என் கணவருக்கு என்ன நடந்தது; உண்மையைச் சொல்லுங்கள்: உரக்கக் கதறும் பெரியபாண்டியன் மனைவி!

சற்றுமுன் சென்னை தமிழகம்

திருநெல்வேலி:

சென்னை, மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் பெரியபாண்டியன், சென்னை கொளத்தூரில் நகைக்கடை ஒன்றில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணையில், கொள்ளையர்களைக் கைது செய்ய ராஜஸ்தான் சென்ற போது கொள்ளையர்களால் சுடப்பட்டு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப் பட்டது.

இந்நிலையில், தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக வெளிவருவதால், ராஜஸ்தானில் கொள்ளையர்களைத் தேடிச் சென்றபோது என்ன நடந்தது என்பதை மனசாட்சிப்படி விசாரித்து உண்மைத் தன்மையை வெளியிடவேண்டும் என உயிரிழந்த ஆய்வாளர் பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா கதறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் பதுங்கியிருந்த கொள்ளையர்களைக் கண்டறிந்து கைது செய்யச் சென்றபோது, கொள்ளையர்களால் சுடப்பட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர், உடன் சென்ற ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியால் தவறுதலாக சுடப்பட்டு அவர் இறந்ததாக ராஜஸ்தான் போலீஸார் கூறியுள்ளனர். இதுதொடர்பாக முனிசேகர் மீது ராஜஸ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது கணவருக்கும் ஆய்வாளர் முனிசேகருக்கும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. அந்தத் தேடுதல் குழுவில் உள்ள அதிகாரிகள் மற்றும் போலீசாரை தேர்வு செய்ததே என் கணவர்தான் என்று நான் கேள்விப்பட்டேன். எனவே, அவரது இறப்பில் நானும் என் மகன்களும், குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழர்களும் கொந்தளித்துப் போயுள்ளனர். எனவே அங்கு என்ன நடந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து உண்மைத் தன்மையை தெளிவுபடுத்த வேண்டும். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார் பானுரேகா.

இதனிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையன் நாதுராமின் மனைவி கைது செய்யப்பட்டார். பெரியபாண்டியன் கொலை வழக்கு ராஜஸ்தானில் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில் நாதுராமிற்கு உதவி செய்ததாக அவனுடைய மனைவி மஞ்சுவை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.