வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து விலங்கள் தப்பிக்கவில்லை: அமைச்சர் ஆனந்தன்

சென்னை

சென்னை:

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து எந்த விலங்கும் தப்பிச்செல்லவில்லை; சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என வனத்துறை அமைச்சர் ஆனந்தன் கூறியுள்ளார்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளத்தில் சிக்கி பல இடங்களில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்துள்ளது. விலங்குகள் பலவும் கூண்டுக்குள் முடங்கின.

பூங்காவில் 17 இடங்களில் சுமார் 400 மீட்டர் நீளத்திற்கு சுவர் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான கற்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இந்நிலையில் உடைந்த இடங்களில் முக்கியமான 5 இடங்களில் சுற்றுச்சுவர்கள் மீண்டும் கட்டி முடிக்கப்பட்டு, மீதமுள்ள 12 இடங்களில் தற்காலிகமாக கம்பி வலை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

விலங்குகள் வசிக்கும் இருப்பிடங்களில் தேங்கி இருக்கும் மழைநீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. விலங்குகளுக்கு தொற்று நோய் பரவாமலிருப்பதற்கு அவற்றின் இருப்பிடங்களில் சுண்ணாம்பு தெளிக்கும் பணிகள், விலங்குகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது.

வனத்துறை அமைச்சர் ஆனந்தன் பூங்காவில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விலங்குகளின் இருப்பிடங்களுக்கு சென்று அவற்றுக்கு உணவு வழங்கும் முறை, பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார். அப்போது பூங்காவில் 166 இனங்களை சேர்ந்த 2,080 பாலூட்டிகளும், பறவைகளும், ஊர்வன விலங்குகளும் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,

பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளும் பாதுகாப்பாக உள்ளது. அங்கு இருந்து எந்த விலங்கும் தப்பி செல்லவில்லை. இதுதொடர்பாக சமூக வளைத்தளங்களில் வரும் தகவல்கள் ஆதாரமற்றது. அவ்வாறு பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். மழையினால் கடந்த 2–ந்தேதி மட்டும் பூங்காவுக்கு விடுமுறை விடப்பட்டது. மற்ற நாட்களில் பூங்கா தொடர்ந்து இயங்கி வருகிறது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.