திருப்பாவை 8 கீழ்வானம் வெள்ளென்று

திருப்பாவை பாசுரம் 8 – கீழ்வானம் வெள்ளென்று…

திருப்பாவை Featured ஆன்மிகம்
thiruppavai pasuram 8 - 2026

திருப்பாவை – பாசுரம் 8

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

விளக்கம்: இயற்கை நிமித்தங்களைச் சொல்லி, தோழியைத் துயில் கலைந்து எழுமாறு ஏழாம் பாசுரத்தில் கூறிய ஆண்டாள், எட்டாம் பாசுரத்தில் “நம் குறைகளை ஆராய்ந்து நமக்கு இரங்குவான் கண்ணன்; அவனைக் காணச் செல்ல வேண்டும் எழு” என்று துயிலெழுப்புகிறார்.

கதிரவன் ஒளி பரப்ப எழுந்தான். கிழக்குத் திசையில் வானம் வெளுத்தது. எருமைகள் பனிப்புல்லை மேய்வதற்காக சிறு தோட்டங்களில் புகுந்தன. திருவேங்கடத்துக்கு யாத்திரை செல்பவரைப் போல், யாத்திரையாகப் போவதை பேறு எனக் கருதிப் போகின்ற மற்றுமுள்ள எல்லாப் பெண்பிள்ளைகளையும் போகவிடாமல் தடுத்து, உன்னை எழுப்பி அழைப்பதற்காகவே உன் மாளிகை வாசலில் நிறுத்தி வைத்திருக்கின்றோம்.

கண்ணனாலே மிகவும் விரும்பத் தக்க, ஒரு பதுமையைப் போன்றவளே! எங்களுடன் வருவதற்காக நீ எழுந்திரு. கண்ணனின் குணங்களைப் பாடி, அவனிடம் இருந்து நாம் விரும்பும் பறையைப் பெற வேண்டும். குதிரை உருவம் எடுத்து வந்த கேசி என்னும் அசுரனுடைய வாயைப் பிளந்து எறிந்தவன் கண்ணன்.

வலிமையிற் பெரிய மல்லர்களை மாளச் செய்தவன் அவன். அந்த தேவாதி தேவனை நாம் அணுகி, அவன் அடி பணிந்தால், நம் குறைகளை ஆராய்ந்து, ஐயோ என்று இரங்கி நமக்கு அருள் புரிவான் என்று கூறி தோழியைத் துயில் எழுப்புகிறார் ஸ்ரீஆண்டாள்.

  • செங்கோட்டை ஶ்ரீராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.