத ரங்கராஜன் நரசிம்மன், மதக் காழ்ப்புணர்வின் அடிப்படையில், ஆலயத்தின் உரிமையாளரைப் போல தன்னை நினைத்து செயல்படுகிறார். முன்கூட்டியே திட்டமிட்டு, கோவிலுக்குள் நான் செல்வதைக் கண்காணித்து, வழிமறித்து, அவமதித்து தகாத சொற்களால் பேசினார். கூடவே, கொலை மிரட்டலும் விடுத்தார். மொத்தத்தில் அவர் எனக்கு இழைத்திருப்பது மத தீண்டாமை.

எனவே, இந்திய இறையாண்மைக்கும், மத நல்லிணக்கத்திற்கும் எதிராக செயல்பட்ட ரங்கராஜன் நரசிம்மன் மீது காவல் துறையும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்…  என்று அவர் கூறினார்.

இப்படி நாளிதழின் பேட்டியில் ஜாகிர் உசேன் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியது போல, திருவரங்கம் கோயிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் அவருக்கு அனைத்து விதத்திலும் ஒத்துழைத்து இருக்கிறார்கள்.  அவருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்துள்ளார்க்ள். எத்தனையோ பக்தர்கள் கால் கடுக்க வரிசையில் நின்று வந்தபோதிலும் இவருக்காக நேரடியாக அதிகாரிகள் துணையுடன் தரிசனம் நடந்தேறியிருக்கிறது.  இவர் சொல்கிறபடி பார்த்தால், இதுநாள் வரை அதிகாரிகள் இவர் மத ரீதியாக வேற்று மதத்தவர் என்ற ஒரே காரணத்துக்காகவே சிறப்பு அந்தஸ்து கொடுத்து அரங்கன் திருமுன்பே நிறுத்தினார்கள் போலும்! 

தமக்கு எதிராக ஒருவர் செயல்பட்டார், அவர் தம்மை அவதூறு பேசினார் அதன் காரணத்தால் தமக்கு மனநலக்குறைவு ஏற்பட்டது, அவருக்கும் கோயிலுக்கும் என்ன தொடர்பு? கோயிலில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத ஒருவர் தன்னை திட்டியதால், அவமானம் அடைந்து வெளியேறினேன் என்று நாளிதழின் பேட்டியில் குறிப்பிட்டவர்,  தாம் கோயிலில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக விஷயத்தை திசை திருப்புவது ஏன்?  

பொதுவாக தன்னை ஒருவர் தாக்கிவிட்டார், கொலைவெறித் தாக்குதல் நடத்திவிட்டார்கள் என்ற காரணத்தைச் சொல்லி போலீஸ் புகார் கொடுப்பதற்காகவே 108 ஆம்புலன்ஸை வரவழைத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பெற்று சிகிச்சை பெறுவதை புகாரில் குறிப்பிடும் சாதாரண அடிதடி கேஸ்களைப் போல், இந்தச் சம்பவத்தை கட்டமைத்திருப்பது, திமுக., உறுப்பினரான ஜாஹிர் உசேன் மீது சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.

ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் திருவரங்கம் கோயிலில் இதுவரை இருந்துள்ள அதிகாரிகளுடன் முரண் போக்கையே கடைபிடித்து உள்ளார்.  கோயில் நடைமுறைகள் காப்பாற்றப் படவேண்டும்; பழமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கொள்கைகளுடன் செயல்படும் நபரான அவருக்கும், ஆலய அதிகாரிகளுக்கும் இடையே இதுவரை பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. சில புகார்கள் போலீசிலும் பதிவாகியுள்ளன. அதேநேரம் ஜாகிர் உசேனுக்கு கோயில் அதிகாரிகள் ராஜ மரியாதையே கொடுத்துள்ளனர். அந்த வகையில் அதிகாரிகளை முன்னிட்டும் நடைமுறைகளை முன்னிட்டும் இந்த இரு தனி நபர்களுக்கும் இடையே முட்டல்களும் உரசல்களும் இருக்கவே செய்துள்ளன! எனவே இந்தப் புகாரின் பேரிலும், மேற்கொள்ளப்படும் அரசியல் பேரிலும் உள்நோக்கம் இருப்பதாகவே நமக்கு தோன்றுகிறது !

இதே நாளிதழின் பேட்டியில் ரங்கராஜன் நரசிம்மன், பத்திரிகைகள், நான் செய்த மத தொண்டு மற்றும் சமூக சேவைகள் குறித்து, இதுவரை முறையாக எந்த செய்தியும் வெளியிடவில்லை. ஆனால், முக நூலில் எவனோ ஒருவன், என்னைப் பற்றி வெளியிட்ட செய்தி குறித்து தகவல் கேட்பது, எனக்கு கோபத்தை வரவழைக்கிறது. அதனால், இது குறித்து நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை… என்று கூறியுள்ளார். 

 ஃபேஸ்புக்கில் தனி நபர்கள் இருவர் தெரிவித்துள்ள தகராறு குறித்து உடனடியாக இணை ஆணையர் விசாரிக்க உத்தரவு இடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.  எனில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள் எந்த அளவுக்கு அறநிலையத்துறை அதிகாரிகளுடன் மிகவும் முக்கியமானவர்கள் பட்டியலில் இருக்கிறார்கள் என்பதும் நமக்கு புரிகிறது . 

இந்த விஷயத்தில் மேல் நடவடிக்கைகள் குறித்து, முதல்வருடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும். யாராக இருந்தாலும், மத ரீதியில் கோவில் விஷயங்களை அணுகுவதை ஏற்க முடியாது என்று, பெயரில் மட்டும் ஹிந்து சமய அறநிலையத் துறை.என்று வைத்துக் கொண்டுள்ள ஒரு துறையின் அமைச்சர் சேகர் பாபு குறிப்பிட்டுள்ளது, இந்த விஷயத்தை எந்த அளவுக்கு இவர்கள் கொண்டு செல்கிறார்கள் என்ற சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. அதைக் காட்டிலும் ஹிந்து ஆலயங்களை மத ரீதியில் சீர் குலைப்பதற்கு ஏதோ சதிச் செயலில் ஈடுபடுகிறார்கள் என்ற சந்தேக உணர்வையும் நமக்கு கொடுத்து இருக்கிறது. 

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்ற வகையில், அப்பாவி ஹிந்துக்களுக்கு எதிராகவே செயல்பட்டு நடவடிக்கைகளை எடுத்து, தாங்கள் வீரமானவர்கள் என்று காட்டிக் கொண்டிருக்கும் காவல்துறை, இந்த சம்பவத்தில், என்ன விதமான நடவடிக்கை எடுக்கும் என்பதும் நமக்கு ஓரளவு புரிகிறது. காரணம், திருச்சி மாநகர காவல் ஆணையருக்கு, புகார் அளிக்கப் போவதாக கூறப்பட்டுள்ளதும், புகார் பெறப்பட்டதும், போலீஸ் உரிய விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கும், ரங்கராஜன் நரசிம்மன் மீது ஏற்கனவே போலீசில் புகார்கள் உள்ளன. இந்த விஷயத்தில் தவறு என்றால் அது யாராக இருந்தாலும் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திருச்சி காவல் ஆணையரக காவல் அதிகாரி கூறியுள்ளதாகவும் குறிப்பிடும் செய்தி அதையே நமக்கு காட்டுகிறது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version