Home Blog Page 5433

போருக்குத் தயாரான ரஜினி ரசிகர்கள்

ஏழைகளின் முதல்வரே..
போருக்கு தயார்…
மக்கள் வாழ நீங்கள்தான் ஆள வேண்டும்..
இந்திய அரசியல் வான் கண்ட அற்புதம்’
போன்ற வாசகங்களுடன் விதவிதமான போஸ்டர்கள் போயஸ் கார்டனை அலங்கரித்துள்ளன.
ரஜினி ரசிகர்கள் இப்போது ஜமாய்க்கிறார்கள்!

போர்வெல் போட்டதால் திருவல்லிக்கேணி சந்நிதி கட்டடம் புதைகிறது

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பக்தர்கள் கவனத்திற்காக இதைக் கொண்டு வருகிறேன். அண்மையில் நான் சென்னைக்கு விஜயம் செய்த போது எடுத்த படங்களில் இது மிகவும் பாதித்த படம்.
திருவல்லிக்கேணி கோயிலை வலம் வந்தேன். கோயில் சந்நிதியைப் பார்த்துக்கொண்டு இருந்தேன் !! அப்போது திடீரெனத் தோன்றிய விஷயம். தண்ணீருக்காக அவர்கள் போட்டு இருக்கும் போர் கிணறு … கோவிலின் முழுமையான கட்டமைப்பையே அசைத்து இருப்பதாகத் தெரிகிறது ..

நீர் நிறைய எடுக்கப்பட்டு பூமியின் உள்ளே மண்சரிவு ஏற்பட்டு மெல்ல மெல்ல ஒரு பகுதி ரெங்கநாதன் சந்நிதி பக்க சுவர் புதைந்தது போல் தெரிகிறது. சென்னை வாசிகள் … திருவல்லிக்கேணி கோவிலுக்கு அருகில் இருப்பவர்கள் இதை சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

விஜயராகவன் கிருஷ்ணன்

சாமி ஊருக்குள்ள வரும்போது பட்டாசு வெடிக்கக் கூடாதாம்!

இந்துசமய அறநிலையத்துறை அனைத்து கட்டளைதாரர்களிடம் சாமி எங்கள் ஊருக்கு வரும் போது பட்டாசு வெடிக்கமாட்டோம். அப்படி பட்டாசு வெடித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்களே பொறுப்பு என எழுதி வாங்கியுள்ளனர்.

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாகத் திருவிழாவின் போதும் மற்றும் சாமி மலையேறும் நிகழ்ச்சியின் போதும் வருடந்தோறும் தொன்றுதொட்டு வாணவேடிக்கை நடப்பது வழக்கம். ஆனால் இந்துசமய அறநிலையத்துறை இந்த வருடம் வாணவேடிக்கை முற்றிலுமாக நடத்தக்கூடாது என தடை விதித்துள்ளனர்.

ஒருவருடத்திற்கு முன்பு கேரளாவில் கோவில் திருவிழாவின் போது நடந்த வாணவேடிக்கை நிகழ்ச்சியில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது. ஆனால் அங்குகூட இந்த ஆண்டு வாணவேடிக்கை நடத்த அரசு அனுமதியளித்தது.

ஆனால் திருச்செங்கோடு தேர்த்திருவிழாவின் போது எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நடக்கும் வாணவேடிக்கையை இந்துசமய அறநிலையத்துறை தடுப்பது ஏன்?

கோவில் கணக்குகள் ஒழுங்காக இல்லை.

கோவிலை சுத்தமாக வைப்பதில்லை.

இலவச காலணி காப்பகம் இல்லை.

கைலாசநாதர் கோவிலில் பக்தர்களுக்கு கழிப்பிடம் இல்லை.

கோவிலுக்கு தானமாக கொடுத்த அனைத்து மாடுகளும் கசாப்பு கடைகளுக்கு சென்றுவிட்டது.

கோவிலில் போதுமான பணியாளர்கள் நியமிக்கவில்லை.

மொத்தத்தில் கோவில் நிர்வாகத்தை ஒழுங்காக நடத்த அருகதை இல்லை.

ஆனால் தொன்றுதொட்டு வரும் வழக்கங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதில் இந்த அறங்கெட்டதுறை முழுமுனைப்பாக செயல்படுகிறது.

ஏற்கனவே பத்ரகாளியம்மன் கோவிலின் தேரோட்டம் இரவில் நடப்பதை அனுமதிக்காத அறநிலையத்துறை கடந்த இரண்டு ஆண்டுகளாக மாற்றி பகலில் தேரோட்டம் நடத்தியது.

தற்போது வாணவேடிக்கை நடத்தக்கூடாது என கட்டளைதாரர்களிடம் எழுதி வாங்குகிறது.

நாளை திருவிழாவே நடத்தக்கூடாது என எழுதி வாங்கினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இந்து பக்தர்கள் கொடுக்கும் பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு இந்துக்களுக்கு விரோதமாக செயல்படாதே…

பட்டாசு வெடிப்பது எமது உரிமை.

இந்து சமய அறநிலையத்துறையே…

இந்து பக்தர்கள் கொடுக்கும் பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு இந்துக்களுக்கு விரோதமாக செயல்படாதே…

அது அறநிலையத்துறைக்கு பிடிக்கவில்லை எனில் கோவிலை விட்டு வெளியேறு….

நமது வழிபாட்டு உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க அனுமதியோம். அறநிலையத்துறையின் இந்த அறங்கெட்ட செயலை எதிர்த்து பக்தர்களும், பொதுமக்களும் நமது கண்டனங்களைத் தெரிவிப்போம்…

போராடுவோம்… வெற்றி பெறுவோம்.

சுதந்திர தினத்தில் புதுக்கட்சி: ‘என் வழி தனி வழி’ எனும் ரஜினியின் கணக்கு எடுபடுமா?

சென்னை:

தமிழகத்தின் தற்போதைய பரபரப்பு ரஜினி காந்த். ஜெயலலிதா, கருணாநிதி என இரண்டு தலைவர்கள் இல்லாமல் தமிழக அரசியல் களம் தற்போது வெற்றிடம் கண்டுள்ளது. இந்த வெற்றிடத்தை பயன்படுத்திக் கொள்ள பலரும் முயன்றாலும், ரஜினி என்ற இமேஜ்தான் இதற்கு சரியாக வரும் என்று ரசிகர்களும் இன்னும் அரசியல் வட்டாரத்தில் பலரும் கருதுவதால், இந்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், சுதந்திர தினத்தன்று, புதுக் கட்சி அறிவிப்பை வெளியிட ரஜினி திட்டமிட்டுள்ளதாகவும், கட்சிக் கொடியை இரு தினங்களுக்கு முன் வடிவமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரஜினி அண்மையில் தன் ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது, ‘அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் போருக்கு ரசிகர்கள் தயாராக இருக்க வேண்டும்’ என அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், இரு நாட்களுக்கு முன் தொழிலதிபர் ஒருவர் ரஜினியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது ரஜினி தன் கட்சிக் கொடியையும், அதில் இடம்பெறும் ‘லோகோ’வையும் தெரிவித்துள்ளார். எனவே, ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று, புதிய கட்சியின் அறிவிப்பை ரஜினி வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனிடையே நடிகர், நடிகையரும் ரஜினியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை மீனாவும், நமீதாவும் ரஜினி கட்சியில் சேர தயாராக இருப்பதாகத் தெரிவித்தனராம். ரஜினி கட்சி துவங்கினால், அதில் இணைவதற்கு, அ.தி.மு.க., வின் முக்கியப் புள்ளிகளும் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தி.மு.க., காங்கிரஸ், த.மா.கா.,வைச் சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகளும் ரஜினியின் கட்சிக்குத் தாவலாம் எனக் கூறப்படுகிறது.

ஊழல் புரையோடிப் போயுள்ளது, தமிழகத்தில் சிஸ்டமே சரியில்லை என்றெல்லாம் ரசிகர் சந்திப்பில் பேசிய ரஜினி காந்த், ஊழல்கறை படிந்து மீண்டும் மீண்டும் அரசியல் ஒன்றையே தொழிலாகக் கொண்டிருக்கும் இத்தகைய கட்சியினரையே தமது கட்சியில் சேர்த்து, அதையும் ஊழல் கட்சியாகவா நடத்தப் போகிறார் என்று கேட்பவர் பலர்.

இந்நிலையில், ரஜினியை பாஜக.,வில் சேர வருமாறு மாநிலத் தலைமையும் கட்சியினர் சிலரும் ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், ரஜினி தனிக் கட்சி தொடங்கினால் தாக்குப்பிடிப்பாரா என்பதே அரசியல் நோக்கர்கள் பலரின் கேள்வியாக உள்ளது.

ரஜினிக்கு ஆலோசனை சொல்ல தற்போது துக்ளக் ஆசிரியர் சோ போன்ற தீர்க்கதரிசன நபர்கள் இல்லாததாலும், ஊழல் புரையோடிய சில பத்திரிகை ஆசிரியர்களிடமே ரஜினி ஆலோசனை கேட்பதாலும், அவரது முயற்சி வெற்றி பெறாமல் போவதோடு, அது அவருக்கு மட்டும் தோல்வியாக முடியாது, தமிழகத்தின் மாற்றத்துக்கே ஒரு தோல்வியாக முடியக் கூடும் என்றும் சிலர் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், துக்ளக் இதழில் அரசியல் கட்டுரைகள் எழுதி வருபவரும், தி ஹிந்து இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவருமான பத்திரிகையாளர் ஆர்.நடராஜன், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தனது கருத்துகளை எழுதி வருகிறார். அவர் கூறும் அரசியல் அரசியல் அறிவுரை, ரஜினி புதுக் கட்சி தொடங்குவதை விட வேறு கட்சியில் இணைந்து செயலாற்றுவதே சிறந்தது என்பதுதான்…

பத்திரிகையாளர் ஆர்.நடராஜன் இது குறித்துக் கூறுபவை…

சினிமாகாரர்களுக்கு பணமும் புகழும் அலுத்து விட்டால் அதிகாரம் செலுத்தும் அரசியல் களத்தின் மீது ஆசை வருகிறது. நடிகர் சிரஞ்சீவி அரசியலுக்கு வருவார் என்று 1992ல் எழுதினேன் (நாழிகை லண்டன்) அதற்குப் பல வருஷங்களுக்குப் பிறகு நுழைந்தார். காரணம் அரசியல் ஆசை அல்ல. ஒரு குடும்பப் பிரச்சினையைத் தீர்க்க அவரது சினிமா செல்வாக்கோ பணமோ கொஞ்சமும் உதவவில்லை. எனவே அரசியல்வாதிகளை நாடினார், அப்போதுதான் சினிமா புகழை பணத்தை விட வலிமையானது என்பதைப் புரிந்து கொண்டார். மிகவும் பிரமாதமாக சினிமாடிக்காக ப்ரஜா ராஜ்யம் கட்சியை ஆரம்பித்தார். சில நாள் மந்திரியானார். அப்புறம் சினிமாவும் போச்சு, அரசியலும் போச்சு. இதெல்லாம் ரஜனிக்குத் தெரியாதா?

எதிர்பாருங்கள். ஆகஸ்ட் வரை தமிழ் நாட்டின் மொட்டை நிர்வாகம் தொடரும். அதன் பிறகு கவர்னர் ஆட்சி. இடையில் ரஜினியின் புதுக் கட்சி. அத்துடன் ஒபி எஸ் அணி பாஜக கூட்டு. சசிகலா கும்பல் ஒரங்கட்டப்படும். திமுக இப்போது உள்ள பலத்தைத் தக்கவைத்துக் கொள்ளும். உதிரிக் கட்சிகள் பெரிய கட்சி களுடன் ஒட்டிக் கொண்டாலும் தேறாது. மக்களுக்கு அதே கஷ்டம் தொடரும். நாற்காலிகளில் புதியவர்கள் அமர்வார்கள். நாளை முதல் சில நாற்காலிகள் பேசும் .

இப்போது எங்கும் ரஜினி என்பதே பேச்சு. தொலைக்காட்சி விவாதங்களும் அவரைப் பற்றியே. அரசியல் ஆசை அவரை இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. களமெங்கும் திருடர்கள் என்பதும் தலைமை வெற்றிடமும் அவருக்கு சாதகமானது. தனிக் கட்சியோ, பாஜக தலைமையோ அவர் முதல்வர் பொறுப்பு ஏற்காமல் நடுநிலை அறிவாளி ஒருவரை முதல்வராக்கி வெளிவட்ட நபராக நிர்வாகத்தைக் கண்காணிக்கலாம். சில சமயம் அவர் வெளிக்காட்டும் துறவு மனப் பான்மையை அரசியலில் மேற்கொள்வது அவருக்கும் நல்லது. மாநிலத்திற்கும் நல்லது.

சினிமா ஹீரோ ஹீரோயின்களையே ஆட்சி யாளர்களாக்குவது என்பது நமது 40 வருஷ கால சரித்திரம். ரஜினி காந்தின் பேச்சும் நடவடிக்கையும் இதே மாயை தொடருமோ என்று மருள வைக்கிறது. அரசியலுக்கு வரும் முன்பு எம்ஜியார் தன் வருமானத்தில் தான தர்மங்கள் செய்தார். முதல்வராகிக் கொஞ்ச காலம் யோக்கியமானவராக இருந்தார். லஞ்சம் வாங்குவது தெரியாமல் வாங்கினார்.

ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையிலேயே பணப் பிரச்சினைகள் உண்டு. அவர் தனிக் கட்சி ஆரம்பித்தால் இன்றைய சூழலில் ஜெயிக்கலாம். ஆனால் நல்லாட்சி தருவதற்கு அவர் நல்லவர்களைத் துணைக்கு வைத்துக் கொள்ள வேண்டும். நான் லஞ்சம் வாங்க மாட்டேன் யாரும் ஊழல் செய்ய அனுமதிக்க மாட்டேன் என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அப்படியே செயல்பட வேண்டும்.

தனிக் கட்சி ஆரம்பிப்பதை விட ரஜனிகாந்த் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு மாநிலத் தலைவராகலாம். இது பாஜகவுக்கும் நல்லது. Image உள்ள தலைவருடன் கட்சிக்கு தொண்டர் பலமும் கிடைக்கும் .பாஜக ஆட்சி வருவதும் சாத்தியம். வேறு வழியில்லை.

தமிழ்நாட்டு அரசியல் கடந்த ஐம்பது வருஷங்களுக்கும் மேலாக சினிமாவுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறது. தொடக்கத்தில் எம்.ஜி.ஆர்., விஜயகாந்த், ரஜினி ஆகியோர் வெறும் பாத்திரங்களாக நடித்தார்கள். பிறகு இவர்களை உயர்த்தவே கதை எழுதப்பட்டது. இலட்சியத் தலைமைப் பாத்திரங்கள் அநீதியைக் கண்டித்து நீதியைத் தூக்கிப் பிடிப்பவர்களாக இவர்களுக்கென்றே கதை எழுதப்பட்டது. அதனால் Image building அறிமுகமாகியது.

எம்.ஜி.ஆர். நடிகராக இருந்த போது சில தான தர்மங்களைச் செய்ததால் பிரபலமானார். சினிமாவில் அவர் கதாநாயகன், சினிமா துறையில் சர்வாதிகாரி. கருணாநிதியிடம் ஏற்பட்ட பகை காரணமாகத் தனிக்கட்சி தொடங்கினார். அவருடைய சினிமா பாடல்கள், வசனங்கள் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்கள் அவர் கட்சியைத் தொடங்கியதும் அமைப்பு ரீதியான பலத்தைக் கொடுத்தன.

கருணாநிதியை நான் விமர்சனம் செய்தாலும் அவரை மதிப்பவன். அவ்வப்போது சந்திப்பவன். முக்கிய விஷயங்களைப் பேசுவதுண்டு. ஒருமுறை எம்.ஜி.ஆரை ஏன் விலக்கினீர்கள் என்று கேட்டேன். அவர் சொன்ன பதிலை இப்போது வெளிப்படுத்த முடியாது. அது தனிப்பட்ட உரையாடல். வை.கோ.வை நீக்கியது, நாஞ்சில் மனோகரன் வெளியேறியபோது தடுக்காதது பற்றியும் கருணாநிதியிடம் பேசியிருக்கிறேன்.

இளைஞர் நலம், விளையாட்டு என்று ஏதாவது ஒரு துறையில் கருணாநிதி எம்.ஜி.ஆரை மந்திரியாக்கி இருக்கலாம். மந்திரி சபையில் அவர் தன்னை மீறி செல்வாக்கு பெற்றுவிடுவாரோ என்று கருணாநிதி என்ற அரசியல்வாதி யோசித்திருந்தால் அவரளவில் அது தவறல்ல.

தனக்கு வேண்டிய வெண்ணிற ஆடை நிர்மலா இடம்பெற முடியாத மேலவையைக் கலைத்தவர் எம்.ஜி.ஆர். அவரும் தன் தகுதிக்கு மீறிய புகழைப் பெற்றார். தவறுகளையும் தகிடுதத்தங்களையும் சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டார். ரஜினியும் விஜயகாந்தும் தீமையை எதிர்க்கும் ஹீரோக்களாகப் பிற்காலப் படங்களில் நடித்தார்கள். சினிமாவே நிஜம் என்று நம்பி ஓட்டுப் போடும் மக்களின் சதவிகிதம் தேர்தல் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கிறது.

சினிமா ஒரு மாயை என்பதும் இலவசங்களை இந்த முதல்வர்கள் தாங்கள் சம்பாதித்த சொத்திலிருந்து கொடுக்கவில்லை, அது சகோதர மக்களின் வரிப்பணம் என்பதை வாக்காளர்கள் புரிந்து கொள்ள இதுவரை தமிழ்நாட்டு பா.ஜ.க. என்ன செய்தது? சினிமா கவர்ச்சியால் இன்று பா.ஜ.க. தேசியத் தலைமையே ரஜினியை அழைக்க வேண்டியிருக்கிறது. மற்ற நடிகர்கள் அரசியலில் நுழைந்து செய்யாத கெடுதலை இவர் செய்யப் போவதில்லை. கவர்ச்சி தேவைப்படுகிறது. இருக்கட்டும் என்ற மூத்த பா.ஜ.க. தலைவர்களின் நினைப்பு தவறுதான். ஆனாலும் வேறு வழியில்லை.

– ஆர்.நடராஜன்

உள் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும்!

சென்னை:

‘இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கன மழை பெய்யும்’ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்னி நட்சத்திர வெப்பம் வரும் 28ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் கடந்த இரண்டு வாரங்களாகவே தமிழகத்தின் வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில் அனல் காற்று அதிபயங்கரமாக வீசியது. 24 இடங்களில் அனல் அலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்நிலையில், அனல் அலை தணிந்து, பெரும்பாலான மாவட்டங்களில் வெப்ப நிலை 40 டிகிரி செல்சியசுக்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக மே 24 இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களிலும், வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வெப்பம் அதிக பட்சமாக 100 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி அமலாகும் ஜூலை 1-க்கு முன் விலை உயர்த்தினால் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

புதுதில்லி :

‘ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு முறை அமலாகும் ஜூலை 1ம் தேதிக்கு முன்பாக, பொருட்கள் விலையை உயர்த்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, மத்திய வருவாய் துறை செயலர் ஹஷ்முக் அதியா எச்சரித்துள்ளார்.

நாடு முழுவதும் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வருகிறது. இதுவரை 1,200 பொருட்கள் மற்றும் 500 வகையான சேவைகளுக்கு 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என, நான்கு வித வரி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சேவைகள் வரி, தற்போதைய 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்கிறது. இருப்பினும், சேவை நிறுவனங்கள், மூலப்பொருட்களுக்கு செலுத்திய வரியை திரும்பப் பெறும் என்பதால் தற்போதைய அளவிலேயே வரி விகிதம் இருக்கும். இந்நிலையில் சில நிறுவனங்கள் லாபம் ஈட்டும் நோக்கில் விலையை உயர்த்தியுள்ளதாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதுகுறித்து, வருவாய்த் துறைச் செயலர் ஹஷ்முக் அதியா செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது,

ஜி.எஸ்.டி., சட்டத்தின்படி, வரி குறைக்கப்பட்டால் அதன் பலனை நிறுவனங்கள் நுகர்வோருக்கு வழங்க வேண்டும். அவ்வாறு பலன்கள் வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க லாப தடுப்பு ஆணையம் அமைக்கவும் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. எனவே ஜி.எஸ்.டி., அமலுக்கு வரும் வரை நிறுவனங்கள் அவற்றின் தயாரிப்புப் பொருட்கள், சேவைகள் ஆகியவற்றுக்கான விலையை உயர்த்த வேண்டாம். சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டால் மட்டுமே மூலப்பொருள்களின் விலை உயர்வு குறித்து நிறுவனங்கள் யோசிக்கலாம். அவ்வாறு இல்லாமல், லாப நோக்கத்தில் விலையை உயர்த்தினால், அந்நிறுவனங்களின் செயல்பாடுகள், நிதி நிலை அறிக்கைகள் ஆகியவை குறித்து லாப தடுப்பு ஆணையம் விசாரித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டால், பல பொருட்களின் விலை குறையும். குறிப்பாக, உணவு தானியங்கள் பூஜ்ஜிய வரியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

கல்வித் துறை சீர்திருத்தங்களில் வேகம் தேவை: ராமதாஸ்

சென்னை:
கல்வித்துறைச் சீர்திருத்தங்கள் நல்லத் தொடக்கம் என்றும், செல்ல வேண்டிய தொலைவு மிக அதிகம் என்பதால், அவற்றில் வேகம் தேவை என்றும் பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் பொதுத்தேர்வுகளில் மாநில, மாவட்ட தரவரிசை வெளியிடும் முறையை ரத்து செய்துள்ள தமிழக அரசு, அடுத்தக்கட்டமாக பாடத்திட்டங்கள், மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி முறை மாற்றம் உள்ளிட்ட மேலும் பல சீர்திருத்தங்களை அறிவித்திருக்கிறது. பள்ளிக் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை. ஆனாலும், தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையில் சீரழிவுகள் வெறும் புண்ணாக மட்டும் இல்லாமல் புரையோடிப் போயிருப்பதால், அதை சரி செய்ய இன்னும் ஏராளமான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மேல்நிலை வகுப்புகளான பதினோறாம் வகுப்புக்கும், பனிரெண்டாம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும்; பதினொன்றாம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்தாலும் 12-ஆம் வகுப்புக்கு முன்னேறலாம்; தேர்ச்சி பெறாத பாடத்தை 12-ஆம் வகுப்பில் எழுதி தேர்ச்சி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது உண்மையாகவே கல்வித் தரத்தை உயர்த்தவும், 12-ஆம் வகுப்பில் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக பதினோறாம் வகுப்பில் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்காமல் நிறுத்தி வைப்பதை தடுக்கவும் பெரிதும் உதவும். அதுமட்டுமின்றி, மேல்நிலை வகுப்புகளில் ஒவ்வொரு பாடத்திற்குமான மொத்த மதிப்பெண்கள் 200-லிருந்து 100 ஆக குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களின் திறனை சரியாக மதிப்பிடுவதற்கு இந்த மாற்றம் மட்டுமே போதுமானதல்ல. பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் விடைத்தாட்களை மதிப்பிடும் முறையில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

பொதுத்தேர்வுகளில் தற்போது கடைபிடிக்கப்படும் மதிப்பீட்டு முறை இரு வழிகளில் மாணவர்களையும், கல்வி முறையையும் பாதிக்கிறது. பொதுத்தேர்வுகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதை தங்களின் சாதனையாகக் காட்டிக் கொள்ளும் கழக ஆட்சியாளர்கள், ஒவ்வொரு ஆண்டும் திட்டமிட்டு செயற்கையாக தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கின்றனர். இதற்காக உண்மையாகவே தேர்ச்சி பெறும் அளவுக்கு மதிப்பெண்களை பெறாதவர்களுக்குக் கூட, கூடுதலாக சில மதிப்பெண்களை வழங்கி தேர்ச்சி பெறவைக்கும் கலாச்சாரம் தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. அதுமட்டுமின்றி விடைகளில் ஒரு சில தவறுகள் இருந்தால் கூட அதைப்பற்றிக் கவலைப்படாமல் முழு மதிப்பெண்களை வழங்கும் கலாச்சாரமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் பின்னணியில் தீய நோக்கம் இல்லாவிட்டாலும், இது மாணவர்களின் கல்வி வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும். இதற்கெல்லாம் மேலாக அனைத்துத் தேர்வுகளிலும் எழுப்பப்படும் வினாக்கள் மாணவர்களின் சிந்தனைத் திறனை சோதிக்கும் வகையில் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

அடுத்த மூன்றாண்டுகளில் அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்; மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தை (சி.பி.எஸ்.இ) விட தமிழகப் பாடத்திட்டம் மிகவும் தரமானதாகவும் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டைகளை வழங்குவதில் தொடங்கி, பாடத் திட்டங்களை மாற்றியமைப்பது வரை அனைத்து யோசனைகளும் பாட்டாளி மக்கள் கட்சியால் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டவை தான். 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மேற்கண்ட திட்டங்கள் உட்பட மொத்தம் 23 வகையான திட்டங்கள் தமிழக மக்களுக்கு வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தன.தமிழக மக்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் கருதி பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்த திட்டங்கள் இப்போது செயல்வடிவம் பெறுவதில் நான் மகிழ்ச்சி மட்டுமின்றி பெருமிதமும் அடைகிறேன்.

அதேநேரத்தில் கல்வி கோபுரத்தில் மேல்மட்டத்தில் அதிக விஷயங்களை சேர்க்கும் போது அவற்றின் சுமையை தாங்கும் வகையில் கல்வி கோபுரத்தின் அடித்தளம் வலுப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செயலாளர் மற்றும் அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் அடித்தளம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஆசிரியர்கள்: மாணவர்கள் விகிதம் 1:20 என்ற அளவுக்கு மேம்பட்டிருப்பதாக தமிழக அரசுக் கூறிக்கொள்கிறது. இது ஓரளவு உண்மையும் கூட. அதேநேரத்தில் இது வளர்ச்சியல்ல… வீக்கம் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். மாணவர்களின் தேவைக்கு ஏற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தான் வளர்ச்சி ஆகும். மாறாக ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவது எதிர்காலத்தில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

20 மாணவர்களுக்கு ஒருவர் வீதம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டாலும், அது சராசரியான அளவு தானே தவிர, சரியான அளவு இல்லை. 60 மாணவர்கள் மட்டுமே படிக்கும் பள்ளியில் 10 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும், அதே நேரத்தில் 100 பேர் பயிலும் பள்ளியில் இருவர் மட்டுமே ஆசிரியர்களாக இருப்பதும் பள்ளிக் கல்வித் துறையின் அவலங்களில் சிலவாகும். தமிழகத்தில் உள்ள கிராமப்புற தொடக்கப் பள்ளிகளில் 48% பள்ளிகள் இரு ஆசிரியர்களைக் கொண்ட பள்ளிகள் என்றும், தொலைதூரங்களில் உள்ள பள்ளிகளில் ஓர் ஆசிரியர் நிர்வாகப் பணிகளுக்காக வெளியில் செல்ல வேண்டியிருப்பதால் மீதமுள்ள இன்னொரு ஆசிரியர் மட்டுமே மாணவர்களை கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதாகவும் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. மொத்தம் 5 வகுப்புகளுக்கான மாணவர்களை பெரும்பாலான நேரங்களில் ஓர் ஆசிரியர் மட்டுமே கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால், அவர்களால் எப்படி மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியும்?

தொடக்கக் கல்வியின் நிலை இவ்வாறு இருக்கும் சூழலில் இதை சரி செய்யாமல் மேல் நிலை வகுப்புகளில் சீர்திருத்தங்களை செய்வது குடத்தின் ஓட்டையை அடைக்காமல் தண்ணீர் பிடிக்கும் கதையாகவே அமையும். இந்த நிலையை மாற்ற உடனடியாக அனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும் குறைந்தபட்சம் 5 வகுப்பறைகளும், 5 ஆசிரியர்களும் இருப்பதை உறுதி செய்தல், தொடக்கப் பள்ளிகளை தரம் உயர்த்துவதற்காக சிறப்புத் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துதல், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் உள்ள அதிகாரியை பள்ளிகளின் தர இயக்குனராக ( Director of School Standards) நியமித்தல், பள்ளிகளின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வசதியாக ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் அடங்கிய பள்ளி மேலாண்மைக் குழுக்களை அமைத்தல் ஆகிய நான்கு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் அரசுப் பள்ளிகளில் மட்டுமின்றி தனியார் பள்ளிகளிலும் தமிழ் வழிக் கல்வியை உறுதி செய்தல், விளையாட்டு, நீதிபோதனை ஆகியவற்றுக்கு போதிய பாட வேளைகளை ஒதுக்குதல், வாக்காளர் பட்டியலை திருத்துவதில் தொடங்கி நலத்திட்ட உதவிகளுக்கான பயனாளிகள் பட்டியலை தயாரிப்பது வரை அனைத்துப் பணிகளிலும் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை நிறுத்தி, மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் மட்டும் அவர்கள் கவனம் செலுத்துவதை உறுதி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், செயலாளரும் மேற்கொள்ள வேண்டும்.

2030-ல் பெட்ரோல் டீசலில் இயங்கும் கார்கள் இருக்காது!

வரும் 2030 ஆம் ஆண்டில், பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கக் கூடிய கார்கள் பயன்பாட்டில் இல்லாத நிலை உருவாகும் என ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக பொருளியல் வல்லுநரான டோனி செபா என்பவர், 2020 முதல் 2030-ம் ஆண்டுக்குள் போக்குவரத்து குறித்த மறுஆய்வு என்ற தலைப்பின் கீழ் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டார். அந்த ஆய்வின் முடிவில், 2030-இல் எரிசக்திப் பொருள்களின் பற்றாக்குறையாலும் சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட காரணிகளைக் கருத்திக் கொண்டும், பெட்ரோல் பங்க்கள் வெகுவாகக் குறைந்துவிடும். 2024-ல் ஒரு பேரல் பெட்ரோல் விலை வெறும் 25 அமெரிக்க டாலராகக் குறையும், 2030-க்குள் உலகில் எண்ணெய் தொழில் முடங்கிப் போகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பெட்ரோல் டீசல் இவற்றின் பயன்பாட்டுக்கு மாற்று ஏற்பாடாக, தானியங்கி எலக்ட்ரிக் கார்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்று கூறுகிறார் டோனி செபா.

சிபிஎஸ்இ பிளஸ்-2 முடிவுகள் இன்று வெளியாகாது!

புதுதில்லி:

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முடிவுகள் இன்று வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மார்க் பிரச்னை காரணமாக இன்று வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணை மதிப்பெண் வழங்கும் முடிவை ரத்து செய்வதாக ஏப்ரல் மாதம் சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிபிஎஸ்இ அறிவிப்பை ரத்து செய்ததுடன் கருணை மதிப்பெண் வழங்கவும் நேற்று உத்தரவிட்டது. இதனால் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக சிபிஎஸ்இ இன்று ஆலோசனை நடத்துகிறது. அதன் தொடர்ச்சியாக சிபிஎஸ்இ இயக்குனர் சதுர்வேதி, பிற்பகலில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகரை சந்தித்து பேச உள்ளார். இதனால் எதிர்பார்த்தபடி இன்று ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகாது என்றும், அடுத்த வாரம் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

உலகமே சிரிக்கும் வகையில் போராட்டம்: அய்யாக்கண்ணு எச்சரிக்கை

சென்னை:
உலமே சிரிக்கும் வகையில் போராட்டம் நடக்கும் என்று விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாய சங்கப் பிரதிநிதிகள் நேற்று தலைமைச் செயலகத்தில் வேளாண் துறை அமைச்சர் துரைகண்ணுவை சந்தித்துப் பேசினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, “தில்லியில் அண்மையில் 16 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கூடி விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயப் பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்தோம். தில்லியில் இருந்து திரும்பிய பின்னர் முதல்வரைச் சந்தித்துப் பேசுவதற்காக இன்று தலைமைச் செயலகத்துக்கு வந்தோம்; ஆனால் அவரைச் சந்திக்க முடியவில்லை. வேளாண் துறை அமைச்சரையும், துறைச் செயலரையும் சந்தித்தோம். இன்னும் ஒரு வார காலத்திற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், சென்னை சேப்பாக்கத்தில், காந்திய வழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தோம். அது சிறிய போராட்டமாக இருக்காது. உலகமே சிரிக்கக்கூடிய வகையில் மிகப் பெரிய போராட்டமாக அமையும்” என்று கூறினார்.

முன்னதாக, முதல்வரைச் சந்திக்க அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள், நேற்று காலை 11:15க்கு தலைமைச் செயலகம் வந்தனர். ஆனால் முதல்வரைச் சந்திக்க உரிய அனுமதி பெறாததால், விவசாயிகளை உள்ளே விட போலீசார் மறுத்தனர். இதனால் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. ‘முதல்வர் தில்லி செல்வதால் அவரால் விவசாயிகளை தற்போது சந்திக்க இயலாது’ என, போலீசார் கூறியதைத் தொடர்ந்து, வேளாண் அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

Exit mobile version