
செந்தில் பாலாஜியின் அமலாக்கத்துறை தன் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. இது தொடர்பில் செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்தனர். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அங்கு அவருக்கு இதய் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
இந்த நிலையில் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி மேகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. நீதிபதி பரத சக்ரவர்த்தி செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டது செல்லும் என்றும் நீதிபதி நிஷா பானு கைது நடவடிக்கை செல்லாது என்றும் தீர்ப்பளித்தார்கள்.
இதைத் தொடர்ந்து 3வது நீதிபதி கார்த்திகேயன் இந்த மனுவை விசாரித்தார். அவர் கைது நடவடிக்கை செல்லும் என்று தெரிவித்ததைத் தொடர்ந்து, செந்தில்பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. அமலாக்கத்துறை மற்றும் செந்தில் பாலாஜி தரப்பில் தங்களது தரப்பு விவாதங்களை எடுத்து வைத்தனர்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த மனு மீது பிறப்பித்த உத்தரவில், செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டது செல்லும் என்றும், வரும் 12-ம் தேதி வரை அவரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்றும் கூறியது.
இதை அடுத்து, இன்றே அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முடிவு செய்திருப்பதால் தொடர்ந்து 5 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.