
இந்தியா – கனடா இடையிலான உறவை சீர்குலைக்கும் நோக்கத்துடன், தனக்கு உதவிகரமாக இருந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையை, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., நிகழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாபில் பிறந்து வளர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (45), கனடாவில் குடியேறி சட்டவிரோதமாக அந்நாட்டு குடியுரிமை பெற்றார். அங்கு இருந்தபடி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டார். அதனால் அவருடன், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., நெருங்கிவந்தது.
அவரது உதவியுடன், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை கனடாவில் நிகழ்த்தி, ஹர்தீப் சிங்கை ஐ.எஸ்.ஐ., தன் கூலியாளாக, பயன்படுத்தி வந்ததாம். இந்நிலையில், பஞ்சாபில் இருந்து கனடாவுக்கு புதிதாக வந்த காலிஸ்தான் ஆதரவாளர்களை ஆதரித்து உதவும்படி, ஹர்தீப் சிங்கை ஐ.எஸ்.ஐ., வலியுறுத்தியதாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஐ.எஸ்.ஐ., ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொன்றுவிட்டு, பழியை இந்திய ஏஜன்டுகள் மீது சுமத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், அடிப்படை ஆதாரங்கள் இருந்தால் விசாரிக்க தயாராக உள்ளதாக இந்தியா பதிலடி கொடுத்திருந்தது.
இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி வரும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடாவில் அதிகளவில் குடியேறி வருகின்றனர். இந்தியாவில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் டைகர் போர்ஸ் என்ற அமைப்பின் தலைவரும் இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு இந்தியாவே காரணம் என்று அண்மையில் கனடா பிரதமர் முன்வைத்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்தது. இதனால் இரு நாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து வந்த அமெரிக்கா, தற்போது திடீரென்று இந்திய அரசு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இதனிடையே ஐநா பொது அவையில் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், அரசியல் வசதிக்கு ஏற்ப தீவிரவாதத்தை கையாள்வதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது என்று கனடாவை மறைமுகமாக சாடினார்.
மேலும் தனியார் அமைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், கனடாவின் குற்றச்சாட்டு தொடர்பாக அடிப்படை ஆதாரங்களை யாரேனும் வழங்கினால் அது குறித்து விசாரிக்க இந்தியா தயாராக உள்ளதாக தெரிவித்தார். கனடாவில் உள்ள இந்திய தூதரகங்கள் தாக்கப்பட்டது, தூதரக அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே என்று குறிப்பிட்ட அவர், கனடாவில் உள்ள தீவிரவாத தலைவர்களை நாடு கடத்தும் கோரிக்கை நிலுவையில் உள்ளதையும் சுட்டிக் காட்டினார்.