‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Published:

hindumunnani
hindumunnani

த.வெ.க. இன்னுமொரு திமுக தானா? திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தீர்ப்பை நடைமுறை படுத்த தயங்குவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு இந்து முன்னணி கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

அதாவது நூறாண்டு வழக்கமா? நீதிமன்ற தீர்ப்பா? என்று யோசிப்பதாக கூறியுள்ளது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தமிழக அரசு கூறியிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டத்தின் மாண்பை, நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது தான் கடமை. நீதிமன்றம் தீர விசாரணை நடத்தும்போது போது தனது கருத்தை தெரிவிப்பதோடு அரசின் நிலைப்பாடு முடிவுக்கு வந்துவிடுகிறது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

ஆனால் தீர்ப்பை அமல்படுத்தாமல் தற்போது மக்களை குழப்புவது போல நீதிமன்றத்தில் பதில் மனு தருவது த.வெ.க அரசின் நிர்வாகத் தோல்வியை வெளிகாட்டுவதாக உள்ளது. மேலும் தவெக மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக்குறியாகிறது.

த.வெ.க அரசானது திமுகவின் கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்றுதான் ஆட்சியை தக்க வைத்துள்ளது. அதன் காரணமாகவே திமுகவின் இந்து விரோத மக்கள் விரோத செயல்பாட்டை முதல்வர் திரு. ஜோசப் விஜய் தொடர நிர்ப்பந்திக்கப்படுகிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது.

தமிழக முதல்வராக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல அமைச்சர்களை மக்கள் தூக்கி எறிந்து திரு‌ ஜோசப் விஜய் அவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர் என்றால் அதற்கு காரணம் இந்து விரோதமாக செயல்பட்டு மக்களின் வெறுப்பிற்கு ஆளானதுதான். அதை உணராமல் தவெக இன்னும் ஒரு திமுக வாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கையை பொய்த்து போக வைக்கிறது.

நேற்று திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நடந்த இந்து முன்னணி மாநில பொதுக்குழுவில், தமிழக அரசு பக்தர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வருகின்ற கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டுகிறோம்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

எனவே நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு கடந்த ஆட்சியைப் போல மதிக்காது, தமிழகம் உள்பட உலகம் முழுவதும் வாழும் முருக பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக தமிழக முதல்வர் திரு‌ஜோசப் விஜய் அரசின் கருத்து தெரிவித்து இருப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசு தனது நிலையை சட்டத்தின் மாட்சிமையை மதிக்க தனது கருத்தை, செயலை திருத்திக் கொள்ள வேண்டும் . நீதிமன்ற தீர்ப்பின்படி கார்த்திகை அன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றிய நீதிமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வேண்டுகோள் வைக்கிறது.

Related articles

Recent articles

spot_img