Home Blog Page 6035

வேந்தர் மூவீஸ் மதன் குறித்து தவறான தகவல் கசிவதாக விளக்கம்

சென்னை: வேந்தர் மூவீஸ் மதன் குறித்து தவறான தகவல் பரவுவதாக அதன் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இன்று அந்நிறுவனம் சார்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கையில், இன்று காலை முதல் வேந்தர் மூவீஸ் எஸ். மதன் அவர்களைப் பற்றி தவறான தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. அதில் சிறிதளவும் உண்மை இல்லை என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். – என்று வேந்தர் மூவீஸ் பங்குதாரர் பா.பாலகுருநாதன் பெயரில் அறிக்கை வெளியானது. vendhar-movies  

வீடு வாங்கினால் மனைவி இலவசம்: இந்தோனேஷியாவில் விநோத விளம்பரம்

இந்தோனேசியாவில் வீடு வாங்குபவருக்கு மனைவி இலவசம் என்ற விநோத விளம்பரம் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. வீடு வாங்குபவர்களுக்கு ரியல் எஸ்டேட் நடத்தும் நிறுவனங்கள் பரிசுப் பொருட்கள் வழங்குவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் விநோதமாக மனைவி இலவசம் என்ற பெயரில் விளம்பரம் இந்தோனேஷியாவில் வெளியாகியுள்ளது. “இது ஒரு அரிய வாய்ப்பு. நீங்கள் இந்த வீட்டை வாங்கினால், இந்த வீட்டின் உரிமையாளரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள கேட்கலாம். ” என இந்த விளம்பரம் வெளியாகி, இப்போது இணையத்தில் மிகப் பிரபலமடைந்துள்ளது. இந்த விளம்பரத்தில், 40 வயது மதிக்கத்தக்க வீட்டு பெண் உரிமையாளரான லீனா காரில் சாய்ந்தபடி இருக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பல்வேறு வசதிகளுடன் இந்த வீடு உள்ளது. இரண்டு படுக்கை அறை, இரு குளியல் அறை, வாகனம் நிறுத்துமிடம் மற்றும் சிறிய மீன்குளம் ஆகிய வசதிகள் வீட்டில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. விளம்பரத்தில் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. ஜாவா தீவில் உள்ள இந்த வீட்டின் மார்க்கெட் விலை 999 மில்லியன் ரூபயா (75 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்) என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வீட்டை விற்பனை செய்தாலும், தொடர்ந்து உரிமையாளராக நீடிக்கவே லீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று இணையதள தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான செய்திகள் வெளியானதும், லீனாவை அணுகிய செய்தியாளர்கள், அவரிடம் இது குறித்துக் கேட்டனர். இதனால் லீனாவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுதொடர்பாக போலீசாரும் விசாரித்து உள்ளனர். போலீஸாரிடம் இது என் யோசனை அல்ல என்று விவரித்தேன் என்றார் லீனா. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான லீனா பேசுகையில், வீட்டை விற்பனை செய்ய ஆட்களை கண்டுபிடிக்கவே என் நண்பரிடம் உதவி கேட்டேன். கணவர் தொடர்பாகவும் பேசினேன். குறிப்பிட்ட நபர்களிடம் இந்தத் தகவலை அவர் தெரிவிப்பார் என்றே அவரிடம் கூறினேன். இணையதளங்களில் பதிவு செய்யச் சொல்லவில்லை. வீடு வாங்க விருப்பம் உள்ளவர் திருமணம் ஆகாதவர், மனைவியை இழந்தவர், மனைவியைத் தேடுபவர் என்ற பிரிவில் இருந்தால் எனக்குத் தெரியப் படுத்துங்கள் என்றே நான் அவரிடம் கேட்டுக் கொண்டேன். நானும் விதவை என்பதால் என்னை அவர் அறிந்து கொள்ள முடியும் என்பதால் அப்படிக் கூறினேன் என்று தெரிவித்துள்ளார். இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் இதுபோன்ற விளம்பரம் வெளியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு குழந்தைக்கு ரூ.5 வீதம் ஒதுக்கி அங்கன்வாடி மையங்களுக்கு வழங்க தமிழிசை சௌந்தர்ராஜன் கோரிக்கை

சென்னை: ஊட்டச்சத்து இன்றி குழந்தைகள் இருப்பார்கள் என்பதால், தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப, ஒரு குழந்தைக்கு ரூ.5 வீதம் ஒதுக்கி அங்கன்வாடி மையங்களுக்கு வழங்க தமிழக பாஜக., தமிழிசை சௌந்தர்ராஜன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு, அங்கன்வாடி மையங்களின் ஊழியர்கள் காலியாக உள்ள சுமார் 40,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று மார்ச் 15-ந் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இதனால் குழந்தைகள் பெரும்அளவிற்கு பாதிக்கப்படுவார்கள். அதுமட்டுமல்லாமல் 1 முதல் 5-ம் வகுப்பு வாரியான குழந்தைகளுக்கு காய்கறி வாங்கவும், சமைக்கவும் தலா 1.30 ரூபாயும், 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு 1.40 ரூபாயும் தமிழக அரசு வழங்குகிறது. இப்போதுள்ள விலைவாசியால் இது சாத்தியப்படாது என்பது மட்டுமல்ல ஊட்டச்சத்தோடு வளர வேண்டிய குழந்தைகள், குறைபாடோடும், ஊட்டச்சத்து குறையோடும் வளரும் நிலை ஏற்படும். இது தடுக்கப்பட வேண்டும். இந்த அளவு குறைந்த ஒதுக்கீட்டை ஓர் குழந்தைக்கு ஒதுக்கும் போது அது மறைமுகமாக அவர்களுக்குக் கொடுக்கும் காய்கறி அளவிலும், உணவு அளவிலும் குறை ஏற்பட்டு அவர்கள் சோகை பாதித்த குழந்தைகளாகவும், ஊட்டச்சத்தில்லாத குழந்தைகளாகவும், வளர்ச்சி குன்றிய குழந்தைகளாக மாறுவதற்கு வாய்ப்பிருப்பதனால் தமிழக அரசாங்கம் உடனே ஊழியர்களுக்குக் கொடுக்க வேண்டிய அளவீட்டை இன்றைய விலைவாசிக்கேற்றார் போல் ஓர் குழந்தைக்கு குறைந்த பட்சம் 5 ரூபாயாவது ஒதுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். இதை பணமாகப் பார்க்காமல் எதிர்கால ஏழைக் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் அரசு செய்யும் முதலீடாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆக அங்கன்வாடி குழந்தைகளின் ஆரோக்கியம் இன்று தமிழக அரசின் கையில் இருக்கிறது. தமிழக அரசு உடனே தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

சொத்துக் குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

பெங்களூரு: பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் சொத்துக் குவிப்பு வழக்கில், வாத பிரதிவாதங்கள் அனைத்தும் இன்று முடிவடைந்தன. இதையடுத்து, இன்று மதியம் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால், கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா சசிகலா சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

86 தமிழக மீனவர்கள் நாளை விடுவிப்பு

புது தில்லி: இலங்கை சிறையில் இருக்கும் 86 தமிழக மீனவர்கள் நாளை விடுதலை செய்யப்படுவார்கள் என இலங்கை தெற்கு மாகாண எம்.எல்.ஏ., செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களின் படகுகளும் ஓரிரு நாளில் விடுவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தில்லியில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்த பிறகு அவர் இதனை தெரிவித்தார்.

கைதிகள் விடுதலை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம்: பிடிபி

  ஜம்மு அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு ஜம்மு-காஷ்மீர் அரசு செயல்படும் என்று பிடிபி கட்சி தெரிவித்தது. இதுதொடர்பாக ஜம்முவில் அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான இம்ரான் ராசா அன்சாரி கூறுகையில், “உச்ச நீதிமன்றமும், நீதிமன்றங்களும் என்ன உத்தரவுகளை பிறப்பிக்கிறதோ, அதற்கு கட்டுப்பட்டு செயல்படுவோம்’ என்றார். இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவுடனோ, மத்திய அரசுடனோ விவாதம் நடத்தப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், “நீதிமன்ற உத்தரவை நாங்கள் செயல்படுத்தினோம்’ என்றார்.

மஸரத் ஆலம் விடுதலை: பாஜக எச்சரிக்கை

புதுதில்லி: மஸரத் ஆலம் விடுதலை விவகாரத்தில் பாஜக தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. மஸரத் ஆலம் விடுதலை உள்ளிட்ட விவகாரங்களில், மென்மையான கொள்கையைக் கடைபிடிப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று பாஜக தெரிவித்தது. இதுகுறித்து தில்லியில் அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான முக்தர் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களிடம் கூறியபோது… பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகிய விவகாரங்களை பாஜக சகித்துக் கொண்டிருக்காது. இந்த விவகாரங்களில், மென்மையான போக்கையும், பலவீனமான கொள்கையையும் கடைப்பிடிப்பதை பாஜக அனுமதிக்காது. மஸரத் ஆலம் விடுதலை செய்யப்பட்ட விதத்தில் பாஜகவுக்கு உடன்பாடு கிடையாது. இதை பாஜக எதிர்க்கிறது. இது தவறான நடவடிக்கையாகும். இந்த விவகாரத்தை, மத்திய உள்துறை அமைச்சர் உன்னிப்பாக கவனித்து வருகிறார். அரசமைப்பு சட்டத்துக்கு உள்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அஞ்சலி தமானியா ஆம் ஆத்மியில் இருந்து விலகல்

புதுதில்லி : ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான அஞ்சலி தமானியா கட்சியில் இருந்து விலகுவதாக புதன் கிழமை இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் அவர், ” நான் வெளியேறுகிறேன். ஆம் ஆத்மி கட்சியின் முட்டாள்தனத்துக்குள் நான் வர விருபவில்லை. ஆம் ஆத்மியின் மோசமான செயல்பாடு எனக்கு பிடிக்கவில்லை. என்று கூறியுள்ளார். மேலும், கட்சித் தலைவரும் முதல்வருமான கேஜ்ரிவால் குறித்து தெரிவித்த கருத்தில் நான் அவர் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். அவரது கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வந்தேன். ஆனால் குதிரை பேரங்களை நான் ஆதரிக்க மாட்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டிஷ் ஏஜென்ட் காந்தி கருத்து: கட்ஜுவுக்கு மாநிலங்களவையில் கண்டனம்

புதுதில்லி: மகாத்மா காந்தியை பிரிட்டிஷ் ஏஜென்ட் என்று தனது வலைத்தளத் தில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், பிரஸ் கவுன்சில் முன்னாள் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூவுக்கு மாநிலங்களவையில் இன்று கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்று காலை கேள்வி நேரம் முடிந்ததும் இந்தப் பிரச்னையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர். மகாத்மா காந்தி நம் நாட்டின் மகத்தான குடிமகன். அவரை இங்கிலாந்தின் ஏஜென்ட் என்று ஒரு முன்னாள் நீதிபதி கூறுவது ஏற்கத் தக்கதல்ல என்றனர். இந்தக் கருத்தை அவை முன்னவரும், மத்திய நிதியமைச்சருமான அருண்ஜெட்லி ஏற்றுக்கொண்டு பேசுகையில் இவர் போன்றவர்கள் உச்ச நீதிமன்றத்தில் எவ்வாறு நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள். இந்த முறையை நாங்கள் மாற்றம் செய்ய இருக்கிறோம் என்றார். இதையடுத்து மார்க்கண்டேய கட்ஜூவுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செஷல்ஸ்: மோடி முனிலையில் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

விக்டோரியா: செஷல்ஸ் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், சுற்றுலா, வர்த்தகம் ஆகிய துறைகளில் நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின. பிரதமர் நரேந்திர மோடி செஷல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய 3 இந்திய பெருங்கடல் நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக நேற்று மாலை அவர் தில்லியில் இருந்து விமானம் மூலம் செஷல்ஸ் புறப்பட்டு சென்றார். நேற்று இரவு செஷல்ஸ் தலைநகர் விக்டோரியாவுக்கு மோடி போய் சேர்ந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. செஷல்ஸ் அதிபர் ஜேம்ஸ் மைக்கேலை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா–செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கடல் எல்லை வரையறையில் ஒத்துழைப்பு, புதுப்பிக்கப்படத்தக்க எரிசக்தி மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி உள்ளிட்டவை இதில் அடங்கும். அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மோடி, செஷல்ஸ் நாடு கடல் வழி போக்குவரத்தில் மட்டும் நண்பர் அல்ல. உண்மையான நண்பராக திகழ்கிறது. இந்தியாவும், செஷல்ஸ் நாடும் பொருளாதார வளர்ச்சி ஒத்துழைப்பை விரிவுபடுத்த இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளது’’ என்றார்.

Exit mobile version