Home Blog Page 6034

டி.வி. அலுவலகத்தில் குண்டு வீசியவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்: ராம.கோபாலன்

rama-gopalan சென்னை: சென்னையில் தனியார் செய்தி டிவி., சேனல் அலுவலகத்தின் வாயிலில் குண்டுகளை வீசிச் சென்ற நபர்களை கண்டுபிடித்து அவர்களை தண்டிக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது இன்று சில விஷமிகள் வெடிகுண்டு வீசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு யார் காரணமாக இருந்தாலும், அந்தக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். மத்திய புலானாய்வு துறை முழுமையான விசாரணைக்கு உத்திரவிட இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. இத்தகைய சமூக விரோத செயலுக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசையும், காவல்துறையையும் இந்து முன்னணி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இதற்கு முன்பு தினத்தந்தி அலுவலகத்தின் மீதும் பெட்ரோல் குண்டு வீசிய, தினமலர் அலுவலகத்திற்கும் மிரட்டல் விடுத்த குற்றவாளிகளையும் காவல்துறை கண்டுபிடித்துத் தண்டிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தமிழகத்தில் பயங்கரவாத நடவடிக்கைக்கு முற்று புள்ளி வைக்க எல்லா வழக்குகளிலும் குற்றவாளிகள் கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நாமம் போட்டு மன்றக் கூட்டத்துக்கு வந்த திமுக பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்

கோயமுத்தூர்: நெற்றியில் நாமத்துடன் வந்த திமுக பெண் கவுன்சிலர் மீது அதிமுக பெண் கவுன்சிலர் தாக்குதல் நடத்தினார். கோவை மாநகராட்சியில் 2015-16ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வியாழக்கிழமை இன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மன்றக் கூட்டத்துக்கு நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு வந்த திமுக பெண் கவுன்சிலர் மீனா லோகு, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார். மீனாவின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாமம் போட்டுக் கொண்டு வந்த திமுக உறுப்பினர்கள் மீது தண்ணீரை ஊற்றி நாமத்தை அழிக்க அதிமுக உறுப்பினர்கள் முற்பட்டனர். இதைத்தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் மீது அதிமுக உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தினர். அன்னம்மாள் என்ற அதிமுக பெண் கவுன்சிலர் மீனா லோகுவைத் தாக்கினாராம். இதில் மீனா லோகுவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை அடுத்து, அதிமுக கவுன்சிலர்களின் தாக்குதலைக் கண்டித்து, திமுக கவுன்சிலர்கள் மன்றக் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

காந்தி தங்கிய இடத்துக்கு மோடி பார்வையிட வரவேண்டும்: யாழ். தமிழர்கள் விருப்பம்

கொழும்பு: இலங்கைக்கு சுற்றுப் பயணம் செல்லவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணத்தில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்தப் பயணத்தின் போது, மோடி, 1927ல் மகாத்மா காந்தி வடக்கு இலங்கையின் தமிழ் பேசும் மக்களிடம் வந்து தங்கிய இடத்துக்கு பார்வையிட வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். புகழ்பெற்ற மிகவும் பழைமையான நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு அருகில் கோயில் சாலையில் 199ஆம் எண் இல்லம் இந்த வரலாற்றுச் சிறப்பைப் பெற்ற ஒன்று. இந்த இல்லத்தை மிகவும் சிறப்பாக பராமரித்து வரும் பொறியாளர் சூரியசேகரம், இந்த இல்லத்துக்கு குறைந்தது 3 நிமிடங்களாவது வந்து தனது கையெழுத்தை இங்குள்ள வருகையாளர் பதிவேட்டில் மோடி இட்டால் அது மிகப் பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக அமையும் என்று கூறியுள்ளார். இந்த இடம் பழங்கால யாழ். மற்றும் தமிழ்நாட்டு வரலாற்றுப் பிணைப்பை எடுத்துக் காட்டும் ஒன்றாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். 1927 ஆம் ஆண்டு நவம்பர் 27ல் மகாத்மா காந்தி அவரது மனைவி கஸ்தூர்பா காந்தியுடன் இந்த இடத்துக்கு வந்தார். அவரது செயலாளர்கள் மகாதேவ் தேசாய், ப்யாரிலால், ராஜாஜி, அவரது மகள் லக்ஷ்மி என அப்போது இங்கே வந்தனர். அவர்களை யாழ். இளைஞர் காங்கிரஸ் நிறுவனர் கண்டி பேரின்பநாயகம் வரவேற்றார். அப்போது இந்தியா இலங்கை இருநாடுகளிலும் முழு சுயராஜ்யம் வேண்டி இந்தப் போராட்டங்கள் நடந்தன. அங்கே அரசியல் தவிர்த்து, சமூக சீர்திருத்த விஷயங்களை அவர் பேசினார். யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை, தொண்டைமன்னார், பாய்ன்ட் பெற்றோ, மனிப்பே, சாவகச்சேரி ஆகிய இடங்களில் அவர் உரையாற்றினார்.

ரஞ்சி கோப்பையை தக்க வைத்தது கர்நாடகம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடக அணி கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது. கர்நாடக அணி முதலில் 762 என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. பின்னர் தமிழ்நாடு அணி தனது முதல் இன்னிங்ஸில் 134 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய தமிழக அணி, 411 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதனால், கர்நாடக அணி ஒரு இன்னிங்ஸ், 217 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுகோப்பையைத் தக்க வைத்துக் கொண்டது. 328 ரன் எடுத்த கருண் நாயர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

மொரிஷீயஸில் கங்கா தலாவ் புனித இடத்தில் மோடி வழிபாடு

போர்ட் லூயிஸ்: மொரீஷியஸ் நாட்டில் ஹிந்துக்களின் புனித இடமாகக் கருதப் படும் கங்கா தலாவ் தலத்தில் மோடி வழிபாடு நடத்தினார். அங்கிருக்கும் சிவன் கோயிலில் தனது பிரார்த்தனையைச் செய்தார் மோடி. முன்னதாக, மொரீஷியஸ் வளர்ச்சிக்கு துணை நிற்போம் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசினார். மேலும் மொரீஷியஸ் , இந்தியாவின் உறவு பாரம்பரியமாக இருந்து வருகிறது. இந்தியாவிலும், மொரீஷியஸிலும் சபாநாயகரை மேடம் என்று அழைப்பதில் நான் பெருமை கொள்கிறேன். ஜனநாயகத்தின் மாண்பைக் காப்பதில் இரு நாடுகளுக்கும் ஒற்றுமை உண்டு. மொரீஷியஸ் நாட்டு வளர்ச்சியில் இந்தியா எப்போதும் துணையாக இருக்கும் என்று பிரதமர் பேசினார்.

டி.வி. அலுவலகம் மீது தாக்குதல்: சீமான் கண்டனம்

புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலக வாயிலில் வெடிகுண்டு வீச்சு நடத்தப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பது…
மகளிர் தினத்தன்று பெண்கள் தாலி அணிவது குறித்த சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்ப புதிய தலைமுறை தொலைக்காட்சி முடிவெடுத்திருந்தது. இதையொட்டி முதலில் மிரட்டலும் அடுத்தடுத்து வன்முறையுமாக அந்த தொலைக்காட்சி நிறுவனம் நாளுக்கு நாள் எதிர்கொள்ளும் பாதிப்புகளைப் பார்க்கையில் நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என எண்ணத் தோன்றுகிறது.
ஒரு கருத்தில் நமக்கு உடன்பாடு இல்லாவிட்டால் மாற்றுக்கருத்து சொல்வதுதான் நாகரிக நெறி. அதைச் செய்ய திராணியற்று ஊடக நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தியும், பத்திரிகையாளர்களை அடித்து மிரட்டியும் ஆவேசம் காட்டியிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
சட்டம் ஒழுங்குக்கே சவால் விடக்கூடிய அளவுக்கு இன்று புதிய தலைமுறை அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியிருக்கிறார்கள்.
அந்தத் தொலைக்காட்சி நிகழ்வின் மீது வெறுப்புற்று இப்படிச் செய்பவர்கள் தாங்கள் செய்வது எத்தகைய அயோக்கியத்தனம் என்பதை உணர வேண்டாமா?
இந்த வெறிச்செயலுக்குப் பதிலடியாக இத்தகைய குண்டுவீச்சு கொடூரங்கள் அவர்களின் அலுவலகங்கள் மீது நிகழ்த்தப்பட்டால் அவர்களின் நிலை என்னவாகும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டாமா?
தாங்கள் நியாயம் என நினைப்பவை மட்டுமே ஊடகத்தில் வர வேண்டும் என நினைப்பது எத்தகைய கொடுமையான சர்வாதிகாரம்?
தாலி உள்ளிட்ட சம்பிரதாயங்களில் தனிப்பட்ட உரிமையைத் தடுத்து இந்துத்துவம் என்கிற பெயரில் கலாசாரக் காவலர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்பவர்கள், பாகிஸ்தானின் நடவடிக்கைகளை மதவாதம் எனச் சொல்வது எத்தகைய நகைப்புக்குரியது? கருத்தை கருத்தால் வெல்லாமல் ஆயுதங்களைத் தூக்கும் இத்தகைய அரக்கர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மிரட்டல் உருட்டலால் ஊடகங்களைப் பணியவைக்கப் பார்க்கும் இந்த மடத்தன நடவடிக்கைகளை நாம் தமிழர் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. – என்று கூறியுள்ளார்.

உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்கா 146 ரன்களில் அபார வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பி பிரிவில் இன்று நடைபெற்ற 36வது லீக் சுற்றுப் போட்டியில், யு ஏஇ அணியை தென்னாப்பிரிக்க அணி 146 ரன் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது. முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 341 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய யு ஏ இ அணி, 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 195 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 146 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ் 1 ரன்னில் சதத்தை கோட்டை விட்டார்.

‘வாலு’ படத்துக்கு ‘யு’: வரிவிலக்கும் கிடைத்ததில் சிம்பு மகிழ்ச்சி

சென்னை: பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்ட சிம்புவின் வாலு படம், இந்த மாத இறுதியில் – 27 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு சென்சாரில் யு சர்ட்டிபிகேட் கிடைத்ததில், சிம்புவுக்கு பெரும் மகிழ்ச்சி. அதிலும், வரிச்சலுகையும் பெற்றதில், இரட்டிப்பு மகிழ்ச்சியாம் சிம்புவுக்கு. டிவிட்டரில் தனது மகிழ்ச்சியை சிம்பு வெளிப்படுத்தியுள்ளார். வாலு திரைப்படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். ரசிகர்களின் அன்புக்கு சிறப்பு நன்றி என்று சிம்பு ட்விட்டரில் கூறியுள்ளார்.  

உ.பி., நீதிமன்ற வளாகத்தில் காவல் உதவி ஆய்வாளரால் வழக்குரைஞர் சுட்டுக் கொலை

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் வழக்குரைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் குண்டடி பட்டு காயமடைந்தார். இதில், தாக்குதலில் இருந்து தப்பிக்க, தற்காப்புக்காக அவர் தனது துப்பாக்கியால் சுட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் போலீஸார் மீதும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். நீதிமன்ற வளாகத்தில் இருந்த வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதனால் அந்தப் பகுதி கலவர பூமியானது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வழக்கறிஞர் ரோஷன் அகமது என்றும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் பெரோஸ் நபி என்றும் தெரிய வந்துள்ளது. நீதிமன்ற வளாகத்தில் பிற்பகல் 2 மணி அளவில் இந்தச் சம்பவம் நடந்தது. அதையடுத்து மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும் 5 கி.மீ. தொலைவில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்ற பகுதியிலும் வழக்கறிஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் கட்டடங்களை சேதப்படுத்தி தீவைத்தனர். போலீஸார் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அலகாபாத்-கான்பூர் நெடுஞ்சாலையில் மறியல் நடத்தி போக்குவரத்தை தடுத்தனர். காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு சொந்தமான வாகனங்களுக்கும் தீவைத்தனர். உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் நேரில் வந்து சமாதானம் செய்தனர். சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, நிலைமையை நேரில் கண்டறிவதாக வழக்குரைஞர்களிடம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உறுதி அளித்தனர். பிறகுதான் உயர் நீதிமன்றத்தில் போராட்டம் தணிந்தது.

தில்லியில் விமான டயர் வெடித்து விபத்து: 150 பயணிகள் பத்திரம்

தில்லியில் தரையிறங்கிய ஓமன் நாட்டு விமானத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 150 பயணிகளும் உயிர் தப்பினர். ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து நள்ளிரவு 1.43க்கு கிளம்பிய டபிள்யூ. ஐ. 241 என்ற அந்த விமானம், இன்று காலை 6.10க்கு தில்லி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானத்தை அதன் விமானி பாதுகாப்பாக தரையிறக்கிய போது, அதன் முன் டயர்கள் இரண்டும் திடீரென வெடித்தன. அந்த விமானம் தரையில் பாதுகாப்பாக லேண்டிங் ஆனதும் இந்த விபத்து ஏற்பட்டதால், அதில் பயணம் செய்த 150 பயணிகளும் எவ்வித ஆபத்துமின்றி தப்பினர். விமான டயர் வெடித்ததற்கான காரணம் குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

Exit mobile version