― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி - 12)

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 12)

varadharajaperumal
எம்பெருமான் வேள்வியினால் மகிழ்ச்சியடைகிறான் ! யஜ்ஞம் என்றால் அவனுக்கு அத்தனை இட்டமாம் ! அவ்வளவு ஏன் ?! அவனுக்கே ” யஜ்ஞ : ” என்று திருநாமம் உண்டு !! – தானே யஜ்ஞமாயுள்ளவன் என்பது பொருள் ..

” அஹம் க்ரதுரஹம் யஜ்ஞ : ஸ்வதாஹம் அஹமௌஷதம் |

மந்த்ரோஹம் அஹமேவாஜ்யம் அஹமக்நிரஹம் ஹுதம் || ” ( கீதை 9-16 )

யாகம் நான்..மஹாயஜ்ஞம் நான்; பித்ருக்களுக்கு வலுவளிக்கும் ஸ்வதா என்கிற பிண்டம் மற்றும் சப்தம் நான், நானே ஹவிஸ்ஸு , மந்த்ரம் நானே, நெய் நானே, அக்னி நானே, செய்யப்படும் ஹோமமும் நானே என்கிறான் கண்ணன் !!

ஸஹஸ்ரநாமத்தில் யஜ்ஞ : என்கிற திருநாமம் தொடங்கி யஜ்ஞகுஹ்யம் என்கிற திருநாமம் வரை , மேற்கண்ட கீதா ச்லோகத்தை விவரிக்குமாப் போலே அமைந்திருக்குமழகு காணத் தக்கது !!

” செய்கின்ற கிதியெல்லாம் யானே ” என்றார் ஆழ்வாரும் !

“வேள்வியும் தானாய் நின்ற எம்பெருமான்” என்றார் கலியன் !

மறை ,வேள்வி , தக்ஷிணை யாவும் அவனே !

எனவே தான் பிரமன் அச்சங்கொள்ளவில்லை !
உண்மையான நம்பிக்கை அச்சத்தினை துணைக்குக் கூப்பிடாது !

ப்ரஹ்லாதன் சொன்னதும் அது தானே ! சிறுபிள்ளை தான் அவன்..பள்ளியிலோதி வரும் பருவம் தான் !ஆனால் ஸாதுக்களின் தலைவனாகப் பார்க்கப்படுகின்றான்.காரணம் இது தான்.. அவன் அஞ்சியதில்லை !

இரணியனுக்கே வியப்பு ! மகனைப் பார்த்து கேட்கிறான்.. பிள்ளாய் உனக்குப் பயமே இல்லையா ?! சிரித்த படி அக்குழந்தை சொன்ன காரணம் இது தான் !

எவனைக் கண்டால் / நினைத்தால் பயமும் பயங்கொள்ளுமோ ; அவன் என்னோடுளன் ! இனியென் குறையெனக்கு !! இது தான்..இந்த நம்பிக்கை தான் அப்பாலகனை இறுதி வரை காத்தது !!

நாம் கொள்ள வேண்டியதும் அதுவே ! ஆம் !! நம்பிக்கை !! இறை நம்பிக்கை !!! அவன் நம்மிடம் எதிர்பார்ப்பதும் அதனையே !!

மஹாவிச்வாஸம் !! பிரமனிடத்து அது இருந்தது !! ஸரஸ்வதியின் தாக்குதல் குறித்து அவன் விசனப்படவில்லை!

ஸரஸ்வதி தான் தப்புக் கணக்கு போட்டிருந்தாள் ! போதாக் குறைக்கு அஸுரர்களின் துர்போதனை வேறு ! அஸுரர்களின் கோபத்துக்குக் காரணங்கள் பல !! இயற்கையாகவே நல்லவர்களைக் கண்டால் ஆகாது. தவிரவும் பிரமனுடைய வேள்வியில் தேவதைகளுக்கு அதிக மதிப்பும் அஸுரர்களான தங்களுக்குப் போதிய முக்கியத்துவம் தரப்படவில்லை போன்ற புகார்கள் வேறு !

ஸரஸ்வதியைக் கொண்டு வஞ்சம் தீர்த்துக் கொள்ள முற்பட்டதன் விளைவே ; வேள்வியைக் குலைக்கும் செயல்கள் !!

அஸுரர்கள் ஸரஸ்வதியைக் கொண்டே தங்கள் ( நாச ) காரியத்தை முடித்துக் கொள்ள எண்ணினர். அவளும் இசைந்தாள் ! தான் தவஞ்செய்யும் இடத்திலிருந்து புறப்பட்டு தெற்கு நோக்கி வந்து சேர்ந்தவள் ; ஒரு மஹாநதியாயப் பெருகி பிரமனின் வேள்வியை அழிக்க வந்தாள் !!

ஸரஸ்வதி ” வேகவதி ” ஆனாள் ! கண்ணில் பட்டவற்றை எல்லாம் அழித்துக் கொண்டு அந்நதி பாய்ந்து வருவதே, அவள் சீற்றத்தினை அனைவருக்கும் உணர்த்தியது ! வேள்வியில் கலந்து கொள்ள வந்தவர்கள் தங்களையும் தங்கள் உடைமைகளையும் வேகவதிக் காட்டாற்றிலிருந்து காத்துக் கொள்ள , உயரமான இடங்களைத் தேடத் தொடங்கினார்கள் ! கடல் எழுந்து நின்றாற்போல் அச்சமூட்டியபடி அலையெறிந்த வண்ணம் வேகமாக யாக சாலையை நெருங்கிக் கொண்டிருந்தாள் வேகவதி !

மநோ வேகம் , வாயு வேகம் போன்றவைகள் வேகவதியின் வேகத்திற்கு முன்னே தோற்றுப் போமளவு அந்நதியின் பாய்ச்சல் இருந்தது !!

இன்று இருந்த சுவடே தெரியாமல் , நம்மால் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்ட வேகவதி நதி , ஏழு கிளைப் பிரிவுகளுடன் பெருகிப் பாய்ந்த பெருமையுடையது என்று சொன்னால் உங்களுக்கு அது பொய்யாகத் தான் தோன்றும் !

ஆக்கிரமிப்புகளினால் கிளைப்பிரிவுகளுடன் சேர்த்து வேகவதியையும் மொத்தமாக அழித்த பெருமை நம்மையே சாரும் !

( புராண ) ஹஸ்திகிரி மாஹாத்ம்யமும் , தேசிகனின் ஹம்ஸ ஸந்தேசமும் , வேகவதியின் மஹிமையை ; அதில் நீராடினால் வரும் நன்மைகளை நமக்கு எடுத்துரைக்கின்றது !

நம்முடைய பாபங்களைப் போக்கப் பிறந்த வேகவதியையே அழித்து நாம் நம் பாபச் சுமையைக் கூட்டினவர்களானோம் !

ஆப ஏவ ஹி ஸுமநஸ : என்றும் இனிதென்பர் தண்ணீர் என்றும் பிரமாணங்கள் சொல்லும் நாம் தான் ; நீரின்றி அமையாது உலகு என்று சொல்லும் நாம் தான் நீர் நிலைகளை, நதிகளை அழித்தோம்.

எத்தனையோ பாபங்களை நாம் செய்பவர்களாயினும் ; அவைகளுக்குக் கழுவாய் ( பிராயச்சித்தம் ) இருப்பினும், பெருத்த பாபமான நீர் நிலைகளை அழித்த பாபத்திற்கு விமோசனமிருப்பதாகத் தெரியவில்லை !

கோபத்தோடு பெருகி வந்த ஸரஸ்வதியாம் வேகவதியை, இறைவன் கூட ,அழித்திடாது அணையாய்க் ( அவள் வேகத்தைக் கட்டுப்படுத்திக் )காத்தான் !

ஆனால் நாம் !!

வேகவதியின் ஏழு கிளைப் பிரிவுகளையுமன்றோ அழித்தொழித்தோம்.

அவைகளின் பெயர்களாவது தெரிந்து கொள்வோமே என்கிறீர்களா ?!

வரதன் வந்த கதை ( பகுதி 12-2 )

பிரமனுடைய வேள்வியைக் குலைத்திட , ஸரஸ்வதி வேகவதியாய் உருமாறி , கடுங்கோபத்துடன் விரைந்து வந்து கொண்டிருந்தாள் !

சுக்திகா, கநகா, ஸ்ருப்ரா, கம்பா, பேயா, மஞ்சுளா, சண்டவேகா என்கிற ஏழு ப்ரவாஹங்களுடன் ( பெருக்குகளுடன் ) அந்நதி பாய்ந்து வந்தது ! கங்கையை விட வேகமாகப் பெருகினபடியால் ” வேகவதி ” என்று இந்நதி பெயர் பெற்றதாம் !

அனைவரும் கலக்கமுற்று என்ன செய்வதென்றறியாது அஞ்சி நின்றிருந்த அவ்வேளையில் , அடுத்து என்ன நடக்குமோ என்கிற அச்சம் , அனைவருடைய கண்களிலும் தெரிந்தது !!

“மணிமாடங்கள் சூழ்ந்தழகாய கச்சி ” கணப்பொழுதில் வேகவதியால் கபளீகரம் செய்யப்பட்டு விடும் என்று நினைத்தபடி பலரும் கையைப் பிசைந்தபடி , திக்கற்றவர்களைப் போல் நின்றிருந்தனர் !

பிரமன் தன்னைச் சேர்ந்தவர்களிடம் , ஸரஸ்வதி தேவி , எவ்வளவு தூரத்தில் வந்து கொண்டிருக்கிறாள் ; மற்றும் அவளுடைய வேகத்தின் தன்மை என்ன ? போன்றவற்றை வினவிக் கொண்டிருந்தான் ..

நதியினுடைய பாய்ச்சல் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு பிரமனுக்கு விடை சொல்லப்பட்டது..

பத்து யோஜனை தூரத்தில் சீற்றத்துடன் வேகவதி வந்து கொண்டிருக்கிறாள் ! ( சுமார் 90 மைல் கற்கள் ) ..

சிரித்தார் பிரமன் .. இதோ நீங்கள் கணக்கிட்டுச் சொல்லும் பொழுதே, அந்நதி நான்கு யோஜனை தூரத்தினைக் கடந்து நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது !

பீஜகிரிக்குக் கீழே அவள் வந்து கொண்டிருக்கும் வேகம் நாம் கணிக்கக் கூடியதல்ல என்றார் !

அஸுரர்களாலே ப்ரேரிதையாய் ( தூண்டப்பட்டவளாய் ) ,
“ஸயஜ்ஞசாலம் ஸபுரம்ஸநாகாசல காநநம் |
ஸதேவ ரிஷி கந்தர்வம் க்ஷேத்ரம் ஸத்யவ்ரதாபிதம் | வேகேந ஸ்ரோதஸோ க்ருஹ்ய பூர்வாப்திம் ப்ரவிசாம்யஹம் ” ||

இந்த யாக சாலை , ஊர் , நகரம், மலை , காடு , தேவர்கள், ரிஷிகள் , கந்தர்வர்களுடன் அனைத்தையும் மூழ்கடித்து , கிழக்குக் கடலுக்கு அடித்துச் செல்வேன் என்றபடி வேகவதி பெருகி வந்து கொண்டிருந்தது !!

அயன் அரியை இறைஞ்சினான் ! பக்தர்களுக்கு இஷ்டத்தை அருளுமவனான எம்பெருமான் ( மீண்டும் ) வேள்வியைக் காப்பதென்று முடிவெடுத்தான்..

ஹஸ்திகிரிக்கு மேற்கே , பீஜகிரிக்குக் கீழே தெற்கு வடக்காய் , இறைவன் துயில் கொண்ட கோலத்தில் நதியைத் தடுத்திட , அணையாய்த் தோன்றினான் !

சயனேசன் என்று அவனுக்குத் திருநாமம் ! சயனேசன் = பள்ளி கொண்ட பெருமான் என்று பொருள் !

என்ன ஆச்சரியம் ! ஊருக்கும் அதுவே பெயராயிற்று !! ஆம் ! இன்றும் பீஜகிரிக்குக் கீழுள்ள அவ்வூர் ” பள்ளி கொண்டா(ன்) ” என்றே வழங்கப்படுகின்றது !!

காட்டாறு போல் பாய்ந்து வரும் வேகவதி , இறைவனே அணையாய்க் கிடந்தும் அசரவில்லை ! ஆனால் ஸரஸ்வதியின் கோபமும் ஆணவமும் குறைந்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும் !!

அணை போல் குறுக்கே கிடப்பவனான பெருமானைக் கண்டதும் அவள் சற்றே குளிர்ந்ததென்னவோ உண்மை தான் !

“தாய் நாடு கன்றே போல் ” ( தாய்ப்பசுவினைத் தேடியோடும் கன்று போல் ) தண்துழாயான் அடியிணையைத் தொட்டுவிட வேண்டும் என்கிற பாரிப்புடன் பாய்ந்தாள் வேகவதி !

“க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மிந் த்ருஷ்டே பராவரே ” ( முண்டக உபநிஷத் )

அனைவருக்கும் அந்தர்யாமியான பெருமானைக் கண்டவுடன் ( அறிந்தவுடன் ) நம்முடைய பாபங்களும் , தீய குணங்களும் அழியுமன்றோ !

ஸரஸ்வதியும் சற்றே சீற்றம் தணிந்தாள் ! தன்னைத் தடுக்க அணையாய்க் கிடக்கும் பரமன் அடியிணையை மட்டுமன்று ; அவனை மொத்தமாக தொட்டுவிட வேண்டும் என்று விரும்பி; தன் வேகத்தைக் கூட்டினாள் !

புன்முறுவல் பூத்தபடி அவள் தன்னை நெருங்கிடக் காத்திருந்தான் பள்ளி கொண்டவன் !!

பள்ளி கொண்டா(ன்) !

இன்றும் ஸ்ரீ ரங்கநாதனாய் நமக்கு அவன் காக்ஷி தரும் தலம் !! பாதிரி மரத்தினை ஸ்தல வ்ருக்ஷமாய்க் கொண்டு அவன் அருள்பாலிக்கும் அத்புதத் தலமிது !!

அம்பரீஷனுக்கு , பகவான் ப்ரத்யக்ஷமான க்ஷேத்ரமிது !! வ்யாஸ புஷ்கரிணி என்று இங்குள்ள திருக்குளம் வழங்கப்படுகிறது !!

சாளக்ராமத் திருமேனியுடன் ” கிடந்ததோர் கிடக்கை ” என்று நாம் மயங்கும்படி சயனித்திருக்கிறான் இறைவன் !!

ஸரஸ்வதி ( வேகவதி ) அணையாய்க் கிடந்த எம்பெருமானை துரிதமாகக் கடந்து சென்றாள் ! தானே அணையாய்க் கிடந்தும் , தன்னை மதியாது, தனக்குக் கட்டுப்படாது அவள் தன்னை மீறி, தன்னை நனைத்துக் கொண்டு ,சீறிப் பாய்ந்தோடுவது கண்டு பெருமான் கோபம் கொள்ளவில்லை !

மாறாக அவள் விருப்பமறிந்து மெல்லப் புன்னகைத்தான் ! ஆம் ! கங்கையை விடத் தான் சிறந்தவள் என்று பட்டம் பெறத்தானே அவள் முயல்கின்றாள் ..அவன் திருவடிகளை மட்டுமே தீண்டப் பெற்று ” தெய்வ நதி ” என்றன்றோ கங்கை போற்றப்படுகின்றாள் !!

நானோ அவனை முழுவதுமாகத் திருமஞ்சனம் செய்துள்ளேன்.. இனிமேல் நானே சிறந்தவள் என்று பூரித்தபடி , பின்னே கிடக்கும் பெருமானை தரிசித்தாள்..

தன்னுடைய வேகப் பெருக்கின் காரணமாக , எம்பெருமான் திருமேனியில் ஆபரணங்களும் , மாலைகளும் , கலைந்தும் சேவையாகாமல் இருப்பதும் கூட அழகாய்த் தான் இருந்தது !

மீண்டுமொரு முறை அவனைத் தீண்டிட எண்ணினாள் நாவுக்கரசி !

சற்று முன்பு தானே கங்கை கூட அவன் திருவடிகளைத் தொடும் பேறு தான் பெற்றது ! நாமோ அவனை நீராட்டும் பேறு பெற்றோம் என்று உளமகிழ்ந்திருந்தாள் .. பின்பு மீண்டும் அவனைத் தொட்டுவிடத் துடிப்பானேன் ?!

நியாயமான கேள்வி ! ஸரஸ்வதியின் உள்ளத்துறையும் செய்தி இது தான் ! முன்பு கங்கையுடன் போட்டி, பொறாமை இருந்தது உண்மை தான்.. அவனைத் தொட்டுவிடத் துடித்ததும் அதற்குத் தான் ! ஆனால் ஒரு முறை அவனைத் தொழுதிடவும் , மீண்டுமவனைத் தொழ வேண்டும் என்கிற பேரவா உந்த , ஒரு பயனை விரும்பித் தொழுதிடாது / தொடாது , தொழுவதே / தொடுவதே பயன் என்கிற பேரறிவினால் அங்ஙனம் ஆசைப்பட்டாள் !!

மீண்டும் ( இன்றைய காவேரிப்பாக்கத்துக்கு அருகில் ) திருப்பாற்கடல் என்கிற ஊரில் அணையாய்க் கிழக்கே கிடந்தான் இறைவன் !

( இன்றும் அங்கே சயனித்த நிலையில் நாம் அவனை தரிசிக்கலாம்.. புண்டரீக மஹர்ஷிக்கு ப்ரத்யக்ஷம் – புண்டரீக புஷ்கரிணியும் உண்டு அங்கே )

வேகவதி இங்கும் இறைவனை ஸ்பர்சிக்கும் பாக்கியம் பெற்றாள் ! பின்பு வேகமும் சற்றே குறைந்தது !! தன் பேற்றினை எண்ணிப் பூரித்தவள் அப்பொழுது தான் ஒரு விஷயம் நினைவிற்கு வந்தவளாய், தன்னை நொந்து கொண்டாள் !!

இரண்டிடத்திலும் ( பள்ளி கொண்டா(ன்) , திருப்பாற்கடல் ) அவனை சேவித்திருந்தும் , அவனைத் துதிக்காமல் போனோமே என்று பொருமினாள் !

யாஸ்யாமி சாலாம் தேவேச தத்ர மே தேஹி தர்சனம் என்று மீண்டும் தரிசனம் தர வேண்டினாள்.. அவள் மனதை அறிந்த பகவானும் , அவ்விதமே அருளத் திருவுள்ளமானான் !!

எங்கு ???

காத்திருப்போம் !!

அடுத்த பகுதிக்குக் காத்திருங்கள் .

எழுத்து: ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி

குறிப்பு: இந்தத் தொகுப்பு விரைவில் நூலாக்கம் பெறுவதால், இதனை அச்சுக்கு எடுத்துக் கையாள வேண்டாமே!

Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami
With his Thiruttagappanaar (in the framed photo )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version