Home Blog Page 5434

படம் துவங்கும் முன்னே ரூ.350 கோடி வியாபாரத்தில் பிரபாஸின் ’சாஹோ’

தற்போது ரூ1500 கோடி வசூலையும் தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பிரம்மாண்ட படம் பாகுபலி. இதில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் பிரபாஸ்.

பிரபாஸ் தற்போது UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி, பிரமோ தயாரிப்பில் சங்கர்-இசான்-லாய் இசையில் மதி ஓளிப்பதிவில் சூஜித் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்படவுள்ள “சாஹோ” திரைப்படத்தில் நடிக்கின்றார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது.

தற்போது “சாஹோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு வேளைகள் நடந்து கொண்டிருக்கின்றன. பாலிவுட்டை சேர்ந்த பிரபல பாலிவுட் நிறுவனம் இப்படத்தின் அனைத்து இந்திய உரிமைகளை ரூ.350 கோடிக்கு விலைக்குக் கேட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறியுள்ளன.

இந்நிலையில், படம் துவங்கும் முன்னரே கோடிக் கணக்கில் லாபத்தை ஈன்ற போகும் படம் எனும் பெருமை சாஹோ படத்திற்குக் கிடைக்கவுள்ளது.

“அம்பாள்,’படி’ அளப்பாள்”


பெரியவாள்,”அம்பாள்,’படி’ அளப்பாள்’னு சொன்னேன். ஒனக்கு நம்பிக்கைப் படலை.
இப்ப நீயே ‘படியாலே’ அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?”-ன்னா!

(“நான் மடத்திலே இருந்திருக்கிற இந்த நாற்பது வருஷமா அந்த மாதிரி ஒத்தை ஒத்தை
ரூபாயா வந்து குன்று மாதிரி குவிஞ்சதேயில்லை!.மடத்து ஜாகையிலே
எல்லாத்தையும்சேத்துக் குவிச்சு எண்ணிட்டுப் படியாலே எடுத்து
எடுத்துச்சாக்கிலே போட்டுக் கட்டினோம்.–விச்வநாதய்யர்)

கட்டுரையாளர்; ரா.கணபதி.
புத்தகம்-மஹா பெரியவாள் விருந்து.
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

பெரியவாள் காசி யாத்திரை (1933) செல்லும் வழியில்ஒரு ஆந்திர குக்கிராமம் ஒன்றில் முகாமிட்டபோது ஸ்ரீஸி.எஸ்,விக்குப்பொத்துக்கொண்டு
வந்து விட்டதாம்.

“எடுத்துச் செலவழிப்பதற்கு நம் மடத்தில் என்ன கொட்டியா
கிடக்கிறதுஇந்தத்தரித்திரம்பிடித்தஊரில்இத்தனை யானையையும், ஒட்டையையும், ஜனங்களையும்  கட்டித்தீனி போடுவதென்றால் எப்படி?” என்கிற ரீதியில்பெரியவாள்
காதுபடப் பொரிந்து தள்ளி விட்டாராம்.

பெரியவாள் அவரைக் கூப்பிட்டார். சாந்தமாக ” நீ ஏன்பதட்டப்படறே? நாம நல்ல காரியத்தை உத்தேசிச்சுப்பொறப்பட்டிருக்கோம்.நம்ப லக்ஷ்யம் நன்னாயிருந்தா
அம்பாள் கை கொடுக்காமப் போவாளா? அவதானே எல்லாருக்கும் படியளக்கிறா? நமக்கும்
நிறைய அளப்பா”என்றாராம்.

மறுநாள், விச்வநாதய்யரால் நம்பவே முடியவில்லை! அந்தக் கிராமத்தில் ஏதாவது திருவிழா நடந்ததா, அல்லது சந்தை கூடிற்றா, அல்லது இப்படி எதுவுமே நடக்காமல் பெரியவாளின் சக்தி மட்டும்தான் வேலை செய்ததா என்று அவருக்குச் சொல்ல
தெரியவில்லை. ஆனால் சொல்லத் தெரிந்தது,

மறுநாள் காலையிலிருந்து அந்த நிர்மாநுஷ்யக் குக்கிராமத்தில்
புற்றீசலாகப்பக்தர்கள் பெரியவாளை வழிபட வந்து கொண்டே யிருந்ததுதான்.

வந்தது மட்டும் இல்லை.அக்காலத்தில் வெள்ளி நாணயம்வழங்கி வந்ததல்லவா? வந்த
பக்தர்கள் யாவரும் இப்படி நாணயங்களைக் கொண்டு வந்து கொட்டினார்கள்.

“நான் மடத்திலே இருந்திருக்கிற இந்த நாற்பது வருஷமா(இதை ஸி.எஸ்,வி.என்னிடம்
கூறியது சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு-கட்டுரை-1960-பின் பாதியில்) அந்த
மாதிரி ஒத்தை ஒத்தை ரூபாயா வந்து குன்று மாதிரி குவிஞ்சதேயில்லை!.மடத்து
ஜாகையிலே எல்லாத்தையும்சேத்துக் குவிச்சு எண்ணிட்டுப் படியாலே எடுத்து
எடுத்துச்சாக்கிலே போட்டுக் கட்டினோம்.

பெரியவாள்,”அம்பாள்,’படி’ அளப்பாள்’னு சொன்னேன்.ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப
நீயே ‘படியாலே’ அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?”-ன்னா!.

“பெரியவாளுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. பெரியவா செய்ய முடியாதது எதுவும்
இல்லை. இருந்தாலும் ‘எங்களைக் கூட வெச்சுண்டு ஆட்டம் போட்டிருக்கா

பிரதமர் மோடியைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்: காரணப் பட்டியல் பெரிசு!

புது தில்லி:

பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம். அவர் மோடியை சந்திப்பதற்கு என்ன காரணம் என்று பலரும் யோசித்துக் கொண்டிருக்க, தான் சந்தித்த காரணத்தை பட்டியல் போட்டுக் கொடுத்துவிட்டார் ஓபிஎஸ்.

தமிழகத்தில் நிலவும் பிரச்னைகள், தேவைகள் குறித்து பிரதமர் மோடியை சந்தித்து எடுத்துக் கூறினோம் என்று கூறிய அவர், விவசாயிகளின் வங்கிக் கடன்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்ததாகக் கூறினார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஓ.பன்னீர் செல்வம் அணி ஆதரவு அளிக்கும் என்ற தகவல் வெளியானது. ஆனால், பிரதமருடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், அரசியல் ரீதியாக அவரிடம் எதுவும் பேசவில்லை என்றார்.

தமிழக மக்களுக்கு இப்போதைக்கு என்ன தேவையோ அதனை அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பாக கோரிக்கை வைத்தோம் என்று கூறினார். அதாவது, தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீட் தேர்வில் விலக்கு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து எடுத்து கூறினோம்; அரசியல் ரீதியாக பிரதமரிடம் எதுவும் பேசவில்லை.
தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனதால் விவசாயிகள் கடனில் சிக்கித் தவித்து வருகின்றனர். தேசிய வங்கிக்களில் விவசாயிகளின் வங்கிக் கடன்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தோம் என்று கூறினார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ்ஸுடன், மைத்ரேயன் எம்பி, கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோரும் உடன் சென்றனர். அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு முயற்சி தோல்வியில் முடிந்ததை அடுத்து மீண்டும் கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்றும் முயற்சியில் இரு அணி தலைவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் மோடியைச் சந்தித்த எடப்பாடிக்கு அவர் முழு ஆதரவு அளித்தது போல் செய்திகள் வெளியாயின. இது ஓபிஎஸ் அணிக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த சந்திப்பு உடனடியாக ஏற்பாடு செய்யப் பட்டதாக வெளிவட்டாரத்தில் கூறப்பட்டது.

கருணாநிதி பங்கேற்பில்லாமல் அவரின் வைரவிழா நடக்கும்: மு.க.ஸ்டாலின்

சென்னை:
கருணாநிதிக்கு நடைபெறும் வைரவிழாவில் அவர் பங்கேற்க மாட்டார் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி 1957-இல் குளித்தலை தொகுதியிலிருந்து சட்டப் பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். அதற்குப் பிறகு அவர் தோல்வியே அடையாமல் தொடர்ந்து சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்.

கருணாநிதி சட்டமன்றத்தில் நுழைந்து அறுபது ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, அதனை பெரிய அளவில் கொண்டாட திமுக. ஏற்பாடு செய்து வருகிறது. கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி நடக்கும் இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களுக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சோனியாவுக்குப் பதிலாக ராகுல் இந்த விழாவில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி தற்போது உடல்நலம் குன்றி, வீட்டிலேயே ஓய்வெடுத்துவருவதால், இந்த விழாவில் அவர் பங்கேற்பாரா என்று ஐயம் எழுந்தது. இருப்பினும் அவர் பங்கேற்பார் என சில நாட்களுக்கு முன்பாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கருணாநிதி இந்த விழாவில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவித்தார். இருப்பினும், அந்த நேரத்தில் மருத்துவர்கள் அனுமதித்தால் பங்கேற்பார் என்றார்.

நீதிபதி கர்ணனைக் கைது செய்யத் தடை இல்லை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி:

தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி நீதிபதி கர்ணன் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் அவரை கைது செய்ய தடை ஏதும் இல்லை எனவும் அது கூறியுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார். இதனால், ஆத்திரமடைந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கர்ணனுக்கு 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் கடந்த சில நாட்களாக சென்னையில் முகாமிட்டுருந்தனர். ஆந்திர மாநிலம் தடா உள்ளிட்ட இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அவர் தலைமறைவாக உள்ளதால் கைது செய்ய முடியவில்லை.

இதனிடையே தன் மீதான சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி கர்ணன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. மனுவை விசாரித்த அமர்வு, அவசரமாக விசாரிக்க மறுப்பு தெரிவித்தது. மனு எப்போது விசாரணைக்கு வருகிறதோ, அப்போது எடுத்துக் கொள்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நீதிபதி கர்ணன் சார்பில் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், நீதிபதி கர்ணனை கைது செய்ய தடை ஏதும் இல்லை. தற்போதைய சூழ்நிலையில் நீதிபதி கர்ணனின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது, முழுமையாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நீதிபதி கர்ணனை கைது செய்ய போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ரஜினி வாய்ஸ்: அன்புமணி, தமிழிசை எதிர் வாய்ஸ்

சென்னை:

நடிகர் ரஜினி காந்த், ரசிகர்களுடனான சந்திப்பில் பேசியபோது, மு.க.ஸ்டாலின், அன்புமணி, திருமாவளவன், சீமான் ஆகியோர் குறித்தும் பேசினார். அவரது பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்புமாக கருத்துகள் எழுந்துள்ளன.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், ரஜினி கருத்து குறித்துக் குறிப்பிட்டபோது, ஊழலுக்கு காரணமான ஸ்டாலினை ரஜினி புகழ்ந்தது ஏன்? அரசியல் மாற்றம் தேவை என ரஜினி பேசியுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் மு.க.ஸ்டாலின் நல்ல திறமையான நிர்வாகி என்று பாராட்டி இருக்கிறார். தமிழகத்தில் அரசியல் கெட்டு விட்டதாக ஆதங்கப்படும் ரஜினி தி.மு.க.வை பாராட்டி இருப்பது வியப்பாகத்தான் இருக்கிறது. ஊழலுக்குக் காரணமான ஸ்டாலினை, ரஜினி ஏன் புகழ்ந்தார் என தெரியவில்லை. போருக்கு தயாராவது அவ்வளவு எளிதல்ல. பிரதமர் மோடி குறித்து ரஜினி எதுவும் கூறாதது ஏன் என கூறியுள்ளார்.

இதனிடையே, பாமக., நிறுவுனர் ராமதாஸ் எப்போதும் கூறிவரும் கருத்தான, நடிகர்கள் அரசியலுக்கு வருவது நல்லதல்ல என்பதைப் பிரதிபலிக்கும் வகையில், அன்புமணி ராமதாஸ் கூறியபோது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலுக்கு நிர்வாக திறன் கொண்டவர்தான் தேவை, நடிகர்கள் அல்ல என்று கூறியுள்ளார்.

இதனிடையே, ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய ராதாரவி இது பற்றி கருத்து தெரிவித்த போது “ரஜினிகாந்த் அரசியலுக்கு வர விரும்பினால் அதை வரவேற்கிறேன். தமிழக மக்களிடம் இருந்து அதிக பணம் மற்றும் புகழை அவர் சம்பாதித்துள்ளார். எனவே, அதை அவர்களுக்கே செலவு செய்ய அவர் தயாராக இருப்பதாக நினைக்கிறார். தீபாவின் கணவர், டிரைவர் எல்லாம் அரசியலுக்கு வரும்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை” எனக் கூறினார்.

ரசிகர் சந்திப்பு மகிழ்ச்சி: ரஜினி ட்வீட்

 

சென்னை:

ரசிகர்களுடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்ததாக, நடிகர் ரஜினி காந்த் டிவிட்டரில் கூறியுள்ளார். இது நினைவில் கொள்ளத்தக்கது, மறக்க இயலாதது என்றும் ஹாஷ் டாக் அடித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கடந்த நான்கு தினங்களாக ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவர்களுடன் பேசினார் ரஜினிகாந்த். அப்போது அரசியல் பேச்சுக்களும் எழுந்தது.

ரஜினியின் ரசிகர் சந்திப்பு என்றாலே பெருத்த எதிர்பார்ப்பு இருக்கும். அண்மைக் காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால், அந்த எதிர்பார்ப்பு இப்போது மேலும் கூடிவிட்டது. ஜெயலலிதா மறைவு, கருணாநிதி உடல் நலமின்றி முடங்கிக் கிடப்பது, ஆட்சியாளர்களிடையே ஏற்பட்ட பிளவு என்று பலவித நிலையற்ற சூழலால், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஊடகங்கள் பெரிதும் ரஜினி குறித்த செய்தியை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த ரசிகர் சந்திப்பு தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக ரஜினி காந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது ட்வீட்:

 

ரஜினியை திமுக.,வுக்கு அழைப்பீர்களா?: கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை:
ரஜினியை திமுக.,வுக்கு அழைப்பீர்களா? என்று திமுக., துணைத்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்கப் பட்டது. அதற்கு அவர், அழைக்கவும் மாட்டோம், அழைக்காமலும் இல்லை என்று தெளிவாகக் குழப்பினார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த செய்திகள், ஓ.பன்னீர்செல்வத்தின் தில்லி பயணம் என பரபரப்பான செய்திகள் தமிழகத்தில் உலுக்கி வரும் நிலையில், தற்போதைய அரசியல் சூழல் குறித்து மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அதில்,
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கேள்விகள் கேட்கப் பட்டன. அதற்கு பதிலளித்த ஸ்டாலின், அரசியலுக்கு வருவது என்பது அவருடைய தனிப்பட்ட முடிவு என்று கூறினார்.

மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில் இருந்து….

ஸ்டாலின்: ரஜினி என்னைக் குறித்து, நல்ல நண்பர், நல்ல நிர்வாகி என்று குறிப்பிட்டதாக நான் அறிந்தேன். சோ என்னைக் குறித்து பாராட்டியுள்ளார். அவருடைய பாணியில் சொல்லப் போனால் மகிழ்ச்சி. அரசியலுக்கு வருவது என்பது அவரது தனிப்பட்ட முடிவு.

நிருபர்: ரஜினி திமுக.,வில் இணைய வேண்டும் என்று அவரை அழைப்பீர்களா?

ஸ்டாலின்: திமுகவுக்கு வரவேண்டும் என்று விரும்பினால் அது குறித்து அவர்தான் முடிவு எடுக்க முடியும். நாங்கள் அழைக்கவோ அல்லது அழைக்காமலோ இருக்கப் போவதில்லை. எந்த வற்புறுத்தல்களையும் அவர் ஏற்கப் போவதில்லை. அவர் ஒரு தனிப்பட்ட மனிதர், அவரே முடிவு எடுத்துக் கொள்வார்.

நிருபர்: ஆனால், ஒவ்வோர் அரசியல்வாதியும் ஊழல் கறை படிந்தவர்கள் என்று அவர் சொல்கிறார். (அது அவரையும் சேர்த்துதான்; திமுகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ரஜினி ஏற்கெனவே மறுப்பு தெரிவித்துள்ளார்)

ஸ்டாலின்: தமிழ்நாட்டில் கடந்த ஆறு வருடங்களாகத்தான் ஊழல் பிரச்னை பெருகியுள்ளது.

நிருபர்: பாஜக ரஜினியை ஈர்க்கும் முயற்சியில் உள்ளது…

ஸ்டாலின்: பாஜக.,வுக்கு தமிழ்நாட்டில் காலடி வைக்க ஏதோவொரு வழி தேவைப்படுகிறது. அதற்காக என்னவெல்லாமோ முயற்சி செய்கிறது. ஆனால் அது ஒருபோதும் நடக்காது.

நிருபர்: ஓ.பன்னீர்செல்வம் தில்லிக்குச் சென்றிருக்கிறார் பிரதமரைச் சந்திக்க…

ஸ்டாலின்: ஓபிஎஸ்ஸோ ஈபிஎஸ்ஸோ அவர்கள் தங்களைக் காத்துக் கொள்ள தில்லி செல்கிறார்கள். மக்களைக் காப்பதற்காக அல்ல. இப்போது ஹிந்தி பிரச்னை உள்ளது. நீட் பிரச்னை உள்ளது. அதற்காகவெல்லாம் பிரதமரை அவர்கள் சந்திக்கவில்லை. ஓபிஎஸ் இங்கே திரும்பியதும், அவரிடம் சென்று இதனைக் கேளுங்கள்.

நிருபர்:தமிழ்நாட்டில் முன்னதாகவே தேர்தல் வரும் என்று நினைக்கிறீர்களா?

ஸ்டாலின்: தேர்தல் முன்னதாகவே வரலாம், வராமல் போகலாம். திமுக தேர்தலை சந்திக்க தயாராகவே உள்ளது.

– என்று குறிப்பிட்டார் ஸ்டாலின்.

சசிகலாவுக்கு பொதுச்செயலராக செயல்பட உரிமை இல்லை; கட்சியை நடத்தும் உரிமை எனக்கே: தில்லியில் ஓ.பி.எஸ்

புதுதில்லி:
சசிகலாவுக்கு பொதுச்செயலராக செயல்பட உரிமை இல்லை; கட்சியை நடத்தும் உரிமை எனக்கே உள்ளது என்று தில்லியில் ஓ.பி.எஸ் பேட்டி அளித்தார்.

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணியினர் தாக்கல் செய்தனர். இதற்காக, புதுதில்லி வந்துள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி உடன் இருந்தார். அப்போது பேசிய ஓபிஎஸ்,

திகார் சிறையில் இருக்கும் அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

மறைந்த மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவேவிற்கு அதிமுக சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதிமுக சட்டவிதியின்படி, தேர்தல் நடத்தித்தான் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுச் செயலாளர் இல்லாத போது பொருளாளர்தான் பொறுப்பேற்று கட்சியை நடத்த வேண்டும். எனவே, சசிகலாவிற்கு பொதுச்செயலாளராக செயல்பட உரிமை இல்லை. பொருளாளரான எனக்கே அந்த உரிமை உள்ளது.

இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் டிடிவி தினகரன் தீர விசாரிக்கப்பட வேண்டும். ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

திண்டுக்கல் சீனிவாசன் அதிக அளவில் பணத்தை வங்கியில் இருந்து எடுத்து வருவதை தடுக்கவும் தேர்தல் கமிஷனிடம் கோரியுள்ளோம். ஏற்கேனவே வங்கி கணக்கை முடக்க கடிதம் அளித்தும் வங்கிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

குடியரசுத் தேர்தல் எப்போது நடைபெறும் என்று இன்னும் அறிவிக்கப்பட வில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் யாருக்கு ஆதரவு என்பது பற்றி முடிவு செய்வோம் என்று கூறினார்.

ரஜினி அரசியலுக்கு வருவதால் அதிமுகவுக்கு பாதிப்பில்லை: ஓ.பன்னீர்செல்வம்

ரஜினி காந்த் அரசியலுக்கு வருவதால், அதிமுக.,வுக்கு ஒன்றும் பாதிப்பில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
அளித்தார்.

தில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலாம், அவர் நல்ல மனிதர்; யார் தலைவராக வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்றார். மேலும்,

நடிகர் ரஜினிகாந்தின் வருகை, அதிமுகவை எந்த விதத்திலும் பாதிக்காது என்று குறிப்பிட்டார்.

மேலும்,
தினகரன் , சுகேஷ் சந்திரசேகர் மீதான விசாரணையை துரிதப்படுத்த வேண்டுமென தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளோம்.
தேர்தல் ஆணையத்தில் உரிய ஆவணங்களை தாக்கல் செய்துள்ளோம்.
ஆர்கே நகரில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தியுள்ளோம்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளது.
கட்சி விதிப்படி பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும்.
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளோம்.
தற்போது பொருளாளருக்கு தான் கட்சியை நடத்த அதிகாரம் உள்ளது.

– என்று குறிப்பிட்டார் பன்னீர் செல்வம்.

இதனிடையே இன்று மாலை 4 மணி அளவில் அவர் பிரதமரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்தும், தமிழக அரசியல் சூழல் குறித்தும் பேசுவார் என்று கூறப்படுகிறது.

Exit mobile version