― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்அற்புதங்கள் நிறைந்த ஆடி மாதம்!

அற்புதங்கள் நிறைந்த ஆடி மாதம்!

- Advertisement -
madurai ambigai

ஆடி மாதத்தின் சிறப்புகள்…

ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் என்றுதான் சொல்ல வேண்டும். ’மாதங்களில் நான் மார்கழி’ என்றார் மகாவிஷ்ணு. ஆனால் ’மாதங்களில் நான் ஆடி’ என்று சொல்லாமலேயே நமக்கு உணர்த்துகிறாள் அம்பிகை. இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

நம் முன்னோர், ஒரு வருடத்தை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். இதில் தஷ்ணாயணம் புண்ணிய காலம் ஆடி மாதத்தில் துவங்குகிறது. ஆடி முதல் மார்கழி வரை தஷ்ணாயண காலமாகவும், தை முதல் ஆனி வரை உத்ராயணம் என பிரிக்கப்பட்டுள்ளது. சூரியனின் பாவன இயக்கத்தை (வடகிழக்கு, தென்கிழக்கு) வைத்து இது வரையறுக்கப்படுகிறது.

தஷ்ணாயணம் துவக்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், மாந்த்ரீகம் ஆகியவற்றிற்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது. பிரணாய வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடியில்தான். ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது.

தட்சிணாயணக் காலம் என்றால் புண்ணிய காலம் என்பார்கள். ஜோதிட ரீதியாக சூரியன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு எப்போது வருகிறாரோ அந்தநாள் ஆடி மாதத்தின் முதல்நாள்

ஆடி மாதத்தின் சிறப்புகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்… அவ்வளவுக்கு முன்னோர்கள் ஆடி மாதம் பற்றி சிறப்பாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்

ஆடி மாதம் சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த கடக ராசி என்பது சந்திரனின் ஆட்சி வீடாகும். சிவனின் அம்சமான சூரியன் சக்தியின் அம்சமான சந்திரனில் சஞ்சாரம் செய்கிறார். அதனால் இந்த மாதத்தில் சந்திரனின் ஆளுமை கூடுகிறது. அதனால் இந்த மாதம் சக்தியின் மாதமாக கருதப்படுகிறது.

அதன் காரணமாகதான் ஆடி மாதத்தில் அம்மனுக்கு உகந்த கூழ், வேப்பிலை, எலுமிச்சை வைத்து படையல் செய்து வருகிறோம். இதற்கு அறிவியல் பூர்வமான காரணங்களும் உள்ளன. இந்த மாதத்தில் கோடைக்காலம் முடிந்து பருவமழை வருவதால் பூமி உஷ்ணமாக இருக்கும். அந்த நேரத்தில் மேற்சொன்னவையைஅம்மனுக்கு படைத்து உண்டு வந்தால் உடல் நலம்பெறும் சீரான வெப்பநிலையை அடையும் என்பதே ஆகும்.

ஆடி மாதத்தை சக்தி மாதம் என்றும் பண்டைய ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தஷ்ணாயண காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.

srivarahi amman

சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி, தெய்வங்களை (அம்மன்) வழிபட்டு உள்ளுணர்வை மேம்படுத்திக் கொள்ளவும் ஆடி மாதம் பயன்படுகிறது. வேப்பிலையை அம்மனுக்கு சாத்தி வணங்குவதும், கூழ் ஊற்றும் விழா நடத்துவதும் ஆடி மாதத்தில் நடக்கிறது.

இதற்கு காரணம், ஆடி மாதத்தில் கிடைக்கும் வேப்பிலைக் கொழுந்துகளுக்கு அபார மருத்துவ, தெய்வீக குணம் உண்டு. ஆடி மாதத்தில் பொதுவாகவே காற்று அதிகமாக வீசும். அந்தக் காலத்தில் எளிதில் ஜீரணிக்கக் கூடிய வகையிலான உணவுகள் (கூழ்) சாப்பிடுவது நல்லது. இதனால் ஆரோக்கியம் மேம்படும்.

துர்க்கை, காளி உள்ளிட்ட பெண் தெய்வ வழிபாட்டுக்கு உரியதாகவும் ஆடி மாதம் கருதப்படுகிறது. இதேபோல் 18ஆம் பெருக்கு எனப்படும் ஆடி-18 விழா மிகவும் உன்னதமானது. அன்றைய தினம் எந்த நட்சத்திரம், திதியில் வந்தாலும், புதிய முயற்சிகளை அனைத்து தரப்பினரும் மேற்கொள்ளலாம்.
ஆடிப்பெருக்கு தினத்தில் நதியோரம் உள்ள கோயில்களில் கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர். சுமங்கலிப் பெண்கள் இதுபோன்று வழிபாடு நடத்தினால் அவர்களின் துணைவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். சப்த கன்னிகளை உருவாக்கி ஆடிப் பெருக்கு வழிபாடு மேற்கொள்வதும் நல்ல பலனைத் தரும்.

kolavizhi amman

இதேபோல் ஆடிப் பூரம் விழா கேரளாவில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் மிக அருமையாக கொண்டாடப்படும். சுப நிகழ்வுகள் ஏராளமாக நடைபெறுவதால் ஆடி மாதம் பல வகையிலும் சிறந்தது.


இந்த பிலவ வருடத்தில்… ஆடி மாத சிறப்பு தினங்கள்..

மேலும் ஆடி மாதத்தில்தான் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான தினங்களும் வருகின்றன. ஆடி செவ்வாய், வெள்ளி, ஆடிப் பதினெட்டு, ஆடிப்பூரம் ஆடிப்பௌர்ணமி, அடி அமாவாசை, ஆடி தபசு, ஆடி கிருத்திகை, ஆடிப் பெருக்கு என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன.

ஆடி வாஸ்து பூஜை: ஆடி மாதத்தில் வாஸ்து பூஜை செய்து தை மாதத்தில் கிரஹபிரவேசம் செய்வது சிறப்பாகும். ஏனென்றால் தட்சிணாயணத்தில் வீடு கட்ட ஆரம்பித்து உத்திராயணத்தில் வேலையை முடிப்பது என்பது மிகுந்த நன்மையை அளிக்கும்.

andal nachiar

ஆடி கிருத்திகை: மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் கூடுதல் சிறப்பு கொண்டது. இந்த பிலவ வருடத்திற்கான ஆடி கிருத்திகை, ஆடி மாதம் 17-ம் தேதி திங்கள்கிழமை ஆக.2ம் தேதி அன்று வருகிறது. இது முருகனுக்கு உகந்த தினம். முருகனை இந்த நாளில் வழிபாடு செய்வது நல்லது.

ஆடி பதினெட்டு: ஆடி மாதம் 18-ம் தேதி , ஆகஸ்டு 3ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஆடி 18 வருகிறது. தமிழகத்தில் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ‘ஆடிப்பெருக்கு’ என்று கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் சுமங்கலிகள் தாலி கயிறை மாற்றுவார்கள். அம்மனுக்கு படையல் வைத்து வழிபடுவார்கள். இந்தமுறை ஆடி 18-க்கு மறுநாள்ஆண்டாளுக்கு உரிய நட்சத்திரம், அதாவது ஆண்டாள் பிறந்த தினம் ஆடி 19 -ம் தேதி வருகிறது. அன்று பெண்கள் நோன்பு இருப்பது நல்லது.

ஆடி அமாவாசை: ஆடி மாதம் 23-ம் தேதி ஆகஸ்ட் 8ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று ஆடி அமாவாசை நிகழ்கிறது. இந்த நாள் நம் முன்னோர்களை வழிபட மிகவும் உகந்த நாள். ஒவ்வொரு வருடமும் 3 முக்கியமான அமாவாசை வரும். அதில் முதலாவது ஆடி அமாவாசை, 2-வது புரட்டாசி மகாளய அமாவாசை, 3-வது தை அமாவாசை. இந்த நாளகளில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் நாம் செய்த கருமங்கள் நீங்கி நன்மை அளிக்கும்.

கருட ஜெயந்தி: ஆடி மாதம் 29-ம் நாள் ஆகஸ்ட் 14-ம் தேதி சனிக்கிழமை அன்று பட்சிராஜர் என்று போற்றப்படும் கருடாழ்வானின் திருநட்சத்திரமாக, ஆடி ஸ்வாதி அன்று கொண்டாடப் படுகிறது.

அது தவிர ஆடி மாத வளர்பிறையில் நாக பஞ்சமி, கருட பஞ்சமி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி 28, ஆகஸ்ட் 13ம் தேதி அன்று நாக பஞ்சமி நாளில் நாக தோஷம் உள்ளவர்கள் ஆலயங்களில் நாக பிரதிஷ்டை செய்து புற்றுக்கு பால் ஊற்றி வழிபடுவார்கள். அதனால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கைக்கூடும். குழந்தை இல்லாதவர்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பார்கள்.

ஆடி அறுதி: ஆடி மாதம் 31- ம் தேதி ( 16 ஆகஸ்ட் அன்று ஆடி அறுதி. ஆடி மாதத்தின் கடைசி நாளாகும். அன்றைய தினம்தான் விவசாயிகள் நாற்று நடுவார்கள். ஆடி மாதம் பிறக்கும் போது விதை விதைப்பதும் முடியும் போது நாற்று நடுவது வழக்கம். அடுத்த தினம் ஆவணி மாதம் பிறக்கும். பெண்கள் அருகில் உள்ள சிவன்கோவிலுக்கு சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

ஆடி மாதத்தின் சிறப்பான ஆடித்தபசு காட்சி, சங்கரன்கோயிலில் ஆடி 7ம் தேதியும், ஆடிப்பூர உத்ஸவத்தின் ரத நிகழ்வு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடி 26ம் தேதியும் நிகழ வேண்டும். ஆனால் கடந்த முறையே கொரோனா கால நெருக்கடிகளால், உத்ஸவங்கள் கோயிலுக்கு உள்ளேயேதான் நடந்தன. இந்த முறை எப்படியோ.. தெரியாது.


thai amavasai tharpanam1

ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. இது மார்கழி மாதம் வரை நீடிக்கும். இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானது.

ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் அமைகிறது.

ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் 12 நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் (ஆகஸ்டு 6) கோலாகலமாக கொண்டாடப் படுகிறது.

ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக பின்பற்றப்படுகிறது.

ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

temple aadi amavasai pooja

ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பலவித காய்கறிகளை கொண்டு தயாரான கதம்ப சாதத்தை படைத்து வழிபடும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும். அன்று திக் தேவதைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உபவாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.

ஆடி மாதம் கிராம தேவதை கோவில்கள் உள்பட திறக்கப்படாமல் இருக்கும் எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.

ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.


உத்தராயனம் முடிந்து தட்சிணாயன புண்ய காலம் தொடங்குவது ஆடி மாதத்தில்தான். உத்தராயன புண்ய காலத் தொடக்கத்தில் இயற்கையான சூரியனை வணங்கச் சொல்கிறது சாஸ்திரம். அதேபோல், தட்சிணாயன புண்ய காலத்தில், நீர் நிலைகளை வணங்கச் சொல்லி அறிவுறுத்துகிறது. தட்சிணாயனம் தொடங்கும் மாதமான ஆடி மாதத்தில், புனித நீராடுவது அதனால்தான் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் காவிரி முதலான நீர் நிலைகளில், ஆடிப்பெருக்கு விழா விமரிசையாக நடந்தேறும். நீரின்றி அமையாது உலகு என்பதையும் மக்களின் ஜீவனாகத் திகழும் நீரை ஆராதிக்கவும் அறிவுறுத்தும் ஆடி மாதத்தில் நீர் நிலைகளை வணங்குவோம். வழிபடுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version