― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்ஆவின் பாலில் கலப்படம் செய்து விநியோகம்: பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு!

ஆவின் பாலில் கலப்படம் செய்து விநியோகம்: பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு!

- Advertisement -

அரசு நிறுவனமான ஆவினில் பால் திருடி விற்கப்பட்டு, தண்ணீர் மற்றும் கலப்படங்கள் செய்து மக்களுக்கு அளிக்கப்படுவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், ” கிராமப்புறங்களில் விவசாய பெருமக்கள் உற்பத்தி செய்து தரும் பாலினை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து, அதனை பால் குளிர்விப்பு மையங்களில் சேகரித்து, பிரதான பால் குளிரூட்டும் நிலையங்களுக்கு அனுப்பி இருப்பு வைத்து, அதன் பிறகு ஆவின் பால் பண்ணைகளுக்கு கொண்டு வருவதால் பாக்கெட்டில் அடைத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய தாமதமாகும் சூழல் கடந்த 2009ம் ஆண்டுக்கு முன் இருந்து வந்தது.

அவ்வாறான நடைமுறையால் பால் விரைவில் கெட்டுப் போகும் சூழல் ஏற்பட்டதாலும், மக்களுக்கு தரமான பால் தங்குதடையின்றி கிடைத்திட மாட்டின் மடியில் இருந்து கறந்த சில மணி நேரங்களில் பால் பண்ணைகளுக்கு கொண்டு வர வேண்டும் என்கிற நோக்கத்திலும் கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு நிதியுதவியுடன் தூய பால் உற்பத்தி திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனத்திற்கு 300க்கும் மேற்பட்ட மொத்த பால் குளிர்விப்பான்களை (Bulk Milk Cooler) தமிழக அரசு நிறுவியது.

ஆனால் என்ன நோக்கத்திற்காக அப்போதைய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்ததோ அந்த நோக்கம் நிறைவேறாமல் தற்போது மோசடிகளின் மொத்த உற்பத்தி மையமாக ஆவின் நிறுவனத்தின் மொத்த பால் குளிர்விப்பான் (BMC) நிலையங்கள் திகழ்கின்றன.

குறிப்பாக மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கோவை, சேலம், திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஒன்றியங்களில் இருக்கும் மொத்த பால் குளிர்விப்பான் (BMC) நிலையங்களிலும், பால் குளிரூட்டும் நிலையங்களிலும் (Milk Cilling Centre) நீண்ட காலமாக பணியாற்றி வரும் பால் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் பால் குளிர்வு நிலைய பொறுப்பாளர்கள் இடைத்தரகர்களோடும், மோசடிப் பேர்வழிகளோடும் கூட்டு சேர்ந்து பாலினை திருடி விற்பனை செய்து விட்டு அதற்கு பதில் தண்ணீர் உள்ளிட்ட பல்வேறு கலப்படங்களை செய்து அதன் மூலம் அவர்கள் அதிக லாபம் ஈட்டி ஆவினுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி கூட்டுறவு சங்க உறுப்பினர்களாக இருக்கும் பால் உற்பத்தியாளர்களிடம் மட்டுமே பால் கொள்முதல் செய்ய வேண்டும் என்கிற விதி இருக்கும் போது ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் கூட்டுறவு சங்க உறுப்பினர்களிடம் பாலினை கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்பி விட்டு இடைத்தரகர்கள் தரும் பாலினை குறைந்த விலைக்கு (ஒரு லிட்டர் 20.00ரூபாய் முதல் 25.00ரூபாய் வரை) வாங்கி ஆவின் நிறுவனத்தின் கொள்முதல் விலைக்கு (ஒரு லிட்டர் 32.00ரூபாய்) கணக்கு எழுதியும் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்துவது என தொடர்ந்து முறைகேடுகள் அரங்கேறி வருகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன் (11.07.2020) திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் கிராம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும், சங்க உறுப்பினர்களிடம் பால் வாங்க மறுப்பதாகவும் கூறி கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் பாலினை சாலையில் கொட்டி போராடிய நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இது போன்ற நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் தொடர்ந்து நடைபெறுவதும், அதனை தடுக்க ஆவின் நிர்வாக இயக்குனர் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் வேதனைக்குரியது.

அதுமட்டுமின்றி ஆவின் பால் கொள்முதல் நிலையங்களிலும், பால் பண்ணைகளுக்கு பால் கொண்டு செல்லும் போதும் தொடர்ச்சியாக முறைகேடுகள் நடப்பதற்கும், நடந்ததற்கும் பல உதாரணங்கள் உண்டு. குறிப்பாக வேலூர், சேலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் பாலை திருடி விற்று விட்டு அதற்கு பதிலாக தண்ணீர் கலப்படம் செய்து வரும் சம்பவங்கள் தொடர்கதையாக இருப்பதும், அண்மையில் கூட ஆரணி மற்றும் திருவண்ணாமலையிலும், திண்டுக்கல்லிலும் கடந்த சில தினங்களுக்கு முன் மதுரையிலும் மொத்த பால் குளிர்விப்பான் (BMC) நிலையங்கள் மற்றும் பால் குளிரூட்டும் நிலையங்களில் (MCC) பணியாற்றிய அதிகாரிகள் இடைத்தரகர்களோடு இணைந்து மோசடி செய்தது அம்பலமாகி பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.

ஆனால் இவ்வளவு முறைகேடுகள் நடந்தும், ஆவினுக்கும், தமிழக அரசுக்கும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பை, நஷ்டத்தை அவர்கள் உருவாக்கிய பிறகும் அதனை பால்வள ஆணையாளர் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குனர், பால்வளத்துறை செயலாளர், பால்வளத்துறை அமைச்சர் உள்ளிட்டோரும், ஆவின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

ஆவின் பால் பண்ணைகளிலும், மொத்த பால் கொள்முதல் நிலையங்களிலும் (BMC), பால் குளிரூட்டும் நிலையங்களிலும் (MCC) நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், பால் குளிர்வு நிலைய பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் இடைத்தரகர்களோடு இணைந்து தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க ஆவின் மற்றும் பால்வளத்துறை தொடர்பில் இல்லாத அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் அடங்கிய “அதிரடி பறக்கும் படை” அமைத்து, அப்பறக்கும் படையினர் கூட்டுறவு சங்க பால் கொள்முதல் நிலையங்கள் தொடங்கி, ஆவின் பால் பண்ணைகள் வரை வாரந்தோறும் திடீர் விசிட் அடித்து ஆய்வுகள் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி பால் கொண்டு வரும் டேங்கர் லாரிகளையும் திடீர் ஆய்வு செய்து பாலின் அளவு, அந்த பாலின் தரம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும், அந்த சோதனைகள், ஆய்வுகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். அப்போது தான் ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

எனவே ஆவின் நிறுவனத்திற்கு உடனடியாக “அதிரடி பறக்கும் படை” அமைத்திடவும், இதுவரை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆவின் பால் பண்ணைகளிலும், மொத்த பால் குளிர்விப்பான் (BMC) நிலையங்களிலும், பால் குளிரூட்டும் நிலையங்களிலும் (MCC) பணியாற்றும் தரக்கட்டுப்பாட்டு, பால் குளிர்வு நிலைய அதிகாரிகள், கொள்முதல் செய்யும் அதிகாரிகள், கூட்டுறவு சங்க அதிகாரிகளை ஆண்டுக்கு ஒரு முறை கட்டாய இடமாற்றம் செய்யும் நடைமுறையை தமிழக அரசு அமுல்படுத்திட வேண்டும். மேலும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இல்லாத வகையில் செயல்பட சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும்.

அவ்வாறு செய்யும் பட்சத்தில் மட்டுமே காலை, மாலை இருவேளைகளில் ஆவினுக்கு பால் வழங்கும் விவசாய பெருமக்கள் இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் முழுமையான பலனை அடைய முடியும் என்பதும், ஆவின் நிறுவனம் இழப்பை சந்திக்காமல் லாபத்தோடு இயங்க முடியும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. பால்வளத்துறை நலன் சார்ந்தும், ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சியை கவனத்தில் கொண்டும் தமிழக முதல்வர் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version