― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்கோலாகலமாக நடைபெற்ற தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு!

கோலாகலமாக நடைபெற்ற தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு!

- Advertisement -

ஆயிரம் ஆண்டு பழைமையான தஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சமஸ்கிருதம் என ஆகம முறைப்படி இன்று காலை 9.30க்கு குடமுழுக்கு நடைபெற்றது.

ஆயிரம் ஆண்டு பழைமையானதும், தமிழர் கட்டடக் கலைக்கு எடுத்துக் காட்டாக சோழப் பேரரசன் ராஜராஜன் கட்டியதுமான தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறை விமானம், ராஜகோபுர கலசங்களில் இன்று காலை 9.30க்கு மேல் புனித நீர் ஊற்றப் பட்டு குடமுழுக்கு நடைபெற்றது தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு, குடமுழுக்கு வைபவத்தை தரிசித்தனர்.

முன்னதாக, 8 வது கால யாக பூஜையைத் தொடர்ந்து கும்பாபிஷேகம் செய்ய புனிதக் குடங்களில் நீர் எடுத்து வரப்பட்டது. விநாயகர், முருகன், பெரியநாயகி அம்மன், வாராஹி, சண்டிகேஸ்வரர் சந்நிதி விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது. புனித நீர் ஊற்றப் பட்ட போது மேலே கருடன் வட்டமிட்டது. பக்தர்கள் பரவசத்துடன் அதனை தரிசித்து மகிழ்ந்தனர். .

தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு மேலே இருக்கும் விமானம் மிகப் பெரியது. சந்நிதி விமானத்துக்கு மிகப் பெரும் சாரம் அமைத்து, இன்று காலை அதில் புனித நன்னீர் ஊற்றப்பட்டது.

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலின் மஹா கும்பாபிஷேக விழா 23 ஆண்டுகளுக்கு பின் இன்று நடைபெற்றது. இதற்காக ஓராண்டுக்கும் மேலாக இந்திய தொல்லியல் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் அறநிலையத் துறை என பல்வேறு தரப்பினரும் தீவிர ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

கும்பாபிஷேகத்துக்காக கடந்த மாதம் 27ஆம் தேதி பூர்வாங்க பூஜையும் 31ம் தேதி வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் இருந்து புனிதநீர் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது. பிப். 1ல் புனித நீர் அடங்கிய குடங்கள் யாகசாலை மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டு முதலாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து நேற்று காலை ஆறாவது கால யாகசாலை பூஜையும் மாலை ஏழாவது கால யாகசாலை பூஜையும் நடந்தன.

யாகசாலை மண்டபத்தில் சுவாமி, அம்பாள், 41 உற்ஸவ மூர்த்திகள், எட்டு பலி பீடங்கள், 10 நந்தி, 22 கோவில் கலசம் என 405 சுவாமிகளுக்கும் 705 குடங்களை வேதிகையில் வைத்து வழிபாடு நடத்தினர்.

கும்பாபிஷேக நாளான இன்று அதிகாலை 4:30 க்கு எட்டாவது கால யாக சாலை பூஜையும், நாடி சந்தனமும், மகா பூர்ணாஹுதி தீபாராதனை, யாத்ரா தானமும் நடைபெற்றது. தொடர்ந்து, காலை, 7:25 க்கு, யாகசாலை மண்டபத்தில் இருந்து, புனித நீர் குடங்கள் புறப்பட்டன.

இன்று காலை, 9:30க்கு, பெரிய கோவில் விமான மற்றும் கோபுரங்களில், புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் 10 மணி அளவில், தஞ்சைப் பெரிய கோயில் மூலவர் பெருவுடையாருக்கு, அபிஷேகம் தொடங்கியது.

இன்று மாலை, 6 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையும்; இரவு, பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதியுலாவும் நடக்கின்றன.

தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் தஞ்சை நகரில் திரண்டனர்.

தஞ்சை பெருவுடையார் கோயிலில் கடைசியாக கடந்த 1996ம் ஆண்டு குடமுழுக்கு வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அக்கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

குடமுழுக்கை காண சுமார் 5 முதல் 7 லட்சம் பேர் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு அடிப்படை மற்றும் மருத்துவ வசதிகள் அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளன.அதன்படி கோவில் மற்றும் கோவில் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 275 தண்ணீர் தொட்டிகள் மற்றும் 238 தற்காலிக கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவ உதவிக்காக 100 மருத்துவர்கள், 6 மருத்துவக்குழுக்கள், 26 நடமாடும் மருத்துவக்குழுக்கள், 28 அவசர சிகச்சை ஊர்திகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுபோக நவீன தீயணைப்பு வாகனம் மற்றும் 5 சாதாரண வாகனங்களோடு, 16 பாம்புபிடி வீரர்களும் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக 21 தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாற்று திறனாளிகளின் வசதிக்காக சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளன. முதியவர்களுக்காக 30 பேட்டரி வாகனங்களும், இவை தவிர கோவிலினுள் நடைபெறும் நிகழ்ச்சிகளை வெளியில் இருந்து காணும் வகையில் எல்.ஈ.டி. திரைகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. கோவில் உள்பகுதி மற்றும் வெளியில் ஏற்கனவே பொருத்தியிருந்த சி.சி.டி.வி. கேமிராக்களோடு கூடுதலாக 8 அதிநவீன கேமிராக்கள் உள்பட 192 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க கட்டுபாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.சுமார் 5500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குடமுழுக்கு விழாவை காண பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

பெரியகோவில் சிறப்புகளில் சில…

  • திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோவில்
  • உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகாரம் பெற்ற கோவில்
  • தமிழர்களின் கட்டடகலையை உலகுக்கு பறைசாற்றிய கோவில்
  • சோழ மன்னர்களால் கட்டப்பட்டது
  • மராட்டிய மன்னர்களால் பிரகதீசுவரம் என்று அழைக்கப்பட்டது
  • கோவில் விமானம் பெரிய மலையை குடைந்து உருவாக்கப்பட்டது
  • பெரிய கோவில் நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது
  • சிவ லிங்கத்துக்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி. தமிழ் மொழியின் மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை 247
  • உலகின் மிகப்பெரிய கருவறை சிவலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version