கனிமொழி, ஆ.ராசாவுக்கு மீண்டும் நெருக்கடி ஆரம்பம்; 2ஜி.,யில் விடுவிப்பை எதிர்த்து சிபிஐ வழக்கு!

Published:

a raja kanimozhi - 2026

புது தில்லி: 2ஜி முறைகேட்டு வழக்கில், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. அது போல், சிபிஐ.,யும் வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை 2 வழக்குகளைத் தொடர்ந்தன. இந்த இரு வழக்குகளிலும் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 18 பேரையும் விடுவித்து, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி தீர்ப்பளித்தது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில், முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக எம்.பி., கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து, கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. அப்போது இந்த வழக்கில் எவ்விதமான குற்றச்சாட்டுமே நிரூபிக்கப்படவில்லை, போதுமான ஆதாரங்கள் இல்லை என்ற அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருமே வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்தார். எனவே குற்றஞ்சாட்டப்பட்ட 16 பேரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக அவர் தீர்ப்பில் கூறினார்.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார் திமுக., வின் ஆ.ராசா. அப்போது அவர் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்தது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்த முறைகேடு காரணமாக, அரசுக்கு, ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையால் ஆ.ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் 2011 பிப்ரவரியில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா உள்ளிட்ட 14 பேர் மீதும் 3 தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறையும் தனியே வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்குகளை, தில்லி பாட்டியாலா வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி விசாரித்து வந்தார். 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த வருடம் ஏப்ரல் 26ஆம் தேதி முடிவுக்கு வந்து தீர்ப்பு அளிப்பதும் ஒவ்வொரு முறையும் தள்ளிப் போடப்பட்டு வந்தது. அதற்கு, அதிக பக்கங்கள் கொண்ட தீர்ப்பை நீதிபதி எழுத வேண்டியிருப்பதால், தீர்ப்பு தள்ளிப் போவதாகக் கூறப்பட்டது. ஆனால், தீர்ப்பு வெளியான அன்று, வெகு குறைந்த நேரத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டு அனைவரும் தண்டனை ஏதும் இன்றி வெளிவந்தனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிபிஐ., தனது நோக்கத்தில் இருந்து விலகி விட்டதாக ஒரு தரப்பு கூறியது. அரசியல் ரீதியாக ஆளும் கட்சிக்கு பின்னடைவு என்றும், ஆளும் தரப்பு இன்னும் கூடுதல் கவனம் எடுத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்து, அலைக்கற்றை ஒதுக்கீட்டை எல்லாம் ரத்து செய்த நேரத்தில், சிபிஐ நீதிபதி மட்டும் அனைவரையும் விடுதலை செய்தது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனால், அரசு மீண்டும் இந்த வழக்கை தொடர வேண்டும் என்றும் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் அப்போதே கோரிக்கைகள் வலுத்தன. இந்நிலையில், தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, அமலாக்கத்துறை சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல சிபிஐ-யும் தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இது ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு மீண்டும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img