― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்அடியார்க்கு அடியேன்: பக்தி ஒன்று போதும் பகவானை அடைய...!

அடியார்க்கு அடியேன்: பக்தி ஒன்று போதும் பகவானை அடைய…!

- Advertisement -

பாடல் எண் : 01

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்

இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்

விரிபொழில்சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்

அல்லிமென் முல்லையந்தார் அமர் நீதிக்கு அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 02

இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன்

ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்

கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்கு அடியேன்

கடவூரில் கலயன் தன் அடியார்க்கும் அடியேன்

மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன்

எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்

அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 03

மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்

முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்

செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்

திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்

மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க

வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த

அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கு அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 04

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட

திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்

பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்

பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்

ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்

ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன்

அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 05

வம்பறா வரிவண்டு மணநாற மலரும்

மதுமலர் நல் கொன்றையான் அடியலாற் பேணா

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்

ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்

நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்

நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன்

அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 06

வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே

மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்

சீர்கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்

செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கு அடியேன்

கார்கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன்

கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்

ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 07

பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்

பொழில் கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற்கு அடியேன்

மெய்யடியான் நரசிங்க முனையரையற்கு அடியேன்

விரி திரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன்

கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்

கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்

ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 08

கறைக்கண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த

கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்

நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற

நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்

துறைக்கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதித்

தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்

அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவாற்கு அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 09

கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான்

காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்

மடல் சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை

மன்னவனாஞ் செருத்துணை தன் அடியார்க்கும் அடியேன்

புடை சூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி

பொன்னடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்

அடல் சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 10

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்

பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்

திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்

முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்

முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்

அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 11

மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்

வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்

தென்னவனாய் உலகாண்ட செங்கணாற்கு அடியேன்

திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன்

என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்

இசைஞானி காதலன் திருநாவலூர்க்கோன்

அன்னவனாம் ஆரூரன் அடிமை கேட்டு உவப்பார்

ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே.

63 நாயன்மார்கள் வரலாறு பற்றிய பதிவுகள் :

  1. திருநீலகண்ட நாயனார்:

கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார்.

  1. இயற்பகை நாயனார்:

சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை , முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.

  1. இளையான்குடிமாற நாயனார்:

நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர்.தன்னுடைய , வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.

  1. மெய்ப்பொருளார்:

தன்னுடைய பகைவன், பொலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான்.
இருப்பினும், சாகும்தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்

  1. விறல்மிண்டர்:

சிவ பகதர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர். திருத்தொண்ட தொகை பாட காரணமாக விளங்கியவர்.

  1. அமர்நீதியார்:

சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக , தன்னுடைய சொத்தையும்,குடும்பத்தையும்ஈடாகத் தந்தவர்.

  1. எறிபத்தர்:

சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர்.பின் தவறுசெய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

  1. ஏனாதிநாதர்:
    கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக்கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.
  2. கண்ணப்பர்:

பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால் மாமிசத்தையும் இறைவருக்குப் படைத்தவர்.

  1. குங்கிவியக்கலயர்:

சாய்ந்த லிங்கத்தை தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று உணவு வாங்காமல் சிவ பூஜைக்காக தூபம் ஏற்றியவர்.

http://blog.omnamasivaya.co.in/2021/06/63.html

  1. மானக்கஞ்சறார்:

தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும், சிவனடியார் கேட்க, மகளின் அழகிய கூந்தலை வெட்டியவர்.

  1. அரிவாட்டாயர்:

சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால் மாறாக தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

  1. ஆனாயர்:

புல்லாங்குழல் ஓசையில் சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.

  1. மூர்த்தி நாயனார்:

சந்தனக் கட்டைகள் கிடைக்காது தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும் திருநீறு, உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடையசின்னமாகக் கொண்டவர்.

  1. முருக நாயனார்:

வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்கு பூமாலையாம் பாமாலையை (பாட்டினால்) சாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார்.

  1. உருத்திரபசுபதி:

கழுத்தளவு நீரில் பகல் இரவு பாராமல் ருத்ரம் ஓதியவர்.

  1. திருநாளைப்போவார்:

தாழ்ந்த குலமென்பதால் கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன்தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல்கொண்டவர்.

  1. திருக்குறிப்புத் தொண்டர்:

சிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால், குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால் தன் தலையைக் கல்லில் மோதியவர்.

  1. சண்டேசுர நாயனார்:

சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உடைத்த தந்தையின் காலை வெட்டியவர்.

  1. திருநாவுக்கரசர் சுவாமிகள்:

தேவாரம் பாடி உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பல அற்புதங்கள் மூலம் சிவனருளைக் கண்முன் காட்டியவர்.

  1. குலச்சிறையார்:

பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.

  1. பெருமிழலைக் குறும்பர்:

சிவனாடியருக்கு வேண்டியது அளித்து உதவி புரிபவர்.
சுந்தரருடன் கயிலை சென்றவர்.

  1. காரைக்கால் அம்மையார்:

இறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தார். பின், இறைவனே துடிக்க பேய் வடிவம் எடுத்தவர். சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர். அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.

  1. அப்பூதி அடிகள்:

திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால் கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாது என்ற அச்சத்தால் இறந்த மகனை மறைத்துவைத்தவர். பின் இறந்த மகனை சிவன்அருளால் உயிர் பெற்ற செய்தவர்.

  1. திருநீலநக்கர்:

திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதிய மனைவியை கடிந்து ஏசியவர்.ஈசன் கனவில் காட்சியளித்தது அருள்புரிந்தார்

  1. நமிநந்தி அடிகள்:

ஈசன் அருளால் தண்ணீரால் விளக்கு ஏற்றி அற்புதம் நிகழ்த்தியவர்.

27.திருஞானசம்பந்தர்:

ஞானக் குழந்தை பல அற்புதங்கள் செய்தவர். பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்டபேறு பெற்றவர். அப்பர் பெருமானால் மிகவும் போற்றப் பட்டவர். சமணர்களை வென்று சைவம் தழைக்கச் செய்தவர்.

  1. ஏயர்கோன் கலிக்காமர்:

இறைவனை தூதுதவராய் அனுப்பிய சுந்தரநாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநோய் பெற்றார். பின் சிவன் அருளால் நோய் நீக்கப்பட்டது.

29.திருமூலர்:

திருமந்திரம் பாடியவர். நந்தி எம்பெருமானின் மாணாக்கர். சித்தர்.விடம் தீண்டி மூலன் என்பவர் இறந்தார் இதனால் பசுக்கள் துயரம் கொண்டன. பசுவின் துயரம் தீர்க்க மூலன் உடலில் புகுந்து பசுக்களை காத்தார்.

  1. தண்டி அடிகள்:

கண் குருடாக இருந்தாலும் சமுதாய நோக்கம் கொண்டு குளம் தோண்டியவர்.சமணர்கள் சவால் விட சிவஅருளால் கண் பார்வை மீண்டும் பெற்றவர். சமணர்கள் பார்வை இழந்தனர்.

  1. மூர்க்கர்:

சூதாடி வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர். சிவனடியார்க்கு வேண்டிய தேவைகள் செய்தார்.

  1. சோமாசிமாறர்:

நிறைய யாகம் நடத்தி சிவ பூஜை செய்தவர்.லோகம் சுபிட்சம் பெற பல சிவயாகம் நடத்தி ஈசனை மகிழ்வித்தார். சுந்தரரின் நண்பர்.

  1. சாக்கியர்:

அன்பால் சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர்.இவர் சிவபக்தியால் எறிந்த கல் அனைத்தும் மலர்களாக மாறின.

  1. சிறப்புலி:

சிவனாடியார்கள் பேரன்புடையவர் வேண்டுவதை அளிக்கும் வள்ளல். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.

35.சிறுத்தொண்டர்:

பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.

  1. சேரமான் பெருமாள்:

சுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். சிவனடியாரை சிவனாக பாவித்து உபசரித்தார்.

  1. கணநாதர்:

சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார். திருஞானசம்பந்த மூர்த்தியுடன் நட்பு கொண்டு சிவாலயம் பல சென்று வழிபடும் பெறும் பெற்றார்.

38.கூற்றுவர்:

நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால் தன்சிந்தையில் சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.

  1. புகழ்ச்சோழ நாயனார்:

எறிபத்தர். தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து சிவனை நினைத்து தன் உயிரை விட நினைத்த மன்னர்.சிவனாடியார் தலை கொய்திய காரணத்தால் யாகத்தில் உயிர் துறந்தவர்.

  1. நரசிங்க முனையரையர்:

சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர். சிவாலயம் பல கட்டி சைவம் வளர்த்தார். மூர்த்தி வேடம் கொண்ட சிவனாடியரை கண்ட பல பதுங்கி செல்ல அவரை வணங்கி நீதி அளித்தார்.

  1. அதிபத்தர்:

வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை
நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று ஒருபொன் மீன் கிடைத்தாலும் சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.

  1. கலிக்கம்பர்:

முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட உபசரிக்க மறுத்தமனைவியின் கையை வெட்டியவர்.

  1. கலியர்:

வறுமையில் தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசுஇல்லாத சமயத்தில் தன் இரத்தத்தால் விளக்கு ஏற்றியவர்.

  1. சத்தி:

சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.

  1. ஐயடிகள் காடவர்கோன்:

மன்னன் பதவியை விட்டு திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.

  1. கணம்புல்லர்:

விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்கு ஏற்றியவர்

  1. காரி:

காரிக்கோவை என்ற நூல் இயற்றி வரும் வருமானத்தில் சிவாலயங்களை .

  1. நின்றசீர் நெடுமாறனார்:

திருஞான சம்பந்தாரால் தன்னுடைய நோயும் கூனும் நீக்கப்பெற்று சைவத்தைவளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.

  1. வாயிலார்:

இறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வுஎன்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும்திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வுபெற்றார்.

  1. முனையடுவார்:

அரசருக்காகப் போர் புரிந்து வரும் வருமானத்தில் சிவனாடியார்களா அனைவருக்கும் உணவு அளித்தார்.

  1. கழற்சிங்க நாயனார்:

சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.

  1. இடங்கழி:

அரசனாய் இருந்தாலும் தன்னுடைய நெல் களஞ்சியத்தை சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.

  1. செருத்துணை நாயனார்:

சிவ பூஜைக்குரிய மலரை மோந்த கழற்சிங்கநாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.

  1. புகழ்த்துணை:

வறுமை வந்தாலும் கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின் ஊரின்பஞ்சத்தைத் தீர்க்க பொருள் பெற்றார்.

  1. கோட்புலி:

சிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் நெல்லை அழித்தவர்.

  1. பூசலார்:

பொருள் இல்லாததால் மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலைவிட்டு இறைவன் முதலில்
பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.

  1. மங்கையர்க்கரசியார்சை:

சைவத்தைப் பரப்பிய பாண்டிய மகாராணி. நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும் படி செய்த அம்மையார்.

  1. நேசர்:

சிவனாடியார்களுக்கு உடையும் கோவணமும் அளித்தார்.
எப்பொழுதும் சிவனின் நாமத்தை நினைத்தவர்.

  1. கோச்செங்கட் சோழர்:

முற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிபட்டு யானையால் இடர் பட்டு மன்னராய்பிறந்தார். பின் மன்னராய் நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம்கட்டினார்.

  1. திருநீலகண்ட யாழ்ப்பாணர்:

ஞானசம்பந்தருடன் யாழ் இசையின் மூலம் சிவனைப் போற்றியவர்

  1. சடையனார் நாயனார்:

சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.

  1. இசைஞானியார்:

சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.

  1. சுந்தரமூர்த்தி நாயனார்:

தேவாரம் பாடியவர். சிவ பெருமானின் தோழர். ஈசன் நட்புகாக இவரைத் தேடி வந்தார். திருத்தொண்டத்தொகை பாடியருளியது பல அற்புதங்களை நிகழ்த்தினார்.

  • நாயன்மார்கள் வரலாறு எப்படி உருவானது?

நாயன்மார் என்போர் கி.பி 400-1000 காலக்கட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலராவார்கள். சுந்தரமூர்த்தி நாயன்மார் திருத்தொண்டத் தொகையில் அறுபத்து இரண்டு நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார்.

அதன் பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்து இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் இணைத்து அறுபத்து மூவரின் வரலாற்றை திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாயன்மாரின் பட்டியல்

நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய நாயன்மார் 60 பேர். 63 பேர் அல்ல. சுவாமிமலைக்குப் படி 60. ஆண்டுகள் 60. மனிதனுக்கு விழா செய்வதும் 60 வது ஆண்டு. ஒரு நாளைக்கு நாழிகை 60. ஒரு நாழிகைக்கு வினாடி 60. ஒரு வினாடிக்கு நொடி 60. இப்படி 60 என்றுதான் கணக்கு வரும். 63 என்று வராது.

சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார் 60 பேர்தான். சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார்.

அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்), அம்மா (இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார்.

பக்தியே பிரதானம்:

நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.

பெண்கள் வீட்டோடு இருந்த அக்காலகட்டத்தில் காரைக்கால் அம்மையார், மங்கையர்கரசி, இசைஞானியார் மற்றும் திலகவதியார், சந்தனத்தாதியார், கமலவதியார், ஆகியோர் சிவ பூஜையே பிரதானமாக கொண்டு சிவனாடியார்களுக்கு தொண்டுகள் பல செய்து முக்தியடைந்தது வியக்கத்தக்க ஒன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version