― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்வண்ணதாசனுக்கு சாஹித்ய அகாதெமி விருது; நெல்லைக்கு கௌரவம்

வண்ணதாசனுக்கு சாஹித்ய அகாதெமி விருது; நெல்லைக்கு கௌரவம்

திருநெல்வேலி:நெல்லையை சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் சாகித்ய அகாடமி ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருதினை வழங்கி வருகிறது. 2016ம் ஆண்டில் சிறந்த தமிழ் படைப்பிற்கான விருது வண்ணதாசனின் ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்பிற்காக வழங்கப்படுகிறது.

70 வயதாகும் இவர் திருநெல்வேலி, சிதம்பரநகரில் வசிக்கிறார். இயற்பெயர் கல்யாணசுந்தரம், ‘கல்யாண்ஜி’ என்ற பெயரில் கவிதைகள் எழுதிவருகிறார். வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 1962ல் இருந்து எழுதிவருகிறார். இதுவரையிலும் 13 சிறுகதை தொகுப்புகள், 13 கவிதை தொகுப்புகள், ஒரு குறுநாவல், 2 கடித தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.

கலைமாமணி, தமிழ்பேராயம், இலக்கிய சிந்தனை உள்ளிட்ட பல்வேறு இலக்கிய விருதுகள் பெற்றுள்ளார். இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது தந்தை தி.க.சிவசங்கரனும் சிறந்த எழுத்தாளர்.

இவர் 2000ம் ஆண்டில் விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் என்னும் விமர்சன நுாலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றார். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

2012ல் டி.செல்வராஜ் (தோல்), 2013ல் ஜோ டீ குரூஸ் (கொற்கை), 2014ல் பூமணி(அஞ்ஞாடி), 2015ல் மாதவன் (இலக்கிய சுவடிகள்) ஆகியோரை தொடர்ந்து இந்த ஆண்டு வண்ணதாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாகித்ய அகாடமி 1954ல் துவக்கப்பட்டது. 1955ல் வழங்கிய முதல் விருது, நெல்லையை சேர்ந்த ஆர்.பி.சேதுப்பிள்ளைக்கு, தமிழ் இன்பம் படைப்பிற்காக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விருது குறித்து அவர் கூறுகையில், ”எழுத்தாளர் வல்லிக்கண்ணனுக்கு நான் எழுதிய கடிதங்கள்தான் என்னை மேலும் எழுதத்துாண்டின. கடிதங்களை நான் முக்கியமானவையாக மதிக்கிறேன். 54 ஆண்டுகளாக எழுதிவருகிறேன்.

என்னோடு 1960களில் எழுதத்துவங்கியவர்கள் பலர் எழுத்தை நிறுத்திவிட்டார்கள். இளைய படைப்பாளிகளின் எழுத்துக்கள் எனக்கு நம்பிக்கையளிக்கின்றன. வாசகர்கள், இளைய படைப்பாளிகள் தமிழின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளர்களின் படைப்புகளை தேடிக்கண்டுபிடித்து வாசிக்கவேண்டும்.

தேசிய விருது அளிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தாமிரபரணி சார்ந்து தொடர்ந்து படைப்புலகில் இயங்குவேன்,” என்றார்.இலக்கியவாதிகளை ஊக்குவிக்கும் விதமாக சாகித்ய அகாடமி விருது 1954ல் உருவாக்கப்பட்டது. சிறந்த இலக்கிய படைப்புகளுக்காக (கவிதைகள், சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம்) 1955 முதல் ஆண்டுதோறும் தமிழ் உட்பட 24 மொழிகளுக்கு விருது வழங்கப்படுகிறது. ஒரு லட்ச ரூபாய் காசோலை வழங்கப்படுகிறது.

தமிழ் மொழி பிரிவில் 1957, 1959, I960, 1964 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் இவ்விருது யாருக்கும் வழங்கப்படவில்லை.இந்தாண்டு தமிழ்மொழிக்கான விருதுக்கு சிறந்த சிறுகதைக்காக வண்ணதாசன் தேர்வாகியுள்ளார். விருது 2017 பிப்., 22ல் வழங்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version