― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகல்விதேர்வுக் கால மன அழுத்தம்: வந்துடுச்சுங்க ! எக்ஸாம் வந்துடுச்சுங்க !

தேர்வுக் கால மன அழுத்தம்: வந்துடுச்சுங்க ! எக்ஸாம் வந்துடுச்சுங்க !

- Advertisement -

பல வருடங்களுக்கு முன் மார்ச் மாதத்தில் தேர்வுகளைப் பற்றி சிறப்புக் கண்ணோட்டம், தேர்வு அட்டவணை, மாதிரி வினாத்தாள் எனத் தொடங்கிய தேர்வுக்கால செய்திகள், தற்போதெல்லாம் ஒவ்வொரு மணித்துளியிலும் செய்திகளாகவும், சிறப்புத் தகவல்களாகவும், தேர்வு முறை, மாணவர்கள் தயாராகும் முறை, ஆசிரியர்களின் கருத்துகள், பெற்றோர்களின் கதறல்கள், பிள்ளைகளின் எண்ணச் சிதறல்கள் என விஸ்தாரமான விவரங்களாய் ஊடகங்களில் விரவிக் கிடக்கின்றன.

டிசம்பர் மாதக் கடைசியில் வரும் விடுமுறை தினங்களைப் பயன்படுத்தி, பள்ளிகளே சிறப்பு முகாம்களை நடத்துகின்றன. தவிர, அகெடமிகளும், கோச்சிங் சென்டர்களும் இந்த விடுமுறை தினங்களைக் குறி வைத்து சிறப்புத் தேர்வுகள், பெற்றோர்களுக்கான நிகழ்ச்சிகள் மற்றும் ”பிரபல கல்வியாளர்கள்” கலந்து சிறப்பிக்கும், மாணவர்களுக்கு உத்வேகமும் உற்சாகமும், புது உத்திகளும் தரக்கூடிய ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளும் மார்கழி சபா நிகழ்ச்சிகளுக்கு இணையாக விளம்பரங்களுடன் நடைபெறுகின்றன.

விளம்பரமா, விழிப்புணர்வா?

இத்தகைய கல்வி மையங்களின் தேர்வு கால சிறப்பு நிகழ்வுகள் ஒரு விளம்பர யுக்தியாகவும் அமைகின்றன என்பதில் சிறிதளவும் ஐயமில்லை என்றாலும், இந்நிகழ்வுகள் மாணவர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது என்பதும் ஒரு மறுக்க முடியாத உண்மையே !

கல்வி மையங்களைத் தாண்டி வர்த்தக நிறுவனங்களும் தேர்வு கால சூழல்களுக்கேற்ப விளம்பரங்களை அறிமுகப் படுத்துகின்றன. பேனா, பென்சில் போன்ற எழுதுகோல், எழுதுகலன்களுக்கான விளம்பரங்கள் பொதுத்தேர்வுகள் நெருங்கும் காலத்தில்அதிக அளவில் ஊடகங்களில் இடம் பிடிக்கின்றன.

இன்னும் சில பிரபல ஊட்டச்சத்து பான நிறுவனங்களும் குழந்தைகளின் மன அழுத்தம், அவர்களுக்கான ஊட்டம் போன்ற கருத்துகளுடன் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துகின்றன.

இந்திய இளம் மாணவர்களின் கனவுக்கல்வி ஐ.ஐ.டி கல்லூரிகளில் படிப்பது. ராஜஸ்தானில் கோட்டா என்ற ஊரில் உள்ள ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. மாணவர்களின் மன அழுத்தம், உணர்வுபூர்வமான தேவைகள், ஊட்டத்துக்கான தீர்வுகள் இவற்றை, ”கோட்டா –ஐ.ஐ.டி” பிண்ணனியுடன் ஒரு பிரபல நிறுவனம் தயாரித்துள்ள விளம்பர காணொளி, யூ- ட்யூபில் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது. ( Horlicks Digital Campaign titled ‘Fearless Kota )

இந்நிறுவனம் மட்டுமல்ல, இன்னும் பல வர்த்தக பானங்களும், ”அம்மாவின் அன்புடன் – தங்கள் தயாரிப்பும் “ குழந்தைகளை பயமில்லாமல் தேர்வுகளை எதிர்கொள்ள வைக்கும் என்று பறை சாற்றுகின்றன.

இத்தகைய பதிவுகளும், விளம்பர யுக்தியாக இருந்தாலும், பொதுவெளியில், மக்களின் மனதில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆசிரியர்களும், பெற்றோர்களும் தேர்வு எழுதும் பிள்ளைகளின் தேவைகளை உணர்ந்து செயல்பட வைக்கிறது.

ஊடகங்களின் பங்களிப்பு

தேர்வுஅட்டவணை, தேர்வுத்துறை வெளியிடும் அறிவிப்புகள், மாதிரி வினாத்தாட்கள், பாடங்களின் விளக்கங்கள் என மாணவர்களுக்கான சிறப்புப்பகுதியை செய்திதாள்களும், ஊடகங்களும் வழங்குகின்றன.

மாணவர்களின் தேர்வுக்கால மன அழுத்தம் – அதன் காரணங்கள், காரணிகள், விளைவுகள் அதைக் குறைக்கும் முறைகள் – இவற்றையும் ஊடகங்கள் அலசி ஆராய்கின்றன.

தேர்வுக்கால ( மன ) அழுத்தம் ஏறக்குறைய எல்லா மாணவர்களின் உடல்நலத்தை பாதிக்கிறது. அநேக மாணவர்களின் மனநலத்தையும் பாதிக்கிறது. சிலர் எதிர்மறையான எண்ணங்களினால் உந்தப்பட்டு, வாழ்வின் இறுதி வரை சென்றுவிடுகின்றனர்.

வருடத்தின் இந்தக் காலாண்டில்,இந்திய ஊடகங்களின் ஒவ்வொரு பிந்துவிலும், ஒவ்வொரு வெளியீட்டிலும் மாணவர் நலம் பற்றியும், தேர்வுகால அணுகுமுறை பற்றியும் குறிப்புகளும், கவிதைகளும் கட்டுரைகளும் வந்து கொண்டேயிருக்கும்.

ஏன் வருகிறது மன அழுத்தம்?     

பொதுத் தேர்வுகள், குறிப்பாக, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அதையொட்டி வரும் நுழைவுத் தேர்வுகள் மாணவர்களின் எதிர்கால மேற்ப்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு அதனுடன் தன் சொந்த வாழ்க்கையின் நுழைவாயிலாக பார்க்கப் படுகிறது.

அந்த கருத்து பெற்றோராலும், ஆசிரியர்களாலும் அடிக்கடி வலியுறுத்தப் படுகிறது. இது மன அழுத்ததிற்க்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

ஒரு பள்ளியின் வரலாற்றில், பொதுத்தேர்வில் அதிக மாணவர் தேர்ச்சி, அதிக எண்ணிக்கையில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் நல்ல கலாசாலையில் படித்தல் மற்றும் புகழ் பெற்ற நிறுவனங்களில் பணியாற்றுதல் போன்ற விவரங்கள் சிறப்பாக வரவேண்டும் என்று பள்ளியின் நிர்வாகிகள் திட்டமிட்டு பணியாற்றுகிறார்கள்.

பெற்றோர்களும் இத்தகைய பள்ளியில் தன் பிள்ளை படிப்பதை பெருமையாகவும், அங்கே படிக்க வைப்பதை தங்கள் கடமையாகவும் கருதுகிறார்கள்.

தங்கள் பிள்ளைகளை நல்ல நிலையில் கொண்டு அமர்த்திவிட வேண்டும் என்ற பதைப்பு பெற்றோர்களுக்கு.

இவை எல்லாம் ஒன்று கூடி, பிள்ளைகளின் மனச் சுமை ஆகிவிடுகிறது.

அடுத்ததாக பாடச்சுமை. பொதுத் தேர்வு வகுப்பு மாணவர்களுக்கு வருடம் முழுவதும், வாரத் தேர்வில் தொடங்கி ரிவிஷன் தேர்வு வரை, எப்போதும் பரிட்சை மயம். ஆகவே, ஒவ்வொரு தேர்வுக்கும் பாடங்கள் விரைவாக முடியக்கூடும். மாணவர்கள் எல்லாப் பாடங்களையும் அவ்வப்போது படித்து சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். எல்லாவற்றையும் கடைசி நேரத்துக்கு ஒதுக்கி வைப்பது அழுத்ததை ஏற்படுத்தும்

உடல் தொய்வும் மனத் தொய்வும் அடுத்து கவனிக்கப் படவேண்டிய காரணிகள்.அதிக அளவிலான வகுப்பு நேரங்கள், பரிட்சை நேரங்கள், படிக்கும் நேரம் என வருடம் முழுதும் உடலும் மனமும் தொய்வு கொள்கிறார்கள் மாணவர்கள்.

வெற்றியை விரும்பினால் பற்றுடன் உழை

ஒரு தமிழாசிரியர் மாணவர்களுக்குச் சொன்ன சித்தாந்தம்தான் “வெற்றியை விரும்பினால் பற்றுடன் உழை”

உழைப்பிற்கான பற்றுதல் திட்டமிடலில் இருந்து தொடங்கவேண்டும்.

பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் ஒத்திசைந்து திட்டமிட வேண்டும்.

பாடக் கூறுகளையும், தேர்வு அடிப்படையிலான அணுகுமுறையையும் மாணவர்களுக்கு மனதில் பதியும் படி கல்வி ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பயிற்சி அளிக்க வேண்டும்.

விளையாட்டு, கலை வகுப்புகளுக்கு மாணவர்களுக்கு நேரம் கொடுக்கவேண்டும்.

ஆரோக்கியமான உணவு, நோய் வராமல் பாதுகாப்பது என்ற விஷயங்களில் பள்ளிகளும், பெற்றோர்களும் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

வீட்டிலும் பள்ளியிலும் அமைதியான சூழல் வேண்டும். தேர்வு காலத்தில் மட்டுமல்ல. ஆண்டு முழுவதுமே !

உழைப்பின்றி உயர்வில்லை

தனிமனித முன்னேற்றமோ, கல்வி நிறுவனத்தின் முன்னேற்றமோ, நாட்டின் முன்னேற்றமோ உழைப்பின்றி உயர்வில்லை !

எந்த ஆக்கச் செயலும் அழுத்தமான உந்துதலும், நன்முயற்சியும் இன்றி வெற்றியைத் தருவதில்லை.

எனவே, மாணவர்களுக்கும் நல்ல ஊக்கமும் உற்சாகமும் அளித்து, அவர்கள் தங்கள் முழு முயற்சியுடன், முழுத்திறனையும் உபயோகித்து, தேர்வுகளில் நல்ல தேர்ச்சி பெற ஒரளவு அழுத்தம் தர வேண்டியது பெரியவர்களின் பணியே ! அந்த அழுத்தம் அவர்களை முடுக்கி ஓடச் செய்ய வேண்டுமே தவிர, முடக்கி ஒடுங்கச் செய்துவிடக் கூடாது.

கல்வி முறையில் வரும் மாற்றங்களை ஏற்று, தோல்விகளைக் கண்டு துவளாமல்,சீரான முறையில், உறுதியுடனும் அக்கறையுடனும் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும்!

கட்டுரை ஆசிரியர்: கமலா முரளி

திருமதி.கமலா, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். ஆசிரியராக கல்விப் பணியில் இருபத்தெட்டு ஆண்டுகள் பணிபுரிந்தவர்., கேந்த்ரிய வித்யாலயா அகில இந்திய சிறந்த ஆசிரியருக்கான பரிசு பெற்றவர். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆங்கில வழியில் பல சொற்பொழிவுகளும் பயிற்சி வகுப்புகளும் நடத்தியிருந்தாலும், தாய் மொழியாம் தமிழ் மொழியில் கதை, கவிதை மற்றும் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version