குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக., வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தை அறிவித்தார் மோடி!

Published:

ramnath govind modi amit sha - 2026

புது தில்லி:

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக., வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தை அறிவித்தார் பிரதமர் மோடி. தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக முன்னிறுத்தியதன் மூலம், அந்த சமூகத்தின் ஆதரவைப் பெற பாஜக., மேலும் குறியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

வரும் ஜூலை 17ம் தேதி இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட பாஜக., வேட்பாளராக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், ஜார்கண்ட் மாநில ஆளுநர் திரவுபதி முர்மு, கேரள மாநில ஆளுநர் பி.சதாசிவம் ஆகியோருடைய பெயர்கள் அக்கட்சியின் சார்பில் பரிசீலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் எவரும் எதிர்பாராதபடி, பீகார் மாநில ஆளுநராகப் பதவி வகித்து வரும் ராம்நாத் கோவிந்த்(வயது 71) பெயரை அறிவித்தார் பிரதமர் மோடி.

தில்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை காலை 2 மணி நேரம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மூத்த அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் ராம்நாத் கோவிந்த் பெயர் முடிவு செய்யப்பட்டது. இதனை பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா தெரிவித்தார்.

ALSO READ:  திருவனந்தபுரம் - சென்னை சிறப்பு ரயில் மேலும் நீட்டிப்பு! மேலும் ரயில்கள் நீட்டிப்பு விவரம்!

ராம்நாத் கோவிந்த், வரும் 23 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, நாட்டின் மிக உயரிய குடியரசுத் தலைவர் பதவியில், 1997 முதல் 2002 வரை தலித் சமூகத்தைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணன் பதவி வகித்தார். அவருக்குப் பிறகு, தலித் சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது நபராக ராம்நாத் கோவிந்த் பதவி வகிப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியினர் விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி!

பாஜக வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த தீவிர இந்துத்துவப் பின்னணி கொண்டவர் யாரேனும் நிறுத்தப் பட்டால், அதனை எதிர்த்து வலுவான தலைவரை எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னிறுத்த வேண்டும் என காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் ஆலோசித்து வந்தனர். இந்நிலையில், தலித் சமூகத்தைச் சேர்ந்த தலைவரை பாஜக முன்னிறுத்தியுள்ளதன் மூலம் அந்த விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு போராளியை முன்னிறுத்தியதன் மூலம், கட்சி வேறுபாடுகளைக் கடந்து மாநிலக் கட்சிகள் ஆதரவும் கிடைக்கும் என்று பாஜக எதிர்பார்க்கிறது.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருப்பார்!

வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் பெயரை அறிவித்த மோடி, அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருப்பார் என்று கூறியுள்ளார்.

மோடி தமது டிவிட்டர் பதிவில், நமது நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட, சமூகத்தின் விளிம்பு நிலையிலுள்ள, ஏழை, எளிய மக்களின் வலுவான குரலாக ராம்நாத் கோவிந்த் இருப்பார். நமது நாட்டின் அரசமைப்புச் சட்டம் குறித்த முழுமையான ஞானம் கொண்ட அவரால் நாட்டுக்கு நல்ல விஷயங்கள் பல கிடைக்கும். எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த ராம்நாத் கோவிந்த், தனது அறிவாலும், முயற்சியாலும், உழைப்பாலும் உயர்ந்தவர். பொதுவாழ்க்கையின் பெரும் பகுதியை ஏழை, எளிய மக்களின் நலன் காக்கவே உழைத்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 17ஆம் தேதி நடத்தப்படுகிறது. ஜூலை 20ஆம் தேதி அத் தேர்தலின் முடிவு அறிவிக்கப்படும்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img