― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்அன்பழகனுடன்... முடிவுக்கு வந்த திராவிட இயக்க மூத்த தலைவர்கள் சகாப்தம்!

அன்பழகனுடன்… முடிவுக்கு வந்த திராவிட இயக்க மூத்த தலைவர்கள் சகாப்தம்!

- Advertisement -
க அன்பழகனின் மரணத்துடன் தமிழகத்தில் மூத்த திராவிட இயக்கத் தலைவர்களின் காலம் முடிவுக்கு வருகிறது

1960 களில், தமிழகத்தில் விஷக் கிருமிகள் பரவி விட்டன என்று முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தால் வர்ணிக்கப் பட்ட திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களின் ஒருவரான க.அன்பழகன் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுடன் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்கள் வரிசை முடிவுக்கு வந்துள்ளது.

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சரும், தி.மு.கவின் பொதுச் செயலாளருமான பேராசிரியர் க. அன்பழகன் முதுமை காரணமாகவும் உடல்நலக் குறைவின் காரணமாகவும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் வீட்டிலிருந்தபடியே சிகிச்சைபெற்று வந்தார்.

இந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமானதால் கடந்த பிப்..24ஆம் தேதி அவருக்கு மூச்சுச் திணறல் ஏற்பட்டது. அவர் உடனடியாக க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும், உடல் நிலையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இன்று ( மார்ச் 7) அதிகாலை ஒரு மணி அளவில் காலமானதாக அப்போலோ மருத்துவ மனை நிர்வாகம் அறிவித்தது.

க. அன்பழகன் மறைவையடுத்து தி.மு.க. நிகழ்ச்சிகள் ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அக்கட்சி கொடிகள் ஒரு வார காலத்திற்கு அரை கம்பத்தில் பறக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

1922ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி திருவாரூருக்கு அருகில் உள்ள காட்டூரில் கல்யாணசுந்தரம் – சொர்ணம் தம்பதியின் மூத்த மகனாகப் பிறந்த இவருக்கு முதலில் இராமையா என்று பெயர் சூட்டப் பட்டது. அவரின் தந்தை காங்கிரஸ் அனுதாபி என்றாலும், 1925ல் பெரியார் கதர் விற்ற காசுக்கு கணக்கு காட்ட முடியாமல், இயக்கத்தில் இருந்தால் தானே கணக்கு காட்ட வேண்டும் என்று, காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து வெளியேறியபோது அவருடன் சேர்ந்து வெளியேறியவர்.

பின்னாளில், ராமையா தன் தந்தையுடன் சேர்ந்து ஈ.வே.ரா., பொதுக்கூட்டப் பேச்சுகளை கேட்பது வழக்கமாக இருந்தது. சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்த ராமையா, தனித் தமிழ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு தனது இயற்பெயரை அன்பழகன் என மாற்றிக்கொண்டார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றியதால் அவருடைய பெயருக்கு முன்பாக ‘பேராசிரியர்’ என்ற பட்டம் ஒட்டிக்கொண்டது. ஜாதி ரீதியாக முதன் முதலில் நீதிக்கட்சி தொடங்கப்பட்டு, அதுவே பின்னாளில் திராவிட இயக்கமாக மாறியதால், சாதி ரீதியான அடையாளத்துடன் இனமான காவலர், இனமான ஆசான் என்றெல்லாம் பெயர் சூட்டிக் கொண்ட காலம் அது. அதை அடியொற்றி, இவரையும் இனமான பேராசிரியர் என்று அழைத்தனர் திராவிட இயக்கத்தினர்.

1942ல் திருவாரூர் விஜயபுரத்தில் சி.என். அண்ணாதுரை ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றபோது, அவரைப் பார்க்க வந்த மு. கருணாநிதியும் அன்பழகனும் முதல் முறையாகச் சந்தித்தனர். அப்போது ஏற்பட்ட நட்பு மு. கருணாநிதி மறையும் வரை 76 ஆண்டுகள் நீடித்தது. மு.கருணாநிதியின் குடும்பம் சென்னைக்கு வந்து கோடீஸ்வரக் குடும்பமாக மாறுவதற்கு தன்னாலான அனைத்து தியாகத்தையும் செய்து, திமுக., தியாகிகளில் தலையானவர் ஆனார் அன்பழகன்.

8 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒருமுறை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். கருணாநிதி முதலமைச்சரான பிறகு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரானார் அன்பழகன்! சுகாதாரத் துறை அமைச்சகம் என்ற பெயரை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் என்று பெயர் மாற்றியவர் அன்பழகன்.

கல்வி அமைச்சராக இரு முறையும் நிதியமைச்சராக ஒரு முறையும் செயல்பட்டிருக்கிறார். 1977ஆம் ஆண்டு முதல் தி.மு.கவின் பொதுச் செயலாளராக இருந்திருக்கிறார்.

அன்பழகனின் மனைவி வெற்றிச் செல்வி ஏற்கெனவே காலமாகிவிட்டார். இந்த தம்பதிக்கு செந்தாமரை, மணவல்லி என இரண்டு மகள்களும் அன்புச்செல்வன் என்ற மகனும் இருக்கின்றனர்.

அன்பழகனின் மரணத்துடன், ஈ.வே.ரா, சி.என். அண்ணாதுரை என மூத்த திராவிட இயக்கத் தலைவர்களுடன் பணியாற்றிய தலைவர்களின் காலம் முடிவுக்கு வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version