― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!

- Advertisement -

கௌசிகீ நதியிலிருந்து கிளம்பிய பாண்டவர்கள் கங்கை வந்து கலக்குமிடத்தில் சமுத்திர ஸ்நானம் செய்தார்கள். பின்னர் சகோதரர்களுடன் கடற்கரை ஓரமாகவே கலிங்கதேசம் நோக்கிச் சென்றார்கள்.

“வைதரணீ நதி ஓடும் கலிங்க தேசம் இது. தர்மதேவரும் பிற தேவர்களும் யாகம் செய்த பூமி இது. ராஜ ஸ்ரேஷ்டனே! இவ்விடத்தில் ஒரு அதிசய சம்பவம் நடந்திருக்கிறது”

இது அடுத்த கதைக்கான முதல் வரி என்று நினைத்த யுதிஷ்டிரர் ஆவலாக “என்ன?” என்று கேட்டார்.

“ஒரு முறை தேவர்கள் இங்கே யாகம் வளர்த்தார்கள். அப்போது இங்கு வந்த ருத்ரர் யாகப்பசுவை தனது பாகம் என்று எடுத்துக்கொண்டு நடந்தார். அப்போது பின்னால் ஓடிவந்த தேவர்கள் அவரைத் தொழுதார்கள்.

“மஹேஸ்வரரே! நீர் இதை அபஹரிக்கக்கூடாது. நீரே யக்ஞேஸ்வரர். ஜகதீஸ்வரா! நீரே கர்மங்களுக்கு பலன்களையும் கொடுப்பவர். யக்ஞம் நடப்பதும் நடவாதிருப்பதும் உம் செயலே!” என்று மங்களமான வார்த்தைகளால் ருத்ரரைத் துதித்தார்கள்.

பின்னர் அந்தப் பசுவை அங்கேயே விட்டுச் சென்றார் மஹேஸ்வரர். இந்த யாகத்தில் ருத்திரருக்கு பெரும் பாகம் ஒன்றைக் கொடுத்தார்கள். இங்கே இந்தக் கதையக் கேட்டு நதியில் ஸ்நானம் செய்பவர்க்கு அவருக்கு தேவையான மார்க்கம் கண்ணுக்கு எதிரில் தெரிகிறது.

லோமசர் இவ்விதம் சொன்ன பிறகு யுதிஷ்டிரர் அந்த வைதரணியில் இறங்கி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தார். அந்த நதியில் இருக்கும்போதே அவருக்கு சில குரல்கள் கேட்டன. எல்லாம் மந்திரம் ஜெபிக்கும் குரல்கள். அவர் அப்படியே உருகிப்போய் லோமசரிடம் பேசினார்.

“உம்முடைய அருளால் எல்லா உலகங்களையும் காண்கிறேன். மந்திரங்களை ஜெபிப்பவர்களும் மஹாத்மாக்களான வைகானஸர்களுடைய ஒலி இது”

நெக்குருகிப்போனார் யுதிஷ்டிரர்.

“யுதிஷ்டிரனே! நீ கேட்கும் இந்த ஒலியின் ஆரம்பம் மூன்று லக்ஷம் யோஜனை தூரத்தில் உள்ளது. சத்தம் போட்டுப் பேசாதே! அவர்கள் பேசுவது உனக்குக் கேட்டால் நீ பேசுவதும் அங்கு கேட்கும். அவர்களுடைய யாகத்திற்கு அது இடைஞ்சலாக இருக்கும். இந்த வனப்பகுதி பிரம்மதேவர் யாகம் செய்த இடம் என்பது தெரியுமா?”

“அப்படியா?” என்றார் தர்மர்.

“பிரம்மதேவர் பெரும் யக்ஞம் செய்தார். முடிவில் மலைகளோடும் வனப்பிரதேசங்களுடன் கூடிய பூமாதேவியை தக்ஷிணையாக கஸ்யபருக்குக் கொடுத்தார் பிரம்மா. உலகங்களுக்கு ஈஸ்வரரான பிரம்மாவைப் பார்த்து பூமாதேவி கோபம் கொண்டாள்.

“பகவானே! எந்த மனிதனுக்கும் என்னை தானமாகக் கொடுக்கக்கூடாது. இது பயனற்றது. நான் இப்போதே பாதாளலோகம் அடைகிறேன்” என்றாள்.

காஸ்யபரிஷியானவர் பூமாதேவியை மகிழச்செய்து அவருடைய தவத்தினால் மகிழ்ந்து ஜலத்திலிருந்து எழுந்து வந்தாள். அப்போது வேதி (மேடை) ரூபமாக எழுந்து நின்றாள். அப்படிப்பட்ட இந்த வேதியின் மீது நீ ஏறினால் வீர்யனாவாய். இந்த வேதியானது சமுத்திரம் வரை செல்கிறது.

இதன் மீது நீ ஏறி சாகரத்தை தாண்டு. இந்த வேதியை மனிதன் தொட்டால் அந்த இடத்திலிருந்து சமுத்திரத்தில் மூழ்கிவிடும். நான் சில ஸத்யவாக்கியங்களைச் சொல்லித் தருகிறேன். நீ அதை சொல்லிக்கொண்டு இந்த வேதியின் மீது விரைவாக ஏறு. பின்னர் நதிகளின் பதியான சமுத்திரத்தில் இறங்கி ஸ்நானம் செய்.”

லோமசர் இட்ட அனைத்துக் கட்டளைகளையும் நிறைவேற்றிவிட்டு மீண்டும் மஹேந்திரமலையை அடைந்து ஒரு இரவு அங்கே வசித்தார்.

யுதிஷ்டிரர் காலையில் எழுந்து தம்பிமார்களுடன் அங்கிருந்த தவஸ்ரேஷ்டர்களைப் பூஜித்தார். அப்போது அங்கே பரசுராமருடன் எப்போதும் சஞ்சரிக்கும் அக்ருதவ்ரணரைப் பார்த்து கரம் குவித்து வணங்கினார் யுதிஷ்டிரர்.

“முனிவரே! பகவான் பரசுராமர் எனக்குக் காட்சி தருவாரா? தவசியான அந்த பார்க்கவரை நான் பார்க்க விரும்புகிறேன்”

“பரசுராமரால் நீ இங்கு வரும்போதே அறியப்பட்டாய். உன்னிடத்திலும் வருக்கு ப்ரீத்தி இருக்கிறது. அஷ்டமியிலும் சதுர்த்தசியிலும் இங்கிருக்கும் ரிஷிகள் அவரை தரிசிக்கிறார்கள். நாளை சதுர்த்தசி. கிருஷ்ணாஜினம் அணிந்த ஜடாமுடியுடன் கூடிய பரசுராமரைத் தரிசனம் செய்யலாம்” என்றார் அக்ருதவ்ரணர்.

“மகாபலசாலியான ஜமதக்னி குமாரர் பரசுராமருடன் உடன் செல்பவர் நீங்கள். அவருடைய எல்லா செய்கைகளையும் பக்கத்திலிருந்து பார்த்தவர். எல்லா க்ஷத்ரியர்களையும் அவர் அழித்ததின் காரணம் என்ன? எவ்வாறு அவர்கள் அனைவரையும் ஜெயித்தார்?” என்று கேட்டார் யுதிஷ்டிரர்.

“பிருகு வம்சத்தில் அவதரித்த பரசுராமரின் தேவசரிதத்தையும் கேகய தேசத்து அதிபதியான கார்த்தவீர்யார்ஜுனனின் கதையையும் சொல்கிறேன் கேள்”

கேகய தேசத்து ராஜன் கார்த்தவீர்யார்ஜுனன். அவன் பரசுராமரால் கொல்லப்பட்டான். அவனுக்கு ஆயிரம் கரங்கள். தத்தாத்ரேயரின் அருளால் அவனுக்கு ஒரு ஸ்வர்ண விமானம் இருந்தது. அதில் ஏறி சகல ஜீவராசிகளையும் துன்புறுத்தி வந்தான்.

இந்திராதிதேவர்கள் ரிஷிகளுடன் சேர்ந்து தேவசத்ருக்களைக் கொல்லும் விஷ்ணுவை அடைந்து முறையிட்டார்கள். கார்த்தவீர்யார்ஜுனைக் கொல்வதற்கு இந்திரனுடன் சேர்ந்து ஆலோசனை செய்தார். பின்னர் பத்ரிகாஸ்ரமத்தை அடைந்தார்.

இந்த சமயத்தில் கான்யகுப்ஜத்தில் அரசாட்சி செய்துவரும் காதி என்றொரு அரசன் இருந்தான். அவன் வனத்தை அடைந்தான். வானபிரஸ்தத்தில் இருந்த அவனுக்கு அப்ஸரசுக்கு ஒப்பான ஒரு மகள் பிறந்தாள். தேவரிஷியான ப்ருகுவிற்கு ரிசீகர் என்ற புத்திரர் இருந்தார். அவர் காதியின் புத்ரியை மணக்க விரும்பினார்.

“முனிவரே! என் மகளை திருமணம் செய்துகொள்வதற்கு நீர் கன்யாசுல்கம் கொடுக்கவேண்டும்”

“என்ன கொடுக்கவேண்டும்?”

“ஒரேயொரு காது மட்டும் கறுப்பாக உள்ள ஆயிரம் ஸ்வேதக் குதிரைகளைக் கன்யாசுல்கமாகக் கொடுத்தால் என் புத்திரியை உமக்குத் தருகிறேன்” என்றான் காதி.

ரிசீகர் வானத்தை நோக்கி இருகைகளையும் உயரத் தூக்கினார்.

“வருணனே! ஒரு கருமையான காதுள்ள ஆயிரம் வெள்ளைக் குதிரைகளைக் கொடு. அவை வேகமாய் பயணிப்பதாகவும் இருக்கட்டும்” என்றார் ரிசீகர். வருணன் உடனே முன் தோன்றி ஆயிரம் குதிரைகளைக் கொடுத்தான். கங்கையின் எந்த இடத்திலிருந்து அந்தக் குதிரைகள் கிளம்பியதோ அவ்விடத்திற்கு அஸ்வதீர்த்தம் என்ற பெயர் வந்தது.

பின்னர் காதியானவன் ஸத்யவதி எங்கிற தனது பெண்ணை ரிசீகருக்கு கொடுத்தார். ஆயிரம் குதிரைகளுடன் அந்தப் பெண்ணையும் ரிசீகர் அடைந்ததைப் பார்த்து தேவர்கள் வியப்படைந்தார்கள். ரிசீகரைத் துதித்தார்கள். பிராம்மணோத்தமரான ரிசீகர் ஸத்யவதியுடன் சுகமாகக் காலம் கழித்துக்கொண்டிருந்தார்.

கல்யாணம் ஆன தனது புத்திரனைப் பார்க்க விரும்பிய ப்ருகு அங்கே வந்தார். ரிசீகரும் ஸத்யவதியும் அவரை காலில் விழுந்து வணங்கி வரவேற்றார்கள். எழுந்து கைக்கூப்பி நின்றவர்களைப் பார்த்து பிருகு பேசத்துவங்கினார்.

“ஸௌபாக்கியவதியே! உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்.” என்றார்.

“எனக்கும் என் தாய்க்கும் புத்திரன் பிறக்க வேண்டும்”

ப்ருகு ஒரு கணப்பொழுது அமைதியாகக் காத்தார். பின்னர் அவர்க்ளுக்குப் புத்திரன் பிறக்கும் உபாயத்தைச் சொன்னார்.

“நீயும் உன் தாயும் ருது ஸ்நானம் செய்தபிறகு புத்திரபாக்கியம் ஏற்படுவதற்கு அவள் அரசமரத்தையும் நீ அத்திமரத்தையும் கட்டித் தழுவியபடி நில்லுங்கள். நான் விராட்புருஷனை விடாமல் தியானித்து உனக்கும் தாய்க்குமாக வரவழைக்கிறேன்” என்று கூறி மறைந்துவிட்டார் ப்ருகு முனிவர்.

தாயும் மகளும் ஆலிங்கனம் செய்துகொள்ளும் மரத்தைத் தெரியாமல் மாற்றிவிட்டார்கள்.

பல நாட்கள் சென்ற பின்னர் ப்ருகுவானவர் திவ்ய ஞானத்தினால் அறிந்துகொண்டு திரும்பவும் வந்தார்.

“அழகிய புருவங்களுள்ளவளே! நீயும் உன் தாயும் மரத்தை மாற்றிக்கட்டிக் கொண்டீர்கள். ஆகையால் க்ஷத்ரிய செய்கையுள்ள பிராமணன் உனக்குப் புதல்வனாவான். பிராம்மணர்களின் ஆசாரமுள்ள க்ஷத்ரியன் உன் தாய்க்கு மகனாகப் பிறப்பான்” என்றார்.

“எனக்கு இப்படி வேண்டாம். உமது புத்திரனுக்குப் புத்திரன் அவர்கள் இஷ்டப்பட்டபடி பிறக்கட்டும்” என்று மாமனாராகிய ப்ருகுவை வேண்டினாள் ஸத்யவதி.

“அப்படியே ஆகட்டும்” என்று வரமருளினார் ப்ருகு.

கர்ப்பகாலம் முடிந்து பிரவசகாலம் வந்தது. பிருகு புத்திரரான ரிசீகருக்கு தேஜஸோடு கூடிய ஜமதக்னி என்ற புதல்வரை ஈன்றாள். தேஜஸ்வியாக இருந்த அவருக்கு தனுர்வேதம் பிறந்தது முதலே பாடமாகிவிட்டது. வேதாத்யயனத்தில் கரைகண்டார்.

மஹாதபஸ்வியான அந்த ஜமதக்னி தவம் புரிந்தார். தேவர்களை தம் வசப்படுத்திக்கொண்டார். அவர் ப்ரஸேனஜித் என்கிற அரசனை அடைந்து ரேணுகையை வரித்தார். பின்னர் ரேணுடையுடன் ஆஸ்ரமத்தில் இருந்து தவம் புரிந்து கொண்டிருந்தார். அப்போது ஜமதக்னிக்கும் ரேணுகைக்கும் ஐந்து பிள்ளைகள் பிறந்தார்கள். அதில் பரசுராமர் ஐந்தாவது பிள்ளை. கடைசியில் பிறந்தாலும் பரசுராமரே எல்லாக் கலைகளிலும் சிறப்புற்று விளங்கினார்.

ஒரு நாள், எல்லாப் புத்திரர்களும் பழம் கொண்டு வருவதற்காக வனத்துக்குள் சென்றுவிட்ட பின்பு ரேணுகை நதியில் ஸ்நானம் செய்வதற்காகச் சென்றாள்.

அழகிய அந்த வனப்பகுதியில் மார்த்திகாவதக தேசத்தரசனான சித்ரரதன் அவள் எதிரில் வந்தான். அவனைத் தற்செயலாகப் பார்த்த ரேணுகை தாமரைமலர் மாலை அணிந்திருந்தவனைக் கண்டு ஆசை கொண்டாள். அவன் ஜலத்தில் நன்கு விளையாடினான். அந்த மனவேறுபாட்டினால் நீரிலேயே அவன் சித்தத்தில் கற்பை இழந்தாள். அச்சப்பட்டபடியே ஆஸ்ரமத்திற்குள் நுழைந்தாள் ரேணுகை.

ஜமதக்னி இதை ஞானதிருஷ்டியினால் அறிந்துகொண்டார். அவருக்கு சினத்தினால் முகம் சிவந்தது. தனது பிரம்மதேஜஸை இழுந்து அப்படி வந்த ரேணுகையை “சீ….ச்சீ…” என்று நிந்தித்தார்.

ஆஸ்ரமத்தில் கலவரம் வெடித்தது என்ற அறிந்துகொண்ட ஜமதக்னியின் குமாரர்கள் வனத்திலிருந்து அவசரமாகத் திரும்பினார்கள். ருமண்வான், ஸுஷேணன், வஸு, விஸ்வாவஸு ஆகியோரை ரேணுகையைக் கொல்லவேண்டும் என்று ஏவினார். ஆனால் அவர்கள் நால்வரும் அதை மறுத்துவிட்டார்கள்.

தனது கட்டளையை மறுத்த புத்திரர்களை மிருகமாவும், பக்ஷியாகவும், செடிகொடிகளாகவும் ஆகும்படி சபித்துவிட்டார். கடைசியாக பரசுராமர் ஆஸ்ரமத்திற்குள் நுழைந்தார். தந்தை கோபத்தில் துடிக்க தாய் எதிரில் அழுத வண்ணம் நின்றிருந்தாள். ஜமதக்னி முனிவர் உள்ளே நுழைந்த பரசுராமரைப் பார்த்து

“புத்திரா! பாவியான உன் தாயைக் கொல்வாயாக. அதற்காக மனவருத்தம் அடையவேண்டாம். ம்… சீக்கிரம் செய்….” என்றார்.

பரசுராமர் ஆஸ்ரமத்திற்குள் பார்வையை ஓடவிட்டார். மூலையில் கோடாலி ஒன்று கிடந்தது. விடுவிடுவென்று நடந்து சென்று அந்தக் கோடாலியால் ஒரே போடாகப் போட்டுத் தாயின் தலையை கழுத்தோடு சேர்த்து வெட்டி வீழ்த்திவிட்டார்.

ஜமகத்னிக்கும் உடம்பு ஒருமுறை உதறிப்போட்டது. ரத்தம் வழியும் கோடாலியை பிதாவான ஜமதக்னியின் காலடியில் வைத்து நமஸ்கரித்தார் பரசுராமர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version