― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்சங்கர ஜெயந்தி : அவதாரமும், அனுக்கிரஹமும்....!

சங்கர ஜெயந்தி : அவதாரமும், அனுக்கிரஹமும்….!

- Advertisement -

ஆதிசங்கரர் ஒரு மஹான். அவரைப் போன்ற ஒரு மஹான், இதுவரை பாரதத்தில் சம்பவிக்கவில்லை என்று எவரைக் கேட்டாலும் பரம திருப்தியுடன் சொல்வார்கள். அப்பேர்ப்பட்ட மஹாவ்யக்தி நம்முடைய குரு பரம்பரைக்கு நாயகமணியாக இருந்தவர். ஆதலால் நாம் மிகவும் புண்ணியசாலிகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

கி.மு நான்காம் நூற்றாண்டு என்பதும் கி.பி ஏழாம் நூற்றாண்டு என்பதும் இவர் வாழ்ந்துவந்த காலத்தினை பற்றி இரு வாதங்கள் நிலவுகின்றன.

பொதுவாக ஆத்மாவைப் பற்றிக் கூறியது. அது பிரம்மம் என்றும் அடிப்படையான எதார்த்தமென்றும், ஒரே சாராம்சமென்றும் அழைக்கப்பட்டது. இயற்கைப் பொருட்களின் உலகம் இந்த ஆன்மாவினால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று கூறுகிறது. இவரது தத்துவம் அத்வைதம் என்று அழைக்கப்படுகிறது.

பிரம்மத்தின் கனவாக, நினைவுத்தடமாக இந்த உலகம் உள்ளது. இயற்கை நிகழ்வுகளின் உலகம் ஒரு பிரம்மை தான். நிலையான மனிதனிடமிருந்து மறைக்கக்கூடிய அலைகள், குமிழிகள், நுரையாக உலகம் விளங்குகிறது.

நிரந்தர ஆன்மாவிற்கு மனித உடல் ஒரு புறவடிவமாகும். ஆன்மா என்பது பிரம்மத்தின் அவதாரம் அல்லது துளியாக இருக்கிறது. நிரந்தரமான பிரம்மம் முன்னால் இருக்கிறது. பின்னால் இருக்கிறது, வலப்புறத்திலும், இடப்புறத்திலும் மேலும் கீழும் பரவியிருக்கிறது. இவை அனைத்திலும் பிரம்மம் ஒன்றுதான். அதுவே சிறந்தது. பிரம்மத்தை தவிர வேறெந்த பொருளும் கிடையாது.

உலகின் தோற்றங்களனைத்தும் பிரம்மம் தான். வேறு எதுவுமில்லை. தெய்வீக ஆத்மாவான பிரம்மத்திடமிருந்து தான் எல்லா உயிர்களும் தோன்றியுள்ளன. ஆகவே அவை அனைத்தும் பிரம்மம் தான். இதை புரிந்து கொள்ள வேண்டும்.

சாதாரண மக்களின் உடனடி பிரச்னைகளுக்கு தத்துவம் வழிகாட்டாது. அது தொலைவில் உள்ளது. தத்துவவாதி வாழ்க்கைக்கு வெளியில் நின்று அதை காண வேண்டும் என்று எழுதினார். ஒரே உண்மையான எதார்த்தம் என்பது பிரம்மம் ஆகும். நிகழ்ச்சிகள் நிரம்பிய தற்காலிக உலகம் உண்மையான அறிவாகாது. பிரம்மத்தை புரிதல் மட்டுமே உண்மையான அறிவாகும் என்பது சங்கரரின் அத்வைதம்.

தமது எட்டாம் அகவையில் துறவறம் மேற்கொண்ட சங்கரர் கோவிந்த பகவத்பாதர் என்பவரிடம் அத்வைதம் முதலிய விஷயங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

தமது அத்வைதக் கொள்கைகளை பறைசாற்றி வரும்போது ஒரு நாள் சங்கரர் ஆற்றில் நீராடி விட்டு வருகிற போது ஐந்து நாய்களுடன் சண்டாளர் ஒருவர் அவர் முன்னே வருகின்றார்.

அதைக் கண்டு பதைத்த சங்கரரின் சீடர்களும் சங்கரருக்கு வழி விட்டு ஒதுங்குமாறு அவரைக் கேட்கின்றனர். அப்போது அச்சண்டாளர் சங்கரரிடம் “என் உடல் நகர வேண்டுமா அல்லது ஆத்மா நகர வேண்டுமா” எனக் கேட்க, சங்கரர் அவன் காலில் விழுந்து பணிகிறார் என சங்கர விஜயம் கூறுகின்றது.

உண்மையுணர்ந்தவராய், அத்வைதத்தின் பரிபூர்ண உண்மையை தமக்கே உணர்த்தி அருளியதாக கூறி அச்சண்டாளரை தமது குருவாக ஏற்று சங்கரர் மனீஷா பஞ்சகம் பாடினார். இதுவே சங்கரருக்கு ஆத்ம ஞானம் பரிபூர்ணமாக கிடைத்த நிகழ்வு ஆகும்.

இவ்வுண்மையை சங்கரருக்கு உணர்த்த சண்டாள உருவில் சிவனே வந்ததாக சங்கர விஜயம் முதலிய நூல்கள் கூறுகின்றன.அவர் கருத்துப்படி, குமுகத்திற்கு (சமூகத்திற்கு) ஒவ்வாத ஆதாரமற்ற, தேவையற்ற சமயப் பழக்க வழக்கங்களாக கருதியவைகளைச் சாடவும் செய்தார்.

கபாலிக சமயம், அவர் தடுத்தாட்கொண்ட சமயங்களுள் ஒன்று. இன்றைய சென்னைக்கு அருகில் இருக்கும் மாங்காடு எனும் ஊரே காபாலிகர்களோடு சங்கரர் வாதம் செய்த இடமாகும்.

கர்ம மீமாம்ஸா எனப் படும் கொள்கையினை பின்பற்றி மஹிஷ்மதி எனும் ஊரில் வசித்து வந்த மண்டன மிஸ்ரர் உடன் அவரது மனைவி சரஸவாணி முன்னிலையில் வாதம் செய்தார் சங்கரர். மந்தன மிஸ்ரரைத் தொடர்ந்து அவரது மனைவி சரஸவாணியுடனும் வாதிடுகின்றார் சங்கரர். சங்கரருடன் வாதத்தில் தோல்வி அடைந்த மந்தன மிஸ்ரர், துறவறம் ஏற்று சுரேஷ்வரர் என்ற பெயருடன், சங்கரரின் சீடரானார்.

ஆதி சங்கரர் பாரத நாட்டின் நான்கு திசைகளில் நான்கு பீடங்களை நிறுவி, அதற்கு தனது தலைமைச் சீடர்களை பீடாதிபதிகளாக நியமித்தார்.

முதல் பீடாதிபதி திசை பீடம் மகாவாக்கியம் வேதம் பத்மபாதர் கிழக்கு கோவர்தன மடம் பிரக்ஞானம் பிரம்மம் ரிக் வேதம் சுரேஷ்வரர் தெற்கு சிருங்கேரி சாரதா மடம் அஹம் பிரம்மாஸ்மி யசுர் வேதம் அஸ்தாமலகர் மேற்கு துவாரகை காளிகா மடம் தத்துவமசி சாம வேதம் தோடகர் வடக்கு ஜோஷி மடம் அயமாத்மா பிரம்மம் அதர்வண வேதம்

ஒரு சமயம் கைலாசத்தில் ‘‘சம்போ மகாதேவா’’ என்ற கோஷம் விண்னைப்பிளந்துக் கொண்டிருந்தது. கைலாச பர்வதத்தின் உச்சியில் ரத்தினம் இழைக்கப்பட்ட சிம்மாசனத்தில் பார்வதியும் பரமேஸ்வரனும் அமர்ந்துகொண்டு அருளாட்சி செய்து கொண்டிருந்தனர்.

தேவர்கள், முனிவர்கள், யட்சர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், சித்தர்கள் என்று அனைவரும் அங்கு அம்மையப்பனின் அற்புதத் திருக்கோலத்தைக்கண்டு இன்புற்றிருந்தனர்.

sankarar 1 2

அப்போது ஒரு இளம் சன்யாசி அங்கு வந்து சேர்ந்தார். கண்களில் நீர்மல்க இரு கைகளையும் குவித்து ஈசனுக்கும், உமை அம்மைக்கும் வந்தனம் செய்தார். அவரது நெற்றியில் திருநீறு ஜொலித்தது. அந்த மகான் ஞான ஜோதியைப்போல காட்சி தந்தார்.

அவரைப் பார்த்ததும் பரமன் ‘‘வா சங்கரா. உடல் நலம் தானே. வேதத்தின் உண்மைப் பொருளான அத்வைதம் உம்மால் பூமியில் நன்கு வளர்க்கப்படுகிறதா?’’ என்று வினவினார்.‘‘பூமியில் உள்ள மக்களுக்கு எந்த குறையும் இல்லை அல்லவா?’’ என்று தாயன்போடு வினவினாள் உமா தேவியார்.‘‘பூமியில் வேத மார்க்கமான அத்வைதம் இருக்கும் வரை எந்த குறையும் தங்கள் அருளாலும், ஈசன் அருளாலும் வராது தேவி’’ என்று கூறி ஆதி சங்கரர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து அம்மையப்பனை நமஸ்கரித்தார். அவருக்கு ஆசி கூறி மாகாதேவன், ஒரு தங்கத் தட்டை தந்தார். அதில் ஐந்து ஸ்படிக லிங்கங்களும் ஒரு ஓலைச்சுவடியும் இருந்தது.

sankarar 7

அதைப் பார்த்ததும் ஒன்றும் விளங்காமல் ஆதி சங்கரர் விழித்தார். அதைக் கண்ட பரமேஸ்வரன் விளக்கம் தர ஆரம்பித்தார். ‘‘சங்கரா! வேதத்தின் பொருளான எம்மை அடைய உள்ள பல வழிகளில் ஒன்று ஞான மார்க்கமும், யோக மார்க்கமும். இவை இரண்டும் நீ எழுதிய பாஷ்யங்களிலும் மற்றும் பல நூல்களிலும் விளக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த ஞானமும், யோகமும் அனைவருக்கும் எளிதில் கைவரப் பெறுவதில்லை. முக்கியமாக பாமரர்களுக்கு இவை இரண்டும் எட்டாக் கனியாகவே உள்ளது.

பாமரர்களும் பரமனாகிய என்னை எளிதில் அடைய வேண்டும் என்பதே என் விருப்பம். அது பக்தி மார்க்கத்தால் மட்டுமே சாத்தியம். ஆகவே நீ இந்த பக்தி மார்க்கத்தை பூமியில் வளரச்செய்ய வேண்டும். அதற்கு புதிதாக பாஷ்யங்களோ, கிரந்தங்களோ நீ படைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த லிங்கங்களை நீ நிறுவிய மடங்களில் பிரதிஷ்டை செய். இதற்கு பூஜைகளை நித்தமும் அந்த மடாதிபதிகளே செய்ய வேண்டும் என்று ஆணையிடு.

சங்கரரின் சீடர்களால் முப்போதும் பூஜிக்கப்படும் இந்த லிங்கத்தை காணும் அடியவர்கள், பக்தி மார்க்கத்தின் மகத்துவத்தை உணர்வார்கள். ஆம், ஞான மார்க்கத்தைப் போற்றும் ஆதி சங்கரரே பக்தி மார்க்கத்தை நிலை நாட்ட, அவர் நிறுவிய மடங்களில் நித்தமும் சிவ பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்று மக்கள் உணர்வார்கள். அதனால் பக்தி மார்க்கம் பூமியில் தழைத்தோங்கும்.’’ என்று பூமியில் பக்தி மார்க்கத்தை நிலை நிறுத்தும் பொறுப்பை சங்கரரிடம் ஈசன் ஒப்படைத்தான்.

sankarar 6

சங்கரர் அந்த லிங்கங்களை பயபக்தியோடு வாங்கிக்கொண்டார். அப்போது அந்த தட்டில் இருந்த ஓலைச்சுவடி அவர் கண்ணில் பட்டது. உடன் ஈசனிடம் தன் சந்தேகங்களைக் கேட்கத் தீர்மானித்தார். ‘‘பரம்பொருளே! வேத நாயகா! ஸ்படிக லிங்கங்களை தந்த காரணத்தை சொல்லிவிட்டீர்கள். ஆனால் இந்த ஓலைச்சுவடியைப் பற்றி சொல்லவில்லையே’’ என்று ஆதி சங்கரர் வினவினார். அதை கேட்டு பரமன் புன்முறுவல் பூத்தார்.

‘‘சங்கரா இவை ஆனந்தலஹரி என்னும் அற்புதமான படைப்பு. உலகிற்கே தாயான இந்த உமையை பூஜிக்கும் விதிமுறைகளை அழகாக உரைக்கும் அற்புதமான நூல் இது. இதுவும் லோகத்தில் பரவ வேண்டும். அதன் மூலம் மக்கள் சக்தி வழிபாட்டின் மகத்துவத்தை உணர வேண்டும். அதற்காகவே இந்த அற்புதமான நூலை உனக்கு தந்துள்ளேன்.’’ என்று திருவாய் மலர்ந்து அருளினார் மகேசன்.

இதைக்கேட்டு சங்கரர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. உடன் ஈசன் சொன்ன வேலைகளை முடிக்க சித்தம் கொண்டார் ஆதி சங்கரர். அந்த லிங்கங்களையும் ஆனந்த லஹரியையும் எடுத்துக்கொண்டு கைலாசத்தை விட்டு,வெளியில் வந்தார்.

sankarar 5

அப்போது, கைலாசத்தின் வாயிலில் காத்துக்கொண்டிருந்த நந்திதேவரின் கண்களில் ஆதி சங்கரர் கைகளில் இருந்த ஓலைச்சுவடி பட்டது. அதைக் கண்டவுடன் நந்தி தேவருக்கு என்ன தோன்றியதோ தெரியாது. வலுக்கட்டாயமாக சங்கரரின் கைகளில் இருந்து அந்த ஓலைச்சுவடியை பிடுங்கினார்.

அவர் பிடுங்கிய வேகத்தில் ஓலைச்சுவடியின் பாதிக்கும் மேற்பட்ட பாகம் சுக்கு நூறாகப்போனது. அதை கண்ட சங்கரர் மனம் பதைபதைத்தது. ஓடினார் ஈசனிடம். நிகழ்ந்ததைச் சொன்னார். அதைக்கேட்ட ஈசன் சங்கரரை கனிவாக நோக்கினார். ‘‘சங்கரா ஆனந்தலஹரியின் ஐம்பத்தியோரு ஸ்லோகங்கள் நந்தியால் பாழாக்கப் பட்டது வருத்தத்தைத் தான் தருகிறது. இழந்ததை மீண்டும் பெறவும் முடியாது. ஆகவே ஆனந்த லஹரியின் பிற்பகுதியை நீயே பாடி நிறைவு செய். அதுவே சாலச்சிறந்தது’’ என்று பரமேஸ்வரன் சங்கரருக்கு ஆணையிட்டார். ‘

‘பரமேஸ்வரா! எதைப் பாடி ஆனந்தலஹரியை இந்த ஏழை பூர்த்தி செய்வேன் ஒன்றும் விளங்கவில்லையே’’ என்று சங்கரர் மனமுடைந்து கலங்கினார்.

sankarar 4 1

‘‘சங்கரா! தட்சிணாமூர்த்தியான என்னுடைய அவதாரமே நீ. ஆகவே நீ வேறில்லை நான் வேறில்லை. ஆகவே இதோ இந்த உமையம்மையின் அழகை வர்ணித்து 51 ஸ்லோகங்களைப்பாடு. அது உலகத்தில் உருவ வழிபாட்டின் மகத்துவத்தை ஸ்தாபிக்கும். இதன் மூலம் சங்கரன் அருருவவாதி இல்லை என்பதை இந்த வையகம் உணரும்.

பரம்பொருளை கல்யாண குணங்களோடு கூடிய சுகுணப் பிரம்மமாக தியானிப்பதே என்றும் மாற்றமில்லாமல் தனித்து நிற்கும் பரம்பொருளை அடைய வழி என்பதை இந்த வையகம் புரிந்து கொள்ளும். ஆகவே கவலை வேண்டாம்.

அம்பிகையின் அருள் வடிவை அழகாகப் பாடு. ஆசிகள்’’ என்று ஆள்காட்டி விரலால் அருகில் இருந்த அம்பிகையை காட்டியபடியே சங்கரருக்கு ஆறுதல் கூறினார் பரமன்.சங்கரரும் அம்பிகையின் அழகுருவைப் பாடத் தொடங்கினார். கவிதையை மழையாகப் பொழிந்தார்.

அம்பிகையின் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரையில் அனைத்து பாகங்களையும் ஒன்று விடாமல் வர்ணிக்கத் தொடங்கினார். நொடிகள் நிமிடங்களாகி உருண்டோடியது. அம்பிகையின் முலைப்பாலை வர்ணிக்கும் கட்டத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு அவர் சிறு வயதில் நடந்த ஒரு சம்பவம் நினைவிற்கு வந்தது……

sankarar 3 2

கேரளத்தில் உள்ள காலடி என்னும் அற்புதமான கிராமம். அந்த கிராமம் செய்த புண்ணியத்தின் பலனாக அங்கு ஆர்யாம்பாள் சிவகுரு தம்பதிகள் வசித்து வந்தனர். அவர்களுக்கு ஈசன் அருளால் சங்கரன் என்ற ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தை வளர்பிறைபோல வளர்ந்து வந்தது. அப்போது ஒரு நாள் ஆரியாம்பாள் வீட்டிலிருந்து விலக்காக இருந்த சமயம். அப்போதெல்லாம் விலக்காக இருக்கும் பெண்கள் கொல்லைப் புறத்தில் தனியாக தங்குவது வழக்கம்.

ஆர்யாம்பாளும் அவ்வாறு கொல்லைப்புறத்தில் அமர்ந்திருந்தாள். சிவகுரு காலடி சிவன் கோயிலுக்கு தரிசனம் செய்யச் சென்று விட்டார். வீட்டில் குழந்தை சங்கரன் தனியாக இருந்தான். திடீரென்று அவனுக்கு பசியெடுத்தது. பசியின் காரணமாக குழந்தை சங்கரன் ‘‘அம்மா…..’’ என்று அழத்தொடங்கினான். அந்தக் குழந்தையின் அழுகுரல் கொல்லையில் இருந்த ஆர்யாம்பாளின் செவிகளை எட்டியது. உடன் அவளது மனம் பதறத்தொடங்கியது. விலக்காக இருந்ததால் ஆரியாம்பாள் வீட்டிற்குள் வர இயலாது. அவளுக்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை. கொல்லையிலிருந்தே குரல் கொடுத்தாள்.

‘‘சங்கரா! குழந்தை! அப்பா கோயிலுக்கு போவதற்கு முன்பு உனக்கு பாலன்னம் செய்து வைத்ததாக என்னிடம் சொன்னார். அது சமையல் அறையில் தான் எங்காவது இருக்கும். அதை சென்று எடுத்துக்கொள். ஆனால் ஒன்றை மட்டும் மறவாதே. உண்பதற்கு முன் சுவாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு தான் உண்ண வேண்டும். ஆகவே சமையல் அறையில் இருக்கும் பாலன்னத்தை எடுத்துக் கொண்டு பூஜை அறைக்கு செல்.

saradha 3

உலகிற்கே உணவளிக்கும் அன்னபூரணி அம்பிகைக்கு அதை நிவேதனம் செய். பின்பு தாராளமாக அதை நீ உண்ணலாம். சரி தானே சங்கரா” என்று வீட்டிற்குள் இருந்த சங்கரனுக்கு கொல்லையில் இருந்த தாய் உபதேசம் செய்தார். அதைக்கேட்ட சங்கரன் ‘‘சரி அம்மா’’ என்று மழலைக் கொஞ்சும் குரலில் பதிலளித்தான். பின்பு தாயின் சொல்படி நடக்க ஆரம்பித்தான். பாலன்னத்தை எடுத்துக் கொண்டு பூஜை அறைக்கு விரைந்தான். பாலன்னம் அடங்கிய கிண்ணத்தை அம்பிகையின் திருமுன்பு வைத்தான். கை இரண்டையும் குவித்துக் கொண்டான் ‘‘அம்மா அன்னபூரணி எல்லாரையும் காப்பாத்து’’ என்று கண்களை மூடி பிரார்த்தனை செய்து கொண்டான். பின்பு கண்களைத் திறந்து பார்த்த போது கிண்ணத்தில் அன்னத்தைக் காணவில்லை. குழந்தை சங்கரனின் பக்தியை மெச்சி தேவி அதை அருந்தி விட்டாள்.

sankarar 10

அம்பிகையின் அருளின் திறன் புரியாத பால சங்கரன், உணவு காணாமல் போன வருத்தத்தில் அழத்தொடங்கினான். குழந்தையின் அழுகுரல் கேட்டு கொல்லையில் இருந்த தாய் ஆர்யம்பாளின் மனம் பதைப்பதைத்தது. ‘‘சங்கரா என்ன ஆச்சு? ’’ என்று கொல்லையிலிருந்தபடியே குரல் கொடுத்தாள்.

‘‘அம்மா…. பால்… சா… தம்… காணாமல்….’’ என்று அழுதபடியே மழலை மொழியில் தன்னுடைய அன்னைக்கு பதில் சொல்ல ஆரம்பித்தான் பால சங்கரன். அப்போது எதேச்சையாக சுவாமியிடம் வைத்த கிண்ணத்தை மறுபடியும். பார்த்தான். அதில் பாலன்னம் நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தது

அதைக் கண்டவுடன் குழந்தையின் அழுகை அடங்கியது. சந்தோஷமாக அதை அருந்தினான். ‘‘அம்மா பால் சாதம் சாப்பிட்டு விட்டேன்’’ என்று கொல்லையில் இருந்த தனது தாயை நோக்கி குரல் கொடுத்தான் பால சங்கரன். ஆர்யாம்பாளும் அதை கேட்டு இன்புற்றாள்.

saradha 1

ஆதி சங்கரர் பின்னாளில் செய்யப்போகும் காரியங்கள் ஏராளம். அதை செய்ய அவருக்கு சிறந்த ஞானம் தேவை என்பதை தேவி அறியாமலில்லை. அதற்கு அவருக்கு உதவும் விதமாக அவளது

முலையில் இருந்து வந்த ஞானப்பாலை குழந்தை சங்கரனுக்கு கொடுத்தாள். அதை பருகியவுடன் அனைத்து ஞானங்களும் பள்ளத்தைக் கண்ட நீரைப் போல் அவரிடம் வந்து குடிகொண்டது. அது மட்டுமில்லை. ஆதி சங்கரர் அந்த பரமேஸ்வரனுடைய அவதாரம். எனில் அவருக்கு அன்னமிடும் பொறுப்பு அவரது பத்தினியான பார்வதி தேவியையே சேரும்.

அன்னமின்றி தவித்த தனது கணவனுக்கு ஞானப்பால் தந்து ஞானம் புகட்டி, தனது பதி விரதத்தை நிலைநாட்டி விட்டாள் அம்பிகை. இந்த சம்பவம் பசுமரத்தாணி போல் சங்கரரின் மனதில் பதிந்தது. இப்போது தேவின் முலைப் பாலின் தன்மையை வர்ணிக்கும் போது இந்த சம்பவம் பசுமையாக அவரது நினைவிற்கு வந்தது. இந்த சம்பவத்தை தான் எழுதும் கவிதையில் குறித்து வைத்துவிட நினைத்தார் சங்கரர். அப்போது அவர் எழுதிய ஸ்லோகம் தான் இது.

“தவ ஸ்தன்யம் மன்யே தரணிதரகன்யே ஹ்ருதயத:
பயஃ பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதமிவ |
தயாவத்யா தத்தம் த்ரவிடஶிஶு-ராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரௌடானா மஜனி கமனீயஃ கவயிதா || 75 ||”

இமவானின் மகளே! உனது இதயத்தில் இருக்கும் ஞானம் உன் நகில்களின் வழியாக ஞானப் பாலாக வழிகிறது. அந்த அமிர்தத்தை பருகி திராவிடக் குழந்தை ஒன்று, கவிஞர்கள் வியக்கும் வண்ணம் கவி பாடியது அல்லவா?” என்பதே மேல் சொன்ன ஸ்லோகத்தின் திரண்ட பொருள்.

சௌந்தர்யலஹரிக்கு இப்போது நமக்கு கிடைக்கும் பாஷ்யங்களில் மிகவும் சிறந்த பாஷ்யம் லட்சுமிதரர் எழுதியதே. அன்னவர் இந்த ஸ்லோகத்தை விளக்கும் போது “திரவிட ஜாதி சமுத்பவ: பால: ஏதத் ஸ்தோத்திர கர்த்தா” என்று கூறுகிறார். அதாவது திரவிட சிசு என்று இந்த பாட்டில் சங்கரர் குறிப்பது வேறு யாரையும் இல்லை, இந்த கவிதையை இயற்றிய தம்மையே என்று சொல்கிறார். ஆகவே ஆன்மிக உலகத்திற்கு மேலும் ஒரு மகா ஞானியை தந்த பெருமை திராவிட நாட்டிற்கும், தமிழ் மொழிக்கும் சேரும். ஈசன் சன்யாசியாக பூமியில் அவதரித்த போது சக்தி, தனது ஞானப் பாலின் வடிவமாக அவனால் பருகப்பட்டு அவனோடு இரண்டறக் கலந்து விட்டாள். அதன் பிறகு ஆதி சங்கரர் சிவ சக்தி ஐக்கிய சொரூபமாகவே சனாதன மதத்தை ஸ்தாபித்தார்

sankara 8 1

சாக்ஷாத் ஸ்ரீ பரமேச்வரரின் அவதாரமான ஸ்ரீ சங்கர பகவத்பாதர் ஸநாதன தர்மத்தை உய்விக்கும் பொருட்டு மூன்று காரியங்களைச் செய்தார். முதலாவது ‘பிரஸ்தானத்ரயம்’ எனப்படும் பிரம்மசூத்திரங்கள், உபநிஷத்துகள், பகவத் கீதை ஆகிய இம்மூன்று கிரந்தங்களுக்கும் பாஷ்யம் (விரிவுரை) எழுதியது.

இரண்டாவது, பாரத தேசம் முழுவதும் யாத்திரை செய்து தவறான வெவ்வேறு கருத்துகளைப் பின்பற்றி வந்த பண்டிதர்களை வாதங்களில் வென்று நல்வழிப்படுத்தியது. மூன்றாவதும், மிக முக்கியமானதுமான காரியம் ஸநாதன தர்மம் நிலைத்து நிற்க வேண்டி நான்கு திசைகளிலும் நான்கு ஆம்னாய பீடங்களை ஸ்தாபித்தது.

ஸ்ரீ பகவத்பாதரின் அறிவாற்றலுக்கும் அமானுஷ்யமான தீர்க்க தரிசனத்திற்கும் இந்த சதுராம்னாய பீடங்களை நிறுவியதே சான்று. ஆதிசங்கரர் ஒருவர்தான் இதுவரை உலகில் அவதரித்த ஞானிகளுள் இம்மாதிரி அதிசயிக்கத்தக்க ஆற்றலும் தீர்க்கதரிசனமும் படைத்தவர் .

தென்திசையின் பீடமான சிருங்கேரிக்கும் வடதிசைப் பீடமான பத்ரிக்கும் மலைகள் சூழ்ந்த இடங்களையும், மேற்குத்திசைப் பீடமான துவாரகைக்கும், கிழக்குத் திசைப் பீடமான பூரிக்கும் கடல்களின் அருகிலும் இடங்களைத் தேர்ந்தெடுத்தார் பகவத்பாதர். பெரிய நகரங்களிலேயோ, நகரங்களுக்கு அண்மையிலேயோ, இப்பீடங்களை அவர் ஸ்தாபித்திருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. அந்தந்த இடங்களுக்குச் சென்ற மாத்திரத்திலேயே ஜனங்கள் தங்கள் கவலைகளை மறந்து, அமைதியை எளிதாக அடைவதற்கேற்ப இந்த நான்கு இடங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

sankara 8 3

தக்ஷிணாம்னாய பீடத்திற்கு அமைதியும், அற்புத இயற்கை எழிலும் கொண்ட சிருங்கேரியையே தேர்ந்தெடுத்தார் ஸ்ரீ சங்கரர். வேதங்கள் நான்கு, திசைகள் நான்கு, பிரம்மாவின் முகங்கள் நான்கு என்பது யாவரும் அறிந்ததே. அதற்கேற்பத்தான் நான்கு ஆம்னாய பீடங்களை நிறுவினார் ஸ்ரீபகவத்பாதர்.

அதுமட்டுமன்றி, ஒவ்வொரு பீடத்துக்கும் தேவதை, க்ஷேத்ரம், தீர்த்தம், ஆசார்ய புருஷர் ஆகியவற்றையும் நிர்ணயம் செய்து வைத்தார். மற்றும், தன்வழி வரப்போகும் அந்தப் பீடங்களின் ஆசார்யர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகளையும் வரையறுத்து அவர் தம் மடாம்னாய சாஸனத்தில் குறிப்பிட்டிருப்பது:-
“சுசி: ஜிதேந்த்ரிய: வேதவேதாங்காதிவிசக்ஷண:”
அதாவது அப்பழுக்கற்ற குணமுடையவராகவும், இந்திரியங்களை ஜெயித்தவராகவும், வேதங்களிலும் அதன் அங்கங்களிலும், சாஸ்திரங்களிலும், பாரங்கதராகவும் இருக்க வேண்டும் என்பதே. சீரிய வித்வத்தும் ஜனங்களை ஆகர்ஷிக்கும் ஆற்றலும் இருந்தால்தான் பீடத்தை நிர்வகிக்க முடியும். தன் இந்திரியங்களையே கட்டுப்படுத்த முடியாதவரால் எப்படி மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய முடியும்? “விவேக சூடாமணி”யில் இந்திரியங்களின் வழிச்செல்லும் ஜீவராசிகள் அழியவே செய்யும் என்று தெளிவாகக் கூறுகிறார் ஸ்ரீ பகவத்பாதர்.

sankarar 9

அவ்வாறிருக்க பஞ்சேந்திரியங்களுக்கு ஆட்பட்டு வாழும் மனிதனால் மட்டும் எவ்வாறு கடைத்தேற முடியும்? உண்மையான குரு அறிவாளியாகவும் ஞானியாகவும் மட்டுமல்லாது தன்னை நாடிவரும் சிஷ்யர்களின் நலன்களில் அக்கறை கொள்பவராகவும் இருக்க வேண்டுமென்று வரையறுத்திருக்கிறார் ஸ்ரீ பகவத்பாதர்.

ஒரு பெரிய மரத்தைப் பார்க்கிறோம். அந்த மரத்தில் கிளைகள் இருக்கின்றன; இலைகள் இருக்கின்றன; காய்கள் இருக்கின்றன; பூக்கள் இருக்கின்றன; பழங்கள் இருக்கின்றன; ஆனால் இவையெல்லாம் (இருப்பது) அந்த மரத்தினுடைய வேர் இருப்பதனால்! அந்த வேர் என்பது இல்லையென்றால் பழம் எங்கே? ஆக, இந்தக் கிளை, இலை, பூ, பழம் ஆகியவற்றை மட்டும் பாராட்டி வேரை மறந்தோமானால் அது பெரிய தவறு ஆகிவிடும். ஆகையால் எல்லாவற்றிற்கும் காரணமான அந்த வேரை முதலில் நினைவு செய்து கொள்ள வேண்டும்.

அது எதுவரை சரியாக இருக்குமோ, அதுவரை இதெல்லாம் (சரியாக இருக்கும்). அதுபோல் பகவத்பாத சங்கரர் ஒருவரின் அவதாரத்தினால் இது இவ்வளவும் ஆகியிருக்கிறது. அதனால் சங்கரர் நமக்கு முதல் பூஜ்யர். அப்படிப்பட்ட ஆதிசங்கரர் “பாரத தேசத்தில் என்றென்றைக்கும் தர்மம் பிரசாரத்தில் இருக்க வேண்டும்” என்கிற ஒரு பெரிய திருஷ்டியில் சதுராம்னாய மடங்களை ஸ்தாபனம் செய்தார். பாரதத்தின் நான்கு திசைகளில் நான்கு ஆம்னாய மடங்களை ஸ்தாபித்தார்.

அந்த ஆம்னாய மடங்களுக்கு ஒரு மஹானுசாஸனத்தை பகவத் பாத சங்கரர் செய்தார். இந்தந்த மாதிரி இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். எங்கு போனாலும் ஜனங்களுக்கு ஆதிசங்கரரின் பெயரைக் கேட்டாலே அமிதமான பக்தியும், சிரத்தையும் பொங்கி வந்து கொண்டிருக்கிறது.

இதை நாம் ஸ்ரீநகரிலிருந்து கன்னியாகுமரி வரையிலும் பார்த்திருக்கிறோம். ஸனாதனி என்று சொன்னால், ஹிந்து என்று சொன்னால் அவனுக்கு சங்கரரைப் பற்றி ரொம்பவும் பக்தியும், ஒரு கௌரவமும் தன்னை அறியாமலேயே வந்து விடும்.

ஆதிசங்கரர் சிறுவயதில் குருகுலத்தில் சேர்க்கப்பட்டார். குருகுல வழக்கப்படி யாசகம் பெற்று உணவருந்த வேண்டும். அதன்படி ஒரு குடிசை வீட்டின் முன்பாக நின்று யாசகம் கேட்டார். தானம் செய்ய அந்த வீட்டில் பொருள் எதுவும் கிடையாது.

kalady

அந்த வீட்டில் வசித்த பெண்ணே வறுமையில்தான் வாழ்ந்து வந்தார். இருப்பினும் வீட்டில் காய்ந்து போய் கிடந்த ஒரு நெல்லிக் கனியை எடுத்துக் கொண்டு வந்து, ஆதிசங்கரரிடம் தானமாக கொடுத்தார். தன்னிடம் வேறு எதுவும் இல்லை. தயவு கூர்ந்து இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அந்தப் பெண் தெரிவித்தார்.

அவரது நிலையைக் கண்டு வேதனையடைந்த ஆதிசங்கரர், மகாலட்சுமியை நினைத்து மன முருகப் பாடினார். அதுதான் ‘கனக தாரா ஸ்தோத்திரம்’ என்ற பாடலாகும். அவர் பாடல் பாடி முடித்ததும், அந்த வீட்டுக்குள் தங்க நெல்லிக் கனிகள் மழையாகப் பொழிந்தன. இந்த நிகழ்வு நடந்ததும் ஒரு அட்சய திருதியை நாளில் என்பது குறிப்பிடத்தக்கது

சங்கரர் பாரதம் முழுவதும் பயணித்து தெற்கில் சாரதா பீடம், சிருங்கேரி, மேற்கில் துவாரகா பீடம், துவாரகை, வடக்கில் ஜோஷி மடம் மற்றும் கிழக்கில் கோவர்தன பீடம், புரி என நான்கு அத்வைத பீடங்கள் நிறுவி தன் சீடர்களான அஸ்தாமலகர், சுரேஷ்வரர், பத்மபாதர் மற்றும் தோடகர் என்பவர்களை ஒவ்வொரு பீடத்திற்கும் மடாதிபதிகளாக நியமித்தார். காஞ்சிபுரத்தில் சர்வக்ஞான பீடம் எனும் வேதாந்த கல்வி நிலையத்தை நிறுவினார். தமது 32ஆம் அகவையில் கேதார்நாத்தில் சமாதி அடைந்த சங்கரர் பொது நம்பிக்கையில் இந்து மதத்தின் மாபெரும் சிற்பி எனப் போற்றப்டுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version