ராஜபக்ச சீசெல்ஸ் தீவை விலைக்கு வாங்கினார்?: இலங்கை அரசு விசாரணை

உலகம்

rajapaksha கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச சீசெல்ஸ் நாட்டில் தீவு ஒன்றை வாங்கியது தொடர்பாக அந்நாட்டு அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்ச இருந்த போது சீசெல்ஸ் நாட்டில் இலங்கை வங்கியின் கிளையை நிறுவியதுடன் இரு நாடுகளுக்கும் இடையில் விமான சேவைகளையும் தொடங்கினார். சீசெல்ஸ் நாட்டில் மிகச் சொற்பமான அளவில்தான் இலங்கையர் வசித்து வந்த நிலையிலும் தமது அதிபர் ஆட்சிக் காலத்தில் அந்நாட்டுக்கு அதிக முக்கியத்துவத்தை ராஜபக்ச கொடுத்தது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியிருந்தது. இந்நிலையில் அதிபர் தேர்தலில் ராஜபக்ச தோல்வி அடைந்த நிலையில் அவரது ஆட்சிக் காலத்தில் வாங்கிக் குவிக்கப்பட்ட சொத்து விவரங்கள் குறித்து புதிய அரசு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கையின் இந்த விசாரணைக்கு சீசெல்ஸ் நாடும் ஒத்துழைப்பு தர முன்வந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த சீசெல்ஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜின் போல் எடம், இலங்கைக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். மேலும் சீசெல்ஸ் நாட்டில் இலங்கை செய்துள்ள அனைத்து முதலீடுகள் பற்றியும் தகவல் வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் மகிந்த ராஜபக்சவுக்கு பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.