மூக்குடைபட்ட ஓபிஎஸ்.,! நிர்மலா சீதாராமன் சந்திக்கவில்லை என மறுப்பு: என்ன நடக்கிறது தில்லியில்!?

இந்தியா சற்றுமுன்

ops maithreyan - 2026

புது தில்லி: தில்லியில் முகாமிட்டு ஏதோ அரசியல் செய்வதற்காக முயன்று வருகிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அதற்காக அவர் தில்லியில் உள்ள அதிமுக., எம்.பி., மைத்ரேயன் மூலம் காய் நகர்த்தி வருகிறார். இருப்பினும், தில்லியில் ஓ.பன்னீர்செல்வம், என்ன அரசியல் செய்வது என்று தெரியாமல் திக்குமுக்காடி வருகிறார் என்றே தெரிகிறது.

கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான அண்ணன் ஓபிஎஸ் அவர்களை டெல்லி விமான நிலையத்தில் மலர்க் கொத்து கொடுத்து வரவேற்றேன் என்று நேற்று அதிமுக., எம்பி., மைத்ரேயன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு செய்தியைப் பகிர்ந்திருந்தார்.

அடுத்து, கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் இன்று இரவு டெல்லியில் ஜன்பத் சாலையில் உள்ள எனது இல்லத்திற்கு வந்து போது. உடன் துணை ஒருங்கிணைப்பாளர் கே. பி.முனுசாமி மற்றும் கழக அமைப்புச் செயலாளர் மனோஜ்பாண்டியன். – என்று சில படங்களையும் பகிர்ந்திருந்தார்.

ஆனால், இப்போது திடீரென தில்லியில் ஓபிஎஸ் முகாமிட வேண்டிய அவசியம் என்ன என்று தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் கேள்விகள் பறக்கின்றன. அண்மைக் கால வருமான வரிச் சோதனை, பிடிப்பட்ட தொழிலதிபர்கள், பொதுப்பணித் துறை காண்ட்ராக்ட் தொடர்பு, சிக்கிய பணம் என்றெல்லாம் தோண்டித் துருவி விசாரணை முடுக்கி விடப் பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ்., அனேகமாக இந்த வலையில் சிக்குவார் என்றே கூறப்பட்டது.

இத்தகைய சூழலில் ஓபிஎஸ்., தில்லி சென்றது பலரது புருவத்தையும் உயர்த்தியது. இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்., தில்லிக்கு வந்தது அரசியல் பயணமோ அல்லது அரசு சார்ந்த பயணமோ இல்லை; மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திப்பது மரியாதை நிமித்தமானது என்று கூறியிருந்தார்.

அதாவது நிர்மலா சீதாராமனை சந்திக்க இருப்பதாகக் கூறியிருந்தார் ஓபிஎஸ். ஆனால், அவர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக ஒரு செய்தி வெளியானது.

தந்தி டிவி வெளியிட்ட டிவிட்டர் செய்தியில், இது அரசியல் பயணம் இல்லை என்று தில்லியில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். தந்தி டிவி வெளியிட்ட செய்தியில், எனது சகோதரர் சிகிச்சைக்கு ராணுவ விமானம் வழங்கியதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவித்தேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக குறிப்பிடப் பட்டிருந்தது.

ஆனால், அதனை மேற்கோள் காட்டி, நிர்மலா சீதாராமன் அலுவலகம் அதனை மறுத்திருக்கிறது. அது வெளியிட்ட மறுப்புச் செய்தியில், தந்தி டிவி டிவிட்டர் பதிவில் வெளியான செய்தியைக் குறிப்பிட்டு, தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை என்று விளக்கம் அளித்திருக்கிறது.

மேலும், இன்னொரு டிவிட்டர் பதிவில், அதிமுக எம்.பி மைத்ரேயனை சந்திக்கவே நேரம் ஒதுக்கப்பட்டது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த டிவிட்டர் பதிவிலும், தில்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்திக்கவில்லை என்று அமைச்சர் அலுவலகம் மறுப்பு வெளியிட்டுள்ளது. இந்த டிவிட்டர் பதிவில், மைத்ரேயனின் டிவிட்டர் கணக்கையும் டேக் செய்து வெளியிட்டுள்ளது.

ஆகவே, என்ன நடக்கிறது தில்லியில் என்று இப்போதே தமிழகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. தில்லியில் சென்று மூக்குடைபட்டாரா ஓபிஎஸ்., என்று பரவலாக பேச்சு எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.