
இன்று ஸ்ரீ ஜயந்தி ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த நாள். இந்த நாளில், அதாவது ஆவணி மாத ரோகிணி நட்சத்திர நன்னாளில் பிறந்தவர்தான் – ரசிகமணி என்று கொண்டாடப்படும் டி.கே.சிதம்பரநாத முதலியார்.
கிருஷ்ண ஜயந்தி நாளில் பிறந்து, ராமபிரானை – கம்பராமாயணத்தை – கம்பனை- தீவிரமாய் பிரசாரம் செய்தவர்… ரசிகமணி! “தமிழருக்குத் தமிழே துணை” என்னும் மந்திரத்தைச் சொன்னவர் டி.கே.சி.
கடந்த நூற்றாண்டில், தமிழுக்கு மூன்று மணிகள் பிரபலமாயிருந்தனர். பண்டிதமணி, ரசிகமணி, கவிமணி என அம்மூன்று மணிகள், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார், பண்டிதமணி கதிரேச செட்டியார் ஆகியோர். மும்மணிகளின் பெயருக்கு முன்னும் மணியான பட்டங்கள், பெயருக்குப் பின் அடையாளங்களாய் அலங்கரித்தன!
இவர்களில் ரசிகமணி டி.கே.சி., குற்றால முனிவர் என்ற அடைமொழியுடன் வாழ்ந்த கம்பனின் ராமனுக்கு ரசிகரானவர்.
1881ல் ஆவணி மாத ரோஹிணி நட்சத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருநெல்வேலி தீத்தாரப்ப முதலியார் – மீனம்மாள் தம்பதிக்கு மகவாய்! டி – தீத்தாரப்ப முதலியார், கே – கிளங்காடு (பூர்விகம்), சி – சிதம்பரநாத முதலியார் என மூன்றெழுத்தில் பிரபலமானவர்களில் முக்கியமானவர் டி.கே.சி.
தென்காசியில் வசித்து வந்தார் ரசிகமணி டி.கே.சி.,யின் பேரன் தீப.நடராஜன். அவர் கடந்த 2021ல் காலமாகிவிட்டார். முன்னர், அடிக்கடி அவர் வீட்டுக்குச் சென்று பேசிக் கொண்டிருப்பேன். தன் தாத்தா டிகேசி., குறித்து நிறையத் தகவல்கள் சொல்வார். டி.கே.சி., குறித்தும், அவருடைய பேரன் தீப.நடராஜன் குறித்தும் நிறைய எழுதியிருக்கிறேன்.
அடிப்படையில் வழக்குரைஞரான டி.கே.சி., 1928-1930 வரை சட்டமேலவை உறுப்பினராகவும், 1930-1935 வரை இந்து அறநிலையத்துறை ஆணையராகவும் இருந்தார்.
நம் பாரத நாட்டின் சுதந்திரத்துக்கு முந்தைய கால கட்டங்களில் அரசியல் ஈடுபாடு கொண்டிருந்தவர். 1947 மார்ச்சில் சுதந்திரத்துககு முன்னர், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை மாகாண முதல்வராக இருந்த போது தமிழக அரசுக்கு, – தான் பிறந்த ஊரான, மற்றும் தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் அடையாளமான ஆண்டாள் அவதரித்த ஊரான – தமிழ்க் கலாசாரத்தின் அடையாளமாகத் திகழும் ஆலயங்களையே தமிழகத்தின் முகவரியாகப் பிரதிபலிக்கும் விதமாக – ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தை அரசுச் சின்னமாக வைக்க ரசிகமணி பரிந்துரைத்தார். அவரது பரிந்துரையை அப்படியே ஏற்று செயல்படுத்தினார் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.
பாரத அரசுச் சின்னத்தில் – சத்யமேவ ஜயதே – என்று இருப்பதை – வாய்மையே வெல்லும் – என்றாக்கி, அற நெறிக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழரின் அடையாளமாய்க் கொடுத்தார் அந்நாளில்! அன்றில் இருந்து முக்கால் நூற்றாண்டுதான் கடந்து வந்திருக்கிறது தமிழ்ச் சமுதாயம். இன்றைய வாயே வெல்லும் என்ற நிலையில் இருந்து, வாய்மையே வெல்லட்டும் என்ற நம் தமிழர் அறநெறியான பாரம்பரியத்துக்கு திரும்ப வேண்டும்! பொய்மை ஒழியட்டும்! வாய்மை வெல்லட்டும்!
இன்று, கிருஷ்ண ஜயந்தி என்பதால், அதே நாளில் பிறந்த எங்கள் தென்காசி – குற்றாலத்தின் அடையாளம் – டி.கே.சியின் 143வது பிறந்த நாளில் – தமிழக அரசுச் சின்னத்தை வடிவாகக் கொடுத்த தமிழ்க் கலை இலக்கிய சிற்ப ஓவிய கலாசார ரசிகர் – ‘தமிழர்’ டி.கே.சிதம்பரநாத முதலியாரை நினைவு கூர்கிறேன்.
பின் குறிப்பு: தமிழக அரசின் முத்திரையில் இடம்பெற்றுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் கோபுரத்தை முதன்முதலில் தமிழக அரசு சின்னமாக அறிவித்தவர் பி.எஸ்.குமாரசுவாமி ராஜா என்பார்கள்.
காமராஜரால் 1956-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது மதராஸ் மாகாணம் என்ற பெயரே இருந்தது. பிறகு, 1968-ல் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டபோதும், இந்தச் சின்னமே நீடித்தது.