― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்அண்ணா என் உடைமைப் பொருள் (8): பெரியவா பற்றி சொன்ன மூன்று சம்பவங்கள்!

அண்ணா என் உடைமைப் பொருள் (8): பெரியவா பற்றி சொன்ன மூன்று சம்பவங்கள்!

- Advertisement -

அண்ணா என் உடைமைப் பொருள் – 8
பெரியவா பற்றி அண்ணா சொன்ன 3 சம்பவங்கள்!
– வேதா டி. ஸ்ரீதரன் –

ஆரம்ப நாட்களில் புத்தக வேலைகளுக்காக மட்டுமே அண்ணாவைச் சந்திப்பேன். சில மாதங்களுக்குப் பின்னர் அண்ணாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையால் உந்தப்பட்டு ஒரு தடவை அவரைப் பார்க்கச் சென்றேன்.

இதுபோல முதல் தடவை சென்றது ஒரு ஞாயிற்றுக் கிழமை. அண்ணா திருவான்மியூரில் தங்கி இருந்தார். அப்போது அண்ணாவைச் சுற்றி நிறைய இளைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் அண்ணாவுடன் ரொம்பவும் சகஜமாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

சற்று நேரத்தில் அண்ணா கண்களை மூடி மௌனமானார். உடனேயே அனைவரும் அமைதியாகி விட்டனர். பெரியவா வாழ்க்கையில் நடந்த மூன்று சம்பவங்களை அண்ணா அப்போது விவரித்தார். அண்ணா பேசி முடித்ததும் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் புறப்பட்டுப் போனார்கள். அந்த இளைஞர்கள் அண்ணாவிடமிருந்து இதுபோல ஏதாவது செய்தியைக் கேட்பதற்காகவே வந்திருந்தார்கள் என்பதை யூகிக்க முடிந்தது.

அண்ணா அன்று விவரித்த மூன்று சம்பவங்களுமே – அல்லது, முதல் இரண்டு மட்டுமாவது – உங்களுக்கு நன்கு அறிமுகமான விஷயமாகத் தான் இருக்கும். இருந்தாலும், அவற்றைப் பற்றிய கூடுதல் விவரங்களை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.


பிரம்மசாரி அன்பர் ஒருவர் மடத்துக்கு தினசரி வில்வம் பறித்துத் தருவார். பெரியவா அவரை ஒருபோதும் கண்டு கொள்வதில்லை. அவரும் பெரியவா தரிசனத்துக்காகவோ, பிரசாதத்துக்காகவோ வந்து நின்றதில்லை. தனது வாழ்க்கையே மடத்துப் பூஜைக்கு வில்வம் பறித்துத் தருவதுதான் என்பது போல் கர்ம சிரத்தையாக வில்வம் பறித்துக் கொண்டு வருவார்.

ஒருநாள் பெரியவா நடந்து போய்க் கொண்டிருக்கும் போது அந்த பிரம்மசாரி எதிரில் வந்து கொண்டிருந்தார். பெரியவா அவரைச் சொடக்குப் போட்டுக் கூப்பிட்டார். அவரது பணியைப் பாராட்டினார். இவ்வளவு உயரிய பணியைச் செய்து தரும் அந்த மனிதருக்கு மடத்தில் இருந்து பிரதி பண்ண வேண்டும் என்றும், இல்லாவிட்டால் மடாதிபதியாகிய தனக்கு தோஷம் வந்து சேரும் என்றும் தெரிவித்தார். ‘‘உனக்கு என்ன வேணும்னு கேள்’’ என்று பெரியவா சொன்னார்.

பெரியவா வாயில் இருந்து இத்தகைய வரம் தரும் வார்த்தைகள் வரும் என்று அந்த பிரம்மசாரி பல வருடங்களாக ஏங்கி இருந்தார் போலும்! உடனடியாகப் பெரியவா பாதத்தில் வீழ்ந்த அவர் பெருத்த விம்மலுக்கிடையே ‘‘இந்த ஜன்மா தான் கடைசியா இருக்கணும். பெரியவா அதுக்கு அனுக்கிரகம் பண்ணணும்’’ என்று பிரார்த்தனை செய்தார். பெரியவா அபய ஹஸ்தம் காட்டியவாறு மௌனமாக அந்த இடத்தை விட்டு அகன்றார்.

இதற்குச் சில வருடங்கள் பின்னர் பெரியவா ஆந்திர மாநிலத்தில் ஏதோ ஓர் ஊரில் முகாமிட்டிருந்த போது திடீரென ஒருநாள் பனிரண்டு பவித்திரம் கொண்டு வரச் சொன்னாராம். ஒவ்வொன்றாக விரலில் அணிந்து குளத்தில் முழுக்குப் போட்டாராம். பின்னர் அதே நீரில் அந்த தர்ப்பையை அர்க்யம் பண்ணினாராம். இப்படியே பவித்ரம் அணிந்து கொள்ளுதல், முழுக்கு, பவித்திரத்தை அர்க்யம் விடுதல் என்று பனிரண்டு தடவை பண்ணினாராம். பின்னர் தனது வழக்கமான பணிகளில் ஈடுபட்டார். பெரியவாளின் இந்த வித்தியாசமான செய்கைக்கான காரணம் யாருக்கும் புரியவில்லை.

சில நாட்களுக்குப் பின்னர் அனைவரும் மடத்துக்குத் திரும்பினர். சரியாகப் பெரியவா முழுக்குப் போட்ட அதே தினம், அதே நேரத்தில் இங்கே வில்வ பிரம்மசாரி இயற்கை எய்தி இருக்கிறார் என்ற தகவல் தெரிய வருகிறது. எனினும், பிரம்மசாரியின் மரணத்துக்கும் பெரியவாளின் அர்க்யத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று பெரியவாளிடம் கேட்கும் தைரியம் யாருக்கும் எழவில்லை. பெரியவாளிடம் தைரியமாகப் பேசும் ஒரு நபர் அவரிடம் இது குறித்துக் கேட்டாராம். ‘‘அந்த பிரம்மசாரிக்குப் பன்னெண்டு ஜன்மா பாக்கி இருந்ததா? பெரியவா துடைச்சுப் போட்டுட்டேளா?’’ என்று அவர் கேட்டாராம். ‘‘அப்படித்தான் வச்சுக்கோயேன்’’ என்று பெரியவா சொன்னாராம்.


சில வருடங்கள் பின்னர் நான் இந்தச் சம்பவம் குறித்து ஒரு சிறு பத்திரிகையில் எழுதினேன். ‘‘அவனுக்குப் பன்னெண்டு ஜன்மா பாக்கி இருந்தது, துடைச்சுப் போட்டுட்டேன்’’ என்று பெரியவா சொன்னதாக அதில் நான் எழுதி இருந்தேன். அதைச் சுட்டிக் காட்டிய அண்ணா, ‘‘பெரியவா ஒருபோதும் தன்னைப் பற்றி இப்படிச் சொல்லிக் கொண்டதே இல்லை’’ என்று தெரிவித்தார்.

மேலும், அதில் பெரியவாளிடம் விசாரித்தது அண்ணா என்று பொருள் வருமாறு எழுதி இருந்தேன். ஆனால் அது தான் அல்ல என்றும், முகவூர் ஸ்வாமிகள் (அண்ணா அப்படிச் சொன்னதாகத் தான் ஞாபகம்.) என்பவர்தான் பெரியவாளிடம் விசாரித்தவர் என்றும் அண்ணா தெரிவித்தார்.

இதற்குப் பல வருடங்கள் பின்னர் – அண்ணாவின் இறுதி நாட்களில் – நங்கநல்லூர் ரமணி பெயரில் ஒரு பத்திரிகையில் இதே சம்பவம் வேறு விதமாக வெளியாகி இருந்தது. அவர் கட்டுரையில், ஆந்திரத்தில் ஒரு சமயம் பூஜைக்கு வில்வம் கிடைக்க வழியே இல்லாத நேரத்தில் மிகவும் ஆச்சரியம் தரும் வகையில் புரந்தரன் என்னும் ஓர் அப்பாவி ஆடு மேய்க்கும் இளைஞன் (உசிலம்பட்டியைப் பூர்விகமாகக் கொண்டவன்) யாருக்கும் தெரியாமல் தினசரி வில்வம் பறித்து மடத்து அன்பர்கள் கண்ணில் படுமாறு வைத்து விட்டுப் போய் விடுவான் என்றும், சில நாட்களுக்குப் பின்னர் பெரியவா மடத்து ஊழியர்கள் மூலம் அவனைக் கண்டு பிடித்து விசாரித்ததாகவும் அவர் எழுதி இருந்தார்.

பனிரண்டு பவித்ரம் அர்க்யம் செய்த விஷயத்திலும் அவர் வேறு விதமாக எழுதி இருந்தார். பெரியவா தியானம் செய்ததாகவும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை என ஆறு முறை முழுக்குப் போட்டதாகவும் அவர் எழுதி இருந்தார். மேலும், பெரியவா முழுக்குப் போட்டது காஞ்சிபுரத்தில் என்றும், மடத்து காரியதரிசியிடம் அந்தப் பையன் மரணம் பற்றியும், அவனுக்கு மோக்ஷம் வேண்டும் என்று தான் பிரார்த்தனை செய்ததாகத் தெரிவித்தாகவும் எழுதி இருந்தார்.

mahaperiyava

(புத்தகத்தில் இந்தச் சம்பவத்தைப் படித்த போதே, இதில் இருந்த ஒரு பெரிய முரண்பாடு இருப்பதாக எனக்குப் பட்டது. அந்தச் சம்பவத்தில் குறிப்பிட்டிருப்பதைப் போலப் பெரியவா தம்மைப் பற்றியும், தமது அதீந்திரிய அனுக்கிரகம் பற்றியும் வாய் திறந்து பேசி இருக்க வாய்ப்பே இல்லை. சொல்லப்போனால், இந்தக் கிழவர் தம்மைப் பற்றியும் தமது அவதார ரகசியம் பற்றியும் தன்னிடம் பிரஸ்தாபிக்க வேண்டும் என்று அண்ணா தவம் கிடந்ததையும், தூண்டித் துருவி பெரியவாளிடம் இதுகுறித்துக் கேள்வி கேட்டதையும் சில இடங்களில் விரிவாகவே எழுதி இருக்கிறார். எனவே, அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சம்பவம் தவறு என்று என் மனம் நம்பியது. எனினும், அதைப் பற்றி நான் அண்ணாவிடம் எதுவும் கேட்கவில்லை. அண்ணாவும் அதைக் கவனித்ததாக என்னிடம் காட்டிக் கொள்ளவில்லை.)

இரண்டு வெர்ஷன்களுக்கும் இடையே பெருத்த வித்தியாசம் இருப்பதைப் பற்றி அண்ணாவிடம் கேட்டேன். இந்தச் சம்பவத்தை யார் தன்னிடம் கூறினார் என்பதே அண்ணாவுக்கு மறந்து விட்டது. சம்பவமே சரியாக நினைவில்லை. எது சரி என்று தெரியவில்லை என்று அண்ணா சொல்லி விட்டார்.

அண்ணாவின் காலத்துக்குப் பின்னர், இந்த முகவூர் ஸ்வாமிகள் யார் என்று ஒருசில காஞ்சி அன்பர்களிடம் விசாரித்தேன். அப்படி யாரும் இல்லை, அநேகமாக அது மேட்டூர் ஸ்வாமிகளாக இருக்கும் என்று ஓர் அன்பர் தெரிவித்தார். இதன்பின்னர் ஒரு தடவை மேட்டூர் ஸ்வாமிகளை தரிசனம் செய்யப் போயிருந்தபோது அவரிடம் விசாரித்தேன். அது தான் அல்ல என்று அவர் சொல்லி விட்டார்.


அண்ணா சொன்ன இரண்டாவது சம்பவமும் வில்வம் தொடர்பானதே. திடீரென ஒரு நாள் மகா பெரியவா சத்தமாக மானேஜரை அழைத்து உடனடியாகப் பதினைந்து ரூபாய் டெலிக்ராஃபிக் மணி ஆர்டர் அனுப்புமாறு சொல்லி, ஒரு விலாசத்தை டிக்டேட் பண்ணினார். மடத்தில் அதுவரை யாரும் கேள்விப்பட்டிராத விலாசம் அது. (பீகார் மாநிலம் என்று அண்ணா சொன்னதாக ஞாபகம்.) எனவே, அது யாருக்கு என்று ஒருவராலும் யூகிக்க முடியவில்லை.

சில நாட்கள் கழிந்த பின்னர் அந்த விலாசத்தில் இருந்து ஒரு கடிதம் வருகிறது. அதன் மூலம் தான் மடத்தில் இருந்த அனைவருக்கும் விஷயம் புரிகிறது. மடத்துக்குப் பல வருடங்கள் வில்வம் பறித்துத் தந்த வைத்தா என்ற அன்பர் (பில்வம் வைத்தா என்று மடத்து வட்டாரத்தில் அறியப்பட்டவர்.) காலமாகி விட்டார். அவரது இறுதி யாத்திரைச் செலவுகளுக்குப் பணம் இல்லாமல் அவரது மகன் செய்வதறியாமல் திகைத்து நின்றபோது மடத்தில் இருந்து பதினைந்து ரூபாய் அவர் கைக்குக் கிடைக்கிறது.

ஏற்கெனவே அவர் பலரிடம் சிறுசிறு தொகை கடன் வாங்கி இருந்தார். திருப்பித் தரும் நிலையில் அவர் பொருளாதாரம் இல்லை. மேலும், அவருக்குத் தெரிந்தவர்களும் வசதி இல்லாதவர்களே. இதனால் அப்பாவின் இறுதி யாத்திரைக்குப் பணம் புரட்ட முடியாத சூழ்நிலை. வீட்டுக்குள் அப்பா பிணம். வீட்டு வாசலில் கையறு நிலையில் கலங்கி நிற்கும் பிள்ளை. இத்தகைய சூழ்நிலையில், மடத்தில் இருந்து மணி ஆர்டர் பணம் வந்து சேர்ந்தது.

(பில்வம் வைத்தா, ஒருமுறை பாடசாலை மாணவர்கள் திருட்டுத்தனமாக சினிமா போவதற்கு ஒத்தாசை செய்து பெரியவாளிடம் திட்டு வாங்கியதால் அவரிடம் கோபித்துக் கொண்டு ஊருக்குப் போய் விட்டாராம், வில்வப் பணியையும் பெரியவாளையும் பிரிந்திருக்க முடியாததால் சில மாதங்களுக்குப் பின்னர் மடத்துக்குத் திரும்பி வந்தார். இந்தச் சம்பவத்தையும் டெலிக்ராஃபிக் மணி ஆர்டர் சம்பவத்தையும் அண்ணா, கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்தில் எழுதி இருக்கிறார். ஆனால், மணி ஆர்டர் தொகை அதில் குறிப்பிடப்படவில்லை. மகனின் பொருளாதாரச் சூழல் பற்றியும் அதில் விரிவாக எழுதவில்லை.)


காஞ்சியில் அபீத் என்றொரு பையன் வசித்து வந்தான். பிறப்பால் அவன் ஒரு முஸ்லிம். இருந்தாலும், அவனுக்கு மகா பெரியவா மீது அளவு கடந்த அன்பு. மடத்தில் நடைபெறும் சந்திர மௌலீச்வர பூஜைக்காக அவன் ஆர்வத்துடன் கொன்றை மலர்கள் பறித்து வந்து கொடுப்பான். இதனால் மடத்தைச் சேர்ந்த அன்பர்கள் அவனை ‘கொன்னை அபீத்’ என்றே அழைப்பார்கள்.

periyava side profile

மகா பெரியவா அவ்வப்போது அவனுக்குப் பழங்களும் கல்கண்டும் தந்து ஆசீர்வதிப்பார். பிறப்பால் முஸ்லிமான அவன் பிற மத தெய்வங்களின் பிரசாதத்தை ஏற்பது தவறு. எனவே, பெரியவா அவனுக்கு ஒருபோதும் பூஜைப் பிரசாதங்கள் கொடுக்க மாட்டார்.

இந்நிலையில் கொன்னை அபீத்தின் தந்தைக்கு இடமாறுதல் உத்தரவு வந்தது. அவர்கள் குடும்பம் காஞ்சியை விட்டு இடம் பெயர வேண்டிய சூழ்நிலை. இனிமேல் மடத்துப் பூஜைக்குப் பூக்கள் பறித்துத் தர முடியாது என்ற வருத்தம் அபீத்தை வாட்டியது.

ஊரை விட்டுக் கிளம்ப வேண்டிய நாளும் வந்தது. வழக்கம்போல அன்றைய தினமும் மலர்களைப் பறித்துப் பூக்குடலையில் எடுத்துக்கொண்டு மடத்துக்கு வந்தான், அபீத். எப்படியாவது பெரியவாளை நேரில் பார்த்து, ஊரை விட்டுக் கிளம்பும் செய்தியை அவருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பது அவனது ஆசை.

ஆனால் பாவம், அவனால் அன்று மடத்துக்குள் நுழைய முடியவில்லை. காரணம், மடத்தில் ஒரு வித்வத் ஸதஸ் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பெரியவாளைத் தூரத்தில் இருந்தாவது பார்த்துவிட்டுச் செல்லலாம் என்றால் அதற்கும் வழியில்லை. சிறுவனான அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. வாசலிலேயே நின்று கொண்டிருந்தான்.

இப்படியே சில நிமிடங்கள் நகர்ந்தன.

ஸதஸில் அமர்ந்திருந்த பெரியவா, திடீரென மடத்து ஊழியர் ஒருவரை அழைத்து, ”ஸதஸில் பங்குபெறும் அனைவரையும் வழிவிட்டு உட்காரச் சொல். வாசலில் பூக்குடலையுடன் ஒரு பையன் நின்றுகொண்டிருக்கிறான். அவனை உள்ளே வரச்சொல்லு” என்று உத்தரவிட்டார்.

ஸதஸில் அமர்ந்திருந்தவர்கள் நகர்ந்து அமர, சபையின் நடுவே நடைபாதை உருவானது. வெளியே பூக்குடலையுடன் நின்று கொண்டிருந்த அபீத்திடம் வந்த ஊழியர் அவனைப் பெரியவா அழைப்பதாகத் தெரிவித்தார். மிகுந்த கூச்சத்துடன் மடத்தின் உள்ளே நுழைந்த அபீத், பூக்குடலையைப் பெரியவா பக்கத்தில் வைத்துவிட்டு ஓரமாக ஒதுங்கி நின்றான்.

கருணையே வடிவெடுத்த பெரியவாளின் கண்கள் கொன்னை அபீத்தின் மீது பதிந்தன. மெதுவாகப் பூக்குடலைக்குள் கையை விட்ட பெரியவா கைநிறையப் பூக்களை அள்ளினார். அபீத்தைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே, ”எனக்கோசரம்தானே கொண்டு வந்தே, (எனக்காகத்தானே கொண்டுவந்தாய்)!” என்று சொல்லியவாறே அந்தப் பூக்களைத் தனது தலைமீது அபிஷேகம் செய்துகொண்டார். ஸதஸில் இருந்த அனைவரும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க, பெரியவாளோ ‘எனக்கோசரம்தானே கொண்டு வந்தே’ என்று சொல்லி மீண்டும் மீண்டும் பூக்களை அள்ளித் தலையில் சொரிந்துகொண்டார்.

மிதமிஞ்சிய உணர்ச்சிப் பெருக்கி்ல் இருந்த அபீத்தின் கண்களில் இருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்தது. சபையெங்கும் ஹரஹர சங்கர ஜயஜய சங்கர கோஷம் ஒலித்தது.

பெரியவா வாழ்வில் எத்தனையோ வினோதமான சம்பவங்கள். இவற்றில் பல சம்பவங்கள் நூல்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. வெளிவராதவையும் ஏராளம்.

ஆனாலும், மகா பெரியவா கொன்றை மலர்களைத் தனது தலை வழியே அபிஷேகம் செய்துகொண்ட இந்தச் சம்பவம் மிகவும் விதிவிலக்கான ஒன்று. இது பெரியவாளின் இயல்புக்கு விரோதமான சம்பவம் என்பதை அன்று அண்ணா சுட்டிக் காட்டினார்.

பெரியவா சாக்ஷாத் சிவபெருமானே என்பதில் பக்தர்கள் யாருக்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால், மகா பெரியவா தன்னை எப்போதாவது அவதார புருஷர் என்று சொல்லிக் கொண்டதுண்டா என்றால், ”இல்லவே இல்லை” என்பதுதான் ஒரே பதில். அவர் தமது அவதார சக்தியைத் திரை போட்டு மறைத்தே வந்தார்.

ஆனாலும், எப்போதாவது விதிவிலக்கான ஒருசில சூழ்நிலைகளில் தன்னையறியாமல் அவர் தனது அவதார ரகசியத்தை வெளியிட்டதுண்டு. அத்தகைய சந்தர்ப்பங்களில் ஒன்றுதான் இந்தச் சம்பவம். (அண்ணா வாழ்விலும் அத்தகைய வினோதமான நிகழ்வு உண்டு. அது எனக்கும் அண்ணாவுக்குமான உறவை எனக்குப் புரிய வைப்பதாய் இருந்தது. இதைப் பின்னர் பார்க்கலாம்.)

கொன்றை மலர் சிவபெருமானுக்கு ப்ரீதி. மடத்து ஆசாரங்களில், குறிப்பாக, பூஜை விஷயங்களில், மகா பெரியவா எள்ளளவும் விதிமீறிச் செயல்பட்டதே இல்லை என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், அன்றைய தினம் மகாபெரியவா, மடத்து பூஜைக்கான புஷ்பங்களை எடுத்துத் தனது தலை மீது அபிஷேகம் செய்துகொண்டார். அதுமட்டுமல்ல, சந்திர மௌலீச்வரருக்காக அபீத் கொண்டு வந்த புஷ்பங்களைத் தனக்கானவை என்று சொன்னார், மகா பெரியவா. ”எனக்கோசரம்தானே கொண்டு வந்தே எனக்கோசரம்தானே கொண்டு வந்தே’’ என்று அவர் திரும்பத் திரும்பக் கூறினார்.

”பெரியவா மீது பக்தி இருப்பதாக நம்மைப் போல எத்தனையோ பேர் சொல்லிக் கொள்கிறோம். ஆனால், நம் யாரிடமும் பெரியவா தன்னை சிவபெருமானின் அவதாரம் என்று ஒருபோதும் காட்டிக்கொண்டதில்லை. ஆனால், அந்தச் சிறுபையன் அபீத்திடம் – இவ்வளவுக்கும், அந்தப் பையன் பிறப்பால் ஹிந்து கூடக் கிடையாது. ஒரு முஸ்லிம் பையன் – பெரியவா மிகவும் ஸ்பஷ்டமாக, தனது அவதார ரகசியத்தை வெளிப்படுத்திக் கொண்டார். சந்திர மௌலீச்வரருக்கான புஷ்பத்தைத் தனது தலையில் சொரிந்துகொண்டு, ‘எனக்கோசரம்தானே கொண்டு வந்தே… எனக்கோசரம்தானே கொண்டு வந்தே…’ என்று சொன்னதன் மூலம், ‘நான்தாண்டா அந்த சந்திரமெளலி’ என்று அவர் எவ்வளவு தெளிவாகச் சொல்லிவிட்டார். அந்தப் பையனின் பக்திக்கு ஈடு இணையே கிடையாது என்று சொல்லி முடித்தார் அண்ணா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version