
சனாதனம் என்றால் என்ன அதன் பொருள் என்ன?
சனாதனன் – மஹாவிஷ்ணுவின் ஒரு திருநாமம்!
ஸனாத் ஸனாதனதம: கபில: கபிரவ்யய: |
ஸ்வஸ்தித: ஸ்வஸ்திக்ருத்-ஸ்வஸ்தி: ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்திதக்ஷிண: || 96 ||
898 வது திருநாமம் -சநாதந தம –
மிகப் பழைமையானவன்
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் பீஷ்மரிடம் யுதிஷ்டிரன் கேட்கிறான் நாங்கள் யாரை பரமாத்மாவாக எண்ணி வழிபடுவது என்று – – கிம் ஏகம் தைவதம் லோகே.. எந்த ஒருவரை தெய்வமாக ?! கிம் வாப் ஏகம் பராயணம்?! – எந்த ஒன்றை பாராயணம் செய்வது?!
அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மர் பதில் சொல்கிறார்… ஜகத் ப்ரபும் தேவதேவம் அனந்தம் புருஷோத்தமம் – என்று அருகில் நின்ற கண்ணனையே காட்டுகிறார்..!
இப்படித் தொடங்கும் விஷ்ணு சஹஸ்ர நாம – 96 வது ச்லோகத்தில் சநாதனம் என்ற பெயரும் வருகிறது –
இதன் பொருளாக அறியப்படுவது – மிகப் பழைமையானவன் என்பது .
சநாதனம் என்றால்… அனாதி காலமாய் நிலவி வருவது. மனிதன் தோன்றியதில் இருந்து, எந்த தர்மத்தைக் கடைப்பிடித்து வருகிறானோ அது.. அதனால் தான் என்றும் உளது, என்று கூறினார்கள். என்றும் என்றால், எதிர்காலத்தில் என்பது மட்டுமல்ல, கடந்த காலத்தில் இருந்தது, நிகழ் காலத்தில் இருப்பது எதிர் காலத்திலும் இருக்கும் என்று பொருள்…
இதையே நம் ஆழ்வார் – நம்ம ஆழ்வார் – ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே-2-5-4- என்றும், வைகல் தோறும் என் அமுதாய வானேறே -2-6-1- என்றும் திரு வாய் மொழிந்தார்.
மிகத் தொன்மையானவராயினும் அப்போது தான் புதிதாகக் கிடைத்தவர் போல் அனுபவிக்கத் தக்கவர் என்று இந்த சநாதன – நாமத்துக்கு விளக்கம் தந்தார் ஸ்ரீ பராசர பட்டர்.
எல்லோருக்கும் காரணம் ஆகையால் பிரமன் முதலியோருக்கும் பழைமையாக இருப்பவர் என்றார் ஸ்ரீ ஆதி சங்கரர் தமது விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யத்தில்.
சர்வம் விஷ்ணு மயம் ஜகத். – உலகம் விஷ்ணுமயமானது. விஷ்ணு – நீக்கமற நிறைந்திருப்பவன்…
சஹஸ்ரநாமத்தில் வருவது.. அனாதி னிதனம் விஷ்ணும் ஸர்வலோக மஹேஸ்வரம் | என்பது
அனாதி நிதனம் – அன ஆதி நிதன: – துவக்கமோ முடிவோ இல்லாதது… சனாதன – என்றும் உளது …
ஸ்ரீமத் பாகவதம் ச்லோகம் – 1.8.28
மன்யே த்வாம் காலம் ஈசானம் அனாதி-நிதனம் விபும் |
ஸமம் சரந்தம் ஸர்வத்ர பூதானாம் யன் மித: கலி: ||
மன்யே—நான் கருதுகிறேன்;
த்வாம்—பகவானாகிய தாங்கள்;
காலம்—நித்தியமான காலம்;
ஈசானம்—பரம புருஷர்;
அனாதி-நிதனம்—துவக்கமோ, முடிவோ இல்லாதவர்;
விபும்—எங்கும் பரவியிருப்பவர்;
ஸமம்—சமமான கருணை கொண்டவர்;
சரந்தம்—விநியோகிப்பதில்;
ஸர்வத்ர—எல்லா இடங்களிலும்;
பூதானாம்—ஜீவராசிகளின்;
யத் மித:—சம்பந்தத்தினால்;
கலி:—சண்டை சச்சரவுகள்.
எம்பெருமானே, தங்களை நான் நித்திய காலமாகவும், பரம ஆளுநராகவும், துவக்கமோ முடிவோ, இல்லாதவராகவும், எங்கும் பரவியிருப்பவராகவும் கருதுகிறேன். உங்களுடைய கருணையை விநியோகிப்பதில் நீங்கள் அனைவரிடமும் சமமாக நடந்து கொள்கிறீர்கள். ஜீவராசிகளுக்கு இடையிலுள்ள சண்டை சச்சரவுகளுக்கு சமூகத் தொடர்புகளே காரணம்.
புருஷ சூக்தம், உலகத்தின் உற்பத்தி, காரணம், இயக்குபவன், என அனைத்தும் போதிக்கிறது. அவனை யார் எப்படிக் கண்டு கொள்கிறார்கள் என்றும் சொல்கிறது. அதுவே சனாதனம். இதை மதம் என்று நாம் சொல்வதில்லை. தர்மம் என்கிறோம். சநாதன தர்மம் – நம் தர்மம். நம் பாரதிய தர்மம். இதை யார் யார் எப்படிக் கடைப்பிடிக்கிறார்களோ அப்படியப்படி இது வடிவம் பெறும். வேத மறுப்பும் சனாதனமே. பகுத்தறிவும் சநாதனமே. சனாதனத்தை… அழிப்பது என்பது, தன்னைத் தானே அழித்துக் கொள்வது! – மரக் கிளையின் நுனியில் இருந்து கொண்டு அடிமரத்தை வெட்டுவான் போலே!
படம் : சபாநாயகர் – ஞான மா நடராசப் பெருமானின் ஐந்து நாட்டிய சபைகளில் ஒன்றான எங்கள் திருக்குற்றாலம் சித்திர சபையின் ஓவியம் கஜேந்திர மோட்சம் – ஆதிமூலமே என அழைத்தவாறு!
- செங்கோட்டை ஸ்ரீராம்