― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்உங்களோடு ஒரு வார்த்தைகிளம்பாக்கம் நல்லதே... ஆனால்..?!

கிளம்பாக்கம் நல்லதே… ஆனால்..?!

- Advertisement -
kilambakkam bus stand

கிளாம்பாக்கம் – – – ஊரே நெகட்டிவா பேசி காறி/ரித் துப்புவதால்… நாம யுடர்ன் எடுத்து கொஞ்சம் பாசிட்டிவா ஏதாவது சொல்லலாம்னு பாத்தா… பஸ் ஸ்டாண்டின் நவீன வசதிகள், வடிவமைப்பு, இடவசதின்னு சொல்லலாம். ஆனா, மக்களுக்கான போக்குவரத்து வசதின்னு பாக்கும்போது… உதட்டைத்தான் பிதுக்க வேண்டியிருக்கு.

ஊரை விட்டு ஒதுக்குப்புறமா, நெடுஞ்சாலையை விட்டு ரொம்பத் தள்ளி… அமைதியா வாழ வசதியானதுன்னு நவீன ப்ளாட்கள் கட்டி விட்டிருக்கிற தனியார் பில்டர்கள் மாதிரி ஆகிப்போயிருக்கு இப்போ ஊருருக்கு வெளியே அமைக்கப் படுகிற பஸ் ஸ்டாண்ட்கள்லாம்! மதுர, ராசபாளயம், தெங்காசி, திருநவேலின்னு அப்பப்போ பஸ்ல போகும்போது பாத்து நொந்து போனதுண்டு. ஏன்னா… கிட்டத்தட்ட 35 ஆண்டுகளா ஊருரா பஸ்ல சுத்தியிருக்கேன்…சென்னைவாசியாக, பாரிமுனையில் திருவள்ளுவர் பஸ்கள் இயங்கிய போதும் சென்னை -செங்கோட்டை என பஸ்ஸில் அடித்துப் பிடித்து ஏறியிருக்கிறேன். இதில் ஓர் அனுபவத்தை 2002ல் கலைமகளில் ஒரு சிறுகதையாகவும் பதிவு செய்திருக்கிறேன்.

2010ல் தினமணியில் வேலைக்கு சேர்ந்தப்போ, மயிலாப்பூர்ல இருந்து 20 கிமீ தினமும் பைக்ல பறக்க சிரமமா இருந்ததால வில்லிவாக்கம் பெருமாள் கோயில் பக்கம் குடிபோனேன். அப்போதான் உடன் பணி செய்த நண்பர் வற்புறுத்த, பொத்தேரி- காட்டாங்குளத்தூர் பகுதில அப்போ புதுசா போட்ட ஒரு பில்டரின் ப்ராஜக்டல, நாம சிங்கிள் தானேன்னு ஒரு சிங்கிள் பெட்ரூம் ப்ளாட் புக் பண்ணி வெச்சேன்.

இப்போ சொல்ல வந்தது… தினமணியை விட்டு வெளில வந்த 2015ல, மே மாதம் இங்கே பொத்தேரி சொந்த ப்ளாட்டுக்கு குடிபுகுந்தேன். அப்போதிருந்து ஒரு மூன்றரை வருசமா, கிண்டி – பொத்தேரி ரயில் மூலமாகவோ, அல்லது பைக்லயோ தினசரி போய் வந்தேன். அந்நாட்களில் மாலை நேரம் அலுவலகம் முடிந்து திரும்பும் போது… கடுமையான போக்குவரத்து நெரிசல் – ஜிஎஸ்டி., ரோடு நங்கநல்லூர் திருப்பத்துக்கு முன், விமானநிலையம் பகுதி, பல்லாவரம், குரோம்பேட்ட, தாம்பரம் பஸ் ஸ்டாண்ட் – ரயில்வே ஸ்டேஷன் க்ராஸிங், இரும்புலியூர் மேம்பாலம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் … தாண்டினதும் அப்பாடான்னு நிம்மதியா இருக்கும். இப்போது … விமான நிலையம் பகுதி, பல்லாவரம், தாம்பரம் பஸ் ஸ்டாண்ட், இரும்புலியூர், பெருங்களத்தூர் பகுதிகள்லாம் நெரிசலின்றி (ஃப்ரீயாக ஸ்மூத்தாக 🙂 ) மாறிவிட்டது.

2015-16ல்தான், கோயம்பேடு அல்லாமல் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக ஒரு புதிய பஸ் ஸ்டாண்ட் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக அமைக்கப்பட வேண்டும் என்று இடம் பார்க்க ஆரம்பித்தார்கள். அது ஊரப்பாக்கம் கூடுவாஞ்சேரி வண்டலூர் என விரிந்தது. அப்போது காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இருந்த கூடுவாஞ்சேரி பகுதியில், நந்திரவரம் கோவில் நிலத்தை பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்காக பார்த்துச் சென்றார்கள். அந்நேரம் கடும் எதிர்ப்பு எழுந்தது

இது தொடர்பாக, August 14, 2016 அன்று பேஸ்புக்கில் எழுதினேன். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்க்கில் பார்க்கவும்… https://www.facebook.com/photo/?fbid=10207153130171272&set=a.1034491307197

பின்னர் 2017ல், ஊரப்பாக்கம் அருகே ஆளரவமற்று புதர்க்காடாக இருந்த விஜிபியின் இடத்தைச் சுட்டிக் காட்டி, இங்கே தான் அடுத்து தென்மாவட்டங்களுக்கான பஸ் ஸ்டாண்ட் வரப்போகிறது என்றார்கள். அடுத்தடுத்து அறிவிப்புகள் வந்தன. அதிமுக., ஆட்சியில், (ஜயலலிதா பெயர் தாங்கிய) கோயம்பேடைக் கைவிட மாட்டார்கள் என்பதால், கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் திருவள்ளூர், திருப்பதி, காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, பெங்களூருக்கான பஸ்கள் இயங்குவதற்கும், ஊரப்பாக்கத்தில் கட்டப்பட போகும் புதிய பஸ் ஸ்டாண்ட் திருச்சி மதுரை கன்னியாகுமரி விழுப்புரம் புதுச்சேரி என தென்பகுதிகளுக்கானது எனவும் ஒரு பேச்சு இருந்தது. இந்த இரண்டு பேருந்து நிலையங்களுக்கும் இணைப்பு பேருந்துகள் இருந்தால் போதும் என்ற ஓர் எண்ணமும் அப்போது இருந்தது.

ஆனால் பெருங்களத்தூர் கடந்து சென்னை புறவழிச் சாலை வழியாக போரூர் டோல்கேட் கடந்து கோயம்பேடுக்கு 30 கிலோமீட்டருக்கும் சற்று அதிகம் என்பதால், இந்த இரண்டுக்கும் புறவழிச் சாலை வழியாக நேரடி பேருந்துகள் இயக்கப்பட்டால் போதும் என்ற எண்ணத்தையும் கொண்டிருந்தார்கள். அது சுமார் ஒரு மணி நேரத்துக்கும் குறைவு தான் என்பதால் மக்களை சமாதானப்படுத்த அந்தக் கருத்தையும் தெரிவித்தார்கள்.

அந்த வகையில் தற்போதைய கிளாம்பாக்கம் அதாவது ஊரப்பாக்கம் புதிய பஸ் ஸ்டாண்ட் சில நோக்கத்தில் பார்க்கும்போது பயன் தர தக்கது தான். முக்கியமாக பெரும்பாலான தென்பகுதி ஊர்களில் இருந்து வரும் பயணிகள், பெருங்களத்தூருடன் இறங்கி விடுவார்கள். அதன் பின்னர் ஒவ்வொரு பஸ்ஸும் மிக சொற்ப எண்ணிக்கையிலான பயணிகளுடனேயே கோயம்பேடு சென்று வந்தது. இப்படி அனைத்து பஸ்களும் கோயம்பேடு சென்று வருவதற்கு பதிலாக, கோயம்பேடு செல்ல விரும்பும் பயணிகள் மட்டும் குறைவான எண்ணிக்கையில் உள்ள பஸ்களில் சென்று வந்தால், சுமார் 70 கிலோமீட்டர் ஒவ்வொரு பஸ்ஸும் சென்று வரும் தொலைவு குறையும் என்றும் அதன் மூலம் டீசல் பெருமளவு மிச்சமாகும் என்றும் ஒரு கருத்தைச் சொன்னார்கள். அடுத்து கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசலும் குறையும் என்றார்கள்.

ஆனால் இரு வருடங்களுக்கு முன் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு வரும் நிலையிலேயே இதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஊடகங்களில் பேசித்தான் வந்தார்கள். சிலர் ஊரப்பாக்கம் பகுதியில் ஒரு மேம்பாலம் கட்டி விட்டு, யுடர்ன் அடிப்பதற்கு வழி செய்துவிட்டு, அல்லது இருபுறத்திலுமான ட்ராஃபிக் நேராக வழி செய்துவிட்டு, இந்த பேருந்து நிலையம் தொடங்கப்பட வேண்டும் என்று சொன்னார்கள். இந்த தகவல்கள் எல்லாம் கடந்த இரண்டு வருடங்களில் நாம் செய்திகளாக நிறைய வெளியிட்டு இருக்கிறோம்.

எனவே இப்படி பேருந்து நிலையம் அமைந்தால் பயணிகள் எத்தகைய சிரமத்தை சந்திப்பார்கள் என்பதும் அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் நன்றாகவே தெரியும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏன் இந்த நேரம் எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் பேருந்து நிலையத்தை திறந்தார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி அல்ல; சிம்பிள் லாஜிக் தான்! பஸ் ஸ்டாண்டுக்கு பஸ்கள் / பயணிகள் நிறைய வந்தால் தான், தனியாருக்குக் கொடுத்த வகைக்கு தொகையை எடுக்க முடியும்! இனி புதிதாக வரும் வியாபாரிகளிடம் கறக்க முடியும்!

இப்போதும் ஊரப்பாக்கம் பகுதியில் நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக கிளம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளிவரும் பஸ்கள் சிக்னல் கடந்து யுடர்ன் அடித்து சென்னை நகருக்குள் செல்வதற்கு சிறிய சர்வீஸ் ரோட்டையே பயன்படுத்த வேண்டி இருக்கிறது. அரசு தற்போது கூறுவதன் படி, மூன்று நிமிடங்களுக்கு ஒரு தாம்பரம் பேருந்து / கோயம்பேடு பேருந்து இன்று வைத்துக் கொண்டாலும் இந்த சர்வீஸ் சாலையில் சிக்னல் போடப்படுவதற்கு முன் மூன்று நிமிட இடைவெளியில் குறைந்தது 10 பேருந்துகளாவது வந்தாக வேண்டும். (அனேகமாக இன்னும் சில நாட்களில் இங்கே ஒரு மேம்பாலத்துக்கு டெண்டர் விடப்படக் கூடும்! 🙂 பாலங்கள் கட்டுவதுதான் நமக்கு பொழுதுபோக்காயிற்றே!)

போக்குவரத்து கழக நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, 2500 பேருந்துகள் மட்டுமே உள்ளது என்றும் கூடுதலாக ஆயிரம் பேருந்துகள் இருந்தால் மட்டுமே கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டின் தேவைக்கு பஸ்களை விட முடியும் என்றும் அப்படி என்றால் அதற்கு ஏற்றவாறு டிரைவர் கண்டக்டர்கள் தேவையும் கூடுதலாகும் ஆனால் அதற்கு எந்த ஏற்பாடும் இப்போது இல்லை என்றும் சொன்னார்.

இப்போது கட்டப்பட்டு வரும் ரயில் நிலையத்தாலும் இந்த உடனடி பலனும் விளையாது. அங்கிருந்தும் இறங்கி பஸ் ஸ்டாண்ட் செல்வதற்கு தொலைவு அதிகம் மெனக்கெடலும் அதிகம்! அந்த அளவுக்கு நம் மக்களுக்கு பழங்காலத்தைப் போன்ற உடல் வலுவும் கிடையாது; பொறுமையும் கிடையாது. நேரமும் கிடையாது அவசரகதியிலேயே இருந்து பழகி விட்டார்கள்.

தற்போது சமூக வலைதள இணையதள செய்திகளின் புண்ணியத்தில் பொத்தேரி ரயில் நிலையத்தில் இறங்கி நிறைய பேர் ரயில் பிடித்து தாம்பரம் கிண்டி என செல்கிறார்கள். ஆனால் அதற்கும் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. ஒரே ஒரு நல்ல விஷயம் – பொத்தேரி ரயில் நிலையத்தில் இருந்து சாலையின் மறு புறம் கடக்க நடைமேம்பாலம் அமைத்திருக்கிறார்கள். அதனால் பயமின்றி சாலையைக் கடக்கலாம்! என்றாலும், தாம்பரம் செங்கல்பட்டு தடத்தில் ரயில்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஒரு மணி நேரத்தில் இரண்டு அல்லது அதிகபட்சம் மூன்று ரயில்களே வந்து செல்லும்! ஒவ்வொரு ரயிலுக்கும் இடைவெளி குறைந்தது 20 நிமிடத்தில் இருந்து 40 நிமிடமாக இருக்கும். கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் வந்தாலும் அதே கதிதான்!

ஆனால் முன்பு அரசுத் தரப்பே சொல்லிக் கொண்டிருந்ததைப் போல கோயம்பேடு வடக்குக்கும் கிளாம்பாக்கம் தெற்குக்கும் வைத்துக் கொண்டு இணைப்பு போக்குவரத்தை எளிதாக்கினால் நன்றாகத் தான் இருக்கும். அப்படி இருந்தால் கிளாம்பாக்கம் ரொம்ப நல்லதே! ஆனால் நடப்பியல் நிகழ்வுகள் மக்களுக்கு துன்பியல் முடிவாகவே இருந்து விடுகிறதே! என்ன செய்ய?!

அன்பன்
செங்கோட்டை ஸ்ரீராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version