― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்சுதந்திரப் போராட்டத்தில் என் குடும்பம்: கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்!

சுதந்திரப் போராட்டத்தில் என் குடும்பம்: கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்!

- Advertisement -

சுதந்திரப் போராட்டத்தில் எனது குடும்பத்தின் சிறிய பங்களிப்பு!
~ கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்

(ஆசிரியர், கலைமகள்)

பாரத தேசத்தின் சுதந்திரப் போராட்டத் தோடு நெருங்கிய தொடர்பு கொண்டது எனது குடும்பம். இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்காக சில விவரங்களை இங்கே தந்துள்ளேன்.

அயல்நாட்டுத் துணிகளை உபயோகிக்க வேண்டாம் என்று விடுதலைப் போராட்ட வீரர்கள் முடிவு செய்தார்கள். சுதேசி இயக்கம் நாடு முழுவதுமே மிகுந்த வரவேற்புடன் பரவிய காலகட்டம் அது.

திருமங்கலம் சுப்பையா ஐயர் என்பவர் எனது தகப்பனாரின் தகப்பனார். அதாவது எனது தாத்தா. திருமங்கலத்தில் ஹோட்டல் நடத்தியவர். அங்கிருந்து அவர், தனது சொந்த கிராமமான கீழாம்பூருக்குத் திரும்பினார். சுமார் 1200 சதுர அடிகள் கொண்ட ஒரு சிறிய அக்ரஹார கிராம வீட்டில் 400 சதுர அடியை மட்டும் தானும் தனது குடும்பமும் வாழ்வதற்கான இடம் என்று முடிவு செய்து மீதி இடத்தில் தறி ஒன்றை ஏற்படுத்தினார்.

இந்தத் தறியில் துணிகளை அவரே நெய்து அம்பாசமுத்திரத்திற்கு (12 கிலோ மீட்டர் தொலைவு) தலையில் சுமந்து செல்வார். அங்கு தான் சுதேசி பொருட்கள் விற்பனைக்கூடம் இருந்தது அந்தக் காலத்தில்!

சில நேரம் தனது உறவினர்களுடன் வண்டியிலும் செல்வார். தன்னுடைய வேஷ்டியை கூட அவரே நெய்துதான் உடுத்துவார். சுதந்திரம் கிடைக்கும் வரை இதே நிலை தொடர்ந்தது.

மிதவாதியான அவர் சுதந்திரத்திற்காக மௌனமாக பல முன்னெடுப்புக்களைச் செய்தார். தன் மனைவி பொன்னம்மாளின் சித்தியின் கணவர் பெரியவர் காசி விசுவநாதன் அவர்களுடன் இணைந்து கீழாம்பூர் பூவன்குறிச்சிக்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில்… அதாவது தோட்டத்தில் தறியை அமைத்து நெசவினை மேற்கொண்டார்.

திரு காசி விஸ்வநாதன் விவசாயத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர். பல புதுமைகளைச் செய்தார். பட்டியலின சமூக மக்களை இணைத்துக்கொண்டு அவர்களுக்காகப் பாடுபட்டவர். இன்று அவர் ஏற்படுத்திய தோட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை விஸ்வநாதபுரம் என்றே அழைக்கிறார்கள். திரு காசி விசுவநாதன் அவர்களும் என்னுடைய பெரிய தாத்தாக்களில் ஒருவர்.

திரு பச்சபெருமாள் அவர்களும் அவரின் தகப்பனாரும் நெசவிற்கும் விவசாயத்திற்கும் பெரிதும் அந்தக்காலத்தில் உதவினார்கள். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த திரு பச்சபெருமாள் எனது தாத்தா திருமங்கலம் சுப்பையா ஐயர் அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார்.

தன் குடியிருப்புப் பகுதியிலேயே தோட்டத்தில் நெசவுக்கு உதவுபவர்களுக்கு சிறு சிறு வீடும் கட்டிக் கொடுத்தார் பெரியவர் காசி விசுவநாதன் அவர்கள். இவர்களுக்கெல்லாம் சுதேசி எண்ணம் மேலோங்கி இருந்ததைப் பற்றி பலமுறை என்னுடைய பாட்டியும் என் சித்தப்பாவும் என்னிடம் கதைகள் பல சொல்லி உள்ளனர்.

kizhambur1
<strong>கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்<strong>

நீங்கள் பெரிதும் மதிக்கும் பொருள் எது? என்று தாமிரபரணி கேள்வி பதில் பகுதிக்கு ஒரு கேள்வி வந்தது. கலைமகள் மாத இதழில் கேள்வி கேட்கும் வாசகர்களுக்கு, நான் பதில் அளித்து வருகிறேன். அப்பகுதிக்கு வந்த கேள்விதான் இந்தக் கேள்வி.

சுதந்திரப் போராட்ட காலத்தில் எனது முன்னோர்கள் வாழ்ந்த வீட்டில் எனது தாத்தா தறியை ஏற்படுத்தி நெசவை மேற்கொண்டார். பிற்காலத்தில்… அதாவது நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் அந்தத் தறிக்கு வேலை இல்லாமல் போனது. தறியை பிரித்து எடுத்துவிட்டார்கள்.

தறி இருந்ததற்கான எச்சமாக என்னிடம் மிஞ்சி இருப்பது ஓடம் என்ற பொருள். தறியின் குறுக்கும் நெடுக்குமாக ஓடி நெசவுக்கு பயன்படும் பொருள் தான் ஓடம். இது சிறு கருவி. இதைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.

இன்னொரு பொருள் எனது அலுவலகத்தில் தினசரி பூஜை செய்யப்படுகிறது.

கலைமகளில் பல ஆண்டுகள் ஆசிரியராக இருந்தவர் தமிழறிஞர் கிவாஜ. எங்களுடைய பேராசான் கிவாஜ ஆசிரியராக அமர்ந்த நாற்காலியில் நான் அமர்ந்து வேலை செய்வது இல்லை. அதற்கான அருகதை எனக்குக் கிடையாது. அந்த நாற்காலிக்கு தினசரி பூ வைத்து, வழிபட்டு வருகிறேன்.

சுதந்திரப் போராட்டத்தில் எனது குடும்பத்தின் சேவையைப் பற்றி சொல்கிறேன்.

என்னுடைய தாத்தா திருமங்கலம் சுப்பையா ஐயர் இராட்டையிலும், தக்கிளியிலும் நூல் நூற்று இருக்கிறார். வீட்டில் தறியைப் போட்டு வேஷ்டியும் நெசவு செய்து இருக்கிறார். ஒரு முறை அவரே நெய்த கதர் வேஷ்டிகளைத் தூக்கிக்கொண்டு பக்கத்தில் உள்ள அம்பாசமுத்திரத்திற்குச் சென்று ரூபாய் 32 க்கு விற்பனை செய்தார்

இந்தப் பணம் முழுவதையும் விடுதலைப் போராட்ட நிதிக்காக அக்காலத்தில் கொடுத்தார். இருபத்தைந்து ரூபாயைப் போராட்ட நிதியாக வரவு வைக்கச் சொன்னார். மீதிப் பணம் ஏழு ரூபாயை வக்கீல்களுக்கென்று தனி நிதிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும், அதில் இதைச் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திருமங்கலம் சுப்பையா ஐயர் கதர் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். பட்டியல் இன சமூகத்தவர்களுக்கும் திரு காசி விஸ்வநாத ஐயர் அவர்களுடன் (எனது பாட்டி பொன்னம்மாளின் சித்தப்பா) இணைந்து குரல் கொடுத்தவர்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் கைதானால் வழக்கு நடத்தவும், ஜாமீனில் அவர்களைக் கொண்டு வரவும் தனி நிதியம் வேண்டும் என்கிற எண்ணம் திருமங்கலம் சுப்பையா ஐயருக்கு இருந்தது.

இந்தச் சம்பவத்தை என் சித்தப்பா (ஐயாசாமி என்கிற ராமசுப்பிரமணியன்… என் சித்தப்பா மூலமாகத்தான் பல விஷயங்களை நான் கற்றவன்) வீட்டில் வைத்து அம்பாசமுத்திரம் அட்வகேட் திரு முத்துராமனிடம் எங்கள் எதிர் வீட்டில் வாழ்ந்த தியாகி நெல்லை ஹரிஹர சுப்பிரமணியம் தெரிவித்தார். நான் வியந்து போனேன்.

திருமங்கலம் சுப்பையா ஐயர் வாழ்ந்த கீழாம்பூர் கிராம வீட்டில் உள் திண்ணையில் சுவரில் நேதாஜி படமும், பாரத மாதாவின் படமும் மாட்டப்பட்டு இருந்தன. சின்ன வயதில் நானே இதைப் பார்த்திருக்கிறேன். 1936 வரை மதுரை திருமங்கலத்தில் காப்பி ஹோட்டல் நடத்தினார் என் தாத்தா. பின்னர்தான் கீழாம்பூர் கிராமத்திற்கு வந்தார்.

கீழாம்பூர் கிராமத்தில் விவசாயத்தை மேற்கொண்டதோடு கதர் இயக்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்டார். மதுரை திருமங்கலத்தில் சில காலம் இருந்த காரணத்தால் பசும்பொன் ஐயா முத்துராமலிங்க தேவர் அவர்கள் மீதான ஈடுபாட்டின் காரணமாக நேதாஜி பற்றிய சிந்தனை திருமங்கலம் சுப்பையா ஐயருக்கு ஏற்பட்டிருக்கலாம். பலருக்கு மதுரையிலிருந்து நேதாஜி படத்தையும் பாரத அன்னையின் படத்தையும் வாங்கிவந்து விநியோகம் செய்தார் என்பதையும் அறிகிறேன்.

1946 ஆம் ஆண்டு சனிக்கிழமை ஆகஸ்ட் 31-ஆம் தேதி திருமங்கலம் சுப்பையா ஐயர்(என்னுடைய தாத்தா) மற்றும் காசி விஸ்வநாத ஐயர் (எனக்கு கொள்ளுத்தாத்தா உறவு முறை) இருவரும் பூவன்குறிச்சிக்கு அடுத்த பகுதியில் உள்ள மேல்ஆம்பூர் கிராமத்தில் (இன்றைய காசிவிஸ்வநாதபுரம்) சுதந்திர உணர்வை கீழ்த்தட்டு மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் அமைதியான முறையில் மூவர்ணக் கொடியை ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

காலையில் 9 மணிக்கு கொடி ஏற்றுவது என்று முடிவானது. இந்த விஷயத்தை கிராம மக்கள் எல்லோரிடமும் தெரிவித்துக் கூட்டம் சேர்த்தார்கள்.

சுதந்திரம் அடைவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாக நடந்த நிகழ்ச்சி இது என்பதால் அப்போது பிரிட்டிஷ் அரசால் அனுமதி வழங்கப்படவில்லை. மேல்ஆம்பூர் கிராம முன்சீப் மற்றும் தலையாரிகள் மேற்கண்ட திருமங்கலம் சுப்பையா ஐயர் அவர்களிடமும் காசி விசுவநாத ஐயர் அவர்களிடமும் இணக்கமாக கொடி ஏற்றக்கூடாது என்கிற விஷயத்தைத் தெரிவித்தார்கள்.

இந்த வேண்டுகோளை இருவரும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அதே சமயத்தில் தாங்கள் நட்டு வைத்த கம்பத்தில் வெள்ளை நிறத்தில் கொடி ஒன்றை ஏற்றப் போவதாகவும் அது அன்னக்கொடி ஆக இருக்கும் என்றும் திருமங்கலம் சுப்பையா ஐயர் கிராம முன்சீப்பிடம் தெரிவித்தார். மேல்ஆம்பூரில் பறந்த முதல் அன்னக்கொடி அதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். வெள்ளை நிறத்தில் கதரில் கொடி தயாரித்து அதை ஏற்றினார்கள்.

திருமங்கலம் சுப்பையா ஐயருக்கு (எனது தாத்தா – அதாவது எனது தகப்பனார் ஆண்டி என்கிற சிவசைலம் அவர்களுடைய தகப்பனார்) காபி ஹோட்டல் நடத்திய அனுபவத்தில் 200 பேருக்கு தன்னுடைய தோட்டத்தில் வைத்து உணவு தயாரித்தார்கள். கூடியிருந்த 40 குடும்ப (பட்டியல் இனத்தைச் சேர்ந்த) மக்களுக்கு அன்று உணவு வழங்கப்பட்டது. உணவளிக்கும் பொழுதும், கொடி ஏற்றும் போதும் பாரத அன்னையை மனதில் நினைத்து கோஷங்களை எழுப்பினார்கள்.

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியனின் பெற்றோர் ஆண்டி என்கிற சிவசைலம் பார்வதியம்மாள் தம்பதியர்

சரியாக ஒரு ஆண்டுக்குப் பின்னர், பாரதத்திற்கு ஆகஸ்ட் 15 சுதந்திரம் கிடைத்த அடுத்த நாள், அதாவது ஆகஸ்ட் 16ஆம் தேதி அதே இடத்தில் மறுபடியும் கொடிக் கம்பத்தை நட்டு நம்முடைய மூவர்ணக் கொடியை அங்கே பறக்க விட்டார்கள். ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக நடந்த நிகழ்வு இது. அன்றும் எல்லோருக்கும் உணவு பரிமாறப்பட்டது. இந்த இடத்தைச் சுற்றிய பகுதிதான் இன்று காசிவிஸ்வநாதபுரம் என்று காசி விஸ்வநாதன் அவர்கள் பெயரால் அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கீழாம்பூர் கிராமத்தில் தெற்கு தெருவில் இருந்த ஸ்ரீமான் கிட்டு என்கிற ராமகிருஷ்ண அய்யர் (கிராம முன்சீப்) இந்த விவரத்தை என்னிடம் தெரிவித்து இருக்கிறார்.

ஸ்ரீகாசிவிஸ்வநாத ஐயர் சென்னையில் அவருடைய மகன் சிம்சனில் வேலை செய்த கணேசன் அவர்களுடன் (G.K. medicals) சில காலம் தங்கியிருந்தார். அப்போது என்னுடைய தாயாரும் தகப்பனாரும் 10 சுங்குவார் தெரு திருவல்லிக்கேணியில் குடியிருந்தார்கள். திரு கணேசன் அவர்கள் 11 சுங்குவார் தெருவில் தன் குடும்பத்துடன் குடியிருந்தார். இருவருமே உறவினர்கள் என்பதால் அடிக்கடி ஸ்ரீ காசிவிஸ்வநாத ஐயர் எனது தாயாரிடம் பழைய நிகழ்ச்சிகளை விவரிப்பது உண்டு! மேலே உள்ள கொடியேற்றிய தகவல்களையும் என் தாயாரிடம் தெரிவித்திருக்கிறார்.

பழைய நினைவுகள் எப்போதுமே சுகமாக இருக்கக் கூடியவை! என் குடும்ப விவரங்களைப் பெரிதாக எண்ணி நான் வெளியிட்டதில்லை. அறியப்படாத சிறுசிறு பங்களிப்புச் செய்த சுதந்திரப் போராட்ட அன்பர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறேன். எனவே எனது குடும்பத்தினர் செய்த சில பங்களிப்பையும் சொல்ல முனைந்து இருக்கிறேன்.

நம்முடைய சுதந்திரத்திற்காக எத்தனையோ பேர் எத்தனையோ விதங்களில் தங்களுடையப் பங்களிப்பைச் செய்து இருக்கிறார்கள். ஒரு அணில் போல… சேவையை எனது குடும்பமும் செய்திருக்கிறது என்று எண்ணும் பொழுது உள்ளம் உள்ளபடியே மகிழ்ந்து போகிறது.

கிராம முன்சீப் கிட்டு ஐயர் எனக்கு பல விஷயங்களை அந்தக் காலத்தில் சொல்லி இருக்கிறார். இவருடைய மகள் திருமதி வள்ளி அவர்கள் இப்பொழுது திருநெல்வேலியில் வசித்து வருகிறார். திருமதி வள்ளியின் கணவர் உலக விஷயங்கள் தெரிந்த நல்ல விமர்சகர். திருமதி வள்ளி அவர்களை நான் எப்போதும் அக்கா என்றும் அவரை அத்திம்பேர் என்றும் அழைப்பது வழக்கம்.

திரு கணேச மாமா அவர்களுடைய குமாரர் ராஜு என்கிற நடராஜன் (ஸ்ரீமான் காசி விசுவநாத ஐயர் அவர்களின் பேரன்) அவர்கள் திருநெல்வேலி ஜங்ஷனில் ஆடிட்டர் ஆக மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார். இவருடன் இவருடைய தாயார் மீனாட்சி அம்மாளும் உடன் இருந்து வருகிறார்கள். இவர்கள் என்னுடைய நெருங்கிய உறவினர்கள் என்று நினைக்கும் பொழுது மனம் மகிழ்ச்சி கொள்கிறது.

சுதந்திரம் அடைந்த அடுத்த நாள் எனது தாத்தா ஏன் கொடியேற்றினார்?

ஆகஸ்ட் 16ஆம் தேதி 1947 சுதந்திரம் அடைந்த மறுநாள் அமாவாசை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அம்மாவாசை நாளில்தான் எனது தாத்தா திருமங்கலம் சுப்பையா ஐயர் மேலாம்பூர் பூவன்குறிச்சிக்கு மேற்கே உள்ள பகுதியில், எந்த இடத்தில் 1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி சுதந்திரக் கொடி ஏற்ற வேண்டும் என்று நினைத்தாரோ, அந்த இடத்தில் கொடியை ஏற்றி அங்கே உள்ள 40 பட்டியல் இனத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு உணவு அளித்தார் என்பது எனது சொந்தக்காரர்கள் மூலமாகத் தெரிய வருகிறது.

நாடெங்கும் சுதந்திரம் கிடைத்த பின்னர் ஒரு வார காலம் கொண்டாட்டமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுதந்திரம் கிடைத்த நாள் அன்று (15-8-1947) அவர் முன்னர் காப்பி ஹோட்டல் வைத்திருந்த திருமங்கலத்திற்குச் சென்று தன் நண்பர்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடி விட்டு அன்று மதியம் ரயில் ஏறி கீழாம்பூர் கிராமத்தை வந்தடைந்தார். எனவேதான் அன்றைய நாளில் அவரால் கீழ் ஆம்பூரில் நடைபெற்ற சுகந்திர தின விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இயலாமல் போனது.

சுதந்திரப் போராட்ட காலங்களில் இவர் இரண்டு பத்திரிகைகளை வாடிக்கையாக வாங்கி வந்தார். ஒன்று சுதந்திர சங்கு பத்திரிகை. இன்னொன்று தினமணி.

காலணா விலையில் வாரத்திற்கு இரு முறையும் சில நேரங்களில் மூன்று முறையும் வெளியானது சுதந்திர சங்கு. சங்கு கணேசன் சங்கு சுப்பிரமணியம் ஆகியோரால் நடத்தப்பட்டது இப்பத்திரிகை.

மதுரை திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுதந்திரச் சங்கு பத்திரிகைக்காக சந்தாதாரர்களைப் பிடித்துக் கொடுத்தார் எனது தாத்தா திருமங்கலம் சுப்பைய்யர்.

காலணா ஒரு இதழ் விலை. நான்கு காலணா சேர்ந்தது ஒரு அணா. பதினாறு அணாக்கள் சேர்ந்தது ஒரு ரூபாய். சில நேரங்களில் வாரத்திற்கு 3 இதழ்கள் வந்தபடியால் இந்தக் கணக்கில் சில சிக்கல்களும் வருவதுண்டு. தன் கை பணம் அந்த காலத்தில் மாதத்திற்கு ஐந்து ரூபாயை செலவழித்து திருமங்கலம் சுப்பையர் தன் நண்பர்களுக்கு அன்பளிப்பாக சங்கு பத்திரிகையை வழங்கியது உண்டு!

சங்கு கொண்டே வெற்றி யூதுவோமே
இதை தரணிக் கெல்லா மெடுத்தோதுவோமே…
என்பதுதான் சுதந்திரச் சங்கு ஒவ்வொரு இதழின் பெயரின் கீழும் அமைந்த வைரவரிகள்.

சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சங்கு பத்திரிகை 1930 களில் விற்பனை ஆனதாகச் சொல்வார்கள். கீழாம்பூர் எனது வீட்டின் மாடியில் பழைய காலத்து சுதந்திர சங்கு பத்திரிகை இருந்ததை எனது தகப்பனார் பார்த்திருக்கிறார். சிலவற்றைப் பத்திரப்படுத்தினார். இதன் சில பிரதிகளை எனது இனிய நண்பர் எழுத்தாளர் ரகமி அவர்களிடம் நான் கொடுத்து வைத்திருந்தேன். இப்பொழுது என் கைவசம் எந்த பிரதிகளும் இல்லை. தேடிக் கொண்டிருக்கிறேன்.

பாரதி காவலர் ராமமூர்த்தி அவர்கள் என்னிடம் வழங்கிய பழைய காலத்து ஹரிஜன் பத்திரிகையின் பைண்ட் வால்யூம் ஒன்று என்னிடம் பத்திரமாக உள்ளது.

சிறைச் சாலைக்குச் செல்லவில்லையே தவிர சுதந்திர போராட்ட காலத்தில் பல வகைகளிலும் தன்னுடைய எளிய பங்களிப்பை செய்தார் என்னுடைய தாத்தா திருமங்கலம் சுப்பையா ஐயர் என்று நினைக்கும் பொழுது என் மனசு குளிர்கிறது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version