சோடா பாட்டில் வீச்சும் ஜீயரின் மன்னிப்பு வீச்சும்!

Published:

எங்களாலும் சோடா பாட்டில் வீச முடியும்; ஆனால் நாங்கள் அமைதி வழியை போதிக்கிறோம்… அகிம்சை வழியில் இந்தப் பிரச்னையை அணுகுவோம் என்று கூறியிருந்தார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், திருச்செங்கோடில் நடைபெற்ற கூட்டத்தில்!

வழக்கம் போல், பரபரப்பு, கிண்டல், அடுத்தவரை வெச்சு செய்வது என்றெல்லாம் பால பாடம் படித்து பணிக்கு வந்திருக்கும் ஊடகப் பணியாளர்கள், சோடா பாட்டில் வீச முடியும் என்ற வார்த்தையை மட்டும் கட் செய்து மீண்டும் மீண்டும் அதைக் காட்டி, ஜீயர் ஏதோ வன்முறையைத் தூண்டுவதாக பொதுமக்களிடம் ஒரு செய்தியைச் சேர்த்துள்ளனர்.

அதற்கு எதிர்வினையாக, சோடா பாட்டில் வீசத் தெரிந்தால் ஜீயராகி விடலாம் என்று நம் கனிமொழி அக்கா, வாய் திறந்திருக்கிறார். அவருக்காக, இதுகாறும் நட்பு முறையில் இருப்பவர் என்பதற்காக, நானும் ஒன்று சொல்லிக் கொள்ளக் கடமைப் பட்டுள்ளேன்.

சோடா பாட்டில் வீச்சு கிடக்கிறது… அட அதற்காகவே நானும் தயார் செய்து கொண்டு வந்துள்ளேன். வருங்காலத்தில் உங்கள் கனவை நிறைவேற்றி வைக்கின்றேன். அதற்கு ஆண்டாள் அம்மை இந்த சந்தர்ப்பத்தை அடியேனுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் என்றே கருதுகிறேன்.

மிகப் பெரும் போராட்டங்களை வாழ்க்கையில் சந்தித்தவர் மகான் ஸ்ரீராமானுஜர். அவரை ஆதிசேஷன் அம்சம் என அடியவர் கூட்டம் கருதுகின்றது. ஆனாலும், மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து, மானுட வர்க்கத்தின் இயலாமைகளை, எதிர்கொள்ளும் விதத்தை வாழ்ந்து காட்டி போதித்துள்ளார். அந்தப் பரம்பரையில் வந்த ஒரு ஜீயர் இவ்வளவுக்கு மனம் நொந்து பேசியிருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் நாமே!

ALSO READ:  தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

மத ரீதியான தாக்குதல்கள் தொடுக்கப் படுவதென்பது காலம் காலமாக இருந்து வருகிறது. ஒவ்வொருவருக்கும் அவரவர் கொள்கைகள் உயர்வானது. அதனைக் காப்பதற்காக உயிரையும் கொடுக்க முயன்றதுதான் வரலாற்றில் போதிக்கப் படுகிறது. இல்லை எனில் ஏன் இத்தனை போர்கள், ஏன் இத்தனை தாக்குதல்கள், கொடூரங்கள், ரத்த வெறி பிடித்த கதைகள் எல்லாம்?!

இறைவன் தானே இறங்கி வந்து போர் புரிவதில்லை; தன்னை உணர்ந்து கொண்ட ஒருவனின் தத்துவத்தைக் காப்பதற்காக அவன் வடிவிலேயே, அவன் உள்ளத்தின் உறுதி மூலமே இறைவன் தன்னைக் காட்டிக் கொள்கிறான். இறைவன் பொதுவென இருந்தாலும், இறைத் தத்துவத்தின் புரிந்துணர்வு ஏற்றத்தாழ்விலேயே பூசல்களும் பூசனைகளும் நிகழ்கின்றன.

இப்போது தாம் பின்பற்றும் தத்துவத்தைக் காப்பதற்காக, தமது தத்துவம் இழிவுபடுத்தப் படுவதைக் காணச் சகிக்காதவராக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ஸ்வாமி இவ்வளவுக்கு இறங்கி வந்து பேசியிருக்கிறார். ஆனால், தாம் பேசியது தவறு எனத் தெரிந்து, அவ்வாறு பேசுவதற்குத் தாம் யார் என்று உணர்ந்து, அதே ஆண்டாள் திருவுரு முன் அடிபணிந்து மன்னிப்புக் கோரி, தம்மை அணுகி இருக்கும் அடியார் குழாம் மனம் தம் சொல்லால் புண்பட்டிருக்கும் என்பதை உணர்ந்து தாயாரிடம் அதற்காக மன்னிப்பு கோரியிருக்கிறார்.

ALSO READ:  ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

உண்மையில், இந்த சோடா பாட்டில் வீசுவோம் கல்லெடுப்போம் என்றெல்லாம் இந்தத் தத்துவத்தைக் காப்பதற்கு முயலும் நபர்கள் சொல்லியிருந்தால், இவ்வாறு ஜீயர் போன்ற பெரியவர்கள் பேசியிருக்க வாய்ப்பில்லை. அடுத்தது, அரசுதான் இந்தப் பெருமக்களைக் காத்திருக்க வேண்டும். ஆனால் அதுவோ, தன்னைத் தான் காத்துக் கொள்வதற்கே கையாலாகாத அரசாக இருந்து கிடக்கிறது. சுற்றிலும் எதிர்ப்பாளர்கள் கூட்டமோ பல்கிப் பெருகிக் கிடக்கிறது. தனியாக பொறியில் சிக்கிக் கொண்ட நிலையில் சம்பிரதாயம் இருக்கிறது.

இந்த நிலையில் ஜீயர் ஏதோ பேசிவிட்டார். ஆனால் தவறுணர்ந்து மன்னிப்பு கேட்டுவிட்டார். என் செயலால் இந்து மக்கள் மனம் புண்பட்டிருக்கும் என்பதால், நான் அவர்களின் அவப்பெயர் துடைக்க மன்னிப்பு கோருகிறேன் என்று தாயார் முன் விழுந்துவிட்டார்.

இதுதான் மகான்களுக்கும், வைரமுத்து போன்ற புல்லுருவிகளுக்கும் உள்ள வேறுபாடு. அத்தனை பேர் மனம் புண்பட்டு அழுதும் கூட, மற்றவர் உணர்வுகளை மதிக்கத் தெரியாத மூடர்கூடத்தில் இருந்துகொண்டிருக்கும் வைரமுத்துவை மன்னிப்புக் கேட்டு இனி இவ்வாறு பேசவோ எழுதவோ மாட்டேன் என்று உறுதி கூற வைக்கும் வரை…

ALSO READ:  கல்வி அமைச்சரின் ராஜினாமா - மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

விடக் கூடாது!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img