தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம்: அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கின

சற்றுமுன்

சென்னை: தமிழகத்தில் சனிக்கிழமை இன்று நடைபெற்று வரும் முழு அடைப்புப் போராட்டத்தில், பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆயினும், அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைக் கண்டித்து தமிழகத்தில் சனிக்கிழமை இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, அரசியல் கட்சிகள் பலவற்றின் ஆதரவுடன் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. கடைகள் பெரும்பாலும் அடைக்கப்பட்டிருந்தாலும், அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகள் சில இடங்களில் திறக்கப்பட்டிருந்தன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பெரும்பாலான இடங்களில் போலீசார பாதுகாப்புக்கு நிற்கின்றனர். தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டாலும், அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, பெரும்பாலான பகுதிகளில் பஸ்கள் இயங்கின. ரயில்களும், வழக்கம்போல இயங்க தென்னக ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும், காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை கர்நாடகம் செல்லும் அரசு பஸ்களும் தமிழகத்துக்கான கர்நாடக அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.