Home Blog Page 6035

நாகாலாந்து கொலைச் சம்பவம்: அறிக்கையில் கைதி குறித்து முரண்பட்ட தகவல்

GRAPHIC CONTENTnA crowd of Indian men su திமாபுர்: நாகாலாந்து மாநிலத்தில் நாகா பழங்குடியின மக்களால் சிறைச்சாலையில் இருந்து கைதி இழுத்து வரப்பட்டு, சாலையில் வைத்து தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதி குறித்த அறிக்கையில் தரப்பட்டுள்ள முரண்பட தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகாலாந்தில் உள்ள திமாபுர் சிறையில் பாலியல் பலாத்காரக் குற்றப் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஷெரிப் கான் என்ற நபரை பழங்குடியின மக்கள் அடித்துக் கொன்றனர். இச்சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை கேட்டுக் கொண்டதை அடுத்து, உள்துறை அமைச்சகத்துக்கு நாகாலாந்து மாநில அரசு ஓர் அறிக்கை அனுப்பி வைத்தது. அந்த அறிக்கையில், ஷெரிப் கான் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், புகார் கொடுத்த பெண்ணுடன் அவரது விருப்பத்தின் பேரிலேயே இருமுறை பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், அதற்காக ரூ.5 ஆயிரம் கொடுத்ததாகவும் அந்த நபர் கூறியுள்ளார். அந்தப் பெண் கூடுதலாகப் பணம் கேட்டு, தான் தர மறுத்ததால், பாலியல் பலாத்காரப் புகார் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த முரண்பட்ட தகவல், இந்தச் சம்பவத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச்16ல் ஆதிதிராவிடர்/பழங்குடியினர் நலப் பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், ஆசிரியர் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு, வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக, ஆதிதிராவிடர் நல இயக்குனர் சிவசண்முகராஜா விடுத்துள்ள அறிக்கை:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 33 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்றுக்கு மட்டும், வரும் 16ம் தேதி, பணிநியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது. அன்று காலை 10:00 மணிக்கு, சென்னை, சேப்பாக்கம் எழிலகம் கட்டடத்தில் உள்ள, ஆதிதிராவிடர் நல இயக்குனர் அலுவலகத்தில், கலந்தாய்வு நடைபெறும். இதில் கலந்து கொள்ளும்படி, அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டவர்கள், அன்றைய தினம், உரிய ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும். இவ்வாறு, சிவசண்முகராஜா தெரிவித்து உள்ளார்.

 

ஐ.எஸ்.ஐ. கண்காணிப்பு வளையத்துக்குள் இந்திய தூதரக அதிகாரிகள்: சுஷ்மா ஸ்வராஜ்

புதுதில்லி: பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அந்நாட்டு உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ. அமைப்பின் ரகசிய கண்காணிப்பு வளையத்துக்குள் இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தகவல் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இந்திய தூதரக அதிகாரிகள் அவமதிக்கப்படுவது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் நேற்று எழுப்பப் பட்ட ஒரு கேள்விக்கு சுஷ்மா ஸ்வராஜ் பதில் அளித்தார். அப்போது…. கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான் உட்பட வெளிநாடுகளில் இந்திய தூதரக அதிகாரிகள் அவமதிக்கப்படும் சம்பவங்கள் நடந்துள்ளன. இவை உடனடியாக அந்தந்த நாட்டு அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. பாகிஸ்தானைத் தவிர மற்ற நாடுகளில் மீண்டும் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை. ‘ பாகிஸ்தானில் பணியாற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் அங்குள்ள உளவு அமைப்பால் ரகசியமாகக் கண்காணிக்கப் படுகின்றனர். ரகசியமாக பின்தொடர்வது, அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பது ஆகிய செயல்களில் அந்நாட்டு உளவுத்துறை ஐ.எஸ்.ஐ. ஈடுபட்டுள்ளது. இந்த விவகாரத்தை பாகிஸ்தான் அரசின் பல்வேறு நிலைகளில் கொண்டு செல்லப்பட்டும், கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. அமெரிக்காவில் தூதரக அதிகாரி தேவயானி கோபரகடே அவமதிக்கப்பட்டது தொடர்பாக அந்நாட்டு அரசு வருத்தம் தெரிவித்தது. தேவயானி மீதான வழக்குகளை அமெரிக்கா ரத்து செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்று கூறிய சுஷ்மா ஸ்வரஜ், கடந்த சில ஆண்டுகளில் சால்வேனியா, ருமேனியா, அல்பேனியா, பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் அவமதிக்கப்பட சம்பவங்களை தனது பேச்சில் குறிப்பிட்டார்.

87 வயது மூதாட்டி பலாத்காரம்: 15 வயதுச் சிறுவனுக்கு 30 ஆண்டு சிறை

ஹெமெட் (கலிபோர்னியா, அமெரிக்கா): அமெரிக்காவில் 87 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 15 வயதுச் சிறுவனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ஹெமெட் பகுதியில் ஒரு முதியோர் காப்பகம் உள்ளது. அந்தக் காப்பகத்துக்குள் புகுந்த இரண்டு பள்ளி மாணவர்கள் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த 87 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், 2 பாட்டில் பிளீச்சிங் பவுடரை தண்ணீரில் கலந்து மூதாட்டியின் வாயில் ஊற்றி அவரைக் கொலை செய்யவும் முயற்சி செய்துள்ளனர். அலறியடித்து அந்த மூதாட்டி அறைக்குள் இருந்த அபாய அறிவிப்பு பட்டனை அழுத்தி காவலாளிகளை உதவிக்கு அழைத்தார். இந்த சத்தத்தைக் கேட்டதுமே மாணவர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். அதன்பின், அந்த மூதாட்டியை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அதன்பின்னர் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர், சக்கர நாற்காலியின் துணையுடன் உலவி வருகிறார். மூதாட்டியை இந்த நிலைக்கு ஆளாக்கிய மாணவர்கள் ரூபன் ஜோஸ் மெலன்சன் (15), ரேமன்ட் மைக்கேல் மிரிண்டா(14) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர். 2 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி குற்றவாளிகள் இருவருக்கும் 30 ஆண்டு சிறை தண்டனை வழங்கினார். 18 வயது நிறைவடையும் வரை சிறார்கள் காப்பகத்திலும், 18 வயதுக்குப் பின்னர் கைதிகளுக்கான சிறையிலும் இந்த 30 ஆண்டு தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பின்போது நீதிமன்றத்தில் ஆஜரான அந்த மூதாட்டி, நீங்கள் எனக்கு செய்துள்ள தீங்கு என்ன என்பதை எனது முகத்தை ஒரு முறை பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள். எனது சுதந்திரத்தை பறித்து விட்டீர்கள். நீங்கள் கட்டாயம் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என கண்ணீர் மல்கக் கூறினார்.

தனியார் டிவி அலுவலக குண்டுவீச்சு: உள்துறை அறிக்கை கேட்பு

சென்னை:

சென்னையில் இயங்கி வரும் தனியார் செய்தி தொலைக்காட்சி அலுவலகம் மீதான  குண்டு வீச்சு தாக்குதல்  குறித்து தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.

சென்னையில் உள்ள தனியார் செய்தி தொலைக்காட்சி அலுவலகம் மீது இன்று அடையாளம் தெரியாத நபர்கள் நான்கு பேர் டிபன்பாக்ஸ் குண்டுகளை வீசினர். இந்தச் சப்மவம் குறித்து கண்டனம் தெரிவித்து மாநிலங்களவையில், திமுக எம்.பி. கனிமொழி பேசினார். இதையடுத்து, இந்தத் தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கோரியுள்ளது.

5 ஆண்டுகளில் ரூ.1.5 லட்சம் கோடி ரூபாய் ரயில்வேயில் முதலீடு செய்ய எல்.ஐ.சி. ஒப்பந்தம்

புதுதில்லி: ரயில்வே துறையின் வளர்ச்சிக்காக எல்.ஐ.சி. நிறுவனம் ரூ.1.5 லட்சம் கோடியை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப் பெரிய அரசுத் துறை போக்குவரத்து நிறுவனமான ரயில்வே துறையில், நாட்டின் மிகப் பெரிய அரசு காப்பீட்டுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி. முதலீடு செய்கிறது. ரயில்வே துறையை மேம்படுத்தவும், கட்டுமானப்பணிகளை விரைவுபடுத்துவதற்காகவும் ரூபாய் 1.5 லட்சம் கோடி நிதியை ரயில்வேயில் முதலீடு செய்ய எல்.ஐ.சி முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் தில்லியில் நேற்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு, நிதி அமைச்சர் அருண்ஜேட்லி ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. ஒப்பந்தத்தின்படி, ரயில்வே வளர்ச்சி மற்றும் கட்டுமானப்பணிக்காக எல்.ஐ.சி நிறுவனம் வரும் 5 ஆண்டுகளில் ரூபாய் 1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யும். இதற்கான வட்டியும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சி மீதான தாக்குதல் : ஒருவர் சரண்

சென்னை: சென்னையில் தனியார் செய்தி தொலைக்காட்சி மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக இன்று மதுரையில் ஒருவர் சரண் அடைந்துள்ளார். மதுரையில் வழக்கறிஞர் ஒருவரின் துணையுடன் நீதிமன்றத்தில் சரண் அடைந்த அவர் ஜெயம்பாண்டியன் என்றும், தாம் இந்து இளைஞர் சேனா அமைப்பின் தலைவர் என்றும் தெரிவித்துள்ளார். தமது அமைப்பைச் சேர்ந்த நபர்களே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக தம்மிடம் தொலைபேசியில் தெரிவித்தனர் என்றும் அதனால் தாம் சரண் அடைவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே அவர் தொடர்பாக நீதிமன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்ட பின் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

தனியார் டிவி மீதான தாக்குதல்: மாநிலங்களவையில் கனிமொழி கண்டனம்

புது தில்லி: சென்னையில் தனியார் டிவி ஒன்றின் மீது நிகழ்த்தப் பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து இன்று மாநிலங்களவையில் திமுக எம்.பி., கனிமொழி பிரச்னை எழுப்பிப் பேசினார். முன்னதாக, கம்யூனிஸ்ட் எம்பி., டி.ராஜா இது குறித்துப் பேச எழுந்தார். ஆனால், அவைத்தலைவர் குரியன், இது குறித்துப் பேச ஏற்கெனவே கனிமொழி அனுமதி கோரியிருப்பதாகக் கூறினார். பின்னர் இது குறித்து மாநிலங்களவையில் பேசிய கனிமொழி, ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்தும் விதத்தில் புதிய தலைமுறை அலுவலகம் மீது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது என்று குறிப்பிட்டார். மேலும், எழுத்தாளார் பெருமாள்முருகன் மீதான தாக்குதல் குறித்தும் பேசினார். அப்போது, அதிமுக எம்பிக்கள் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குறுக்கிட்டு தொடர்ந்து பேசிய கனிமொழி, தமிழக அரசுக்கு எதிராகப் பேசவில்லை, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்றே இதனைக் குறிப்பிடுகிறேன் என்று தெரிவித்தார். சென்னையில் உள்ள தனியார் செய்தித் தொலைக்காட்சி அலுவலக வாசலில் இன்று குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இன்று அதிகாலை அலுவலக வாசலில் 2 பைக்கில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் 2 டிபன்பாக்ஸ் குண்டுகளை வீசிச் சென்றனர். இந்த குண்டுகள் வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து தொழிலாளர்களுடன் மீண்டும் நாளை பேச்சுவார்த்தை

  சென்னை: போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் மீண்டும் நாளை வியாழக்கிழமை இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை தொடங்குகிறது. போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதையடுத்து பேச்சு வார்த்தை நடத்த அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அரசு குழுவினருடன் குரோம்பேட்டையில் கடந்த 2–ந்தேதி முதல் கட்ட பேச்சு வார்த்ததை நடந்தது. அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 2–ம் கட்ட பேச்சு வார்த்தை நாளை வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் அரசு குழுவினருடன் தொழிற்சங்க பிரதிநிதிகள் முக்கிய கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்துகின்றனர். அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் பங்கேற்க இருக்கிறார்கள். பேச்சு வார்த்தையின் போது அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

சிதம்பரம் பல்கலை., மாணவன் பலி: பஸ் ஓட்டுநர் கைது

சிதம்பரம்: சிதம்பரம் பல்கலைக்கழக மாணவன் தனியார் பஸ்ஸில் அடிபட்டு பலியான சம்பவத்தில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். சிதம்பரம் அருகே லால்புரத்தைச் சேர்ந்த அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வியியல் மாணவர் குணசேகரன் (வயது 19) மோட்டார் சைக்கிளில் உடற்பயிற்சி வகுப்புக்கு நேற்று காலை சென்றார். சிதம்பரம் கீழவீதியில் வந்தபோது, முன்னால் சென்ற தனியார் பஸ்சை முந்திச் செல்ல முயன்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி, குணசேகரன் உயிரிழந்தார். இது தொடர்பாக சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் லாமேக் வழக்குப்பதிவு செய்து, தனியார் பஸ் டிரைவர் ஆழம்பாடியை சேர்ந்த பாலு மகன் பிரபாகரனை (37) கைது செய்து, சிறையில் அடைத்தார்.

Exit mobile version