சுருக்கமாக : சலுக்க-ராஷ்ட்ர கூடர்களுக்கும் பின் கர்நாடகத்தில் ஆட்சியதிகாரத்திற்கு வந்தவர்கள் ஹொய்ஸளர் எனப்படும் அரச பரம் பரையினர், பிரசித்தமான விஜயநகர நாயக பரம்பரைக்கு முந்தியவர்கள். பதின்மூன்றாம் நூற்றாண்டில் அவர்கள் தமிழகத்திலும் படையெடுத்து பிற்கால்ச் சோழசாம்ராஜ்யத்தில் அகண்ட காவிரி வரையிலுமான பகுதியை வசப்படுத்திக் கொண்டு ஆட்சி புரியலானார்கள். அப்போது அவர்களோடு வந்து அகண்ட காவிரிக் கரையில் குடியேறிய ஏராளமான ஹொய்ஸள ராஜயப் பிராமணர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பிற்பாடு பரவினர். இவர்கள் ரிக்வேதிகள், தமிழ்நாட்டில் ரிக்வேதிகள் குறைவு, ஆனால் காஞ்சி ஸ்ரீமடத்துக்கு உரியது அவ்வேதமே என்பது குறிப்பிடத்தக்கது. விஜய நகர நாயக வம்சத்தின் ஆட்சியிலிருந்து தஞ்சைப் பகுதியைத் தனியரசாகப் பிரித்து ஒரு நாயக வம்சம் நிறுவிய சேவப்ப நாயக், அவன் மகன் அச்சுதப்ப நாயக், அவன் மகன் ரகுநாத நாயக் ஆகிய மூவர் ஆட்சியிலும் மதியமைச்சு புரிந்து மாபுகழ் கொண்ட ‘ஐயன்’ என்றே அரசு முழுதிலும் போற்றப்பட்ட கோவிந்தா தீக்ஷிதர் ஒரு ஹொய்ஸளப் பிராமணரே, அரைலிருந்து இசை வழியாக அத்வைதம் வரையில் அனைத்துத் துறையிலும் சோபித்த பேரறிவும் செயலாற்றலும் படைத்தவர் அவர். ராகங்களை 72 மேளக்கர்த்தா அமைப்பில் கொண்டு வரும் புகழ் பெற்ற நூலான ‘சதூர்தந்தி ப்ரகாசிகா’வை இயற்றிய வேங்கடமகி அவரது புத்திரரே. குட்டி கவி என்று புகழ்பெற்ற ஸம்ஸ்கிருதக் கவியான வாஞ்சேச்வரர் கோவிந்த தீக்ஷிதரின் பெண் வழிக் கொள்ளுப்பேரர். இப்படிப் பல ஸ்ரீசரணர் சொல்வார். நமக்கு முக்யமான பாயிண்ட் அந்தக் கலவை சின்னப் பெரியவரும் நம் பெரியவாலுங்கூட, தாய்வழியில் இந்த கோவிந்த தீக்ஷிதரின் வம்ஸாவளியினரே என்பதுதான். இவ்விருவர் மாத்திரமின்றி நமது ஸ்ரீமடத்தின் 62-வது, 64-வது அதிபர்களும் கோவிந்த தீக்ஷிதர் வம்சத்தவர்தாம் . 61-வது பீடாதிபதியிலிருந்து நமது ஸ்ரீசரணர்களான அறுபத்தெட்டாமவர் வரை யாவருமே ஹொய்ஸலர் என்பதோடு இந்த நால்வர் அதில் குறிப்பாக கோவிந்த தீக்ஷிதர் வம்சம். புத்தி தீக்ஷண்யம், காரிய ஸாமர்த்தியம், இவற்றின் பொலிவால் ஏற்படும் காந்த வசீகரம் அம்மரபின் வழி வழிச் சொத்து! இவை ஒன்று கூடினால் துருதுருப்பும், மினுமினுப்பும் உடன் தோன்றுவதும் இயற்கைதானே! ஸ்ரீ சரணாளே அப்படித்தானே இருந்தார்? இங்கேதான் காந்தன் மாறுபாடாக, சாந்தனாக இருந்தார். முதலில் கண்ட கணபதி ஆவாஹன ஸமாசாரமாக உரையாடியபோது ஸ்ரீசரணாள் அந்த அண்ணாவைப் பற்றி பல கூறியதிலிருந்து: “நாங்கள் கோட்டம் அடிப்போம், அண்ணா ஸாதுவா இருந்துண்டு இருப்பார். அவர் மௌன பார்க்கவ கோத்ரம். அதைச் சொல்லி, ‘அதுக்கேத்த மாதிரி மௌனி, மௌனி’ன்னு தமாஷ் பண்றது.” என்றார். மாதாமஹர் வேதவித்வான் என்பது மட்டுமின்றி காந்தனின் பிதா நரசிம்ஹ சாஸ்திரியும் அத்யயனம் செய்த வைதிக வாழ்க்கை நடத்தியவர். அதனால் அவர் எட்டு வயஸிலேயே பிள்ளைக்கு உபநயனம் செய்து வேதப் பயிற்சி தொடங்கிவிட்டார். “அவருக்கு முழு வித்யாஸமா, இங்கே எங்காத்திலேயானா அப்பா ஸர்க்கார் உத்யோகம், அது போக பாக்கி வேளையெல்லாம் ஆத்துல ஸங்கீதக் கச்சேரிதான். நானா? ஸ்கூல், ஸ்வலாத்திண்டாடிட்டு, கடைசில அமெரிக்கன் மிஷன் ஸ்கூல்ல படிச்சிண்டிருந்தேன், அண்ணாதான் பூர்ண வைதிகம், அண்ணாதான் பூர்ணா வைதிகம்” என்று நெஞ்சாரந்த மரியாதைத் தழ தழப்புடன் கூறினார், உணர்ச்சிகளை வெகுவாகக் கட்டுப்படுத்தும் ஸ்ரீசரணர். “அவர் இங்க்லீஷ் படிப்பே படிச்சதில்லே, நாங்கள்ளாம் வேணும்னே அவர்கிட்ட தஸ்புஸூனு இங்கிலீஷ்ல போட்டுப் பொளப்போம், அவருக்கு இங்க்லீஷ் தெரியலைனு பரிகாஸம்கூடப் பன்றது. அதுக்கும் அவர் பாட்டுக்குச் சிரிச்சுக்கிண்டே சாந்தமாவே இருந்திடுவார். “நாங்க ட்ராயர், ஷர்ட், கோட்டுக்கூட, காப் எல்லாம் போட்டுண்டு அமக்களப்படுத்தினாலும் அவருக்கு கொஞ்சகூட அந்த டிரெஸ்ல சபலம் கெடயாது. பால்யத்திலேயே அப்டியொரு மனஸுக் கட்டுபாடு சாந்தி, தாந்தி ரெண்டுமே ஸ்வாபாவிகமா அவருக்கு இருந்தது. “பரங்கிப்பேட்டை ஸாயபுமார்கள்ளேருந்து நம்மாத்துல அப்பாவுக்கு ஸகல விதமான ஜனங்களும் friends.” -தொடரும்.. ஸ்ரீ ரா.கணபதி அண்ணா அவர்களின் தொகுப்பில் இருந்து பிரசுரிக்கபட்டுள்ளது.

