― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்நாக தோஷம் உள்ளதா..? அறிந்து கொள்ளுங்கள் அரிய தகவல்கள்!

நாக தோஷம் உள்ளதா..? அறிந்து கொள்ளுங்கள் அரிய தகவல்கள்!

- Advertisement -

ராகு, கேது தோஷத்தால் கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நாக தோஷ பரிகாரம் பற்றிய 50 சிறப்பு தகவல்களை படித்து பலன் பெறலாம்.

“கால சர்ப்பயோகம் கொண்ட ஜாதகர்கள், ராகு காயத்திரியையும் கேது காயத்திரியையும் ஆயுள் முடியுமட்டும் தினமும் தங்களால் முடிந்த அளவு ஜபித்துக் கொண்டே வருவது மிகச் சிறந்த பரிகாரம்.

ஜோதிட சாஸ்திரத்தில் நிழற்கிரகங்கள் என்று ராகு கேதுவை வர்ணக்கப்பட்டாலும் இவர்கள் இரண்டு பேரும் சனி பகவானின் பிரதிநிதிகளாகத் திகழ்கிறார்கள்.

கிரந்தங்களிலும் பல்வேறு ஓலை சுவடிகளிலும் ராகு-கேதுவின் பெருமைகளைப் பற்றியும் அவர்கள் ஒவ்வொரு ராசிகளில் சஞ்சரிக்கும்போது என்ன என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி நிறைய செய்திகள் உள்ளன.

ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 1, 5, 9 இந்த ஸ்தானங்களில் சனி, ராகு, கேது, போன்ற கிரகங்கள் இருக்கும் பொழுது அது நாகதோஷம் உடைய ஜாதகமாகிறது.

நாக தோஷம் உடையவர்களுக்கு உடலில் ஏதோ ஒரு இடத்தில் நாகம் போன்ற உருவம் கொண்ட மச்சமோ, அல்லது தழும்போ இருக்கும் என்று சொல்வதில் உண்மை இல்லை.

ஜாதகத்திலே நாக தோஷம் இருப்பவர்களுக்கு நான்கு, பதி மூன்று, இருபத்தி இரண்டு, முப்பத்தி ஒன்று, இந்த தேதியில் பிறந்தவர்களுக்கும், அல்லது பெயரின் கூட்டு எண் நான்கு வந்தாலும், இவர்களுடைய கண்களுக்கு பாம்புகள் அடிக்கடி தென்படும்.

நாக தோஷங்கள் எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால் முன் ஜென்மத்தில் ஆண் நாகமும், பெண் நாகமும் ஒன்றாக இணைந்து இருக்கும் பொழுது அதை துன்புறுத்தினால், இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடத்தில் ராகு என்ற கருநாகம் நின்று கணவனுக்கு தோஷத்தை எற்படுத்தும்.

பாம்பு தன்னுடைய பசிக்காக இரையை தேடி செல்லும் பொழுது அதை துன்புறுத்தினால் இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான லக்னத்துக்கு பத்தாம் இடத்தில் ராகுவோ, கேதுவோ நின்று, தொழில் ஸ்தானத்துக்கு தோஷத்தை உருவாக்கும்.

பாம்பு முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலத்திலும், அல்லது தனது குட்டிகளுடன் ஒன்றாக இருக்கும் பொழுது அதை துன்புறுத்தினால் இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாம் இடமான புத்திர ஸ்தானத்தில், ராகுவோ, கேதுவோ நின்று நாக தோஷத்தை ஏற்படுத்தும்.

புராண காலங்களில் நாகதோஷம் எதற்காக பார்க்கப்பட்டது என்றால், ஒருவர் சன்னியாசம் பெற்று காடுகளிலும், மலைகளிலும், கடுமையான தவங்கள் செய்வதற்கு கடுமையான விஷ ஐந்துகளினால் இவருக்கு ஆபத்து ஏற்படுமா என்பதை அறிந்த பின்னரே அவருக்கு சன்னியாசம் கொடுக்கப்பட்டது. நாக தோஷம் இதற்காகத்தான் பார்க்கப்பட்டது. நாளடைவில் அது ஒரு பயப்படக் கூடிய தோஷமாக பார்க்கப்பட்டது.

கும்ப கோணத்தில் இருக்கும் திருநாகேஸ்வரம், ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு அருகில் உள்ள திருகாளகஸ்தி, சென்னை அருகில் உள்ள கருமாரியம்மன் திருக்கோயிலுக்கு, சென்று வணங்கி வருவது நாக தோஷங்களை நீக்கும் பரிகாரமாகும்.

ஒவ்வொரு மாதமும் திரியோதசி திதியன்று, சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. பிரதோஷ வேளையில் மாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் இவ்வழிபாடு நடைபெறும். ராகு கேதுவால் ஏற்படும் நாக தோஷத்தை போக்க இது சிறந்த வழிபாடாகும்.

சர்ப்ப பரிகாரங்கள் செய்யும்போது மிகுந்த ஆசாரத்துடன் செய்ய வேண்டும். சைவ உணவு விரதம் மேற்கொள்ள வேண்டும். தான தர்மங்களை மனம் கோணாமல், மனமுவந்து நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும்.

நாகப் பிரதிஷ்டம் என்பது ஆண் பாம்பும் பெண் பாம்பும், நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணைவது போன்று கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம் என்று மனுநீதி என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் ஆலயம் உள்ளது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தக் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அன்று வந்து பாம்பு புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு 11 வாரம் தொடர்ந்து புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபட்டு வந்தால் நாக தோஷத்தால் தடைப்பட்டு வரும் திருமணம் விரையில் நடைபெறும்.

ராமேஸ்வரம் சென்று மூன்று நாள் தங்கி கடலில் நீராடி ராமலிங்க சுவாமியை வணங்கி வந்தால் கர்ப்ப தோஷம் பரிகாரமடைந்து புத்திரர் பிறப்பார்கள்.

தங்கம் அல்லது வெள்ளி சிறு ஐந்து தலை நாகம் செய்து வீட்டில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகம் செய்து, பூசித்து பிறகு ஒருவருக்கு புது வேட்டி துண்டு தாம்பூலம் தட்சணையுடன் நாக விக்கிரகத்தையும் தானம் செய்யலாம்.

கருங்கல்லில் நாகப் பிரதிஷ்டை செய்து ஆறு, குணம் அருகில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகத்துடன் பூசித்து தினமும் 108 முறை வலம் வந்தால் நாக தோஷம் நிவர்த்தியாகும்.

இரண்டு நாகங்கள் பின்னிக் கொண்டு ஒன்றின் முகத்தை ஒன்று பார்க்குமாறு கல்லில் வடித்து அரசமரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள்கள் விளக்கேற்றி வைத்து பூசித்தால் நாகதோஷம் விலகும்.

கண்ணன் நடனமாடுவது போலவும், அவனுக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போலவும் கல்லில் வடித்து வேம்பும் அரசும் இணைந்திருக்கும் குளக்கரையில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள் விளக்கேற்றி வலம் வந்து வணங்கினால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.

சிவலிங்கத்திற்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் சிலை வடித்து நதிக்கரை அல்லது, குளக்கரையில் பிரதிஷ்டை செய்து, நாற்பது நாள் பூசித்து வலம் வந்தால் நாகதோஷம் பரிகாரமாகும்.

குளம் அல்லது நதிக்கரையில் அரசு, வேம்பு கன்றுகளை நட்டு, முறையாகத் திருமணம் செய்து குறைந்தது நூறு தம்பதிகளுக்கு விருந்தும் தட்சணை தாம்பூலம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகி புத்திரர்கள் பிறப்பதுடன் வாழ்க்கையும் இன்பமாக அமையும்.

வசதி உள்ளவர்கள் ஓர் ஏழைக்கு பயிர் நிலம் வாங்கி தானம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.

ராகு காலத்தில் பாம்புப் புற்றுக்கு முட்டை, பால் வைத்து வழிபாடு செய்வது நற்பலன்களை உண்டாக்கும்.

கோமேதகக் கல் வைத்த மோதிரம் அணியலாம். இதனால் ராகுவினால் உண்டாகும் அசுப பலன்கள் குறையும்.

ராகு பகவானுக்கு உளுந்து வடை விசேஷமாகும். அதை நெய்வேத்தியம் செய்து தானம் செய்யலாம். கருப்பாக உள்ளவரிடம் நான்கு வடைகள் கொடுத்து சாப்பிடச் சொல்வது நல்லது.

ராகு, கேதுகளினால் தோஷம் ஏற்பட்டு பருவமடைந் தும் நீண்ட காலம் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் அரச மரமும், வேப்ப மரமும் சேர்ந்துள்ள இடத்தின் கீழுள்ள நாக சிலைக்கு பால் விட்டு, அபிஷேகம் செய்து வர வேண்டும். செவ்வாய்க் கிழமையில் செய்வதே நல்லது. இவ்வாறு 48 நாட்கள் செய்ய வேண்டும்.

பாம்பு புற்றுக்கு பால் வார்த்தும் முட்டை வைத்தும் ஒரு மண்டலம் வழிபாடு செய்யலாம். இதனால் திருமணம் விரைவில் நடக்கக்கூடும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கும், நாகதோஷம் நீக்கி புத்திர பாக்கியம் விரைவில் கிடைக்கும். திருமணம் விரைவில் நடக்கவும் இதுபோல் வழிபாடு செய்து வரஞ வேண்டும்.

ராகு பகவானுக்கு உளுந்து பிரீதியான தானியம் ஆகும். இதை நவக்கிரக சன்னதியில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ராகுவுக்கு வைத்து வலம் வந்து பூஜித்தால் தோஷம் நீங்கும். இதனால் சகல கஷ்டங்களும் நீங்கும்.

ராகுவுக்கு அதிதேவதை பத்ரகாளி ஆகும். எல்லா சிவாலயங்களிலும் வடக்கு பார்த்த நிலையில் துர்க்கை அம்மன் இருக்கும். அந்த அம்மனுக்கும் வெள்ளிக்கிழமை தோறும் எலுமிச்சை பழத்தோலில் விளக்கேற்றி பூஜித்து வர சகல தோஷங்களும் தீரும்.

துர்க்கா சூக்த மந்திரங்களை ஜபித்து ஹோமங்களில் அருகு, மந்தாரை போன்ற மலர்களையும், உளுந்து போன்ற கருநிற தானியங்களையும், புளிப்பு பண்டங்களையும் ஆஹ¨தி செய்தால் வாழ்க்கையில் பகைவர்களை நிர்மூலமாக்குகிற பராக்கிரமம் ஜாதகருக்கு ஏற்படுகிறது.

ராகு, கார்கோடன் என்ற பெயர்கொண்டு மந்தாரை மலர் சூடி கருப்பு சித்திர ஆடை அணிந்து, உளுந்து தானியம் ஏற்றி, வேம்பு எண்ணெய் தீப ஒளியில் ஸ்ரீஅனந்த பத்மேஸ்வரர் ஆலயம் (லிங்கப்பன் தெரு, ஏகாம்பரநாதர் கோவில் அருகில்) பெரிய காஞ்சீபுரத்தில் யோகங்களை வாரி வழங்குகிறார். தோஷங்களை போக்குகிறார்.

ராகு ஜாதகத்தில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப தனித்தனி பரிகாரங்கள் இருந்தாலும் ராகு தோஷத்தால் தவிப்பவர்கள் செய்ய வேண்டிய பொதுவான பரிகார வழிபாடு வருமாறு:-

தினசரி துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர வேண்டும்.

தினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும்.

துர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும்.

நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி வலம் வர வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.

ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லி வர வேண்டும்.

கேது பகவானுக்கு பரிகாரமாக ராமேஸ்வரம் சென்று சாந்தி செய்வது உத்தமம். காஞ்சியில் உள்ள சித்ரகுப்தன் கோவில் சென்று வழிபாடு செய்வது உத்தமம்.

வெள்ளியில் ஐந்து சிரசு நாகர் வைத்து பூஜை வழிபாடு செய்வது உத்தம பலன்கள் உண்டாகும்.

கேது பகவானுக்கு அதிதேவதை விநாயகர், முதற்கடவுளான விநாயக பெருமானை ஞாயிறு அன்று தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும்.

குமரி மாவட்டத்தில் இருக்கிறது நாகர்கோவில். இங்குள்ள நாகர் ஸ்தலத்தில் நாக வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. பலரும் சென்று வழிபட்டு பலன் அடைகிறார்கள்.

அரச மரத்தடியில் நாகர் சிலையை வழிபட்டு, நாகருக்கு பால் ஊற்றி, மரத்தை சுற்றிவரும் பெண்கள் தங்கள் மணாளனுடன் ஒருமித்து வாழவும், மகப்பேறு பெற்று சக்தியின் கருணையையும், அருளையும் பெறுகிறார்கள் என்பது பலரும் அறிந்த உண்மை.

கேது பகவான் பரிகாரமாக ஷோடச கணபதி ஹோமம் செய்வது விசேஷம். மேலும் சண்டி ஹோமம் செய்வதால் கேது பகவானை திருப்திப்படுத்த முடியும்.

கேதுவுக்கு உரிய அதி தேவதையான விநாயகருக்குரிய ஸ்தோத்திரங்கள், கேது ஸ்தோத்திரங்கள் படித்துவர வேண்டும். தினமும் அரசு, வேம்பு, விநாயகர், நாகர் ஆகியோரை 9 தடவை அல்லது விநாயகர் ஆலயத்தை 9 தடவை வலம் வரலாம்.

கேது இருக்கும் கிராகாதிபர் கிழமைகளில் கேதுவுக்காவது, விநாயகருக்காவது அர்ச்சனை செய்ய வேண்டும். செவ்வாய் பகவானுக்கு செய்கின்ற பரிகாரம் கேதுவுக்கும் பொருந்தும் என்ற கருத்துண்டு.

மாத சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல்லினால் அர்ச்சனை செய்து வரவும். ஞாயிறு தோறும் ஆஞ்சநேயப் பெருமானை துளசியினால் அர்ச்சித்து வரலாம்.

கேதுவுக்கு உரிய தியானம் காயத்ரி, அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒருமுறை கூறி வரலாம்.

கேது பகவானுக்கு ராகு காலம் மற்றும் எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தலாம். அப்போது 16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும், கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை நைவேத்யாமாக படைத்தும், பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபட வேண்டும். கொள்ளு சாத பிரசாதத்தை கோவிலிலேயே வினியோகித்து விட வேண்டும். வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது.

சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் கேதுவை வழிபடுவது விசேஷம். தொழில், வியாபாரம் சிறக்கவும், வழக்கு, தம்பதியர் பிரச்சனை, மரணபயம், நரம்பு, வாயு தொடர்பான பிரச்சனைகள் நீங்கவும் கேதுவிடம் வேண்டிக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version