― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்காலியான வயநாடு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தலா?

காலியான வயநாடு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தலா?

1854358 rahulgandhi1 1

காலியான வயநாடு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.பாராளுமன்ற செயலகம் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி தகுதி நீக்க அறிவிப்பில் பல சட்ட குறைபாடுகள் இருப்பதாகவும் சட்டநிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். ராகுல் காந்தியின் வழக்கை காங்கிரஸ் மேல்முறையீடு செய்தால் அதன் மீதான தீர்ப்பு வெளிவர சில மாதங்கள் ஆகலாம்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வந்த ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் யாரும் எதிர்பாராதவிதமாக கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட போவ தாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியானதும், வயநாடு தொகுதியின் மீது அனைவரின் பார்வையும் திரும்பியது. அங்கு போட்டியிட்ட ராகுல் காந்தி அமோக வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

ஆனால் உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் அவர் தோல்வி அடைந்ததால் வயநாடு தொகுதி எம்.பி.யாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில்தான் 2019-ல் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்து பேசினார். இதுபற்றி குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.பூர்னேஷ்மோடி அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று முன்தினம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசமும் வழங்கியது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்ததும் மக்கள் பிரதி நிதித்துவ சட்டம் 1951-ன் படி அவரது பதவியை பறிக்க பாராளுமன்ற செயலகம் நடவடிக்கை எடுத்தது.

இதையடுத்து நேற்று பிற்பகல் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலகம் அறிவித்தது. ராகுல் காந்தியின் பதவி பறிபோனதால் அவரை எம்.பி.யாக தேர்வு செய்த வயநாடு தொகுதியும் காலியானது.

இதுவும் பாராளுமன்ற செயலக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் அடுத்த 6 மாதத்தில் அந்த தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி இப்போது வயநாடு தொகுதிக்கும் உடனடியாக இடைத்தேர்தல் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அங்கு ராகுல் காந்தி போட்டியிட முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. அதன்படி ராகுல் காந்தி 2 ஆண்டு தண்டனை பெற்றிருக்கிறார். அவர் போட்டியிட வேண்டும் என்றால் இந்த தண்டனையை மேல் கோர்ட்டு ரத்து செய்ய வேண்டும் அல்லது நிறுத்தி வைக்க வேண்டும்.

அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியும். இப்போதைய சூழ்நிலையில் தேர்தல் ஆணையத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடுமா? அல்லது மேல் கோர்ட்டின் முடிவுக்கு காத்திருக்குமா? என்றும் கேள்வி எழுந்துள்ளது. இதற்கு காரணம், கடந்த ஜனவரி மாதம் லட்சத்தீவு தொகுதியின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. முகமது பைசல் மீதான வழக்கில் நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கியது.

நீதிமன்றம் உத்தரவு வெளியானதும் உடனடியாக பிப்ரவரி 27-ந்தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கிடையே கேரள உயர்நீதிமன்றத்தில் முகமது பைசல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தொடர்ந்து முகமது பைசலின் தண்டனையை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதையடுத்து அங்கு நடைபெற இருந்த இடைதேர்தலும் ரத்து செய்யப்பட்டது.

இதுபோல உத்தரபிரதேசத்தின் ராம்பூர் சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ. ஆசம்கானும் ஒரு வழக்கில் தண்டனை பெற்றார். உடனே அங்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்தது. அதற்குள் ஆசம்கான் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவின் முடிவு வரும்வரை அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

இதையடுத்து அங்கும் அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் வாபஸ் பெறப்பட்டது. இப்படி பல முன்னுதாரணங்கள் இருப்பதால் ராகுல் காந்தி விவகாரத்திலும் தேர்தல் ஆணையம் காத்திருக்கத் தான் வாய்ப்பு உள்ளது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இதுபோல பாராளுமன்ற செயலகம் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி தகுதி நீக்க அறிவிப்பில் பல சட்ட குறைபாடுகள் இருப்பதாகவும் சட்டநிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேல் நீதிமன்ற முடிவை தெரிந்து கொண்ட பின்னர் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடுவதே சரியாக இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இப்போதைய பாராளுமன்றத்தின் பதவி காலம் அடுத்த ஆண்டு (2024) ஜூன் மாதம் 16-ந்தேதி வரை உள்ளது. அந்த வகையில் ராகுல் காந்தியின் வழக்கை காங்கிரஸ் மேல்முறையீடு செய்தால் அதன் மீதான தீர்ப்பு வெளிவர சில மாதங்கள் ஆகலாம்.

மேலும் லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல் விவகாரத்தில் அவரது தண்டனையை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது போல ராகுல் காந்தியின் தண்டனையையும் ஐகோர்ட்டு நிறுத்தி வைத்தால் தேர்தல் தள்ளி போக வாய்ப்பு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version