― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்இன்று நரசிம்ம ஜெயந்தி: மிருத்யுஞ்சயராய் ஜொலிக்கும் அவதாரம்!

இன்று நரசிம்ம ஜெயந்தி: மிருத்யுஞ்சயராய் ஜொலிக்கும் அவதாரம்!

- Advertisement -

நரசிம்மர் ஜெயந்தி மே 6ம் தேதி.
இன்று பரம புண்ணியமான நரசிம்ம ஜெயந்தி.
வைசாக சுத்த சதுர்த்தசியன்று நரசிம்ம ஸ்வாமி அவதரித்த புண்ணிய தினம்.

பக்தர்கள் பலரும் நரசிம்ம ஜெயந்தியாக இன்றைய தினம் உபவாசம் இருந்து நரசிம்மரை மகிழ்வித்து அவர் அருளைப் பெறுகிறார்கள்.

நரசிம்ம உபாசனையை ஒரு பரிபூரணமான உபாசனையாக சாஸ்திரங்கள் வர்ணிக்கின்றன. ஞானமார்க்கத்தில் நாராயணனின் தத்துவத்தை அறிபவர்கள் அனைவரும் நரசிம்ம உபாசனையை சிரத்தையோடு கடைபிடிப்பவர்களே!

பாகவதத்திற்கு பாஷ்யம் எழுதிய ஸ்ரீதரர், நரசிம்ம உபாசனை மேற்கொள்ளாதவர்கள் பாகவதத்தின் ஹ்ருதயத்தை அறிய மாட்டார்கள் என்று கூறுகிறார். பாகவத ஹ்ருதயம் என்பது பரிபூரணமான பிரம்ம ஞானம். பிரம்ம ஞானம் வேண்டும் என்றால் நரசிம்ம உபாசனை வேண்டும் என்பது முக்கியமான அம்சம்.

அதனால்தான் ஞான மார்க்கத்தின் வழி வந்த ஆதிசங்கரர்
“ஸ்ரீமத் பயோநிதி நிகேதன சக்ரபாணே
போகீந்த்ர போக மணிரஞ்சித புண்ய மூர்த்தே
யோகீஸ சாஸ்வத சரண்ய பவாப்தி போத
லக்ஷ்மீ ந்ருசிம்ஹ மம தேஹி கராவலம்பம்”
என்று சுவாமியை துதிக்கிறார்.

ஆதிசங்கரரின் பிரதம சீடரும் பிரதான சீடருமான பத்மபாதாசாரியார் நரசிம்ம உபாசனை செய்து அதன் மூலம் சுவாமியின் சாக்ஷாத்காரத்தைப் பெற்றவர்.

lakshminarasimha senniyampalayam

நரசிம்ம உபாசனை குறித்து கூறும்போது “பிரகலாத வரதாவதாரம்” என்பது பற்றி முதன்மையாக கூற வேண்டும்.

அதனால்தான் “ஜெய ஜெய நரசிம்ஹ சர்வேச பயஹர வீரா!
ப்ரஹ்லாத வரதா!” என்று அன்னமாச்சாரியார் கீர்த்தனை செய்கிறார்.

பிரகலாதனுக்கு வரமளித்த அவதாரம் நரசிம்மாவதாரம். பிரகலாதன் மகா பக்தன். அவனுடைய சொல்லைப் பற்றிக் கொண்டு நாராயணன் அவதரித்தார்.

தந்தை, “எங்கே உள்ளான் அந்த ஸ்ரீஹரி?” என்று கேட்ட போது, பிரகலாதன், “நாராயணன் சர்வ வியாபகன். விஷ்ணு என்ற சொல்லே அவர் சர்வ வியாபகமான பரப்பிரம்மா என்ற பொருளைக் குறிக்கிறது. சகல ஜீவன்களிலும் பிரகாசிக்கும் சைதன்யமாதலாதான் அவர் நாராயணன், வாசுதேவன் எனப்படுகிறார்” என்கிறான்.

Keelapavoor UgraNarasimhar 16arms

இப்படிப்பட்ட முழுமையான ஞானம் பிரகலாதனுக்கு இருந்தது. ஹிரண்யகசிபுவுக்கு இல்லை. அந்தக் காரணத்தால்தான் நாராயணன் என்றால் எங்கோ ஏதோ ஒரு உலகத்தில் ஒரு உருவத்தோடு எல்லைக்குட்பட்டு இருப்பவன் என்று எண்ணுகிறான். ஆனால் பிரகலாதனின் பார்வையில் நாராயணன் எங்கும் நிறைந்திருப்பவன். அதனால் தந்தை மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அது அஸ்தி, நாஸ்தி யுத்தம். அஸ்தி வாதம் பிரஹல்லாதனுடையது. நாஸ்தி வாதம் ஹிரண்யகசிபு உடையது. அந்த வாக்குவாதம் உச்சகட்டத்தை அடைந்தபோது, “எங்கும் உள்ளவன் என்கிறாய் அல்லவா? இந்தத் தூணில் உள்ளானா?” என்று வினவுகிறான் தந்தை.

அப்போது ஆச்சரியகரமான பாவனையை வெளிப்படுத்தியபடி, “சர்வ வியாபகமாக இதுவரை பாலில் வெண்ணை போல் தென்படாமல் இருந்த நாராயண தத்துவம் உன் பார்வையில் ஒரு உருவம் எடுத்து வர வேண்டும் என்று நீ விரும்புகிறாய் போலும்! எங்கும் இருக்கும் சுவாமி இந்தத் தூணில் இருக்க மாட்டாரா என்ன? இந்தத் தூணிலும் இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்போது பிரத்யக்ஷமாக தோன்றுவார்” என்று கூறுகிறான் பிரகலாதன்.

பிரகலாதனின் சொல்லை நிரூபித்து, தன் சர்வ வியாபகத் தன்மையில் உள்ள உண்மையை வெளிப்படுத்தி, நாராயணன் தூணிலிருந்து ஆவிர்பவித்தார்.

அவ்விதம் ஸ்தம்பத்திலிருந்து அவதரித்த நாராயணனின் சொரூபமான நரசிம்மரை பரிபூரண அவதாரம் என்று சாஸ்திரம் வர்ணிக்கிறது.

மகாபக்தனும் ஞானியுமானவன் பிரஹலாதன். பிரகலாதனின் பக்திக்கு ஞான பக்தி என்று பெயர்.

பரமாத்மாவிடம் நம்பிக்கையை விட அவருடைய இருப்பை அனுபவத்தில் உணர்ந்தவன் பிரகலாதன. சர்வ வியாபகமான பரம தத்துவம் நாராயணன். நாராயணனிடம் எப்போதும் மனதை நிலைநிறுத்தி நாராயணனிடமிருந்து வேறாக எதுவும் இல்லை என்று பிரகலாதன் உணர்ந்திருந்தான். அவன் பார்வையில் இரண்டற்றதாக இருந்த சத்தியம் எதுவோ அதுவே சந்தியா வேளையில் அவதாரமாக ஸ்தம்பத்திலிருந்து தோற்றமளித்தது.

அங்கே தன் எதிரில் இருந்த பிரகலாதனுக்குத் தன் தத்துவ சொரூபத்தை பிரகடனம் செய்தபடியே ஹிரண்யகசிபுவுக்கு தண்டனை அளித்த சொரூபம் நரசிம்மாவதாரம்.

பிரகலாதனுக்கு ரட்சணையும் ஹிரண்யகசிபுவுக்கு சிட்சணையும் அளித்து மகா காருண்யத்தின் இருபுறங்களையும் காட்டியருளினார்.

நெஞ்சைக் கிழித்து ஹிரண்யகசிபுவை தன்னோடு சேர்த்துக்கொண்டார். தலையை வருடி மடியில் அமர்த்திக்கொண்டு பிரகலாதனுக்கு அருள் புரிந்தார்.

சத்யம் விதாதும் நிஜ ப்ருத்ய பாஷிதம்
வ்யாப்தம்ச பூதேஷ்வ அகிலேஷு சாத்மனம்
அத்ருஸ்ய தாத்யத் புத ரூப முத்வஹன்
ஸ்தம்பே ஸபாயாம் ந ம்ருகம் ந மானுஷம்

என்று சுக மகரிஷி வர்ணிக்கிறார்.

அது சிங்கமும் அல்ல. மனிதனும் அல்ல. நரசிம்மம் என்று நாம் அழைத்தாலும் அது நர வடிவும் அல்ல. சிம்ம வடிவும் அல்ல. ஆனால் இரண்டும் அதுவே.

படைப்பில் இரட்டைகள் இருப்பது இயல்பு. சுகம் துக்கம், ஒளி இருள், உள்ளே வெளியே, பிறப்பு இறப்பு… எல்லாம் இரண்டிரண்டாக உள்ளன. இவ்விதமாக உலகை நாம் பார்க்கிறோமே தவிர இந்த இரண்டிற்குள் இருந்தபடியே இவற்றுக்கு அப்பாற்பட்ட நிலையில் உள்ள பிரம்ம தத்துவத்தை நாம் தரிசிக்க இயலாமல் உள்ளோம். அது எங்கோ வேறாக இல்லை. நாம் பார்க்கும் இரட்டை களிலேயே இருந்தும் எதிலும் ஒட்டாமல் இருக்கும் பரமாத்மாவின் சொரூபமே அது.
அதுவே நரசிம்மர் சொரூபமாக அங்கு வெளிப்பட்டது.

lakshminarasimar e1565409466174

சுவாமியை சதுர்த்தசி அன்று மாலை சந்தியா நேரத்தில் வழிபட வேண்டும். அதனால் திரயோதசி ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு மறுநாள் சதுர்த்தசி அன்று உபவாசம் இருந்து மாலையில் பூஜை செய்வர்.

இந்த வழிபாடு அனைத்துவித கோரிக்கைகளையும் ஈடேற்ற வல்லது. ஞானத்தையும் ஐஸ்வர்யத்தையும் அளிக்கவல்லது. துஷ்ட கிரகத் தொல்லைகளை நீக்க கூடியது. அப மிருத்யு, அகால மிருத்யு பயங்களைப் போக்க வல்லது.

ஒருவிதத்தில் நரசிம்ம அவதாரத்தை மிருத்யுஞ்ஜய அவதாரம் எனலாம். மிருத்யுஞ்ஜய குணங்கள் நரசிம்மரின் தத்துவத்தில் காணப்படுகின்றன.

அப்படிப்பட்ட யோகா நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர், லட்சுமி நரசிம்மர்… முதலான திவ்ய ரூபங்களோடு விளங்கும் பிரகல்லாத வரதனின் அருள் நம்மனைவருக்கும் கிடைக்குமாக! பாரத தேசத்திற்கு அகண்ட ஐஸ்வர்யம் கிடைக்குமாக!

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் சரணாரவிந்தார்ப்பணமஸ்து!!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version