mcms 3 - 2026

சாராயம் குடித்து விட்டு அட்டகாசம் செய்த 🐘..

அடடே... அப்படியா? லைஃப் ஸ்டைல்

குடியாத்தம் அருகே சாராயம் குடித்து விட்டு அட்டகாசம் செய்த யானையால் பரபரப்பு ஏற்பட்டது. யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.

ஆந்திரா மாநிலம், சித்துார் வனப்பகுதியிலிருந்து தண்ணீர் குடிப்பதற்காக, வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே மோர்த்தானா காப்புக்காடு பகுதிக்கு சில நாட்களுக்கு முன்பு ஆண் யானைக் குட்டி ஒன்று வந்தது. திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தது.

இன்று அதிகாலை குடியாத்தம் அருகே, குண்டக்கல் வனப்பகுதிக்குள் கங்கா ஓடையில் தண்ணீர் குடிக்க சென்றது. அங்கு சாராய வியாபாரிகள் பிரமாண்டமான அடுப்பு, பானைகள் வைத்து ஊறலில் வெல்லத்தை போட்டு சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர். சாராய வாசனையை நுகர்ந்து அந்த இடத்திற்கு வந்த யானையை பார்த்ததும் சாராய வியாபாரிகள் ஓட்டம் பிடித்தனர்.

சாராய அடுப்பை உடைத்த யானை, தண்ணீர் என நினைத்து பானைகளில் இருந்த சாராய ஊறலை குடித்தது. இதனால் போதை தலைக்கேறிய யானை சாராய வியாபாரிகளை விரட்டிச் சென்றது. பேர்ணாம்பட்டு பங்களாமேடு பகுதியில் உள்ள மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளிக்குள் யானை நுழைந்தது.
பள்ளியில் இருந்த மன வளர்ச்சி குன்றிய மாணவர்கள், ஆசிரியர்கள் அலறினர். பள்ளியில் சிறிது நேரம் சுற்றிக் கொண்டிருந்த யானை மாணவர்களுக்கு வைத்திருந்த தண்ணீரை குடித்து விட்டு, அவர்களை ஒன்றும் செய்யாமல், குடியாத்தம் நெடுஞ்சாலை வழியாக வனத்துறை ஓய்வு விடுதிக்குள் நுழைந்தது.

அங்கு துாங்கிக் கொண்டிருந்த வனச்சரகர் சதீஷ்குமார், வனக்காவலர் ரவி, காப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் யானையை பார்த்ததும் அலறி அடித்துக் கொண்டு தப்ப முயன்றனர். மது போதையில் யானை பிளறிக் கொண்டே அவர்களை விரட்டியது. அங்கு வந்த பொது மக்கள், வனத்துறையினர் சேர்ந்து இரண்டு மணி நேரம் போராடி பட்டாசு வெடித்து யானையை மாமரத்து பள்ளம் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
போகும் போது, தேன்மலையை சேர்ந்த விவசாயி கமலநாதன், 55, நிலத்திலிருந்த நெற்பயிர், பால்சுனை சுப்பிரமணிக்கு சொந்தமான வாழை தோட்டம், பாபுவின் கரும்பு தோட்டம், பம்பு செட்டுக்களை நாசம் செய்தது. பள்ளம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை உடைத்து விட்டு சென்றது.

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது,கங்கா ஓடையில் சாராய வியாபாரிகளால் தயார் செய்து கொண்டிருந்த சாராய ஊறலை யானை குடித்துள்ளது. போதை அடங்க ஒரு வாரமாகும். அதுவரை இப்பகுதியில் உள்ள பொது மக்கள் தனியாக வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம். அதே சமயம் மது விலக்கு போலீசார் செய்ய வேண்டிய வேலையை யானை செய்து விட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

mcms 3 - 2026
images 64 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.